தன்னைத் தானே தூய்மைப்படுத்தும் முகக்கவசம்!
கரோனா வைரஸ் தொற்று காலத்தில் முகத்தை மறைத்துக் கொள்வது மிக முக்கியமான ஒன்றாகிவிட்டது.
கரோனா வைரஸ் தொற்று காலத்தில் முகத்தை மறைத்துக் கொள்வது மிக முக்கியமான ஒன்றாகிவிட்டது. மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்கள் அணியக் கூடிய ச 95 முகக் கவசங்களில் இருந்து, நம்மூர் சாலைகளில் கூவிக் கூவி விற்கப்படும் சாதாரண முகக்கவசங்கள் வரை ஏராளமான முகக்கவசங்கள் வந்துவிட்டன. இவற்றில் பயன்படுத்தித் தூக்கியெறியப்படக் கூடியவை, தூய்மையாக்கி மீண்டும் பயன்படுத்துபவை என பல வகைகளில் உள்ளன.
770 கோடி மக்கள் தொகை கொண்ட இந்த உலகத்தில் எல்லாரும் முகக்கவசம் அணிய வேண்டியிருப்பதால், அதற்குப் பற்றாக்குறை உள்ளது. அதிலும் சில நாடுகளின் அரசுகள் முகக்கவசம் அணியாவிட்டால் அபராதம் என அறிவித்துள்ளன.
முகக்கவசத்தின் தேவை அதிகரித்து உள்ள நிலையில், அவற்றைப் பயன்படுத்திவிட்டு தூக்கியெறிவதும் அதிகரித்துள்ளது. அது புவியின் சுற்றுச்சூழலைக் கெடுத்துவிடவும் வாய்ப்பு இருக்கிறது. தூய்மைப்படுத்தி மீண்டும் அணியக் கூடிய முகக்கவசங்களைத் தூய்மைப்படுத்தும்போதும், தூய்மைப்படுத்த உதவும் தண்ணீரில் கலக்கும் வேதிப்பொருள்களும் சுற்றுச்சூழலை நாசமாக்கவே செய்கின்றன.
"கரோனாவிலிருந்து தப்பிக்க முகக்கவசம் தேவை; முகக்கவசங்களினால் சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பு ஏற்படக் கூடாது' என்று சிந்தித்ததனால், தன்னைத் தானே தூய்மைப்படுத்திக் கொள்ளும் முகக்கவசங்களை உருவாக்கி இருக்கிறார்கள் இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள்.
""மக்கள் அனைவரும் முகக்கவசங்கள் அணிய வேண்டிய தேவை உள்ளது என்றாலும், மிக அதிக அளவில் மருத்துவமனைகளில் முகக்கவசங்கள் பயன்படுகின்றன. நோயாளிகளுக்கும், மருத்துவப் பணியாளர்களுக்கும் மிக அதிக அளவில் தேவைப்படுகின்றன. அவர்கள் பயன்படுத்திய முகக்கவசங்களைப் பயன்படுத்திவிட்டு கழிப்பது என்பது மிகவும் சிரமம். அவை ஏற்படுத்தும் சுற்றுச்சூழல் பாதிப்புகளும் அதிகம். மேலும் உலகம் முழுவதும் உள்ள மருத்துவமனைகளுக்குத் தேவையான முகக்கவசங்களைத் தயாரித்து அளிப்பதும் கடினம். எனவேதான் நாங்கள் புதிய வகையான முகக்கவசங்களைத் தயாரிக்கலாம் என்று திட்டமிட்டோம்'' என்கிறார் இயின் - இலி. இஸ்ரேலில் உள்ள டெக்னியன் - இஸ்ரேல் இன்ஸ்டிடியூட் ஃபார் டெக்னாலஜியில் மெட்டீரியல்ஸ் சயின்ஸ் அன்ட் என்ஜினியரிங் துறையில் பேராசிரியராகப் பணிபுரிகிறார் அவர்.
இவர்கள் தயாரித்துள்ள முகக்கவசம் தன்னைத்தானை தூய்மைப்படுத்திக் கொள்ளும் திறனுடையது. வழக்கமான முகக்கவசம் போலவே இருக்கும் இதில் கூடுதலாக ஒரு யுஎஸ்பி கேபிளை இணைக்கும் வசதி உள்ளது. இந்த கேபிளின் மூலமாகச் செல்லும் மின்சாரம் முகக்கவசத்தை வெப்பமடையச் செய்கிறது. அது முகக்கவசத்தில் உள்ள கிருமிகள், வைரஸ்களைக் கொல்கிறது.
""நாங்கள் தயாரித்துள்ள முகக்கவசத்தில் வெப்பமடையும் கார்பன் ஃபைபர்களை இணைத்திருக்கிறோம். அந்த கார்பன் ஃபைபர்களில் மின்சாரத்தைச் செலுத்தும்போது, முகக் கவசத்தை 149 டிகிரி ஃபாரன்ஹீட்டிலிருந்து 158 டிகிரி ஃபாரன்ஹீட் வரை (65 முதல் 70 டிகிரி செல்சியஸ்) வெப்பப்படுத்துகிறது. அது முகக்கவசத்தில் படிந்திருக்கும் கிருமிகளை, பாக்டீரியாக்களை, வைரஸ்களைக் கொல்கிறது.
ஒரு முகக்கவசத்தை ஒருமுறை இந்த முறையில் தூய்மைப்படுத்த 15 நிமிடங்களில் இருந்து 30 நிமிடங்கள் வரை ஆகும். நீங்கள் உங்கள் காரில் பயணம் செய்து கொண்டிருக்கும்போது, முகக்கவசத்தைக் கழற்றி, உங்களிடம் உள்ள செல்போன் சார்ஜரின் மூலம் யுஎஸ்பி கேபிள் வழியாக மின்சாரத்தைச் செலுத்தி, முகக்கவசத்தைத் தூய்மைப்படுத்திக் கொள்ளலாம்'' என்கிறார் இயின்-இலி.
ஆனால் இந்த முகக்கவசத்தை உருவாக்கத் தொடங்கியபோது, பல சிக்கல்கள் எதிர்ப்பட்டிருக்கின்றன. ஒரு செல்போன் சார்ஜரின் மூலம் வெளிப்படும் மின்சாரம் 10 வாட்ஸ்தான் இருக்கும். இந்த குறைந்த அளவு மின்சாரத்தை வைத்துக் கொண்டு 150 டிகிரி ஃபாரன்ஹீட் வரை எப்படி வெப்பப்படுத்துவது என்பது அதில் ஒரு சிக்கல்.
செல்போன் சார்ஜர், சிகரெட் சார்ஜர் போன்று எல்லா இடத்துக்கும் எடுத்துச் செல்லும் சார்ஜர்களைப் பயன்படுத்தாவிட்டால், இப்படி காரில் பயணம் செய்து கொண்டே போகிறபோக்கில் முகக்கவசத்தைத் தூய்மைப்படுத்தவும் முடியாது. குறைந்த மின்சாரத்தில் அதிக வெப்பம் அடையும் கார்பன் ஃபைபரைக் கண்டுபிடிப்பதுதான் அவர்களுக்கு மிக மிக சிரமமான செயலாக இருந்திருக்கிறது.
""இந்த கார்பன் ஃபைபரை எங்கள் ஆய்வகத்திலேயே நாங்கள் உருவாக்கினோம். எங்கள் ஆய்வகத்தில் 40 விதமான கார்பன் ஃபைபர்கள் இருந்தன. அவற்றில் ஒன்றைத் தேர்ந்தெடுப்பதற்கு மட்டுமே தொடர்ந்து 4 நாட்கள் இரவும் பகலுமாக உழைக்க வேண்டியிருந்தது'' என்கிறார் இயின் - இலி. இவர்களின் இந்தக் கண்டுபிடிப்பை அமெரிக்கக் காப்புரிமைக்காக விண்ணப்பித்து இருக்கிறார்கள்.