அலுவலக மேலாண்மை பட்டயப் படிப்பு!
நிறுவனங்களின் நரம்பு மையம் என அலுவலகத்தை கூறலாம். அலுவலகம் என்பது வியாபார அமைப்பிலிருந்து பிரிக்க இயலாத பகுதியாகும்.
நிறுவனங்களின் நரம்பு மையம் என அலுவலகத்தை கூறலாம். அலுவலகம் என்பது வியாபார அமைப்பிலிருந்து பிரிக்க இயலாத பகுதியாகும். நவீன அலுவலகங்கள் அறிவியல் கொள்கைகள் அடிப்படையில் உருவாக்கப்படுகின்றன. அலுவலக மேலாண்மை நிர்வாகமும், தொழில் நுட்பங்களையும் தெரிந்த அலுவலக மேலாளர்களின் கையில்தான் ஒரு நிறுவனத்தின் இயக்கம் உள்ளது.
அலுவலக மேலாளர் ஒரு நிறுவனத்தின் நிர்வாக மையமாகவும், இன்னொருபுறத்தில் அலுவலகம் சார்ந்த மக்கள் தொடர்புகளைப் பேணுபவராகவும் இருக்க வேண்டும்.
நவீன தொழில்நுட்ப காலத்தில் எல்லாமும் அறிவியல் அடிப்படையில் செயல்படுகிற நிலை உருவாகிவிட்டது. அலுவலக மேலாண்மை நிர்வாகம் இதற்கு விதிவிலக்கல்ல. அலுவலக மேலாண்மையைச் சொல்லித் தர பல பட்டப்படிப்புகளும், முதுநிலைப் பட்டப் படிப்புகளும் இருக்கின்றன. குறைந்த காலத்தில் குறைந்த செலவில் அலுவலக மேலாண்மைப் படிப்பைக் கற்றுக் கொள்ளும் வாய்ப்பு இப்போது வந்திருக்கிறது.
அலுவலக மேலாண்மை பட்டயப் படிப்பு குறித்து விருதுநகர் மாவட்டம் சிவகாசி எஸ்.ஆப்.ஆர்.மகளிர் கல்லூரியின் முதல்வர் த.பழனீஸ்வரி நம்மிடம் பகிர்ந்து கொண்டதாவது:
""மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தவும், வேலைவாய்ப்புடன் கூடிய பல்வேறு படிப்புகளை தேசிய பல்கலைக்கழக மானியக்குழு அறிமுகப்படுத்தியிருக்கிறது. அந்த படிப்பிற்கான நிதி உதவிகளையும் செய்து வருகிறது. எங்கள் கல்லூரியில் அலுவலக மேலாண்மை பட்டயப் படிப்பு போல பல படிப்புகளை தேசிய பல்கலைகழக மானியக்குழு
அறிமுகப்படுத்தியுள்ளது.
எங்கள் கல்லூரியில் இந்த பட்டயப் படிப்பில் சேர்வதற்கு பிளஸ் டூவில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அல்லது ஏதேனும் பட்டம் பெற்றிருப்பவர்களும், பட்டப் படிப்பை பூர்த்தி செய்யாதவர்களும் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள். பிளஸ் டூ படித்த பெண்கள், விதவைகள், ஆதரவற்றோர் உள்பட அனைத்து பெண்களும் இந்த படிப்பில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள். சமுதாயத்தினால் கைவிடப்பட்ட பெண்கள் இந்த பட்டயப் படிப்பு படித்து வேலை பார்த்து, தங்களின் வாழ்வாதாரத்தை அமைத்துக் கொள்ளலாம்.
இந்த படிப்பில் சேருவதற்கு வயது வரம்பு கிடையாது; இதற்காகவே இந்த படிப்பு அறிமுகப்படுத்தப்படுகிறது என தேசிய பல்கலைக்கழக மானியக்குழு கூறியுள்ளது. இதற்கான கட்டணம் ஒரு மாணவிக்கு ஆண்டுக்கு ரூ.1000 மட்டுமே.
இதற்கான பாடத்திட்டங்களை கல்லூரியில் உள்ள வணிகவியல்துறை வழங்கும். இந்த மாணவிகளுக்கு கணினி செயல்முறை , சுற்றுச்சூழல் பாதுகாப்பு, மாசுக்கட்டுப்பாடு, நிதி நிர்வாகம், தட்டச்சு பயிற்சி உள்ளிட்ட பயிற்சிகள் வழங்கப்படும். மேலும் பிரபல நிறுவனத்தலைவர்கள், நிர்வாகிகள் நேரில் கல்லூரிக்கு வந்து தங்களது அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வதன் மூலம் மாணவிகளின் திறன் மேம்படும்.
நிறுவனங்களின் நிர்வாகிகள் வந்து மாணவிகளிடம் தங்களுடைய கருத்துகளைப் பகிர்ந்து கொள்வதற்குப் பல நிறுவங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளோம். படிப்பின் இறுதியில் மாணவிகள் ஏதாவது ஒரு நிறுவனத்தில் 15 நாள் நேரடி பயிற்சி பெற்ற பின்னர் திட்ட அறிக்கை தயார் செய்து கொடுக்க வேண்டும். அந்த திட்ட அறிக்கையின் அடிப்படையில் மாணவிகளுக்கு தேர்ச்சி மதிப்பெண்கள் வழங்கப்படும். தேசிய பல்கலைக்கழக மானியக்குழுவும் மாணவிகளின் திட்ட அறிக்கையை மதிப்பீடு செய்யும். தொடந்து மாணவிகளுக்கு அரசால் அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ் வழங்கப்படும்.
இந்தக் கல்வியை சமுதாய மேம்பாட்டுக் கல்வி எனலாம். இந்த படிப்பு முடித்தவர்களுக்கு ஏராளமான வேலை வாய்ப்புக்கள் உள்ளன. நாங்கள் புரிந்துணர்வு செய்துள்ள பல நிறுவனங்கன் நேர்காணல் மூலம் வேலைவாய்ப்பை வழங்கும்.
தற்போது சிறிய நிறுவனங்கள் பெருகி உள்ள நிலையில், அனைத்து நிறுவனங்களுக்கும் சிறந்த நிர்வாகிகள் தேவைப்படுகிறார்கள். எனவே அலுவலக மேலாண்மைப் பட்டயப் படிப்பிற்கு நூறுசதம் வேலை வாய்ப்பு உள்ளது. இதன் மூலம் பெண்கள் தாங்கள் வாழ்க்கைத் தரத்தை உயர்த்திக்கொள்ளலாம். ஆர்வம், திறமையைப் பயன்படுத்தும் புத்திசாலித்தனம், புதியவை தேடல் என உள்ள பெண்களுக்கு இந்த படிப்பு ஒரு வரப்பிரசாதமாகும்'' என்றார் பழனீஸ்வரி.