இளைஞர்மணி

நிலம் தொடர்பான தகவல்கள்... உடனே தெரிந்து கொள்ளலாம்!

ந. ஜீவா

நம் வாழ்வில் மிகவும் கவனமாகச் செய்ய வேண்டிய செயல்களில் ஒன்று, நிலம் வாங்குவது. எந்த ஊரில் எந்தப் பகுதியில் நிலம் வாங்கினாலும், அந்த நிலத்தைப் பற்றிய தெளிவான விவரங்களை முதலில் சேகரிக்க வேண்டும். நிலத்தின் தன்மை, நிலத்தின் உரிமையாளர், நிலத்துக்கு அரசு நிர்ணயித்துள்ள விலை, நடைமுறையில் உள்ள விலை, பட்டா நிலமா, இல்லையா, நிலம் தொடர்பான ஏதேனும் வழக்குகள் இருக்கின்றனவா? அரசின் திட்டங்களுக்காகக் கையகப்படுத்தப்பட வேண்டிய பகுதியில் அந்த நிலம் அமைந்திருக்கிறதா? என்பன போன்ற பல தகவல்களைச் சேகரிக்க வேண்டும். அதற்குப் பிறகுதான் அந்தப் பகுதியில் நிலம் வாங்க வேண்டும்.

வேலை, தொழில் என்று இயந்திரம் போல் ஓடிக் கொண்டிருக்கும் வாழ்க்கையில் இப்படித் தகவல்களைத் திரட்டுவதற்கு எல்லாம் நேரம் இல்லை என்று நினைப்பவர்களே அதிகம்.

யாரோ ஒரு நம்பகமான நண்பரின், உறவினரின் பேச்சைக் கேட்டு, அதன் அடிப்படையில் நிலம் வாங்குபவர்களே அதிகம். நிலம் வாங்கிய பிறகு, ஏதாவது பிரச்னைஏற்பட்டால் நொந்து போகிறவர்களும் உண்டு.

இப்படிப்பட்ட பிரச்னைகளைத் தவிர்ப்பதற்கு உதவும் வகையில் ஒரு நிறுவனம் செயல்பட்டு வருகிறது.

இந்தியாவின் 5 மாநிலங்களின் 14 நகரங்களில் உள்ள 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பகுதிகளின் நிலம் சார்ந்த விவரங்களைத் திரட்டி வைத்திருக்கிறது அந்நிறுவனம். நிலம் வாங்க விரும்பும் ஒருவர், அந்நிறுவனத்தின் இணையதளத்தில் சென்று தன்னைப் பதிவு செய்து கொண்டு வாங்க விரும்பும் நிலம் தொடர்பான தகவல்களைத் தேடினால், உடனடியாக அது பற்றிய தகவல்களைத் தெரிந்து கொள்ளலாம்.

பெங்களூருவை மையமாகக் கொண்டு செயல்படும் "டெர்ரா எகனாமிக்ஸ் அண்ட் அனலிட்டிக்ஸ் லேப்' என்ற நிறுவனம்தான் அது. இளைஞர்களால் நடத்தப்படும்அந்நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பில் ரோஹன் ஸ்ரீதர், சித்திஜ் பத்ரா ஆகியோர் உள்ளனர்.

""நிலம் தொடர்பான நமக்குத் தெரிய வருகிற பல தகவல்களில் உண்மைத்தன்மை மிகவும் குறைவாகவே உள்ளது. ஓர் இடத்தின் அந்தப் பகுதியில் விற்கப்படுகிற விலையும், பிற நபர்களிடம் நாம் கேட்டுத் தெரிந்து கொள்கிற விலையும் எப்போதும் ஒன்றாக இருப்பதில்லை. ஆளாளுக்கு ஒரு விலையைச் சொல்வார்கள். ஓர் இடத்தை வாங்கச் சென்று விலை பேசி முடிக்கும் வரைக்கும் கூட அந்த இடம் தொடர்பான வழக்கு ஒன்று இருப்பது கூட பலருக்கும் தெரிவதில்லை.

வாங்கப் போகும் நிலத்தின் உரிமையாளர் அந்த நிலத்தை ரொக்கம் கொடுத்து வாங்கினாரா? சொத்தைப் பங்கு பிரிக்கும்போது அவருடைய பங்காக அவருக்குக் கிடைத்ததா? பிறரால் தானமாக அந்த நிலம் அவருக்கு வழங்கப்பட்டதா? அந்த நிலத்தின் வாரிசுகள் யார்? அவர்கள் தரப்பில் ஏதேனும் ஆட்சேபணைகள் வர வாய்ப்புகள் உள்ளனவா? என்பன போன்ற ஏகப்பட்ட பிரச்னைகள் நிலத்தைச் சுற்றி இருக்கின்றன. இவற்றையெல்லாம் நிலம் வாங்குபவர் தெரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது.

இப்படி நிலம் தொடர்பான பல உண்மைத் தகவல்களைத் திரட்டி, பிறருக்குப் பகிர்ந்தால் உதவியாக இருக்குமே என்ற நோக்கத்தில் நானும் எனது நண்பர் சித்திஜ் பத்ராவும் 2018 - இல் தில்லியில் இந்த நிறுவனத்தைத் தொடங்கினோம். இப்போது பெங்களூருவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படுகிறோம்'' என்கிறார் ரோஹன் ஸ்ரீதர்.

ஏதோ நிலத்தை வாங்குபவருக்கு மட்டும்தான் இந்த நிலம் தொடர்பான தகவல்கள் தேவை என்று நினைத்துவிடாதீர்கள். நிலம் வாங்க, வீடுகட்ட கடன் கொடுப்பது ஆகியவற்றைச் செய்யும் பல வங்கிகளுக்கு நிலம் பற்றிய தகவல்கள் தேவை. அதேபோன்று நிதி நிறுவனங்களுக்கும் தேவை. நிலத்தை வாங்கி விற்கும் ரியல் எஸ்டேட்காரர்கள், நிலத்தை வாங்கி கட்டடம் கட்டிக் கொடுக்கும் கட்டுமான நிறுவனங்கள், நிலத்தை வாங்குவதற்கு, விற்பதற்கு உதவும் இடைத் தரகர்கள் என எல்லாருக்கும் நிலம் பற்றிய உண்மைத் தகவல்கள் தேவைப்படுகின்றன. இன்னும் சொல்லப்போனால், நிலத்தை விற்பவருக்கும் கூட தற்போது அந்த நிலம் உண்மையில் என்ன விலை போகிறது?

என்கிற தகவல் தேவை. நிலம் தொடர்பான வழக்குகளை நடத்தும் வழக்கறிஞர்களுக்கும் அது தொடர்பான தகவல்கள் தேவை.

இப்படிப்பட்ட தேவைகளை நிறைவு செய்கிறது இந்நிறுவனம்.

""நிலம் தொடர்பான தகவல்களைத் திரட்டுவது அவ்வளவு எளிதான வேலையில்லை. நமது நாட்டில் பல மாநிலங்கள், பல மொழிகள், பல நிர்வாகமுறைகள் இருக்கின்றன. நிலம் தொடர்பான தகவல்களைப் பதிவு செய்து வைப்பதிலும் பலவிதமான முறைகள் இருக்கின்றன. ஒரு மாநிலத்திலேயே ஒரு குறிப்பிட்ட பகுதியில் உள்ள நிலம் தொடர்பான விதிமுறைகள் இன்னொரு பகுதிக்குப் பொருந்துவதில்லை. இவற்றையெல்லாம் கணக்கில் எடுத்துக் கொண்டே நாங்கள் செயலில் இறங்கினோம்.

இதற்காக பல்வேறு அரசு நிறுவனங்களைத் தொடர்பு கொள்ள வேண்டும். இப்படித் திரட்டப்பட்ட தகவல்களை ஒழுங்குபடுத்த வேண்டும். இதற்காகவே நாங்கள் தனியான மென்பொருளை உருவாக்கியிருக்கிறோம். மேலும் நிலம் தொடர்பாக உள்ள பதிவுகளில் உள்ள பல மாநில மொழிச் சொற்களை ஆங்கிலத்துக்கு மாற்ற வேண்டும். ஏற்கெனவே இதற்காக உள்ள அகராதிகளில் பல சொற்களுக்கான பொருளே இல்லை. எனவே நாங்கள் எங்கள் நிறுவனத்துக்கென்று தனியான மொழிபெயர்ப்பு பொறியமைவை உருவாக்கியிருக்கிறோம். அதேபோன்று நிலம் தொடர்பான ஸ்கேன் செய்யப்பட்ட ஆவணங்கள், வரைபடங்கள், குறிப்பிட்ட மனையின் எல்லைகள் போன்றவற்றை பதிவு செய்து வைத்துக் கொள்வதற்காக எங்களுக்கென்று இமேஜ் ரிகக்னிஷன் பொறியமைவையும் ஏற்படுத்தியிருக்கிறோம்.

நிலம் தொடர்பான தகவல்களைத் தேவைப்படுபவர்களுக்கு ஏற்ற வடிவத்தில் தரும் பணியையும் நாங்கள் செய்கிறோம். உதாரணமாக, ஒரு வங்கி ஒரு குறிப்பிட்ட பகுதியில் உள்ள நிலங்களைப் பற்றிய தகவல்களைக் கேட்டால், அதற்குத் தேவையான தகவல்களை அதற்குரிய வடிவத்தில் தொகுத்துத் தர வேண்டும். தனிப்பட்ட ஒருவர் நிலம் வாங்குவதற்காக தகவல்களைக் கேட்டால் அதற்கு வேறு மாதிரி வடிவத்தில் தர வேண்டும்.

தில்லி, மகாராஷ்டிரம், கர்நாடகம், தமிழ்நாடு, தெலங்கானா ஆகிய மாநிலங்களில் உள்ள தில்லி, குருகிராம், ஃபரிதாபாத், மும்பை, புணே, தானே, பெங்களூரு, சென்னை, கோயம்புத்தூர், ஹைதராபாத், வாரங்கல் உள்ளிட்ட 14 நகரங்களில் உள்ள இடங்களைப் பற்றிய தகவல்களை நாங்கள் தருகிறோம். இன்னும் இதைவிரிவுபடுத்தும் பணியில் இறங்கியிருக்கிறோம்'' என்கிறார் ரோஹன் ஸ்ரீதர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாமக்கல்: பிளஸ் 2 பொதுத் தேர்வில் 96.10% தேர்ச்சி

ஒடிஸாவில் பாஜக முதல்வர் ஜூன் 10-ல் பதவியேற்பார்: மோடி

வைரலாகும் தக் லைஃப்!

பிளஸ்2 பொதுத்தேர்வு: திருவள்ளூர் மாவட்டத்தில் 23,401 பேர் தேர்ச்சி

பிளஸ் 2 பொதுத் தேர்வு: விழுப்புரம் மாவட்டத்தில் 93.17% தேர்ச்சி

SCROLL FOR NEXT