மருந்து தயாரிக்கும் கேமரா நிறுவனம்!
கரோனா தொற்று உலகெங்கும் தலைவிரித்து ஆடுகிற இக்காலத்தில் நிறைய மாற்றங்களும் நிகழ்ந்து கொண்டே இருக்கின்றன.
கரோனா தொற்று உலகெங்கும் தலைவிரித்து ஆடுகிற இக்காலத்தில் நிறைய மாற்றங்களும் நிகழ்ந்து கொண்டே இருக்கின்றன.
கோடக் என்ற பெயரைக் கேட்டாலே எல்லாருக்கும் கேமராவும், புகைப்படம் எடுப்பதற்கான படச்சுருள்களும்தான் நினைவுக்கு வரும். 1888 - ஆம் ஆண்டு ஜார்ஜ் ஈஸ்ட்மேன் என்பவரால் தொடங்கப்பட்ட நிறுவனம்தான் "தி ஈஸ்ட்மேன் கோடக் கம்பெனி'.
1990- களுக்குப் பிறகு, புகைப்படக் கலை டிஜிட்டல்முறைக்கு மாறியது. பழைய பிலிம் கேமராக்களுக்கு வேலை இல்லாமல் போனது. கோடக் நிறுவனமும் நின்று போனது. பெரிய இழப்பைச் சந்தித்த நிறுவனம் திவாலாகும் நிலைக்குத் தள்ளப்
பட்டது. தன்னை மாற்றிக் கொண்ட அந்நிறுவனம் டிஜிட்டல் கேமரா தயாரிப்பில் 2012 - ஆம் ஆண்டுக்குப் பிறகு ஈடுபட்டு வருகிறது. என்றாலும் "கோடக் என்றால் கேமரா' என்ற நிலை வருங்காலத்தில் மாறிவிடும் போலிருக்கிறது.
அண்மையில் "கோடக் பார்மாசூட்டிகல்ஸ்' என்ற புதிய நிறுவனம் தொடங்கப்பட்டுள்ளது.
இதற்கு அமெரிக்க அரசு 765 மில்லியன் யுஎஸ் டாலரை கோடக் நிறுவனத்துக்கு கடனாகக் கொடுத்துள்ளது.
அமெரிக்கா மருந்து உற்பத்தியில் மிகவும் பின்தங்கி உள்ளது. உலக அளவில் உற்பத்தியாகும் மருந்தில் 40 சதவிகிதத்தை அமெரிக்கா இறக்குமதி செய்கிறது. வெறும் 10 சதவீதம் மருந்துகளே உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படுகின்றன. இந்நிலையில் மருந்து உற்பத்தியில் சுயசார்பு உடைய நாடாக இருக்க அமெரிக்கா விரும்புகிறது. மருந்து உற்பத்தியை ஊக்குவிப்பதற்காக, அமெரிக்காவின் இன்டர்நேஷனல் டெவலப்மென்ட் ஃபினான்ஸ் கார்ப்பரேஷன் என்ற நிறுவனத்தின் மூலமாக, இந்தக் கடனை கோடக் நிறுவனத்துக்கு வழங்கியிருக்கிறது.
""கரோனா வைரஸ் தொற்றின் மூலம் நாங்கள் தெரிந்து கொண்ட உண்மையென்னவென்றால் அமெரிக்கர்களாகிய நாங்கள் மிகவும் அத்தியாவசியமான மருந்துகளுக்காகக் கூட வெளிநாடுகளைச் சார்ந்திருக்க வேண்டிய மோசமான நிலையில் இருக்கிறோம் என்பதைத்தான்'' என்கிறார் வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் பீட்டர் நவேரோ.
இந்த கோடக் பார்மாசூட்டிகல்ஸ் நிறுவனத்தின் மூலமாக நேரடியாக 360 பேருக்கும், மறைமுகமாக 1200 பேருக்கும் வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நியூயார்க்கின் ரோசெஸ்டரிலும், மினோசோட்டாவின் செயின்ட் பாலிலும் இந்நிறுவனம் இயங்கப் போகிறது.
""அமெரிக்க மக்களின் உடல் நலப் பாதுகாப்பிலும், அமெரிக்க மருந்து தயாரிப்பு சுயசார்பை நோக்கிச் செல்வதிலும் நாங்கள் முக்கிய பங்களிப்போம்'' என்கிறார் கோடக் நிறுவனத்தின் நிர்வாகத் தலைவர் ஜிம் கான்டினென்ஸா.