எந்தவோர் அறிவியல் கண்டுபிடிப்பிலும் நல்லவையும் இருக்கும், தீயவையும் இருக்கும். இதற்கு தொழில்நுட்பங்கள் விதிவிலக்கல்ல. புதிய தொழில்நுட்பங்களால் ஏற்படும் தீயவிளைவுகளைக் கண்காணித்து, பாதுகாப்பை உறுதி செய்வது அவசியமாகும்.
20-ஆம் நூற்றாண்டின் மிகச்சிறந்த தொழில்நுட்பமாகக் கருதப்படும் இணையதளம், சிறுவர் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பயன்படுத்தும் ஒன்றாகிவிட்டது. அவற்றைப் பயன்படுத்தும்போது எழும் பாதுகாப்பு சிக்கல்களை, அதிலும் குறிப்பாக நமது இளம் தலைமுறையினர் இணையவெளியில் உலா வரும்போது எதிர்கொள்ளும் பிரச்னைகளைக் கையாளுவது
எப்படி?
இணையதளத்தால் ஏற்படும் தீமைகளை இளம் தலைமுறையினர்கள் முழுமையாக அறிந்திருக்க வாய்ப்பு குறைவு தான். அதனால் இணையதளத்தில் உலா வரும்போது கவனிக்க வேண்டிய சில அம்சங்களை இளம் தலைமுறையினருக்குகற்றுக் கொடுப்பது அவசியமாகும்.
இணையதளத்தில் நன்மைகளை இருப்பதைப் போலவே தீமைகளும் அதிகம். கண்ணுக்குத் தெரியாமல் செயல்படுத்தப்படும் பல தீய செயல்களுக்கு இணையதளம் வாய்ப்பளிக்கிறது. இணையதளங்களில் குவிந்திருக்கும் தனிப்பட்ட நபர்களின் தகவல்களைத் திருடவும் முடியும். அவற்றின் தரவுகளைச் சிதைக்கவும் முடியும். இதற்கென நிறைய இணையவழித் திருடர்கள் - ஹேக்கர்கள்- உருவாகியிருக்கிறார்கள்.
எனவே இணையதளத்தைப் பயன்படுத்தும்போது சில பாதுகாப்பு வழிமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும். அது தேவையில்லாத பல சிக்கல்களைத் தவிர்க்க உதவும்.
ஃபிஷிங் மோசடிகள்: "உங்களுக்கு வந்திருக்கும் மின்னஞ்சல், உங்கள் மெயில்பாக்ஸில் முழுமையாக நிரம்பிவிட்டது, கூடுதலாக மின்னஞ்சலை பெற இடமில்லை' என்ற தகவலை உங்களுடைய கணினி கூறினால், உங்கள் கணினியில் இருந்து தரவுகளைத் திருட ஹேக்கர்கள் முயற்சிக்கிறார்கள் என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். பெரும்பாலான ஹேக்கர்கள், மால்வேர்களைப் பரப்பி, தகவல்களைத் திருடுகிறார்கள். மின்னஞ்சல் வழியாக வந்துசேரும் மால்வேர்கள் கல்விக்கடன் வழங்குவதாக தெரிவிக்கலாம்அல்லது வெளிநாடுகளில் இருந்து பணம் கிடைக்கிறது என்று கூறலாம். அதற்கு ஆசைப்பட்டு அதில் கொடுக்கப்பட்டிருக்கும் இணைப்பைச் சொடுக்கினால், உங்களுடைய கணினியில் உள்ள தரவுகள் அனைத்தும் திருடப்படும் ஆபத்து உள்ளது. எனவே, மின்னஞ்சலில் அனுப்புவோரின் முகவரியைப் பார்த்து, அது போலியானதா? உண்மையானதா? என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும். பிரபலமான கல்விநிறுவனங்களின் பெயர்களில் கல்விக்கடன் அளிப்பதாக மின்னஞ்சல் வந்திருந்தால், அது குறித்து சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்களுக்கு தகவல் தெரிவிப்பது நல்லது.
ஆபரேட்டிங் சிஸ்டத்தைத் தரமுயர்த்துங்கள்: அவ்வப்போது கணினி அல்லது கைபேசியின் ஆபரேட்டிங் சிஸ்டத்தை தரமுயர்த்திக் கொள்வது ஆபத்தைத் தவிர்க்க உதவும். பயனாளிகளின் கணினி அல்லது செயலியைப் பாதுகாக்க, அதன் மேம்பாட்டாளர்கள் அவ்வப்போது மாற்றங்களைச் செய்து கொண்டிருப்பார்கள். உங்களுடைய கணினியின், கைபேசியின் மென்பொருளை தரமுயர்த்த அறிவிப்பு வந்தால், அதை அலட்சியப்படுத்தாதீர்கள். இதன்மூலம் நமது தரவுகளைப் பாதுகாக்க முடியும்.
பொதுவெளியில் கிடைப்பவை... வேண்டாம்: பொதுவெளியில் கிடைக்கும் நெட்வொர்க் அல்லது வைஃபை போன்ற இணையதள இணைப்புகள் பாதுகாப்பற்றவை. தரவுகளைத் திருடுவதற்கு ஹேக்கர்கள் இதை பெருமளவில் பயன்படுத்துகிறார்கள். பொதுநெட்வொர்க் வசதிகளை பயன்படுத்தாமல் தவிர்ப்பது தரவுகளைப் பாதுகாக்க உதவியாக இருக்கும். அதிகாரப்பூர்வமான அல்லது பாதுகாப்பான நெட்வொர்க் மூலம் இணையதள வசதியைப் பயன்படுத்தினால் நமது தனிப்பட்ட தரவுகளைப் பாதுகாக்க முடியும்.
என்க்ரிப்ஷன்: தகவல்களை யாருக்கும் தெரியாமல் மறைத்துவைத்து பயன்படுத்துவதை தான் என்க்ரிப்ஷன் என்று கூறுகிறார்கள். உங்கள் தரவுகளை பாதுகாப்பாக வைத்திருக்க விபிஎன் (விர்ச்சுவல் பிரைவேட் நெட்வொர்க் ) வசதியைப் பயன்படுத்துவது நல்லது. தகவல்களைப் பாதுகாத்து வைத்திருக்கும் இணையதளங்கள், செயலிகள் மற்றும் கருவிகளை மட்டும் பயன்படுத்துங்கள். ஹேக்கர்களிடம் இருந்து நமது தகவல்களை பாதுகாக்க என்க்ரிப்ஷன் செய்யப்பட்ட இணையதளங்கள், செயலிகள், கருவிகள் கைகொடுக்கும்.
பாட்லாக் (padlock) மற்றும் ஹைபர்டெக்ஸ்ட் ட்ரான்ஸ்பர் புரோட்டோகால் (எச்டிடிபி) கொண்ட இணையதளங்களைப் பயன்படுத்துவது நமது தரவுகளை திருடும் முயற்சியை முறியடிக்க உதவும்.
ஆன்டிவைரஸ் மென்பொருள்கள்: உரிமம்பெற்ற ஆன்டிவைரஸ் மென்பொருள்களைப் பயன்படுத்துவது பல வகைகளில் உதவியாக இருக்கும். வலுவான ஆன்டிவைரஸ் மென்பொருளை பொருத்துவதால் இணையதளத்தில் உலா வரும்போது பெரும் தரவு களவுகளைத் தடுக்க முடியும். எந்த மால்வேரும் எதுவும் செய்யாது. மேலும் ஹேக்கர்களால் தரவுகளை எளிதில் திருட முடியாது. இதற்காக ஆன்டிவைரஸ் மென்பொருளை நம்பலாம்.
தனிப்பட்ட தகவல்களைப் பகிராதீர்கள்: இணையதளங்களில் தனிப்பட்ட தகவல்களைப் பகிர்ந்து கொள்வதைத் தவிர்க்க வேண்டும். அதிகாரப்பூர்வமல்லாத இணையதளங்களில் தகவல்களைப் பகிரக் கூடாது.
வலுவான பாஸ்வேர்டு: எல்லா தகவல்களையும் வலுவான பாஸ்வேர்டுகளால் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். உங்களுடைய பாஸ்வேர்டு பிறரால் எளிதில் ஊகிக்க கூடியதாக, பிறரால் தெரிந்து கொள்ள முடிவதாக இருக்கக் கூடாது. அது ஹேக்கர்களுக்கு வசதியாகிவிடும். திருடப்படும் முக்கியமான தகவல்கள் டார்க்வெப் என்று கூறப்படும் திருடர்கள் உலவும் இணையதளத்தில் விற்கப்படுகிறது. பணப்பரிவர்த்தனை அல்லது தனிப்பட்ட தகவல்கள் அனைத்தையும் வலுவான பாஸ்வேர்டால் பாதுகாப்பது அவசியமாகும். நினைவில் வைத்துக் கொள்ள கடினமாக இருக்கும் அளவுக்கு பாஸ்வேர்டு அமைக்கப்பட வேண்டும். வழக்கமாக கடவுச்சொல், சிறப்பு குறியீடுகள், எண்கள், எழுத்துக்கள் கொண்ட 8 அலகுகளால் வடிவமைக்கப்பட்டிருக்க வேண்டும்.
சேமிக்கும் கோப்புகளையும் வலுவான பாஸ்வேர்டால் பாதுகாத்திடுங்கள். ஹேக்கர்கள் கையில் சிக்கினால் நமதுகோப்புகள் சிதைந்துவிடும் அபாயம் உள்ளது. தேவைப்படும்போது தரவுகளை மீட்டெடுக்கும் வகையில் கிளெளட் அல்லது எக்ஸ்டெர்னல் ஹார்டு டிரைவ்களில் பாதுகாத்து வைக்கலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.