தொழில், வியாபாரத்தில் நாட்டம் கொண்டிருக்கும் நம்மில் பலர், பங்குச்சந்தை என்றால் காததூரம் ஓடுகிறார்கள். அந்த நிலைமை கொஞ்சம் கொஞ்சமாக இப்போது மாறி வருகிறது. பங்குச்சந்தை வர்த்தகநுணுக்கங்கள் இன்றைக்குப் பரவலாகி வருகின்றன. ஆனாலும், பங்குச்சந்தை குறித்த முறையான கல்வி இந்தியாவில் மேம்பட்டதாக இல்லை.
பங்குச் சந்தை கல்வி
அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி போன்ற வளர்ந்த நாடுகளில் பங்குச்சந்தை குறித்த விழிப்புணர்வு சாதாரண பொதுமக்களிடம் அதிகமாகக் காணப்படுவதால், அதுசார்ந்த கல்வி நிறுவனங்களும் அதிக அளவில் உள்ளன. வணிகப் பள்ளிகள் மட்டுமல்லாது பல்கலைக்கழகங்களிலும் பங்குச்சந்தை குறித்த ஆழமான கல்வி வழங்கப்படுகிறது.
இந்தியாவில் பங்குச்சந்தை வளர்ந்த அளவுக்கு அது சார்ந்த கல்வியும், பங்குச் சந்தை தொடர்பான வேலைவாய்ப்புகள் குறித்த விழிப்புணர்வும் வளரவில்லை.
பம்பாய் பங்குச்சந்தை மையம் போன்ற ஒரு சில கல்விநிறுவனங்கள்தாம் பங்குச்சந்தை குறித்த இளநிலை, முதுநிலைபட்டப்படிப்புகளை வழங்கிவருகின்றன.
நிதிசார்ந்த புரிதலும், நுட்பமான தெளிவும் இருந்தால் சி.எஃப்.ஏ., எஃப்.ஆர்.எம்., சி.எம்.டி., சி.எஃப்.பி., சி.டபிள்யூ.எம்., சி.ஏ., சி.எஸ்., எம்.பி.ஏ.(நிதி) போன்ற முழுநேரப் படிப்புகள் படித்தவர்களும் பங்குச்சந்தையில் ஈடுபடலாம்.
பங்குச்சந்தையில் முதலீடு அல்லது வர்த்தகத்தில் ஈடுபடுவதற்கான பயிற்சி, முதலீட்டு ஆலோசனைகள் மற்றும் ஆராய்ச்சியில் ஈடுபடுவதற்கான பயிற்சி, பங்குச்சந்தை நிறுவனங்களில் வேலைவாய்ப்புக்கான பயிற்சி ஆகியவை அளிக்கப்படுகின்றன. அவரவர் இலக்குகளுக்கு ஏற்ப பயிற்சிகளைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.
இன்றைய காலகட்டத்தில் வணிகம் சார்ந்த இளநிலை, முதுநிலை பட்டப் படிப்பில் பங்குச்சந்தை குறித்த பாடங்கள் இடம் பெறத் தொடங்கியுள்ளதால், அதுபோன்ற கல்லூரிகளைத் தேடி படிக்கலாம்.
தேசிய பங்குச்சந்தை ஒருசில சான்றிதழ்களை வழங்குகின்றன. இது பங்குச்சந்தையில் ஏதாவதொரு வகையில் ஈடுபடுவோருக்கு அத்தியாவசியமாக மாறிவருகிறது.
நிதிச்சந்தை சான்றிதழ்(என்.சி.எஃப்.எம்.) தேசிய பத்திரச்சந்தை மையசான்றிதழ்(என்.ஐ.எஸ்.எம்.) ஆகியவற்றை வைத்துக்கொள்வது பங்குச்சந்தையில் பங்கெடுப்பதற்கு உதவும். இந்திய பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியம் (செபி) அங்கீகரிக்கும் ஆராய்ச்சி பகுப்பாய்வாளர், முதலீட்டு ஆலோசகர், பரஸ்பர நிதிவிநியோகிப்பாளர் உள்ளிட்ட பல்வேறு பணிகளில் பணியாற்றுவதற்கு என்.ஐ.எஸ்.எம். சான்றிதழ் அவசியமாகும்.
வேலைவாய்ப்புகள்
கரோனா தீநுண்மி தொற்றுநோய் இந்தியாவை மட்டுமல்ல, உலகையே ஆட்டிப் படைத்துவருகிறது. இதனால் இந்தியப் பொருளாதாரத்தின் வேகம் சரிந்துள்ளது. வேலைவாய்ப்பு முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு வீழ்ச்சி அடைந்துள்ளது.
மக்களின் வாங்கும் திறன் குறைந்துள்ளது. வேலையில் இருப்போரின் ஊதியம் வெட்டப்பட்டுள்ளது. ஆனால், இது எதுவுமே நடக்காதது போல பங்குச்சந்தை மட்டும் சக்கைப் போடு போட்டுக் கொண்டு ஏற்றத்தை நோக்கியே பயணித்து கொண்டுள்ளது.
பங்குச்சந்தையில் முதலீட்டாளர்கள்மற்றும் பங்குவர்த்தகர்களுக்கு மட்டுமே வாய்ப்பிருப்பதாக கட்டுக்கதை உலாவந்தவண்ணம் உள்ளது. பங்குச்சந்தையில் ஆயிரங்களில் இருந்து லட்சக்கணக்கில் ஊதியம் பெறும் ஏராளமான வேலைவாய்ப்புகள் குவிந்துள்ளன.
பங்கு ஆலோசகரில் இருந்து உறவுமுறை மேலாளர் வரையில், வர்த்தக ஆலோசகர் முதல் முதலீட்டு தொழில்முனைவோர் வரையில் ஏராளமான வேலைகள் காத்திருக்கின்றன.
பங்குச்சந்தையில் முதலீடு செய்வோருக்கும், அதன் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளோருக்கும் நுணுக்கமான பல தகவல்கள் தேவைப்படுகின்றன. அவற்றை வழங்கும் முதலீட்டு ஆலோசகராகவும் செயல்படலாம். சீரான மனப்பான்மை, நுட்பமான திறனறிவு, முறையான நிதிசார்ந்த பயிற்சி ஆகியவை கிடைத்துவிட்டால் பங்குச்சந்தைத் துறையில் வெற்றிகரமாக
ஈடுபடலாம்.
பங்குத்தரகர், வர்த்தக, ஆராய்ச்சி திறனாய்வாளர், மனிததலையீடு இல்லாதபடிமுறையியல் வர்த்தகர் உள்ளிட்ட பல்வேறுவகையான வேலை, தொழில்வாய்ப்புகளை பங்குச்சந்தை அள்ளித்தந்த வண்ணம் உள்ளது.
ரிஸ்க்
தங்கம், பத்திரம், நிதி அல்லது வைப்புநிதி உள்ளிட்டவற்றைக் காட்டிலும் பங்குச்சந்தையில் மேற்கொள்ளப்படும் முதலீடுகளுக்கு கூடுதல் வருமானம் கிடைக்கும் என்றாலும், அதில் ரிஸ்க் ஏராளமாக உள்ளது.
முதலீட்டாளர்களைப் போலவே அதில் பணியாற்றுவோருக்கும் இந்த ரிஸ்க் உள்ள சூழ்நிலை முக்கியத்துவம் வாய்ந்ததாகும். நிலையற்றதாக விளங்கும் பங்குச்சந்தையில் பங்குகளின் ஏற்ற இறக்கங்கள் குறித்த தெளிவு அவசியமாகும். அதுபோன்ற அசாதாரணச் சூழ்நிலைகளைக் கையாளும் நுட்பங்களை அறிந்திருக்க வேண்டியது அத்தியாவசியமாகும்.
பங்குச்சந்தையில் இருந்து உறுதியாக வருமானம் கிடைக்குமென்பதை உறுதியாகக் கூற முடியாது. இதன்விளைவாக முதலீட்டாளர்கள் மூலதனத்தையே பங்குச்சந்தையில் பறி கொடுக்க நேரிடும். எனவே, முதலீட்டாளர் அல்லது வர்த்தகர் அல்லது திறனாய்வாளர் என எப்படிச் செயல்பட்டாலும், ரிஸ்க்கை முன்கூட்டியே தெரிந்து கொள்ளும் அறிவுத்திறனை வளர்த்துக் கொள்ள வேண்டியது அவசியமாகும்.
வணிக இடர், பணப்புழக்க இடர், சந்தை இடர், வரிவிதிப்பு இடர், வட்டிவிகித இடர், ஒழுங்காற்று இடர், பணவீக்க இடர் போன்றவற்றைப் போதுமான அறிவு, சீரான மறையிடர் மேலாண்மை நுணுக்கத்தின் வாயிலாக எதிர்கொள்ள இயலும் என்பதையும் புரிந்து கொண்டால் பங்குச்சந்தையில் ஒளி வீச ஒருவருக்கு எந்தத் தடையும் இல்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.