கரோனா தரும் தொழில்நுட்ப வாய்ப்புகள்!
ரோனா பரவி வரும் இக்கட்டான சூழலில் பெரும்பலான தனியார் மருத்துவமனைகள் பல மூடப்பட்டுவிட்டன.
ரோனா பரவி வரும் இக்கட்டான சூழலில் பெரும்பலான தனியார் மருத்துவமனைகள் பல மூடப்பட்டுவிட்டன. முக்கியமாக கிராமப்புறப் பகுதிகளில் உள்ள மருத்துவமனைகள் பணியாளர்கள் பற்றாக்குறை, போதிய அடிப்படைக் கட்டமைப்பு வசதியின்மை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் மூடப்பட்டுள்ளன.
அதே வேளையில், கரோனா நோய்த்தொற்று பரவல் அச்சம் காரணமாகவும் பெரும்பாலானோர் மருத்துவமனைக்குச் செல்வதைத் தவிர்த்து வருகின்றனர். சர்க்கரை நோயாளிகள் உள்ளிட்டோர் குறிப்பிட்ட இடைவெளியில் மருத்துவர்களைச் சந்தித்து உடல்நலத்தைப் பரிசோதித்துக் கொள்வது அவசியமாக உள்ளது.
ஆனால், கரோனா சூழல் மருத்துவர்களுக்கும் நோயாளிகளுக்கும் இடையேயான இடைவெளியை அதிகரித்துவிட்டது. அத்தியாவசியமான அறுவைச் சிகிச்சைகள் தவிர மற்ற வகையான அறுவைச் சிகிச்சைகள் ஒத்திவைக்கப்பட்டன. அவற்றின் காரணமாக நோயாளிகள் பெரிதும் சிரமத்துக்கு உள்ளாகினர்.
எனினும், எத்தகைய பிரச்னைக்கும் தொழில்நுட்பத்தைக் கைக்கொண்டு தீர்வு காண்பது எளிது. புறநோயாளிகள் உள்ளிட்டோர் சந்தித்து வரும் பிரச்னைக்கும் தொழில்நுட்பத்தின் உதவியுடன் தீர்வு காணப்பட்டது.
மருத்துவர்களை நோயாளிகள் இணையவழியிலேயே தொடர்பு கொள்ளும் முறை அறிமுகப்படுத்தப்பட்டது. அதன்படி, குறிப்பிட்ட மருத்துவரை அறிதிறன்பேசியின் துணையுடனோ அல்லது மடிக்கணினியின் உதவியுடனோ காணொலிக் காட்சி வாயிலாக சந்தித்து அவரிடம் ஆலோசனை பெற வழி ஏற்பட்டது.
புறநோயாளிகள் இணையவழியில் மருத்துவ ஆலோசனைகளைப் பெறுவதற்கான செயலிகளை மத்திய அரசும், மாநில அரசுகளும் அறிமுகப்படுத்தின.
இந்த நடைமுறை மூலமாக புறநோயாளிகள், சர்க்கரை நோயாளிகள், மருத்துவர்களிடம் ஆலோசனை பெற விரும்புவோர், மருத்துவமனைக்கு நேரில் செல்வதற்கு அச்சப்படுவோர் உள்ளிட்டோர் எளிதில் பலனடைந்தனர்.
கரோனா நோய்த்தொற்று பரவல் காலத்தில் நோயாளிகள் சந்தித்த மற்றொரு பிரச்னை மருந்துகள் வாங்குவது. முக்கியமாக வயது முதிர்ந்தோர், கர்ப்பிணிகள், குழந்தைகள் ஆகியோருக்கு கரோனா நோய்த்தொற்று பாதிப்பு ஏற்படுவதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதால் அவர்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாத சூழல் காணப்பட்டது.
எனவே, அவர்களால் மருந்துகளை எளிதில் வாங்க முடியவில்லை. முக்கியமாக தனிமையில் வசிக்கும் முதியோர்கள் மருந்துகளை வாங்குவதற்குப் பெரும் சிரமத்தை எதிர்கொண்டனர். அந்தப் பிரச்னைக்கும் தீர்வு காணப்பட்டது.
பல மருந்து தயாரிப்பு நிறுவனங்களும் மருந்தகங்களும் நோயாளிகளுக்குத் தேவையான மருந்துகளை அவர்களின் வீட்டுக்கே நேரில் சென்று வழங்கும் நடவடிக்கையை மேற்கொள்ளத் தொடங்கினர். இதன் மூலமாக அவர்கள் பெரிதும் பலனடைந்தனர்.
கரோனா நோய்த்தொற்று பரவி வரும் சூழலில் பெரும்பாலான முதியோர் இல்லங்கள் மூடப்பட்டன.
எனவே, அந்த இல்லங்களில் தங்கியிருந்த முதியோர்கள் அவர்களின் வீடுகளுக்கே அனுப்பி வைக்கப்பட்டனர். இத்தகைய சூழலில் முதியோர்களைப் பராமரிக்க வேண்டிய பொறுப்பு அவர்களின் குடும்பத்தினரைச் சென்றடைந்தது.
முதியோரைப் பராமரிப்பதில் குடும்பத்தினர் மெத்தனமாக நடந்து கொள்வதற்கான வாய்ப்புகள் உள்ளதால், அவர்களை எவ்வாறு கவனித்துக் கொள்ள வேண்டும், அவர்களுக்கு எந்த மாதிரியான உடற்பயிற்சிகள், மருந்துகளை வழங்க வேண்டும் என்பது தொடர்பாக காணொலிக் காட்சி வாயிலாக குடும்பத்தினருக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. அதன் மூலமாக குடும்பத்தினர் பெரும் பலனடைந்து வருகின்றனர்.
மேலும் பல்வேறு சுகாதார சேவைகள் மக்களுக்கு எளிதில் சென்றடைவதை தொழில்நுட்ப வசதிகள் உறுதிப்படுத்தி வருகின்றன. வரும் காலங்களிலும் இத்தகைய தொழில்நுட்ப வசதிகளின் தேவை அதிகரிக்கவே வாய்ப்புள்ளது. கரோனா நோய்த்தொற்று கட்டுக்குள் கொண்டு வரப்பட்டாலும் அதற்குப் பிந்தைய உலகம் முற்றிலும் மாறுபட்டதாகவே இருக்கும்.
சுகாதாரம், உடல்நலம் சார்ந்த விவகாரங்களில் மக்கள் அதிக கவனம் செலுத்தத் தொடங்குவர். முக்கியமாக உடற்பயிற்சி, யோகா பயிற்சி, மூச்சுப் பயிற்சி உள்ளிட்டவற்றின் மீதான மக்களின் ஆர்வம் அதிகரிக்கும். அதேபோல், போதிய ஊட்டச்சத்து நிறைந்த உணவுப் பொருள்களை உண்பது, உணவுப் பழக்கவழக்கங்களை மேம்படுத்திக் கொள்வது உள்ளிட்டவற்றில் மக்கள் அதீத கவனம் செலுத்துவர்.
எனவே, அத்தகைய சேவைகளை தொழில்நுட்பத்தின் அடிப்படையில் வழங்குவதற்கான முயற்சிகளில் இளைஞர்கள் ஈடுபடலாம். உடற்பயிற்சிகள், யோகாசனப் பயிற்சி உள்ளிட்டவற்றுக்கான செயலிகளை வடிவமைப்பதற்கும் மருத்துவ ஆலோசனைகளை இணையவழியில் பெறுவதற்கான செயலிகளை வடிவமைப்பதற்கும் கூடுதல் பணியாளர்கள் நிறுவனங்களுக்குத் தேவைப்படுவர்.
அத்தகைய வாய்ப்புகளை இளைஞர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் கைதேர்ந்த இளைஞர்களுக்குப் பல்வேறு வாய்ப்புகள் குவிந்து கிடக்கின்றன. அதே போல், செயலிகளை வடிவமைக்கத் தெரிந்தவர்களுக்கும் பல்வேறு வேலைவாய்ப்புகள் உள்ளன.
வரும் காலங்களில் உலகத்தின் இயக்கத்துக்கு தொழில்நுட்பமே சக்கரமாக செயல்பட உள்ளது. அத்தகைய தொழில்நுட்பங்களைக் கற்றுத் தேர்வதன் மூலமாக எதிர்காலத்தை ஒவ்வொருவரும் சிறப்பாக அமைத்துக் கொள்ள முடியும்.
அந்தத் தொழில்நுட்பங்களைக் கற்பதற்கு பொது முடக்க காலம் பெரிதும் துணை புரிந்து வருகிறது.
நாளை என்பது என்றுமே இல்லை. நாளை என்ற மாயையில் இன்றைய பொழுதைக் கழிக்காமல், நாளைக்கான அடித்தளத்தை இன்றே அமைப்பதற்கான பணியில் ஈடுபடுவோம்.