பேச வேண்டியதில்லை... நினைத்தாலே போதும்!
தில்லியில் பிறந்தவர் அர்னவ் கபூர். 25 வயது இளைஞர். அமெரிக்காவிலுள்ள மசாசூசெட்ஸ் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி மீடியா லேப் (எம்ஐடி மீடியா லேப்) - இன் ஆராய்ச்சி மாணவர்.
தில்லியில் பிறந்தவர் அர்னவ் கபூர். 25 வயது இளைஞர். அமெரிக்காவிலுள்ள மசாசூசெட்ஸ் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி மீடியா லேப் (எம்ஐடி மீடியா லேப்) - இன் ஆராய்ச்சி மாணவர்.
அவருடைய கண்டுபிடிப்பு ஒன்றுக்கு "டைம்ஸ்' இதழின்
விருது கிடைத்திருக்கிறது. 2020 - ஆம் ஆண்டின் சிறந்த 100 கண்டுபிடிப்புகளில் ஒன்றாக அவருடைய கண்டுபிடிப்பு தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கிறது. அது மட்டுமல்ல, அமெரிக்காவில் தரப்படும் உயரிய விருதான "லெமல்சன் - எம்ஐடி ஸ்டூடண்ட்' விருதும் இவருக்கு வழங்கப்பட்டுள்ளது. பரிசுத் தொகை 15 ஆயிரம் அமெரிக்க டாலர்கள் (ரூ.11 லட்சத்து 7 ஆயிரம்).
நீங்கள் பேச வேண்டாம்; நீங்கள் பேச நினைத்ததைப் புரிந்து கொண்டு, செயல்படும் ஒரு வித்தியாசமான கருவியை அவர் கண்டுபிடித்துள்ளார்.
நாம் கணினியின் விசைப் பலகையில் டைப் செய்கிறோம். நாம் டைப் அடிக்க நினைக்கும் சொற்களை மூளையின் கட்டளைக்கு இணங்கி, கை விரல்கள் விசைப் பலகையில் டைப் அடிக்கின்றன. அதாவது மூளையின் மின்காந்த சிக்னல்களை விரல்கள் பெற்று டைப் அடிக்கின்றன. அதுபோன்றுதான் நாம் பேச நினைப்பதை மூளை, நாக்குக்கும், குரல்வளைக்கும் மின்காந்த சிக்னல்கள் மூலம் தெரிவிக்கின்றன. நாம் பேசுகிறோம். கணினியில் இன்டர்நெட் தொடர்புடன் டைப் அடிக்கும் சொற்கள், நமக்கு ரயில் டிக்கெட்டை, பஸ் டிக்கெட்டைப் பெற்றுத் தருகின்றன. வங்கியில் உங்கள் கணக்கில் உள்ள பணத்தை நண்பரின் கணக்குக்கு மாற்றித் தருகின்றன. அப்படித்தான் அர்னவ் கபூரின் கண்டுபிடிப்பும் பல நம்ப முடியாத செயல்களைச் செய்கின்றன.
தலையில் மாட்டிக் கொண்டு காதோடு ஒட்டிக் கொண்டிருக்கும் ஹெட்செட்தான் அர்னவ் கபூரின் "ஆல்டர்ஈகோ' கருவி. இதில் ஆற்றல் மிக்க சென்சார்கள் உள்ளன. நாம் பேச நினைப்பதை நாக்கு பேச, மூளை அனுப்பும் சிக்னல்களை இந்த சென்சார்கள் கண்டுபிடித்துவிடுகின்றன. மூளை அனுப்பும் சிக்னல்களை நாக்கு, குரல்வளை ஆகியவை பெற்றுக் கொண்டு பேச முனையும்போது, அவற்றில் நுண்மையான அதிர்வுகள் ஏற்படுகின்றன. இந்த அதிர்வுகளையும் இந்தக் கருவி கண்டுபிடித்துவிடு
கிறது. அவ்வாறு கண்டுபிடிக்கப்பட்ட சிக்னல்களை செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தின் உதவியுடன் வேறு ஒரு சாதனத்துக்கு மாற்றிவிடுகிறது. அந்த சாதனம் சிக்னல்களை மொழியாக மாற்றிவிடுகிறது. அதாவது மனதில் நினைத்தது, சொற்களாக மாறிவிடுகிறது.
""என்னுடைய ஆல்டர்ஈகோ கருவியை வைஃபை உதவியுடன் செல்லிடப் பேசியுடன் இணைத்துவிட்டால் போதும், நீங்கள் எதையும் பேச வேண்டியதில்லை. நினைத்தாலே போதும். அது மூளையின் அதிர்வுகளாகி பிறகு சொற்களாக மாற்றப்படும். சொற்களாக மாற்றப்பட்ட மூளையின் அதிர்வுகளை டெக்ஸ்ட் மெசேஜ்களாக பிறருக்கு அனுப்ப முடியும்; பேச முடியும். ஆன்லைன் மூலம் தேவைப்படும் பொருள்களை ஒரு வார்த்தை பேசாமலேயே வாங்க முடியும்.
கணக்குப் போடும் திறனுடையது மூளை. ஆயிரத்தை எண்பதால் வகுத்து, 22 - ஆல் பெருக்கி, 15 - ஐ கழித்து 40- ஐ கூட்டி என்று நீங்கள் மனதில் நினைப்பதைப் பேச நினைத்தால், அது மூளை அதிர்வலை
களாகி, கணினியில் உள்ள கால்குலேட்டரை இயக்கி சரியான விடையைக் கொடுத்துவிடும்.
வீட்டில் உள்ள பெண்கள் ஒவ்வொரு நாளும் கடையில் அது வாங்க வேண்டும்; இது வாங்க வேண்டும் என்று நினைப்பார்கள். அதை அவர்கள் குறித்து வைத்துக் கொள்ளாவிட்டாலும் பரவாயில்லை. இந்தக் கருவியை அவர்கள் தலையில் மாட்டிக் கொண்டு நினைத்தால் போதும். கருவி அவற்றை குறித்து வைத்துக் கொள்ளும். நினைவில் பதிந்து வைத்துக் கொள்ளும். தேவைப்படும்போது வாங்க வேண்டிய பொருள்களின் பட்டியலைத் தந்துவிடும்.
இப்படி அன்றாட வாழ்க்கைக்குத் தேவையான பலவற்றை இந்தக் கருவியின் துணையுடன் நாம் செய்து கொள்ள முடியும் என்றாலும், இதை வேறு விதங்களிலும் நாம் பயன்படுத்த முடியும். உதாரணமாக, லட்சக்கணக்கான மக்கள் உடல்நலப் பிரச்னைகளின் காரணமாகப் பேச முடியாமல் தவிக்கிறார்கள். நரம்பு மண்டலக் கோளாறுகளால் பலரால் பேச முடிவதில்லை. வாயில், தொண்டையில் புற்றுநோய் பாதிப்பு உள்ளவர்களாலும் பேச முடிவதில்லை. பக்கவாதம் வந்து பேச முடியாமல் போய்விடுபவர்கள் ஏராளம். இப்படிப்பட்டவர்கள் தாங்கள் நினைத்ததை இந்தக் கருவியின் மூலமாகப் பேசி பிறருக்குத் தெரியப்படுத்த முடியும்'' என்கிறார்
அர்னவ் கபூர்.
அர்னவ் கபூர் கண்டுபிடித்த இந்த ஆல்டர்ஈகோ கருவி, மனித மூளையைக் கணினியுடன் இணைக்கிறது. பிறருடன் பேச நினைத்ததை மட்டுமல்ல, உங்களுக்குள்ளேயே நீங்கள் நினைப்பதையும் இந்தக் கருவி கண்டுபிடித்துவிடும். ஏன் இந்தோனேசியாவில் அடிக்கடி சுனாமியும் நிலநடுக்கமும் ஏற்படுகின்றன என்று நீங்கள் நினைத்து, உங்களுக்குள்ளேயே கேள்வி கேட்டால்போதும், இந்தக் கருவி இணையத்துடன் தொடர்பு கொண்டு உங்களுடைய கேள்விக்கான பதிலை அளித்துவிடும். வேறு சொற்களில் சொன்னால், உங்களுடைய தலையே இண்டர்நெட் ஆகிவிடும்.