முகப்பு
இளைஞர்மணி

முந்தி இருப்பச் செயல்

கிளவுன் சுந்தரம் எழுதி, "சக்கரவர்த்தி திருமகள்' திரைப்படத்தில் இடம்பெற்ற ஒரு   பாடலில் வரும் கேள்வியும்-பதிலும் உங்களுக்குத் தெரிந்திருக்கும்:உலகத்திலே பயங்கரமான ஆயுதம் எது?

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:46 PM
பகிர்:

கிளவுன் சுந்தரம் எழுதி, "சக்கரவர்த்தி திருமகள்' திரைப்படத்தில் இடம்பெற்ற ஒரு பாடலில் வரும் கேள்வியும்-பதிலும் உங்களுக்குத் தெரிந்திருக்கும்:
உலகத்திலே பயங்கரமான ஆயுதம் எது?
நிலைகெட்டுப் போன நயவஞ்சகரின் நாக்குதான் அது.
அண்மையில் நா. இரவீந்திரன் என்றொருவர் எழுதிய ஹைக்கூ கவிதை இப்படிச் சொல்கிறது:
நா அடக்கம்
வாழ்க்கைக்கும்
வயிற்றுக்கும் நல்லது!
நாக்கும், அந்த நாக்கு அமைந்திருக்கும் வாயும்
மிகவும் ஆபத்தானவை. ஏனென்றால், பெரும்பாலான வேளைகளில், வாய் வழியாகத்தான் நோய்
வருகிறது; வாய்க்கொழுப் பின் மூலமாகவே வாழ்க்கையில் பிரச்னைகளும் எழுகின்றன.
கரோனா பீடித்த இன்றைய உலகில், நாமெல்லாம் முகக்கவசம் (மாஸ்க்) அணிவதால், தேவையின்றி வாயைத் தொடுவதும், தேவையற்ற உணவுகளை உண்
பதும், தேவையில்லாமல் பேசுவதும் ஓரளவு குறைந்
திருக்கின்றன. "வாயைக் கட்டுவது வாழ்க்கைக்கு
நல்லது' என்பதுதான் கரோனா நமக்குப் பயிற்றுவிக்கும்
முக்கியமான பாடம்.
வாய்த் தகராறு ஒரு பெரும் சமூக அவலமாக மாறியிருக்கிறது.
தூத்துக்குடி அருகேயுள்ள பேரூரணி என்கிற கிராமத்தில் ஒரு திருமணம் நடந்தது. வெளியூர் இளைஞர்கள் இரண்டு பேர் அந்தத் திருமணத்திற்காக வந்திருக்கின்றனர். அவர்கள் புதுமணத் தம்பதிக்கு வாழ்த்து தெரிவிப்
பதற்காக ஒரு டிஜிட்டல் பதாகையை வைக்கும்போது, உள்ளூர் இளைஞர் ஒருவரோடு வாய்த் தகராறு ஏற்பட்டிருக்கிறது. “வெளியூர்க்காரர்கள் எப்படி இங்கே பதாகை வைக்கலாம்” என்று தகராறு செய்தாராம் அந்த உள்ளூர் நபர். ஊர்ப் பெரியவர்கள் தலையிட்டு இவர்களைப் பிரித்துவிட்டிருக்கிறார்கள். ஆனால் அன்றிரவு மொட்டை மாடியில் படுத்துத் தூங்கிய மேற்கண்ட இரண்டு
இளைஞர்களும் முகங்கள் அடித்து நொறுக்கப்பட்டு, கழுத்து அறுக்கப்பட்டுக் கொல்லப்பட்டனர்.
அதேபோல, குமரி மாவட்டம் இரணியல் அருகே உள்ள நுள்ளிவிளை கிராமத்தைச் சேர்ந்த ஒரு தொழிலாளி தனது மகனின் முதல் பிறந்தநாளைக் கொண்டாட உறவினர்கள், நண்பர்களை அழைத்திருந்தார். அவர்
களில் சிலர் வீட்டுக்கு வெளியே அமர்ந்து பேசிக் கொண்டிருந்தபோது, அதே பகுதியில் வசிக்கும் ஒருவர், ""நாங்கள் இரவில் தூங்க வேண்டாமா? இப்படி சத்தம் போடுகிறீர்களே'' என்று கேட்டிருக்கிறார். வாய்த் தகராறாகத் தொடங்கி, கைகலப்பாக மாறி, கும்பல் தாக்குதலாகத் தொடர்ந்த அந்தப் பிரச்னை, நள்ளிரவு 12 மணியளவில் இரண்டு உயிர்களைக் காவு வாங்கியது.
வாய்த் தகராறு என்பது வாழ்வின் நிஜங்களுள் ஒன்று. உயிரோடிருக்கும் எந்த மனிதரும் யாரோடாவது ஒரு வாய்த் தகராறு செய்யாமல் வாழ முடியாது என்பதுதான் உண்மை. கணவன்-மனைவிக்கு இடையே, பெற்றோர்-குழந்தைகளுக்கு இடையே, நண்பர்களுக்குள்ளே,
உறவுகள் மத்தியில் அல்லது பொது வெளியில் நிச்சயம் கருத்து வேறுபாடுகள் எழும். அது வாய்த் தகராறாக மாறலாம். ஆனால் அது கொலைபாதகமாக முடிய வேண்டிய தேவை இல்லவே இல்லை.
ஏன் இந்த நிலை எழுகிறது? மக்கள்தொகை
அதிகரிப்பு, நலிந்துவரும் பொருளாதாரம், அருகிவரும் வேலைவாய்ப்புகள், நகரமயமாதல், புலம்பெயர்தல், மாறிவரும் சமூகச் சூழல், மனஅமைதியற்ற மக்கள் கூட்டம், ஏழ்மை, வறுமை, வெறுப்பரசியல் போன்ற
பற்பல விடயங்களால், குற்றங்கள் அதிகரிக்கின்றன.
முதலில், சில மனிதர்கள் கையாள்வதற்குக் கடினமானவர்கள் எனும் உண்மையை உணர்ந்து, அதற்கேற்ப நாம் வாழப் பழகியாக வேண்டும். ஜெர்மனி நாட்டில் நண்பர்கள் கூட்டமொன்று ஓர் ஆவணப்படத்தைத் திறந்தவெளியில் திரையிட்டார்கள். பக்கத்து வீட்டின் பின்புறச் சுவரின் மீது அந்தப் படக்காட்சி விழும்படி ஏற்பாடு செய்தனர். ஆனால் அந்த வீட்டின் உரிமையாளர் காவல்துறைக்கு தகவல் தந்து அதை ஒரு பிரச்னையாக்கினார்.
அங்கே வந்து விசாரித்த காவலர்கள், ""உங்கள் வீட்டின் பின்புறச்சுவர் மீது சன்னல்களோ, கதவுகளோ, அல்லது கண்ணாடிகளோ எதுவுமேயில்லை; எனவே உங்களுக்கு ஒலி மாசு அல்லது ஒளி மாசு ஏற்படும் வாய்ப்பே இல்லை. பிறகு ஏன் தகராறு செய்கிறீர்கள்?'' என்று கேட்டார்கள். அந்தப் பெருந்தகையாளரோ,
""என் வீட்டுச் சுவரை இவர்கள் எந்தவிதத்திலும் பயன்படுத்தக்கூடாது!''” என்று பிடிவாதமாக வாதிட்டார். சட்டப்படி அவர் நிலைப்பாடு சரியென்றாலும், மாந்தநேயப்படி அவர் வாதம் முற்றிலும் தவறானது. கையாள முடியாதவர்களை கைகழுவி விட்டுவிடுவதுதான் அறிவுடைமை.
இரண்டாவது, ஒரு வாய்த் தகராறு எழும் சூழலில், குறிப்பிட்ட அந்த மனிதரோடான உறவு முக்கியமானதா என்று பாருங்கள். அந்த மனிதர் பரிச்சயமற்றவர்,
அவரோடான உறவு எந்த நெருக்கமோ, நீடித்த நிலைத்த தன்மையோ, அல்லது எதிர்காலமோ உடையதல்ல என்றால், அவரோடு மோதுவதில் அர்த்தமேயில்லை.
"துஷ்டனைக் கண்டால் தூர விலகு'” என்று உள்ளுக்குள் சொல்லிக்கொண்டே, விலகிப் போய்விடுவதே விவேகமானது.
மூன்றாவது, பிரச்னையின் தன்மை பற்றி சிந்திப்பதும் மிகவும் அவசியம். ஓரிரு ஆண்டுகளுக்கு முன்னால் நெல்லை மாவட்டம் இராதாபுரம் அருகேயுள்ள சமூகரெங்கபுரம் எனும் ஊரில் ஒரு வினோதமானப் பிரச் னை எழுந்தது. அந்த ஊரின் பேருந்து நிறுத்தம் அருகே ஒரு முக்கியமான தலைவரின் ஆளுயரச் சிலை அமைக்கப்பட்டிருந்தது. அதனை நிறுவியிருந்த ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சியினர் அவருடைய பிறந்தநாளன்று அந்தச் சிலையை சுத்தம் செய்து, வர்ணம் பூசி, மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
அதே நாள் சற்று நேரம் கழித்து இன்னொரு அரசியல் கட்சியினர் அந்த சிலைக்கு மரியாதை செலுத்த வந்தார்கள். சிலையின்மீது வரையப்பட்டிருந்த வேட்டி மற்றும் துண்டிலிருந்த கரையின் நடுவே சாக்பீஸôல் ஒரு கோடு வரைந்து, அதை தங்கள் கட்சியின் கரையாக மாற்றினார்கள். வெடித்தது விபரீதம். பிரச்னை வாய்த் தகராறாகி, கும்பல் மோதலாகி, புகார், வழக்கு என்று நீண்டு, நெடுநாள் நீடித்தது. இதுபோன்ற உப்புசப்பில்லாத பிரச்னைகளை ஊதிப் பெரிதாக்கிக் கொண்டிராமல், வாழ்வின் இன்றியமையாத இலக்குகளை நோக்கி நாம் பயணிப்பதே சிறப்பானது.
இறுதியாக, தனிப்பட்ட முறையில் மக்களில் பெரும்பான்மையோருக்கு பொறுமையும், நிதானமும், விட்டுக் கொடுக்கும் மனப்பான்மையும் குறைந்து வருகின்றன. கருத்து வேறுபாடுகளை முதிர்ச்சியோடு பேசித் தீர்க்கும் பக்குவம் மறைந்து வருகிறது. இவற்றை மீட்டெடுக்க ஆவன செய்தாக வேண்டும். பள்ளிக் கல்வி முதல் பணியிடப் பயிற்சிகள் வரை, இவற்றை மீட்டுருவாக்கம் செய்யும் முயற்சிகளில் நாம் ஈடுபட்டாக வேண்டும்.
மனிதருக்குள்ளே கருத்து வேறுபாடுகளும், சித்தாந்த மோதல்களும் எழுவது இயற்கை. இந்த வேறுபாடுகளும், மோதல்களும் உண்மையான மனித உறவுகளை மேலும் உறுதி பெற உதவுகின்றன. ஆனால் அவை ஆக்க சக்தியைக் குறைத்து அழிவுச் சக்தியை அதிகரிக்கும்பட்சத்தில், சம்பந்தப்பட்ட நபர்களையும், சந்தர்ப்பங்களையும் தவிர்த்து விடுவதுதான் சாலச் சிறந்தது.
தவிர்க்க முடியாதென்றால், அவற்றைத் திறம்படக் கையாள வேண்டும். செயற்கைத் தீர்வுகளான அழித்தொழித்தல், ஆள் வைத்துக் கொலை செய்தல் போன்றவை கூடுதல் துன்பத்தையும், துயரத்தையும்தான் தரும் என்பதை உணர வேண்டும்.
தீயவை தீய பயத்தலால் தீயவை
தீயினும் அஞ்சப் படும்
எனும் எளிய உண்மையை வாழ்வின் அனைத்து நிலைகளிலும், தளங்களிலும் நாம் ஒருவருக்கொருவர் கற்பித்தாக வேண்டும்.
வாய்த் தகராறுகள் எல்லாம் கொலைக் குற்றங்களாக உருவெடுத்தால், விரைவில் வீதிக்கொருவர், வீட்டுக்கொருவர் கொலையுண்டு போகும் கொடூரம் நிகழலாம். இயற்கை மனிதத்தை செயற்கை மரணங்கள் கொல்ல அனுமதிப்பது தவறு. “"ஒரு சின்ன நூல்கண்டா நம்மைச் சிறைப்படுத்துவது?'” என்று எழுத்தாளர் சிவசங்கரி ஒரு நூலில் கேட்டது போல, ஒரு சின்ன வாய்த் தகராறா நம்மைக் கொலையாளி ஆக்குவது என்று இப்போது நாம் கேட்டுக் கொள்ள வேண்டியிருக்கிறது.

(தொடரும்)

கட்டுரையாளர்: சுற்றுச்சூழல் ஆர்வலர்.
தொடர்புக்கு: spuk2020@hotmail.com

முழு கட்டுரையைப் படிக்க →