வேலை செய்யுங்கள்... சிறப்பாக!
சாதாரணமாக, "எப்ப வேலை முடியும் ? எப்போ வீட்டுக்குப் போகலாம் ?' என்ற எண்ணத்துடன் வேலை செய்பவர்கள் அதிகம்.
சாதாரணமாக, "எப்ப வேலை முடியும் ? எப்போ வீட்டுக்குப் போகலாம் ?' என்ற எண்ணத்துடன் வேலை செய்பவர்கள் அதிகம்.
உலகில் பெரும்பாலானோர் அப்படி இருக்க, சிலர் வீட்டிற்குச் செல்வதைத் தவிர்த்து அலுவலகமே கதியென கிடப்பார்கள்.
இப்படி வேலை நேரம் முடிந்த பின்னரும், அலுவலகத்தில் இருந்து வேலை செய்வதை வொர்க்ஹாலிக் என்று ஆங்கிலத்தில் அழைக்கிறார்கள்.
இவர்கள் குறிப்பிட்ட வேலையை குறிப்பிட்ட நேரத்திற்குள் முடிக்க முடியாமல் திணறுபவர்கள் அல்ல. தங்கள் வேலையெல்லாம் முடித்துவிட்டு அலுவலகத்தில் மற்றவர்களுக்காக வேலை செய்யக் கூடியவர்கள்தான்
இவர்கள். பெரும்பாலான நேரத்தை அலுவலகத்திலேயே செலவிடுவதையே இவர்கள் விரும்புகின்றனர். இதனால் அவர்களுக்கு வெளித் தொடர்புகள் முற்றிலும் இல்லாமல் போய்விடக்கூடும்.
அரசியல், சமூக அமைப்புகள் போன்றவை எப்போதுமே சிக்கலான விஷயங்கள்தாம். நாம் தேவையில்லாமல் அதில் நுழைந்து சிரமப்படுவதை விட நமது வேலையை நாம் பார்த்துக்கொண்டிருக்க வேண்டும்; மற்றவர்களின் வேலையில் தலையிடாமல் இருக்க வேண்டும் என்று இவர்கள் நினைப்பார்கள். ஆனால் மற்றவர்களின் பணியையும் இழுத்துப் போட்டுக் கொண்டு செய்வார்கள். அதனால் மன அழுத்தத்திற்கும் ஆளாவார்கள்.
பொதுவாகவே வொர்க்ஹாலிக் மனநிலை உடையவர்கள் அலுவலகத்திலிருந்து வேலை செய்வதையும், அலுவலக சக ஊழியர்களுக்கு பணியில் உதவுவதில் மட்டுமே மகிழ்ச்சியைக் காணக் கூடியவர்களாக இருப்பார்கள். மற்ற எதிலும் மகிழ்ச்சி கிடைக்காது என்று எண்ண கூடியவர்களாக இருப்பார்கள்.
இதனால் இவர்களின் வாழ்க்கையே வேலை செய்வதற்காக என்று மாறிவிடும். இத்தகைய நிலையிலிருந்து விடுபட இவர்கள் சிலவற்றை மாற்றிக் கொள்ள வேண்டும்.
மெதுவாக வேலை செய்தல்: ஒருவர் தன்னுடைய தனது வேலையை வேகமாக முடித்தால், கிடைக்கும் கூடுதல் நேரத்தில் பிறரின் வேலையை இழுத்துப் போட்டுக் கொண்டு செய்யும் எண்ணம் வரும். எனவே குறிப்பிட்ட வேலையை அதற்குரிய நேரத்துக்குள் முடிக்கப் பழகிக் கொள்ள வேண்டும். இதனால் மெதுவாக, அழகாக, நேர்த்தியாக வேலை செய்ய முடியும். வேலையின் தரமும் சிறப்பாக இருக்கும். மற்றவர்களின் பணியைச் செய்ய வேண்டும் என்ற தூண்டுதல் மனதில் எழாமல் இருக்கும்.
நம் தவறை உணர்தல்: தமக்கு ஒதுக்கப்பட்ட பணியை சிறப்பாகச் செய்து முடித்து விட்டோம் என்ற நம்பிக்கையில்தான் இவர்கள் அடுத்தவர்களின் பணியைக் கூடுதலாகச் செய்ய நினைக்கிறார்கள். இவர்கள் தாம் செய்த பணியில் எங்கேனும் தவறு இருக்கிறதா என்று மறு ஆய்வு செய்து பார்க்க வேண்டும். அப்படி பார்க்க முனைந்தால், அவர்கள் செய்த பணியில் உள்ள தவறுகள் தெரிய வரும். அவற்றைச் சரி செய்வதற்கும் நேரம் தேவைப்படும். இதன் மூலம் மற்றவர்களின் பணியைச் செய்ய வேண்டும் என்ற எண்ணம் எழாமல் போய்விடும்.
சிறு விஷயங்களிலும் கவனம் செலுத்துதல்: வீட்டில் ஒருவர் செய்ய வேண்டிய செயல்கள் நிறைய இருக்கும். அலுவலகத்திலேயே நீண்ட நேரம் தங்கி வேலை செய்பவர்கள் அதைக் கவனத்தில் கொள்ள மாட்டார்கள். வீட்டில் உள்ள வேலைகளில் கவனம் திரும்பினால், குறிப்பிட்ட நேரத்துக்குள் அலுவலக வேலையை முடித்துவிட்டு, வீட்டுக்குச் செல்லும் மனநிலை உருவாகிவிடும். இந்த வேலை போதையில் இருந்து விடுபட முடியும்.
தயார்ப்படுத்துதல்: ஒரு வேலையைச் செய்ய உயரதிகாரி தெரிவித்ததும் அது மிகக் கடினமான வேலை என்றாலும் கூட மிக வேகமாக செய்து முடிக்க சிலர் விரும்புவர். அப்படிச் செய்யும் போது அதில் பல தவறுகள் நிகழ வாய்ப்புகள் உள்ளன. செய்ய வேண்டிய வேலையை நன்கு உள்வாங்கி, உடலையும் மனதையும் சிறிது ஆசுவாசப்படுத்தி, அதன் பின் அந்த வேலையை நிதானமாகச் செய்தால் வேலை நேரம் முழுவதும் சிறப்பாகச் செயல்பட முடியும். இதனால் சில சமயங்களில் நமது வேலையை முடிக்கவே போதிய நேரம் இல்லாமல் போவதற்கும் வாய்ப்பு உண்டு.
பணியிடப் பிரச்னைகள்: பணியிடமே இவர்களுக்கு எல்லாம் என்ற நிலையில் பணியிடத்தில் தோன்றும் சிறு சிறு பிரச்னைகள் கூட இவர்களுக்குப் பெரிதாகத் தெரியும். இதனால் மன அழுத்தம் ஏற்படும். தேவையில்லாமல் தங்களைக் குழப்பிக் கொள்வார்கள். முக்கியமான விஷயங்களில் இம்மாதிரியான குழப்பங்களால், நல்ல முடிவை எடுக்க முடியாமல் தடுமாறுவார்கள். வேலை முக்கியமானதுதான்; ஆனால் அதையும் தாண்டி வாழ்க்கை உள்ளது என்பதை உணரவேண்டும்.
உங்களுக்காகவும் நேரம் ஒதுக்குங்கள் : 24 மணி நேரமும் அலுவலகமே கதி என ஆலோசனைக் கூட்டங்கள் , ஈமெயில் பதில்கள் , கான்பரன்சிங் என பம்பரமாகச் சுழலுவதை சிறிது நேரம் நிறுத்திவிட்டு உங்களுக்காகவும், உங்கள் குடும்பத்திற்காகவும் கொஞ்சம் நேரம் ஒதுக்குங்கள். இதன்
மூலம் வேலை போதையிலிருந்து மீண்டு, சமூக வெளியில் சுதந்திரமாக மன அழுத்தம் இன்றி உலா வர முடியும்.
முழு நாளையும் முறையாகப் பயன்படுத்துங்கள்: சிலர் அலுவலகம் மட்டுமே கதி என நினைத்து குடும்ப நிகழ்ச்சிகளில் பங்கேற்கமாட்டார்கள். உதாரணமாக நெருங்கிய உறவுகளின் சுக , துக்க நிகழ்வுகளுக்குக் கூட செல்ல மாட்டார்கள். இத்தகையவர்கள் வேலை போதையால் பாதிக்கப்பட்டவர்கள். இவர்கள் இத்தகைய போக்கைக் கைவிட்டு அனைத்து விஷயங்களிலும் கவனம் செலுத்தத் தொடங்க வேண்டும். அப்படிச் செய்தால் இவர்கள் வேலை போதையில் இருந்து மீண்டு விடுவார்கள்.