கிளர்ந்தெழுங்கள் தோழர்களே! - 9: தேசமே உயிர் மூச்சு
முகமது இக்பால் என்ற உருது கவிஞர் மிக பிரபலமான தேசிய உணர்வை ஊட்டும் கவிதை ஒன்றை இயற்றி நாட்டுக்கு அர்ப்பணித்துள்ளார்.
முகமது இக்பால் என்ற உருது கவிஞர் மிக பிரபலமான தேசிய உணர்வை ஊட்டும் கவிதை ஒன்றை இயற்றி நாட்டுக்கு அர்ப்பணித்துள்ளார்.
" சாரே ஜஹான் சே அச்சா ஹிந்துஸ்தான் ஹமாரா'
"உலகிலேயே அழகான தேசம்... எங்கள் இந்திய தேசம்' என்ற பாடல் நினைவில் நீங்காதது. ரத்த நாளங்களை உயிர்ப்பிக்கும், உடலைப் புல்லரிக்க வைக்கும் கீதம்.
அதுவும் மிலிட்டரி அல்லது காவல் காவாத்து முடிந்து படை பாசறைக்கு திரும்புகையில் ஒலிக்கும் கீதம். படை வீரர்களுக்குப் புத்துணர்ச்சி அளிக்கும் பாடல்.
இந்திய விண்வெளி வீரர் ராகேஷ் சர்மா, முதல் இந்தியராக விண்வெளிப் பயணம் மேற்கொண்ட போது விண்வெளியிலிருந்து அன்றைய பிரதமர் இந்திரா காந்தி அம்மையாருடன் உரையாடுகிறார். விண்வெளியிலிருந்து இந்தியா எவ்வாறு தெரிகிறது என்று பிரதமர் கேட்டபோது, ""சாரே ஜஹான் சே அச்சா'' ( பிரபஞ்சத்தில் அழகான தேசமாக தெரிகிறது) என்று பதிலளித்து இந்தியர்கள் நெஞ்சை நிமிரச் செய்தார்.
சுதந்திர தின திருநாள் - நாம் நாட்டை அந்நியர்கள் ஆட்சியிலிருந்து காப்பாற்றியவர்கள், எல்லை காக்கும் படை வீரர்கள், நாட்டின் இறையாண்மையைப் பாதுகாக்க தினந்தோறும் சிந்தித்து மக்களுக்கு நல்வழி காட்டுபவர்கள், இவர்களது பணியைப் போற்றும் நன்னாள். அவர்கள் செய்த தியாகத்திற்கு தலைவணங்கும் நாள்.
அந்நியர் ஆட்சியில் மக்கள் அனுபவித்த கஷ்டம், கொஞ்ச நஞ்சமல்ல. தமிழ் மன்னர்கள் சேர, சோழ, பாண்டியர் ஆட்சி பொற்காலம். அதற்கு பிற்காலம் எஞ்சியிருந்த குறுநல மன்னர்களின் ஒற்றுமையின்மையால் வடநாட்டிலிருந்து படையெடுப்பு. அலாவுதீன் கில்ஜியிலிருந்து தொடங்கி திப்பு சுல்தான் வகையறா வரை தொடர் படையெடுப்பு. அவ்வளவு செல்வ கொழிப்பு கோயில் களிலும் வியாபார தலங்களிலும் தமிழகத்தில் இருந்தது. அதனைச் சூறையாட வந்தார்கள். அதுவும் கில்ஜியின் தளபதி மாலிக் காபூர் திருச்சி ஸ்ரீரங்கம் கோயிலைத் தகர்த்து அதன் செல்வங்களை அள்ளிச் சென்றான்.
கோயிலையும் விக்ரஹங்களையும் பாதுகாக்க கைகோர்த்த பன்னிரண்டாயிரம் வைணவர்களைக் கொன்றழித்தான் என்பது வரலாறு.
பின்பு வர்த்தகம் நிமித்தமாக இங்கிலாந்திலிருந்து வந்த கிழக்கிந்திய கம்பெனி சூழ்ச்சி செய்து ஆட்சியைக் கைப்பற்றினர். மருது சகோதரர்கள், கட்ட பொம்மன், வேலு நாச்சியார், தீரன் சின்னமலை ஆகியோர் ஆங்கிலேயருக்கு எதிராகப் போர் செய்து மடிந்தனர்.
காந்தி மகான் சுதந்திரப் போராட்டத்தை தொடங்கியபோது, கிராமந்தோறும் "வந்தே மாதரம்' என்ற கோஷம் பாமர மக்களை இணைத்தது. கோபல்லபுரத்து மக்களின் கதைகளைப் படைத்த சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் கி. ராஜநாராயணன் எவ்வாறு சுதந்திர தாகம் கரிசல் காட்டு மக்களைப் பாதித்தது என்று வட்டார தமிழில் விவரிக்கிறார்:
" வாராண்டா வாராண்டா வெள்ளைக்காரன்
வரட்டும் பரதேசி தொப்பிக்காரன்
வெள்ளைக்காரன் பணம் வெள்ளிப் பணம்
வேடிக்கை பண்ணுது சின்னப் பணம்
வெள்ளிபணத்துக்கோ ஆசைப்பட்டு
வேடங்குலைத்தாளே வீராயி'
நூற்றாண்டுகளாக சுதந்திர சுவாசம் இல்லாது தவித்த மக்களுக்கு சுதந்திர இந்தியாவை மீட்டெடுத்த பெருந்தலைவர்கள் காந்தி, நேரு, சுபாஷ் சந்திர போஸ், திலக், கோகலே, காமராஜ், முத்துராமலிங்கத் தேவர், கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி., தேசிய உணர்வை தமிழர்களுக்கு எழுச்சி மிக்க கவிதைகள் மூலம் புகட்டியபாரதியார்,
சுப்ரமணிய சிவா, வாஞ்சி நாதன் போன்ற பல தலைவர்கள் தங்களதுஇளமையையும் வாழ்க்கையையும் நாட்டுக்காக அர்ப்பணித்தனர். வருடக்கணக்காக சிறை வாசம் அனுபவித்தனர்.
தமிழ்த்தாயின் தியாகச் சுடர்கள் கொடி காத்து உயிர் துறந்த திருப்பூர் குமரன், ஜெய் ஹிந்த் என்ற தாரகமந்திரத்தை அளித்த செண்பகராமன் ஆகியோரைப் பற்றி பலருக்கும் தெரியாது. ஏன் சில சட்ட மன்ற உறுப்பினர்களுக்கே தெரியாது, இல்லாவிட்டால் "ஜெய் ஹிந்த்' என்ற தெய்வீகச் சொற்றொடரை கொச்சைப்படுத்துவார்களா!
"தலையே நீ வணங்காய்
கண்காள் காண்மின்களோ
செவிகாள் கேள்மின்களோ
மூக்கே நீ முரலாய்
வாயே வாழ்த்து கண்டாய்
நெஞ்சே நீ நினையாய்
கைகாள் கூப்பி தொழீர்'
என்று விடுதலை ஈட்டித் தந்த மேன்மக்களை சுதந்திர நன்னாளில் போற்றி தொழ வேண்டும்.
சுதந்திரம் அடைந்து 75 - ஆவது ஆண்டில் அடி எடுத்து வைக்கும் இவ்வேளையில் நமது சாதனை என்ன, எதில் பின் தங்கினோம் என்று சுய சோதனை செய்ய வேண்டும்.
சுதந்திரம் அடைந்தபோது, நமது நாட்டின் சராசரி எழுத்தறிவு 18.33% , ஆயுள் எதிர்பார்ப்பு 32 வயது. பெண்களின் கல்வி அறிவு சதவிகிதம் 8.66%! ஜனத்தொகைஅப்போது 36.1 கோடி .
இப்போது ஆயுள் எதிர்பார்ப்பு அதிகமாகி 68 வயதாக உயர்ந்துள்ளது. இது நம்பிக்கையூட்டும் விஷயம்.
ஆயினும் மலேசியா, சீனா, பிரேசில், தென் கொரியா போன்ற நாடுகளை ஒப்பிடுகையில் குறைவு. சீனாவில் 76 வயது, மலேசியா 75, பிரேசிலில் 82 வயது. உலகஅளவில் ஆயுள் எதிர்பார்ப்பு வயது 71.4 வருடம் ஆக உலக வங்கி நிர்ணயித்துள்ளது.
கல்வி அறிவை எடுத்துக் கொண்டால் இந்தியா நல்ல முன்னேற்றம் அடைந்துள்ளது. சுதந்திரம் அடைந்த போது இருந்த 18.33 % இலிருந்த கற்றவர்களின் சதவீதம் 74.04 % ஆக உயர்ந்திருக்கிறது. பெண்களது கல்வித் தரம் 65.46%. கேரளா கல்வி அறிவில் 92% முதன்மை மாநிலம். தமிழ்நாட்டில் 80.1 %. இது மற்ற மாநிலங்களை விட அதிகம் என்பதில் திருப்தி அடையலாம்.
தொழில் வளர்ச்சியிலும் பல சாதனைகள் புரிந்திருக்கிறோம். கனரக தொழிற்சாலைகள், நீர் மின்திட்டம்பல்வகை பயனூட்டும் திட்டங்கள் சிறப்பாக நிறைவேற்றப்பட்டுள்ளன.
1990 - ஆம் ஆண்டுக்குப் பிறகு உலகமயமாக்கல். தாராளமயமாக்கல் கொள்கை அடிப்படையில், உலக நாடுகளுடன் போட்டி போடும் அளவிற்கு இந்தியா உயர்ந்துள்ளது. கணினி தொழில் நுட்பத்தில், மென்பொருள் தயாரிப்பதில் நம் நாட்டு இளைஞர்கள் சாதனை படைத்து வருகிறார்கள்.
நமது நாடு பழமையான நாடு, வளமையான நாடு பாரம்பரியம் கலாசாரம் நிரம்பிய நாடு. பாரத தேசம்இப்புவியில் அமைந்திருக்கும் இடம் இதமாக வாழ்வதற்கு உகந்த இடம். சராசரி சீதோஷ்ணம், உடலுக்கும்மனதிற்கும் உற்சாகம் அளிப்பவை. பல நிலங்களில் மூன்று போகம் விளையும் அளவிற்கு செழுமையான நிலம், நீர் நிலைகள். மலைப்பிரதேசங்களில் அரிய மூலிகைகள் சமையலுக்குச் சுவையூட்டும் லவங்கம், பட்டை, ஏலக்காய் மற்றும் பலவகை தானியங்கள் விளையும் தேசம் பாரத தேசம் .
பாரதம் பொன் விளையும் பூமி என்பதால் அந்நியர்கள் வணிகத்திற்காக வந்தார்கள். இந்திய மன்னர்கள் கோயில்களில் தான் ஐஸ்வர்யங்களைப் பாதுகாப்பாக வைப்பார்கள். கோயில்களில் தானிய வகைகளும் சேமிக்கப்படும். கோயில்களை விஸ்தாரமாக அமைத்ததற்கு முக்கியகாரணம், நாட்டில் இயற்கை பேரிடர் அல்லது அந்நியர் படையெடுப்பு போன்ற ஆபத்து ஏற்படுகையில் பாதுகாப்பாக மக்கள் அங்கு தங்கி இருக்கலாம் .
அண்டை தேசத்திலிருந்து தொடர் படையெடுப்பு கிரேக்க மன்னன் அலக்சாண்டரிலிருந்து, முகமது கஜனி முகமது கோரி துருக்கிய தேசத்தினர் நாட்டின் ஐஸ்வரியங்களை சூறையாட திரும்பத் திரும்ப வந்தனர். முகமது கஜினி மட்டும் பதினேழுமுறை நமது தேசத்தைப் படையெடுத்து விலைமதிக்க முடியாத பொருட்களை தனது நாட்டை அழகுபடுத்த கஜினி அள்ளிச் சென்றான்.
குஜராத்தில் உள்ள சோமநாதர் கோயில் பலமுறைஇஸ்லாமிய மன்னர்களால் தாக்கப்பட்டு கிடைத்தபுதையல் அள்ளிச் செல்லப்பட்டது.
எவ்வளவு கொள்ளையடித்தாலும் பாரத மக்களின் உழைப்பைப் பறிக்க முடியாது! அதனை நிரூபிக்கும்வண்ணம் பொருளாதார வளர்ச்சி மற்ற நாடுகளைவிடமிக அதிகமாக சுமார் 25 விழுக்காடு இருந்தது. பிரிட்டிஷ் அரசு நாட்டை கைப்பற்றிய பிறகு தான் வளர்ச்சி அதல பாதாளத்திற்குச்சென்றது.
ஒரு நாடு சுதந்திரம் அடைந்த பிறகு நாட்டுமக்களை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்ல வேண்டியது அந்த நாட்டின் தலைவர்களுடைய பொறுப்பு. அந்தவிதத்தில் நமது நாடு பண்டிட் நேரு, படேல்,அம்பேத்கர், ராஜாஜி, ஆசாத் போன்ற தலைவர்களைப் பெற்றது ஒரு வரப்பிரசாதம் என்றால் அது மிகையில்லை. சுதந்திரம், சமத்துவம், கண்ணியம் வாழ்வாதாரம், அடிப்படை உரிமைகள்அடக்கிய அரசியல் சாசனம் தலைவர்கள் ஒன்று கூடிவடிவமைத்து இந்திய மக்களுக்கு அளித்து இந்தியாகுடியரசாக உயர்ந்தது.
மக்களாட்சியை உறுதி செய்யும் வண்ணம் எல்லாத் தரப்பினருக்கும் பாகுபாடின்றி வாக்குரிமை அளிக்கப்பட்டது மிகப் பெரிய சாதனை. மக்களாட்சிக்கு உதாரணமாக பிரகடனப்படுத்திக் கொள்ளும் அமெரிக்காவிலேயே சம உரிமை சுதந்திரம் அடைந்து பல ஆண்டுகளுக்குப் பிறகு தான் அளிக்கப்பட்டது. 1800 - இல் தொடர்ந்த போராட்டத்திற்குப் பிறகு 1920 -இல் தான்பெண்களுக்கு ஓட்டுரிமை வழங்கப்பட்டது.
இந்தியாவில் எல்லாருக்கும் ஓட்டுரிமை அளிக்கப்பட்டு முதல் பொதுத் தேர்தல் 1952 - இல் நடைபெற்று இந்தியா ஜனநாயக நாடு என்பதை நிரூபித்தது. மொழி, இனம், மதம், கலாசாரம் என்று பலவிதங்களில் மாறுபட்டிருந்தாலும் பாரத தேச மக்கள் என்ற ஒருமைப்பாடு நிலைத்துநிற்கிறது.
"வேற்றுமையில் ஒற்றுமை' ஒளிவிளக்காய் திகழ்வதற்கு இந்திய மக்களின் உயர்ந்த மனப்பக்குவம் தான் காரணம். பல மேற்கத்திய ஜனநாயக நாடுகளின் நிபுணர்கள் இந்தியாவின் பிரமிக்கத்தக்க ஜனநாயகப் புரட்சியை கண்டு பொறுக்காமல் பல எதிர்மறைக் கருத்துகளைத் தெரிவித்தனர்."இந்தியாவில் ஜனநாயகம் நிலைக்காது;
இந்தியா பிளவுபடும்' என்று 1960- இல் அமரிக்க சமூகவியலாளர் செலிக் ஹாரிஸன் சொன்னார். 1967 - இல் நெவில் மாக்ஸ்வெல் அமெரிக்காவின் டைம்ஸ் பத்திரிகையின் முக்கிய நிருபர் "சிதையும் இந்திய ஜனநாயகம்' என்ற தலைப்பில் தனது தொடர் கட்டுரைகளில் இந்தியாவின் ஜனநாயகம் வெகு விரைவில் அழிந்துவிடும் என்று ஆரூடம் சொன்னார். நடந்தது வேறு. ஜனநாயக இந்தியா வெற்றியுடன் பீடு நடை போடுகிறது என்பதில் பெருமை கொள்வோம். அதனைக் குலைக்க முற்படும் எந்த ஒரு சக்திக்கும் இடம் கொடோம் என்று இளைஞர்கள் உறுதியோடு செயல்பட வேண்டும்.
அரசியல் சாசனத்தில் மூன்றாம் பாகத்தில் உரிமைகளைப் பற்றி கூறப்பட்டிருக்கிறது. அதே போல் 51 -அ பிரிவில் கொடுக்கப்பட்டுள்ள கடமைகளை நிறைவேற்ற வேண்டிய பொறுப்பும் நமக்கு உள்ளது. அதில் முக்கியமானது, ஒவ்வொரு இந்தியனும் நாடு உயர்ந்த நிலையை அடைய தனது உன்னதப் பங்களிப்பை அளிக்க அயராது பாடுபட வேண்டும் என்பதாகும்.
"நாடென்ன செய்தது எனக்கு என்று
கேள்விகள் கேட்பது எதற்கு?
நீ என்ன செய்தாய் அதற்கு
என நினைத்தால் நன்மை உனக்கு'
என்ற பாடல் வரிகளுக்கு ஏற்ப நமது பணிகளை
செவ்வனே செய்வோம்.
போன வார கேள்விக்கு பதில்:
"மீதைல் ஐசோசயனேட்' என்ற விஷ வாயு போபால்
யூனியன் கார்பைட் பன்னாட்டு தொழிற்சாலையில் இருந்து கசிந்ததால் உயிர் சேதம் ஏற்பட்டது.
இந்த வார கேள்வி:
விண்வெளி வீரர் ராகேஷ் சர்மா எந்த வருடம் விண்வெளி பயணம் செய்தார், விண்வெளி கலத்தின் பெயர் என்ன?
(விடை, அடுத்த வாரம்)
கட்டுரையாளர்:
மேனாள் காவல்துறைத் தலைவர் மேனாள் சட்டமன்ற உறுப்பினர்