சமூக இடைவெளி: டிஜிட்டல் வரிசையில் நில்லுங்கள்!
கரோனா தொற்று ஒருவருக்கு ஏற்படாமல் இருக்க அவர் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும்.
கரோனா தொற்று ஒருவருக்கு ஏற்படாமல் இருக்க அவர் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும். ஒருவர் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க நினைத்தாலும், பல சமயங்களில் அது முடியாமல் போகிறது.
மிகவும் தேவையான பொருள்களை வாங்க கடைகளுக்குச் செல்லும்போது, பலர் தேவையில்லாமல் முண்டியடித்துக் கொண்டு அங்கே நிற்கிறார்கள். வரிசையில் போதிய இடைவெளிவிட்டு நிற்க வேண்டும் என்ற உணர்வு இல்லாமல் அருகருகே பலர் நிற்கிறார்கள். யாரிடமிருந்து கரோனா வைரஸ் நமக்குத் தொற்றிக் கொள்ளுமோ என்ற அச்சத்தில் பலர் நிற்கிறார்கள்.
இப்படிப்பட்ட நிலைமைகளைச் சமாளிக்க, செல்பேசியில் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தும் ஒரு செயலியை மும்பையைச் சேர்ந்த அன்கிட் ஜெயின் என்ற இளைஞர் உருவாக்கியிருக்கிறார்.
கரோனா தொற்று அதிகரித்துவிட்ட இக்காலத்தில் சமூக இடைவெளியை மக்கள் கடைப்பிடிக்க உதவும்விதமாக அவர் தற்போது உருவாக்கியிருப்பது கியூமைன்டர் (ணன்ங்ம்ண்ய்க்ங்ழ்) என்ற செயலி.
""ஒரு பொருளை வாங்க அல்லது ஒரு சேவையைப் பெற மக்கள் எந்த இடத்திலும் கூட்டமாக நிற்காமல், இந்தச் செயலியின் மூலம் டிஜிட்டல் வரிசையில் நிற்பார்கள்'' என்கிறார் அன்கிட் ஜெயின்.
எந்தப் பொருளை வாங்குவதற்கும் யாரும் நீண்ட வரிசையில் காத்திருக்கக் கூடாது என்பதுதான் இந்தச் செயலியின் அடிப்படை நோக்கம்.
ஒருவர் இந்தச் செயலியை பிளே ஸ்டோரில் இருந்தோ, ஆப்ஸ்டோரில் இருந்தோ முதலில் தனது செல்பேசியில் பதிவிறக்கம் செய்து, இணைத்துக் கொள்ள வேண்டும். பிறகு இந்தத் செயலில் தன்னைப் பற்றிய விவரங்களை அவர் பதிந்து கொள்ள வேண்டும். அதன் பிறகு செயலி செயல்படத் தொடங்கும்.
அவருக்கு அருகே உள்ள எந்தக் கடையில் பொருள் வாங்க நினைக்கிறாரோ, எந்த நேரத்தில் வாங்க நினைக்கிறாரோ, அதற்கான டோக்கனை செயலியின் மூலம் பெற்றுக் கொள்ள வேண்டும். உதாரணமாக மதியம் 2 மணியிலிருந்து 3 மணிக்குள் கடைக்குச் சென்று பொருள்களை வாங்க வேண்டும் என்று ஒருவர் நினைத்தால், அந்த நேரத்துக்கான டோக்கனைப் பெற்றுக் கொள்ள வேண்டும். அந்த நேர இடைவெளிக்குள் எப்போது கடைக்குப் போனால் பொருளை வாங்க முடியும் என்ற தகவல் செல்பேசியின் மூலம் கிடைத்ததும், கடைக்குச் சென்று பொருள்களை வாங்கிக் கொள்ள வேண்டும். அவர் கடைக்குச் செல்லும் நேரத்தில் கடையில் எந்தக் கூட்டமும் இருக்காது.
கடையில் பொருள்களை வாங்குவதற்கு மட்டுமல்ல, சிகை திருத்தகங்களில் முடி வெட்டிக் கொள்வது, சிகிச்சைக்காக மருத்துவமனைகளுக்குச் செல்வது, பரிசோதனைக் கூடங்களுக்குச் செல்வது என எதற்கும் வரிசையில் காத்திருக்காமல், இவ்வாறு ஆன்லைன் மூலம் டோக்கன் பெற்று தங்களுக்கு உரிய நேரம் வந்ததும் ஒருவர் செல்லலாம்.
இதுபோன்று மக்களுக்குப் பயன்படும் இந்தச் செயலி, வணிகநிறுவனங்கள், மருத்துவமனைகள், பரிசோதனைக் கூடங்கள் போன்றவற்றுக்கு வேறுவிதமாகப் பயன்படுகிறது.
வணிக நிறுவனங்கள் முதலில் தங்களைப் பதிவு செய்து கொள்ள வேண்டும். என்ன பொருள்களெல்லாம் தங்களிடம் கிடைக்கும் என்கிற தகவல்கள் உட்பட. அதன் பிறகு அவர்கள் இந்தச் செயலியின் மூலம் எத்தனை வாடிக்கையாளர்கள் பொருள்களை வாங்கக் காத்திருக்கின்றனர், யார் யார் காத்திருக்கின்றனர், அவர்கள் எந்த நேரத்தில் பொருள்களை வாங்க பதிவு செய்துள்ளனர் என்பதைத் தெரிந்து கொள்ள முடியும்.
வணிக நிறுவனம் செயல்படும் நேரத்தை இரண்டிரண்டு மணி நேரமுள்ள பகுதிகளாகப் பிரித்து, ஒவ்வோர் இரண்டு மணி நேரத்துக்கும் காத்திருக்கும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை, அவர்கள் வாங்கும் பொருள்களின் அளவு ஆகியவற்றின் அடிப்படையில் எத்தனை வாடிக்கையாளரை அனுமதிக்கலாம் என்பதைக் கணக்கிட்டு, இரண்டு மணி நேரத்துக்குள் குறைந்தது 20 வாடிக்கையாளர்களுக்கு டோக்கன் வழங்கும் வகையில் இந்தச் செயலி வடிவமைக்கப்பட்டு இருக்கிறது.
ஒருவர் வாங்கிய டோக்கனை இன்னொருவர் பயன்படுத்திக் கொள்ள முடியாது. ஒருவர் ஒரு கடையில் பொருள்களை வாங்க ஒருநாளைக்கு ஒரு டோக்கனைத்தான் பெற்றுக் கொள்ள முடியும்.
""இந்த செயலி மும்பையின் செம்பூர் பகுதியில் டி-மார்ட், பிக் பஜார், ஸ்டார் பஜார், ரிலையன்ஸ் போன்ற ஆறு முக்கியமான பெரிய நிறுவனங்களில் தற்போது செயல்படுத்தப்படுகிறது. வேறு சில சிறிய நிறுவனங்கள் இப்போதுதான் இந்தச் செயலியைப் பற்றித் தெரிந்து கொள்ளத் தொடங்கியிருக்கிறார்கள்'' என்கிறார் அன்கிட் ஜெயின்.
இந்தச் செயலியை மக்கள் எந்தக் கட்டணமும் இல்லாமல் பதிவிறக்கம் செய்து பயன்படுத்திக் கொள்ளலாம். வணிகநிறுவனங்கள், சேவை நிறுவனங்கள் கட்டணம் செலுத்த வேண்டும். நிறுவனங்களின் தன்மை, அளவு போன்றவற்றுக்கேற்ப இந்தக் கட்டண விகிதங்கள் மாறும். முதலில் ஒரு மாதத்துக்கு இலவசமாகச் செயலியைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
""பொது இடங்களுக்குச் சென்றால் கரோனா தொற்று எற்பட்டுவிடுமோ என்ற அச்சத்தைப் போக்க நான் உருவாக்கிய இந்தச் செயலி உதவும்.
தொற்றிலிருந்து மக்களைப் பாதுகாக்கும். அதேசமயம் வணிக நிறுவனங்கள், சேவை நிறுவனங்கள் தங்களுடைய பணியை வெற்றிகரமாகச் செய்வதற்கும் இது உதவும்'' என்கிறார் மகிழ்ச்சியுடன் அன்கிட் ஜெயின்.