முந்தி இருப்பச் செயல்: மென்முறைத் திறன் - 17
நாம் பிறவியிலேயே, இயல்பிலேயே வன்முறையாளர்கள், "கொலைகாரக் குரங்குகள்' என்கிற விழுமியம் சிலரால் முன்வைக்கப்படுகிறது.
நாம் பிறவியிலேயே, இயல்பிலேயே வன்முறையாளர்கள், "கொலைகாரக் குரங்குகள்' என்கிற விழுமியம் சிலரால் முன்வைக்கப்படுகிறது. அது உண்மையானதா என்று நமக்கு நாமே ஒரு தேர்வு வைத்துக் கொள்வோம். நம்மில் எத்தனை பேர் ஒரு சக மனிதனைக் கொல்வதற்கு கடிதில் தீர்மானித்திருக்கிறோம், திட்டமிட்டிருக்கிறோம், தீர்த்துக்கட்டியிருக்கிறோம்? இல்லையே?
நாம் மென்முறையாளர்களே எனும் வாதத்தை மகாத்மா காந்தி தெளிவான ஓர் எடுத்துக்காட்டோடு முன்வைக்கிறார். மானுட வரலாறு என்பது நம்மையெல்லாம் வழிநடத்தும் அன்பாற்றலின் போக்கில் ஏற்படும் குறுக்கீடுகள்தான் என்கிறார் அவர்:
""இரண்டு சகோதரர்கள் சண்டையிடுகிறார்கள். அவர்களுள் ஒருவர் மனம் வருந்தி தனக்குள் புதைந்து கிடக்கும் அன்பினைப் புனருத்தாரணம் செய்து, இருவரும் சமாதானமாக வாழத் தொடங்குவதை யாரும் கண்டுகொள்வதில்லை. ஆனால் அந்தச் சகோதரர்கள் பிறரின் தலையீட்டோடு ஆயுதமேந்தி அடித்துக் கொள்ளும்போது அல்லது சட்டப் போராட்டத்தில் ஈடுபடும்போது, அவர்களின் நடவடிக்கைகள் ஊடகங்களில் செய்தி ஆகின்றன. அண்டை அயலார் அவர்களைப் பற்றிப் பேசுகிறார்கள். வரலாற்றில் கூட அது இடம்பெறலாம்.''
அசாதாரணமான நிகழ்வுதானே செய்தி ஆகிறது? அப்படியானால், வன்முறை அசாதாரணமானது என்றும், மென்முறைதான் சாதாரணமானது என்றும் நாம் அறியலாம்.
ஒரு சில ஆண்டுகளுக்கு முன்னால் ஓணம் பண்டிகைக்காக நானும், என் குடும்பமும் ஆலப்புழா என்கிற ஊரிலுள்ள எனதருமை நண்பர் மாத்யூ பால் வீட்டுக்குச் சென்றோம். நண்பர் பேருந்து நிலையத்துக்கு வந்து தனது காரில் எங்களை அழைத்துச் சென்றார். ஒரு குறுகலான சாலையில் செல்லும்போது, சாலையின் குறுக்கே நான்கு பேர் நின்றுகொண்டிருந்தார்கள். நண்பர் ஒலி எழுப்பி வழி கேட்டார். இதனால் கோபமடைந்த நால்வரில் ஒருவர் தனது மிதிவண்டியை எடுத்துவந்து, சாலையின் குறுக்கே நிறுத்திவிட்டு, ""இப்போது போகமுடியாது'' என்றார்.
மென்முறை, அறவழி, அகிம்சை பற்றி மேலைநாடுகளில் வகுப்பெடுக்கும் நான், என்ன நடக்கப்போகிறது, எப்படி இந்தச் சிக்கல் தீர்க்கப்படப் போகிறது என்று அதீத ஆர்வத்துடன் கவனித்துக் கொண்டிருந்தேன். நண்பர் மகிழுந்தின் இஞ்சினை அணைத்துவிட்டு, எதுவுமே நடக்காததுபோல பின்னிருக்கையில் அமர்ந்திருந்த எனது மனைவியுடன் சுவாரசியமாகப் பேசிக் கொண்டிருந்தார்.
எனக்கு இருப்புக் கொள்ளவில்லை. ஆனாலும் அது புதிய ஊர் என்பதாலும், சாலையில் நின்றவர்கள் மது அருந்தியிருந்ததாலும், நண்பருக்கு தர்மசங்கடத்தை உருவாக்கிவிடக் கூடாதென்று எண்ணியதாலும், அப்படியே வாளாவிருந்தேன். கொஞ்ச நேரம் அமைதியாக, பொறுமையாக, நிதானமாக இருந்த நண்பர், காரை சற்றே பின்னுக்குக் கொண்டுபோய், குறுகலான சாலையோரத்தில் இறக்கி, புதர்களை உரசியவாறே சென்று, அந்த நான்குபேரின் அருகே நிறுத்தி, கண்ணாடியை இறக்கி, ""ஹாப்பி ஓணம்''என்று வாழ்த்துத் தெரிவித்தார்.
"இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயஞ் செய்து விடல்' -(314)
என்பது எவ்வளவு மேன்மையான உத்தி என்பதைப் பார்த்து பூரிப்படைந்தேன் நான். இப்படி "அகழ்வாரைத் தாங்கும் நிலம்போல' இகழ்வாரை, இன்னல்கள் செய்வோரைப் பொறுத்து வாழ்வதுதான் மென்முறை, அறவழி, அகிம்சை என்பது.
தனிப்பட்ட வாழ்வைப் போலவே, பொதுவாழ்க்கையிலும்... வன்முறையில் அதீத நம்பிக்கை உடையவர்களிடம், வன்முறைக் கட்டமைப்புக்களை கைவசம் வைத்திருக்கிறவர்களிடம் வன்முறையில் மோதுவது அறிவுடைமையும் ஆகாது; அது வெற்றியையும் பெற்றுத் தராது.
அப்படியானால், மென்முறை என்பது கோழைத்தனத்துடன், பதுங்கி, ஒதுங்கிச் செல்வதா? இல்லவே இல்லை. பாரதியார் குறிப்பிடும் "மனதில் உறுதியும், வாக்கினில் இனிமையும், நினைவு நல்லதும்' கொண்ட வீரத்துடன், அநீதிக்கு எதிராகப் போராட கைக்கொள்வதுதான் மென்முறை. வன்முறையால் ஓர் இரத்தக்களரியை உருவாக்கி, அனைத்தையும், அனைவரையும் அழிப்பதை விட, மென்முறையால் மனமாற்றங்களை உருவாக்கி, ஒரு கருத்துப் பரிமாற்றத்துக்கு இட்டுச் செல்வதுதான் சிறந்தது.
மகாத்மா காந்தியின் மென்முறை பிரிட்டிஷ்காரர்கள் நல்லவர்கள், நீதிமான்கள் என்பதால்தான் பலித்தது என்றும், ஹிட்லரைப் போன்ற கொடுங்கோலர்களிடம் அது செல்லாது என்றும் சிலர் வாதிடுகிறார்கள்.
பிரிட்டிஷ்காரர்கள் அப்படியொன்றும் இறைத்தூதர்கள் அல்ல என்பது காலனி ஆதிக்க வரலாற்றை மேலோட்டமாகப் படித்தாலே தெளிவாகப் புரியும். இனவெறியும், மேட்டிமைத்தனமும், அபகரிக்கும் தன்மையும் கொண்டிருந்தவர்கள் அவர்கள். ஏழை மக்களைக் கசக்கிப் பிழிந்தவர்கள், கொன்று குவித்தவர்கள்.
அதேபோல, கொடூரமான ஹிட்லரிடம் கூட மென்முறை அணுகுமுறை வேலை செய்திருக்கிறது என்பதுதான் உண்மை. 1943-ஆம் ஆண்டு பிப்ரவரி - 27 அன்று அதிகாலையில் "கெஸ்டபோ' எனும் நாசிப் படையினர் ஜெர்மன் பெண்களை மணந்த யூதர்கள், மற்றும் ஜெர்மானியர்-யூதர் கலப்புத்திருமண உறவில் பிறந்த ஆண்கள், ஏறத்தாழ 2,000 பேரை "ரோசன்ஸ்டிராஸ்ஸ' எனும் தெருவில் அமைந்திருந்த யூத சமூகக்கூடத்தில் அடைத்து வைத்தனர். அவர்களுடைய ஆவணங்களைப் பரிசோதித்துவிட்டு, அவர்களை வதைமுகாம்களுக்கு அனுப்புவதா, அல்லது கட்டாய வேலை முகாம்களுக்கு அனுப்புவதா என்று முடிவெடுக்க நினைத்திருந்தனர்.
கொஞ்ச நேரத்தில் இந்தத் தகவல் மெதுவாகக் கசிந்து நகரெங்கும் பரவியது. அந்தக் கைதிகளின் ஜெர்மானிய மனைவியரும், அம்மாக்களும் அங்கே கூடினார்கள். நாசிகளிடமிருந்து எந்தத் தகவலையும் பெறமுடியாத நிலையில், அந்தப் பெண்கள் நடுங்க வைக்கும் குளிரையும் பொருட்படுத்தாது, தினமும் அங்கே கூடுவதும், அமைதியாக அமர்ந்திருப்பதும், அவ்வப்போது "எங்கள் கணவரைத் திருப்பிக் கொடு' என்று முழக்கமிடுவதாகவும் இருந்தனர்.
தொடக்கத்தில் வெறும் 150 - 200 பெண்களாக இருந்த அந்தக் கூட்டம், நாளடைவில் பல ஆயிரங்களாக மாறியது. ஒரு நாள் திடீரென எந்தவிதமான முன்னறிவிப்புமின்றி ஏராளமான நாசிப் படையினர் வந்திறங்கி, அந்தப் பெண்களுக்கு முன்னால் நிறைய தானியங்கித் துப்பாக்கிகளை வரிசையாக நிறுவினர். "இப்போதே நீங்கள் கலைந்து செல்லவில்லை என்றால், நாங்கள் சுடுவோம்' என்று உரக்கக் கத்தினர். ஒருகணம் நிலைகுலைந்துபோன அப்பெண்கள் சற்றே பின்னுக்குச் சென்றாலும், நாசிகள் எப்படியும் சுடத்தான் போகிறார்கள் என்றுணர்ந்து, "கொலைகாரர்கள், கொலைகாரர்கள்' என்று அங்கேயே நின்று முழக்கமிட்டனர்.
இந்த மென்முறைப் போராட்டத்தை எதிர்கொள்ளத் தெரியாத நாசிப் பிரச்சார அமைச்சர் ஜோசப் கோயபெல்ஸ் திகைத்து நின்றார். ஜெர்மனியின் தலைநகரான பெர்லின் நகருக்கு மத்தியில் நூற்றுக்கணக்கான ஜெர்மானியப் பெண்களைப் படுகொலை செய்வது அவ்வளவு நன்றாக இருக்காது என்பதை அவர் உணர்ந்தார். மேலும் நாசிப்படை ரஷ்ய ராணுவத்திடம் மோசமாகத் தோற்றுப் பின்வாங்கிக் கொண்டிருந்த நிலையில், இம்மாதிரியான செய்தி நாசிப் படையை மேலும் வலுவிழக்கச் செய்யும் என்றும் சிந்தித்தார். எனவே ஓரிரு வாரங்களுக்குப் பிறகு அவர்கள் கதைகளை முடித்துக் கொள்ளலாம் என்றெண்ணியவாறே, "அவர்களை விட்டுவிடுங்கள்' என்று ஆணையிட்டார்.
ஆஸ்க்விட்ஸ் வதைமுகாமுக்குக் கொண்டு போகப்பட்டு, கொல்லப்பட்ட 25 பேர் தவிர, ஏனையோர் விடுதலை செய்யப்பட்டார்கள். அபூர்வமான அந்த மென்முறைப் போராட்டம் ஒரு சிறு தற்காலிக வெற்றியை மட்டுமே அளித்தாலும், மக்கள்சக்தி முன்னால் நாசிப் படை மண்டியிட்டது ஒரு வரலாற்று நிகழ்வாகவே இன்று வரை பேசப்படுகிறது.
தனிப்பட்ட வாழ்வில் மென்முறையைக் கடைபிடிப்பது எப்படி? "வாட்ச் யுவர் வாட்ச்' எனும் ஓர் எளிய சூத்திரத்தைப் பின்பற்றலாம். நீங்கள் பயன்படுத்தும் வார்த்தைகளை கவனமாக அவதானித்து, அவற்றில் வன்முறையான வார்த்தைகள் அறவே இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள். அடுத்து, உங்கள் செயல்பாடுகளில் எந்தவிதமான வன்முறையும் தலைதூக்காமல் இருக்கும்படி செய்யுங்கள்.
மூன்றாவதாக, உங்கள் எண்ணங்களிலும் எந்தவிதமான வன்முறையும் படிந்துவிடாமல் இருக்கட்டும். நான்காவதாக, உங்களுடைய குணநலன்களிலும் வன்முறை தோய்ந்துவிடாமல் தடுத்துவிடுங்கள். இறுதியாக, உங்கள் இதயத்திலும் வன்முறை குடி புகாமல் கவனமாகப் பார்த்துக் கொள்ளுங்கள்.
உங்களுடைய இந்த "வாட்ச்' சரியாக வேலை செய்யும்போது, நீங்கள் மென்முறையின் வித்தகராகப் பரிணமிப்பீர்கள். மென்முறை மேன்மையான முறை என்பதால், நீங்கள் மேன்மையுமடைவீர்கள்.
(தொடரும்)
கட்டுரையாளர்: சுற்றுச்சூழல் ஆர்வலர்.
தொடர்புக்கு: spuk2020@hotmail.com