முகப்பு
இளைஞர்மணி

தேடினால் வழி உண்டு!

கரோனா நோய்த்தொற்றால் அமல்படுத்தப்பட்ட பொது முடக்கம் இளைஞர்களுக்கு சமூக, பொருளாதாரரீதியில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:03 PM
பகிர்:

கரோனா நோய்த்தொற்றால் அமல்படுத்தப்பட்ட பொது முடக்கம் இளைஞர்களுக்கு சமூக, பொருளாதாரரீதியில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. பொது முடக்க காலத்தில் பல நிறுவனங்கள் மூடப்பட்டன. அதன் காரணமாக இளைஞர்கள் பலர் வேலையிழந்தனர். அதனால் வருவாய் இழப்பைச் சந்திக்க வேண்டிய சூழலுக்கு இளைஞர்கள் தள்ளப்பட்டனர்.

பொது முடக்க காலத்தில் பொருளாதார ரீதியாக மக்களின் தேவையும் குறைந்தது. அதனால் சுயமாகத் தொழிலில் ஈடுபட்டு வந்த இளைஞர்களும் பாதிப்பைச் சந்தித்தனர். அவர்களும் வருவாயை இழந்தனர். பேரிடர் காலத்தில் நாடே பொருளாதாரரீதியில் பாதிக்கப்படும்போது அதன் காரணமாக இளைஞர்கள் அதிக அளவில் பாதிப்பைச் சந்திப்பது தொடர்ந்து வருகிறது.

கடந்த 2008-ஆம் ஆண்டில் உலக நாடுகளின் பொருளாதாரம் வீழச்சியைச் சந்தித்தபோதும் இளைஞர்களுக்கு இதே நிலையே ஏற்பட்டது. இளைஞர்களின் பொருளாதார நிலை பாதிக்கப்படுவது அவர்களின் சுகாதாரத்துக்கும் பாதிப்பை ஏற்படுத்தும்.

இளைஞர்கள் வேலையிழக்கும்போது எதிர்காலம் குறித்து பல்வேறு கவலைகள் அவர்களின் மனதில் குடியேறுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதனால் எப்போதும் தனிமையில் இருக்கும் அவர்கள் அதீத மனஅழுத்தத்துக்கு உள்ளாகின்றனர். இது மனரீதியான பாதிப்புகளை ஏற்படுத்தவும் வாய்ப்புள்ளது.

ஆனால், இவற்றையெல்லாம் கண்டு இளைஞர்கள் துவண்டுவிடக் கூடாது. இந்தப் பிரச்னை நமக்கு மட்டும் ஏற்பட்டுவிடவில்லை என்று எண்ணத் தொடங்கினால் சற்று நம்பிக்கை பிறக்கும். இழந்த வேலையை மட்டுமே எண்ணி துன்பம் கொள்வதைக் கைவிட்டு, திறமைகளை வளர்த்துக் கொள்வதில் இளைஞர்கள் கவனம் செலுத்த வேண்டும்.

பொது முடக்கம் காரணமாக செல்லிடப்பேசி, இணையதள வசதிகளின் பயன்பாடு பன்மடங்கு அதிகரித்துள்ளது. இத்தகைய இக்கட்டான சூழலில் திறன் மேம்பாடு தொடர்பான வகுப்புகளைப் பலர் இணையவழியில் இலவசமாகவே நடத்தி வருகின்றனர். அவற்றின் மூலமாக இந்தக் காலத்தை முறையாகப் பயன்படுத்திக் கொண்டு புதிய திறன்களை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

ஆயினும் வருமானம் குறித்து பல இளைஞர்கள் கவலைப்பட வாய்ப்புண்டு. போதிய வருமானம் இல்லாவிட்டால் மனம் எதிலும் முழுமையாக ஈடுபடாது. பொது முடக்கம் காரணமாக பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. அதனால், மாணவர்களுக்கான பாடங்கள் அனைத்தும் இணையவழியிலேயே கற்பிக்கப்பட்டு வருகின்றன. அதனால், இணையவழி டியூஷன் வகுப்புகளைக் கூட இளைஞர்கள் வேலைவாய்ப்பாகப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

கல்வி கற்பிப்பது, ஓவியக் கலை, இசைக் கலை, சமையல் கலை, வீட்டுத் தோட்டம் அமைப்பது உள்ளிட்டவற்றை இணையவழியில் மற்றவர்களுக்குக் கற்பிக்கலாம். ஏற்கெனவே பலர் இணையவழியில் இவற்றையெல்லாம் கற்பித்து வருகிறார்களே, நாம் இதில் வெற்றி பெறுவது எப்படி என்று சிந்திக்க வேண்டாம். குறிப்பிட்ட விஷயத்தைத் தொடங்குவதில் வெற்றியடையும் பலர் அதைத் தொடர்ந்து மேற்கொள்ளாமல் தோல்வியைத் தழுவுகின்றனர்.

அதீத ஆர்வம் காரணமாக புதிய விஷயங்களைத் தொடங்கும் பலர் விடாமுயற்சியின்மை, தோல்வி பயம், நம்பிக்கையின்மை, எதிர்மறை எண்ணங்கள் உள்ளிட்டவற்றின் காரணமாக அதைப் பாதியிலேயே கைவிடுகின்றனர்.

அவ்வாறில்லாமல் தொடக்கத்தில் வரும் தோல்விகளாலும் ஏமாற்றங்களாலும் துவண்டுவிடாமல் நமது இலக்கை நோக்கி முன்னேறினால் தொடர் வெற்றிகளைக் குவிக்க முடியும். எந்தவொரு காரியத்திலும் தொடங்கிய உடனே வெற்றி கிடைக்காது. அதுவே நடைமுறை வாழ்வின் உள்ளார்ந்த உண்மை. அதைத் தெளிவாகப் புரிந்து கொண்டு நாம் புதிய விஷயங்களைத் தொடங்க வேண்டும்.

தோல்விகளை வாழ்வின் சறுக்கல்களாக எண்ணாமல் பாடம் கற்பிக்கும் ஆசானாக எண்ணிக் கொண்டால் இளைஞர்களின் வெற்றிக்கு எவருடைய துணையும் தேவையில்லை. பொது முடக்க காலத்தை வீணடிக்காமல் வாழ்வின் வெற்றிக்குத் தேவையான பல்வேறு விஷயங்களைக் கற்றுக் கொள்வது பெரும் பலனளிக்கும்.

இத்தகைய இக்கட்டான சூழலில் வருமானத்துக்காக இளைஞர்கள் பலர் படித்த படிப்புக்கேற்ற வேலையில்லாமல் கிடைத்த வேலையைச் செய்வதற்கு அதிக வாய்ப்புகளுண்டு. ஆனால், பணியாற்றிய நேரம் போக மீதமுள்ள நேரங்களில் இலக்கை அடைவதற்கான செயல்களில் தீவிரமாக ஈடுபட வேண்டும். எந்தவித எதிர்மறை எண்ணத்தையும் மனதில் கொள்ளக் கூடாது. இலக்கை அடைவதில் மட்டுமே முழு கவனத்துடன் செயல்பட வேண்டும்.

கரோனா நோய்த்தொற்றால் ஏற்பட்டுள்ள இத்தகைய இக்கட்டான சூழல் தற்காலிகமானதே என்பதை இளைஞர்கள் அனைவரும் மனதில் வைத்துக் கொள்ள வேண்டும். இந்தத் தருணங்களைக் கண்டு வாழ்வில் ஒருபோதும் பின்வாங்கக் கூடாது. நம்பிக்கை ஒளியின் துணையுடன் பீடு நடையிட்டு முன்னேறிக் கொண்டே செல்வோம்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.