5 ஆயிரம் ஆப்களை நீக்கியது கூகுள்!
மனிதனின் செயல்பாட்டுக்கு மூளை எவ்வளவு முக்கியமோ அதுபோல ஸ்மார்ட் போனுக்குள் ஆப்களை புகுத்தும் பிளே ஸ்டோர் முக்கியமாகும்.
மனிதனின் செயல்பாட்டுக்கு மூளை எவ்வளவு முக்கியமோ அதுபோல ஸ்மார்ட் போனுக்குள் ஆப்களை புகுத்தும் பிளே ஸ்டோர் முக்கியமாகும்.
2009-இல் சுமார் 3 ஆயிரம் ஆன்ட்ராய்டு ஆப்களைக் கொண்டு தொடங்கப்பட்ட இந்த பிளே ஸ்டோர் ஆப், தற்போது சுமார் 30 லட்சம் ஆப்கள் பதிவிறக்கம் செய்யும் அளவுக்கு விரிவாக்கம் பெற்றுள்ளது.
பொழுதுபோக்குக்கு மட்டுமின்றி, சிறு வணிகம் முதல் அனைத்து விதமான தேவைகளுக்கும் தனித்தனியாக ஆப்கள் உருவாக்கம் பெற்றதே இந்த அளவுக்கு அதிகமாக ஆப்கள் உருவாகக் காரணம்.
யார் வேண்டுமானாலும் வெறும் இரண்டாயிரம் ரூபாய் வரை செலுத்திஆப்களைப் பதிவு செய்யலாம் என எளிமையான முறையை கூகுள் நிறுவனம் வைத்திருப்பதும் இதற்கு ஒரு முக்கிய காரணமாகும்.
இந்த எளிய முறையை தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்தி கொள்ளும் சிலர், தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஆசை விளம்பரங்களைச் செய்து முறைகேடுகளில் ஈடுபடுகின்றனர்.
ஆப்களைப் பதிவிறக்கம் செய்தால் இலவசப் பொருள்களைப் பெறலாம் என போலி விளம்பரங்கள் செய்து டிஜிட்டல் முறைகேட்டில் ஈடுபடும் ஆப்களின் எண்ணிக்கை, நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இந்த ஆப்களை ஸ்மார்ட் போன்களில் பதிவிறக்கம் செய்த பிறகு, இன்னும் இரண்டு வாரங்களுக்கு இந்த ஆப்பை அப்படியே அழிக்காமல் வைத்திருந்தால் இலவசப் பொருள் உங்களைத் தேடி வரும் என்று கூறப்படும். ஆனால் அப்படி நடக்கவே நடக்காது. அதற்குப் பதிலாக உங்கள் ஸ்மார்ட்போனின் பாதுகாப்பு வளையத்தால் கண்டே பிடிக்க முடியாதபடி அந்த ஆப்பின் செயல்பாடு மாற்றம் பெற்றுவிடும்.
அதன் பின்னர், உங்கள் ஸ்மார்ட்போனின் முகப்பு திரையில் விளம்பரங்களாக வந்து குவியும். சம்பந்தப்பட்ட ஆப்பை அழித்தாலும் இது தொடரும்.
இதைக் கண்டுபிடிக்க தனி ஆய்வகம் ஒன்றை பிளே ஸ்டோரை நிர்வகிக்கும் கூகுள் நிறுவனம் தொடங்கியது.
இந்த ஆய்வகக் குழுவினர் இதுபோன்ற முறைகேட்டில் ஈடுபடும் சுமார் 5,000 ஆப்களையும், அவை இடம்பெற்றிருந்த 65 ஆயிரம் செல்லிடப்பேசிகளையும் கண்டுபிடித்தனர்.
கடந்த ஜூன் மாதத்தில் மட்டும் இந்த ஆப்கள் 20 லட்சத்துக்கும் அதிகமான விளம்பரங்களை இதுபோன்று வெளியிட்டுச் சம்பாதித்துள்ளன. இந்த ஐந்தாயிரம் ஆப்களை கூகுள் உடனடியாக நீக்கியது மட்டுமல்லாமல், இவை மறைமுகமாக செயல்பட்டுக் கொண்டிருந்த ஸ்மார்ட் போன்களில் இருந்தும் அழித்துள்ளது. இந்த நடவடிக்கைக்கு "டெரகோட்டா' விளம்பர முறைகேடு என கூகுள் நிறுவனம் பெயரிட்டுள்ளது.
ஸ்மார்ட்போன்களில் தேவையில்லாத ஆப்களை அவ்வப்போது அழித்து, தேவையான சிறந்த ஆப்களை மட்டும் பதிவிறக்கம் செய்து செயல்பட்டால் இதுபோன்ற முறைகேட்டில் இருந்து தப்பிக்க முடியும்.