முகப்பு
இளைஞர்மணி

விண்வெளிப் பயணத்தில் இந்திய அமெரிக்கர்!

அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா 2024-ஆம் ஆண்டு நிலவுக்கு மனிதர்களை அனுப்பவுள்ள திட்டத்துக்கு ஆர்ட்டெமிஸ் எனப் பெயர் சூட்டியுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:12 PM
பகிர்:

அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா 2024-ஆம் ஆண்டு நிலவுக்கு மனிதர்களை அனுப்பவுள்ள திட்டத்துக்கு ஆர்ட்டெமிஸ் எனப் பெயர் சூட்டியுள்ளது. இத்திட்டத்தின் கீழ் நிலவுக்குச் செல்லவுள்ள 18 பேர் கொண்ட குழுவில் இந்திய அமெரிக்கரான ராஜா சாரி இடம் பெற்று இந்தியாவுக்குப் பெருமை சேர்த்துள்ளார். இந்நிலையில், 2021-ஆம் ஆண்டு இறுதியில் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு ஸ்பேக்ஸ் எக்ஸ் ராக்கெட் மூலம் செல்லவுள்ள நால்வர் குழுவில் ஒருவராகவும் ராஜா சாரியை நாசாவும், ஐரோப்பிய ஒன்றியத்தின் விண்வெளி நிறுவனமும் தேர்வு செய்துள்ளன. இதன் மூலம் இந்தியாவுக்கு இரட்டைப் பெருமை கிடைத்துள்ளது.
 அமெரிக்க விமானப் படையில் கலோனலாக தற்போது பணிபுரிந்துவரும் ராஜா சாரிக்கு இது முதல் விண்வெளிப் பயணம் ஆகும். இப்பயணத்தில் அவர் கமாண்டராகப் பணியாற்றுவார் என நாசா தெரிவித்துள்ளது. அவருடன் ரோம் மார்ஷ்பர்ன் பைலட்டாகவும், மத்தியாஸ் மௌரர் மிஷன் ஸ்பெஷலிஸ்டாகவும் இணையவுள்ளனர். குழுவின் மற்றொரு உறுப்பினர் பின்னர் தேர்வு செய்யப்படுவார்.
 ராஜா சாரியின் தந்தை ஸ்ரீநிவாஸ் சாரி தற்போதைய தெலங்கானாவில் உள்ள மகபூப்நகரைச் சேர்ந்தவர். ஹைதராபாதில் உள்ள உஸ்மானியா பல்கலைக்கழகத்தில் பயின்ற அவர் பொறியியல் படிப்பதற்காக 1950-இல் அமெரிக்காவுக்குச் சென்றார். அங்கு மில்வாக்கி என்ற இடத்தில் பிறந்த ராஜா சாரி, அமெரிக்க விமானப் படையில் மிகுந்த அனுபவம் கொண்டவர். 2500-க்கும் மேற்பட்ட மணி நேரம் விமானத்தில் பறந்துள்ள அவர், 2017-இல் நாசா விஞ்ஞானியாகத் தேர்வு செய்யப்பட்டார்.
 நிலவுக்குச் செல்லும் குழுவில் தேர்வு செய்யப்பட்ட அவருக்கு அதற்கு முன்னதாகவே சர்வதேச விண்வெளி நிலையத்துக்குச் செல்லும் வாய்ப்புக் கிடைத்துள்ளது. அமெரிக்கா, ரஷியா, கனடா உள்ளிட்ட நாடுகளின் ஒத்துழைப்புடன் செயல்பட்டு வரும் சர்வதேச விண்வெளி நிலையத்தில் தொடர்ந்து 20 ஆண்டுகளாக விண்வெளி வீரர்கள் சுழற்சி முறையில் தங்கி ஆய்வுப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அங்கு 19 நாடுகளைச் சேர்ந்த 242 விண்வெளி வீரர்கள் இதுவரை சென்று வந்துள்ளனர். சர்வதேச விண்வெளி நிலையம் தொடர்பாக இதுவரை 108 நாடுகளைச் சேர்ந்த ஆய்வாளர்களால் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அவர்களில் ஒருவராக இணைகிறார் ராஜா சாரி.
 "சர்வதேச விண்வெளி நிலைய பயணத்துக்காக மார்ஷ்பர்ன், மத்தியாஸ் மௌரர் ஆகியோருடன் இணைந்து செயல்படவுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. விண்வெளியில் மனிதர்களால் அமைக்கப்பட்ட நிலையத்துக்குச் செல்லப் போகிறேன். பூமிக்காக விண்வெளியில் நடைபெறும் ஆராய்ச்சியைத் தொடரப் போகிறேன்' என ராஜா சாரி சுட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.
 தனியார் நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸ் மூலம் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு அனுப்பப்படவுள்ள 3-ஆவது ராக்கெட் இதுவாகும். ஏற்கெனவே முதல் ராக்கெட் மூலம் சென்றவர்கள், சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்கி தற்போது ஆய்வுப் பணியில் ஈடுபட்டுள்ளனர். 2-ஆவது ராக்கெட் மூலம் விண்வெளி வீரர்கள் விரைவில் செல்லவுள்ளனர். அந்த வரிசையில் 3-ஆவது ராக்கெட் திட்டத்தின் மூலம் ராஜா சாரி குழுவினர் செல்லவுள்ளனர். ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்துடன் 6 முறை விண்வெளி வீரர்களை சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு அழைத்துச் சென்று ஆய்வுப் பணிக்குப் பின் திரும்ப பூமிக்கு அழைத்து வரும் வகையில் நாசா ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. குறைந்த செலவில், பாதுகாப்பாக விண்வெளி வீரர்களை சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு அழைத்துச் செல்வதே இத்திட்டத்தின் பிரதான நோக்கம்.
 -எஸ்.ராஜாராம்

முழு கட்டுரையைப் படிக்க →