வித்தியாசமான மருத்துவப் படிப்பு!
இயற்கை வைத்தியம், இயற்கை உணவு என இயற்கை தொடர்பான விஷயங்களை மக்கள் தேடிச் செல்கிறார்கள்.
இயற்கை வைத்தியம், இயற்கை உணவு என இயற்கை தொடர்பான விஷயங்களை மக்கள் தேடிச் செல்கிறார்கள். இயற்கை வைத்தியம் என்பது பாதிப்பு இல்லாத வைத்தியம் என மக்கள் நம்புகிறார்கள். இயற்கை வைத்தியம் ஆக்கப்பூர்வமானது.
மனிதனின் உடல்நலம், மனநலம், கட்டுப்பாட்டு உணர்வு, ஆன்மீகம் ஆகியவற்றினை இயற்கையுடன் ஒன்றிணைத்து குணப்படுத்தலே இயற்கை வைத்தியம் எனக் கூறலாம்.
உடல்நலத்தை மேம்படுத்துதல், நோய்வராமல் தடுத்தல்,நோய் வந்த பின்னர் சரி செய்தல், இழந்த சக்தியை மீண்டும் பெறச் செய்திடல் உள்ளிட்டவை இயற்கை வைத்தியமாகும். பாதிக்கப்பட்டுள்ள உறுப்புகளை மட்டும் பாராமல் உடலின் அனைத்து பகுதிகளையும் இயற்கை வைத்தியம் சரி செய்கிறது.
Advertisement
இயற்கை வைத்தியத்தில் உணவும் மருந்தாகிறது. முன்னோர்கள் கடைப்பிடித்து வந்த இயற்கை மருக்துவம் இப்போது நவீனமயமாகியுள்ளது. இயற்கை வைத்திய பட்டப் படிப்பு தற்போது தமிழகத்தில் உள்ளது. இந்தப் படிப்பின் பெயர் பிஎன்ஒய்எஸ் (பேச்சலர் ஆப் நேச்சுரோபதி அன்ட் யோகிக் சயின்ஸ்) என்ற ஐந்தரை ஆண்டு பட்டப்படிப்பாகும்.
இந்தப் படிப்பு சென்னை உள்ளிட்ட 10 இடங்களில் உள்ளது. இந்தப் படிப்பு குறித்து தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூரில் உள்ள எஸ்.தங்கப்பழம் மெடிகல் காலேஜ் ஆப் நேச்சுரோபதி அன்ட் யோகிக் சயின்ஸ் ரிசர்ச் சென்டர் என்ற கல்லூரியின் முதல்வர் பி.சௌந்திரபாண்டியன் நம்மிடம் பகிர்ந்து கொண்டதாவது:
""இந்த பட்டப் படிப்பு தமிழ்நாடு எம்.ஜி.ஆர்.மருத்துவ பல்கலைக்கழகத்தால் அங்கீகரிக்கப்பட்டது ஆகும். அந்த பல்கலைக்கழகம் தான் பாடத்திடங்களை வழங்குகிறது.
இந்தப் படிப்பில் சேர்வதற்கு பிளஸ் டூவில், இயற்பியல், வேதியல், உயிரியல் ஆகிய பாடங்களில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அரசு விதிமுறைப்படி, மாணவர்கள் சேர்க்கை நடைபெறும். ஒவ்வோர் ஆண்டும்100 மாணவர்கள் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள்.
இந்த பட்டப்படிப்பு ஐந்தரை ஆண்டு பட்டப்படிப்பாகும். இந்தப் படிப்பில் சேரும் மாணவர்களுக்கு முதலாம் ஆண்டு, உடல் கூறு இயல், உடல் செயலியல், உயிரிவேதியல், இரண்டாம் ஆண்டு யோகாநுண்ணுயிரியியல், நோயியல், உளவியல், இயற்கை நோய்அறிதல், நவீன நோய்அறிதல், மருந்தியல், மூன்றாம் ஆண்டு நஞ்சியல், தடயஅறிவியல், சமூக மருத்துவம், மகட்பேறு மருத்துவம், வாசனை மருத்துவம், யோகா மருத்துவம், மஜாஜ், அக்குபஞ்சர், அக்குபிரஷர், காந்த சிகிச்சை, வண்ண மருத்துவம், நீர்சிகிச்சை, உணவு சிகிச்சை, உபவாச சிகிச்சை, இயற்முறை மருத்துவம் ஆகியவை கற்பிக்கப்படுகின்றன.
தினசரி யோகாசனம் கற்பிக்கப்படும். தினசரி காலையில் வகுப்பறையில் பாடங்கள் நடத்தப்படும். பிற்பகல் மாணவர்கள் ஆய்வுகூடங்களில் ஆய்வு செய்ய பயிற்சி அளிக்கப்படும்.
பின்னர் ஒன்றரை ஆண்டுகள் முதலுதவி மருத்துவம், மருத்துவமனை நிர்வாகம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, பாத சிகிச்சை உள்ளிட்டவை குறித்து பாடங்கள் நடத்தப்படும்.
பின்னர் கடைசி ஆறு மாத காலம், மருத்துவப் பயிற்சி பெற வேண்டும். பயிற்சியைக் கல்லூரியிலும் பெறலாம். அரசு மருத்துவமனைகளிலும் பெறலாம்.
இந்தப் படிப்பு படித்தவர்களுக்கு அரசு வேலை கிடைக்க வாய்ப்பு உள்ளது. மேலும் மருத்துவமனை தொடங்கி சுயதொழில் செய்யலாம். 5 நட்சத்திர ஹோட்டல்களில் ஹெல்த்கிளப் மேலாளராக வேலைக்குச் செல்லலாம். இந்தப் படிப்பிற்கு இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் நல்ல வேலைவாய்ப்புகள் உள்ளன. படிப்பு முடிந்ததும், எம்.ஜி.ஆர்.மருத்துவப் பல்கலைக்கழகத்தால் பட்டப் படிப்பிற்கான சான்றிதழ் வழங்கப்படும். பின்னர் அந்த சான்றிதழைக் கொண்டு சென்னையில் உள்ள இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறை என்ற அமைப்பில் பெயரைப் பதிவு செய்த பின்னர் தங்களது மருத்துவ சேவையை மக்களுக்கு வழங்கலாம்.சேவை மனப்பான்மை, சமுதாய ஆக்கறை, உள்ளவர்களுக்கு இந்த படிப்பு ஒரு வரப் பிரசாதமாகும்'' என்றார் சௌந்திரபாண்டியன்.