வீடியோ கான்ஃபரன்ஸ்... பங்கேற்கும் வழிமுறைகள்!
கரோனா நோய் தொற்று காரணமாக உலகமே வீட்டுக்குள் முடங்கிக் கிடக்கின்றது. பள்ளிகள் முதல் பல்கலைக்கழகங்கள் வரை...
கரோனா நோய் தொற்று காரணமாக உலகமே வீட்டுக்குள் முடங்கிக் கிடக்கின்றது. பள்ளிகள் முதல் பல்கலைக்கழகங்கள் வரை... சிறு அலுவலகம் முதல் தலைமைச் செயலகம் வரை குறைந்தபட்ச ஊழியர்களைக் கொண்டு செயல்பட்டு வருகின்றன.
விரல் சொடுக்கில் உலகத்தைக் கண்முன் கொண்டுவரும் இணையம் தான் இப்பொழுது அனைவருக்கும் தேவையான ஒன்றாகிவிட்டது .
கல்வி வேலை இப்படி அனைத்துமே இணையவழி என்றாகிவிட்ட நிலையில் இணைய வழி கலந்துரையாடல் என்பது காலத்தின் கட்டாயமாக மாறிவருகிறது.
ஷூம் மீட் , வாட்ஸ் அப் வீடியோ கால், கூகுள் மீட், கூகுள் டியோ... இப்படி எண்ணற்ற வீடியோ கலந்துரையாடல் தொடர்பான செயலிகள் உலகமெங்கும் உலா வரத் தொடங்கியிருக்கின்றன.
சிறுவர் முதல் பெரியவர் வரை அனைவரும் உச்சரிக்கும் வார்த்தையாக இந்த வீடியோ கால் மாறிவிட்டது.
"வீட்டிலிருந்தே வேலை' - இதுதான் இன்றைய காலகட்டத்தில் ஊழியர்கள் உச்சரிக்கும் மந்திரச் சொல்லாக உருமாறி விட்டது. அலுவலகத்தில் நடைபெறும் ஆய்வு கூட்டத்திற்கும் வீடுகளிலிருந்து வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் நடைபெறும் ஆய்வு கூட்டத்திற்கும் ஏராளமான வேறுபாடுகள் உள்ளன.
நேரில் நடக்கும் கூட்டத்தில் நாம் கண்டிப்பாக நமது முழு கவனத்தையும் வெளிப்படுத்தியாக வேண்டும். ஆனால் வீடியோ கான்பரன்சிங்கில் பலர் கவனமின்மையோடு உரிய அக்கறையின்றி இருக்கிறார்கள். இதைத் தவிர்க்க வேண்டும். இது நிறுவனத்தின் மேலாளர்களுக்குத் தெரியும் என்பதால், எதிர்கால முன்னேற்றத்தை இது தடுக்கக் கூடும்.
இதுபோன்ற இணையவழி கலந்துரையாடல் நிகழ்ச்சிகளில் பங்கேற்போர் சில விஷயங்களை கடைப்பிடித்தால் நமது நிறுவன தலைமை அதிகாரிகளிடம் நமது மதிப்பு மேம்படும். நம்முடைய வாழ்க்கையும் முன்னேற்ற பாதையில் பயணிக்கும் .
அதற்கான வழிமுறைகளை இக்கட்டுரையில் பார்க்கலாம்:
கவனச்சிதறலை கைவிடுக: வீட்டில் இருந்தபடியே இணையவழி கலந்துரையாடலில் பங்கேற்று இருக்கும் போது நமது மனம் அலை பாய்வது என்பது எளிதாக நிகழக்கூடிய ஒன்று.
அலுவலகத்தில் பணியாற்றும் சூழலில் ஆய்வுக்கூட்டம் பற்றி மட்டுமே நாம் சிந்தித்து வருவோம் .நிறுவன தலைமை அதிகாரி என்ன சொல்கிறார் என்பதைக் கவனமாக காது கொடுத்து கேட்டு மனதில் பதிய வைத்துக் கொள்வோம். ஆனால் அதே சமயம் வீடுகளிலிருந்து பணியாற்றும்போது வீட்டில் இருக்கும் நமது பிள்ளைகள் அல்லது உறவினர்கள் மற்றும் வீட்டில் நிகழும் அன்றாட நடவடிக்கைகளால் நமது கவனம் சிதறுவதற்கான வாய்ப்புகள் அதிகம். உதாரணமாக, சிறு வயது குழந்தை ஓடி விளையாடும் பொழுது அது விழுந்து விடுமோ? என்ற அச்சத்தில் அதையே கவனித்துக் கொண்டிருப்போம். இதனால் வீடியோ மூலம் நடைபெறும் கலந்துரையாடலில் நமது மனம் முழுமையாக ஈடுபடாது. இதனால் கவனச்சிதறல் ஏற்படும்.
மேலும் பல மணி நேரம் தொடர்ந்து நடைபெறும் இதுபோன்ற இணையவழி கலந்துரையாடலில் முழுநேரமும் நம்மால் ஈடுபடமுடியாது. எழுந்து நடப்போம் அல்லது சிறிது நேரம் கண்ணை மூடி தியானம் செய்வோம். அல்லது வேறு சிந்தனையில் இருந்துவிடுவோம்.
இவற்றை எல்லாம் ஆன்லைனிலும், மீட்டிங் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வீடியோக்களிலும் நிறுவன தலைமை அதிகாரிகள் பார்க்கும்போது நம்மீது உள்ள மரியாதை குறைந்து நமது கேரியர் பாதிக்கப்படும்.
சில சமயங்களில் மேலாளர் சொல்லும் சில முக்கிய தகவல்களை நாம் கவனிக்காமல் விட்டுவிட கூடும்.
எனவே அலுவலகம் என்றாலும், வீட்டிலிருந்து பணி செய்தாலும் கவனச் சிதறல் இன்றி ஆய்வு கூட்டத்தில் அல்லது கலந்துரையாடலில் பங்கேற்க வேண்டும். அதுதான் நமது பணி உயர்வுக்கு படிக்கல்லாக அமையும்.
உடையில் கவனம்: தற்போதெல்லாம் பெரும்பாலான இணையவழி கலந்துரையாடலில் பார்வையாளர்களாக பங்கேற்பவர்கள் மிக சாதாரணமான நிலையில் சாதாரண உடை அணிந்தோ அல்லது உடைகள் இன்றியோ கலந்து கொள்வதைப் பார்க்க முடிகிறது. ஒவ்வோர் அலுவலகத்திற்கும் என்று ஒரு டிரஸ் கோட் உள்ளது. அதேபோன்ற டிரஸ் கோடுடன் இணையவழி கலந்துரையாடலிலும் பங்கேற்பது அவசியம். இது நம் மீது உள்ள மரியாதையை உயர்த்தும். எனவே அலுவலகம் கூறியுள்ள டிரஸ் கோடுடன் கலந்துரையாடலில் பங்கேற்பது அவசியம்.
சரியான நேரத்தைக் கடைப்பிடித்தல்: ஒரு நிறுவனம் இத்தனை மணிக்கு இணையவழி மீட்டிங் நடைபெறும் என தெரிவித்து விட்டால் சரியாக அந்த நேரத்தில் நாம் அதில் இணைந்து விடவேண்டும். சம்பந்தப்பட்ட அதிகாரி 10 நிமிடம் கழித்து தானே மீட்டிங் தொடங்குவார் என்று நாம் தாமதமாக மீட்டிங்கில் இணைவதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். சிலநேரங்களில் உண்மையாகவே இணைய பிரச்னைகள் காரணமாக ஆன்லைன் மீட்டிங்கில் கலந்து கொள்ள இயலாமல் போய்விடலாம். இதை உடனடியாக உயர் அதிகாரிகளுக்கு தெரிவிப்பது என்பது மிக முக்கியம்.
அதன் தொடர்ச்சியாக கூட்டத்தில் என்ன பேசப்பட்டது என்பது குறித்து கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டியதும் அவசியம். அதன் மூலம் நிறுவனத் தலைமை நம்முடைய உண்மைத் தன்மையை சந்தேகிக்கும் வாய்ப்பு எழாது. தாமதத்தை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.தாமதமாக இணைந்தால் நாம் சோம்பேறி என்று நிறுவனம் கருதி விடும்.
தேவையற்ற குறுக்கீடுகளைத் தவிர்த்தல்: ஆன்லைன் மீட்டிங் நடைபெறும் போது வீட்டில் உள்ள ஒருவர் கேட்கும் கேள்விக்கு பதில் சொல்வது அல்லது ஏதேனும் தின்பண்டங்களைச் சாப்பிட்டுக்கொண்டே பங்கேற்பது, இடையில் கைபேசியைப் பார்ப்பது, கைபேசியின் மூலம் பேசுவது என்பன போன்ற செயல்களைத் தவிர்க்க வேண்டும்.
ஒரு நிமிடம் காபி குடித்துவிட்டு வேலையை தொடருங்கள் என வீட்டிலுள்ளோர் சொல்லும்போது நாம் வீடியோவை ஆஃப் செய்வது வழக்கம். நாம் வீடியோவை ஆஃப் செய்வதை பார்க்கும் அந்த மீட்டிங் ஒருங்கிணைப்பாளர் நம்மைப் பற்றி தவறாக நினைக்கக் கூடும். சம்பந்தப்பட்ட ஊழியருக்கு மீட்டிங்கில் கலந்து கொள்ள விருப்பம் இல்லை என்பது போன்ற தோற்றத்தை அவருக்கு அது ஏற்படுத்தும்.
எனவே , முடிந்தவரை வீடியோ மற்றும் ஆடியோக்களை ஆப் செய்யாமல் தொடர்ந்து கலந்துரையாடலில் பங்கேற்பது பணிப் பாதுகாப்பை அளிக்கும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
உங்கள் முழு கவனத்தையும் மீட்டிங்கில் செயல்படுத்தினால் மட்டுமே மீட்டிங்கில் சொல்லப்படும் தகவல்களை உள்வாங்கி அதன்மூலம் நமது பணியை சிறப்பாக செய்ய முடியும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்..தனியிடம் ஒதுக்குங்கள்: வீடுகளிலிருந்து வேலை செய்வோர் இதுபோன்ற ஆன்லைன் கலந்துரையாடல் நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் போது முடிந்தவரை தனிமையான, அமைதியான இடத்தைத் தேர்வு செய்து நல்ல வெளிச்சத்துடன் நம்முடைய முகம் கலந்துரையாடல் நடத்துபவருக்கு தெளிவாகத் தெரியும் வகையில் அமர்ந்து கவனியுங்கள். பதில் சொல்லுங்கள். இன்னும் சொல்லப்போனால் அந்த அறையின் கதவைக் கூட மூடிக்கொண்டு கலந்துரையாடலில் பங்கேற்பது சிறப்பாக இருக்கும்.
மொத்தத்தில் ஆன்லைன் மீட்டிங் என்பதும் அலுவலகத்தில் நடைபெறும் ஆய்வுக்கூட்டம் என்பதும் ஒன்றுதான் என்பதை முழுமையாக உணர்ந்து வழக்கமாக நாம் அலுவலகத்தில் எப்படி செயல்படுவோமோ, அதே போன்று வீட்டிலும் செயல்பட்டால் நம் மரியாதை அலுவலகத்தில் உயரும்.