இளைஞர்மணி

விடுவதும் சேர்வதும் எளிதல்ல!

இந்தியாவில் ஆண்டுதோறும்   15 லட்சம்  படித்த பெண்கள், வேலைக்குச் செல்வதில் இருந்து இடையிலேயே நின்றுவிடுகிறார்கள்.

ந.முத்துமணி

இந்தியாவில் ஆண்டுதோறும் 15 லட்சம் படித்த பெண்கள், வேலைக்குச் செல்வதில் இருந்து இடையிலேயே நின்றுவிடுகிறார்கள். சிறிது காலத்திற்குப் பிறகு, மீண்டும் வேலைக்கு திரும்புவது அவ்வளவு எளிதானதல்ல. 21 வயதில் இளநிலை பட்டப் படிப்பை முடித்த கையோடு வேலைக்கு செல்லும் இளம் பெண்கள், 30 முதல் 35-ஆவது வயதில் வேலையை விட்டு விலகி, 10 ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு 45-ஆவது வயதில் மீண்டும் வேலைக்குத் திரும்புகிறார்கள்.

கரோனா பெருந்தொற்று, தொழில் அல்லது தொழில்நுட்பங்களில் ஏற்பட்டுள்ள மாற்றங்களால் நிறைந்திருக்கும் வேலைச்சந்தை, இப்படி வேலையை விட்டுவிட்டு திரும்ப வேலைக்கு வர நினைப்பவர்களை அவ்வளவு எளிதில் ஏற்றுக் கொள்வதில்லை.

வேலை கேட்டு விண்ணப்பிக்கும் நபர்களின் தன் விவரக்குறிப்பு முன்பை போல மனிதவளப் பிரிவினரால் தற்போது ஆய்வு செய்யப்படுவதில்லை. மாறாக, செயற்கை நுண்ணறிவின் துணையால் ஆய்வுசெய்யப்படுகின்றது. அதனால் வேலைக்கான சமூக வலைதளங்களில் இடம் பெறக் கூடிய ஒருவரின் தன்விவரக்குறிப்பு முழுமையாக இருக்க வேண்டும். முன்பெல்லாம் வேலைக்கு
ஆளெடுக்க விளம்பரங்களைத் தருவார்கள். இப்போதெல்லாம், இணையதளத்தில் குறிப்பாக சமூகவலைதளங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள தன்விவரக்குறிப்புகளை ஆராய்ந்து வேலைக்கு ஆளெடுக்கும் வழக்கம் வழக்கத்திற்கு வந்துள்ளது.

சிறிது காலம் கழித்து திரும்பவும் வேலைக்கு திரும்பும் பெண்கள், தன்விவரக்குறிப்பை முழுமையாக வைத்திருக்க வேண்டும். மேலும் தனது ஊதியத்தால் நிறுவனத்திற்கு ஏற்படும் ஆண்டு செலவு உள்ளிட்டவிவரங்களை கருத்தில் கொள்ள வேண்டும். 10 ஆண்டுகளுக்கு முந்தைய ஊதியத்தில் இருந்து தற்போதைய ஊதியம் கணக்கிடப்படுமா?

புதியவராகக் கருதப்படுவாரா? அல்லது அனுபவம் உள்ளவராகக் கருதப்படுவாரா? வேலைத்திறன் மழுங்கியுள்ளதா? போன்ற பல்வேறு கேள்விகளுக்கு விடைதேடும் நிலையில் மீண்டும் வேலைக்குத் திரும்பும் பெண்கள் இருக்கிறார்கள்.

"அவ்தார்' என்ற திறனறி ஆலோசனை நிறுவனம், 2019-ஆம் ஆண்டில் எடுத்த ஆய்வு வேலை செய்யும் பெண்கள் குறித்த பல தகவல்களை அளிக்கின்றது. 35 சதவீதம் பெண்கள், தாய்மை அடைந்ததால் இடையில் வேலையை விட்டுள்ளனர். தாய்மை அடைந்த பிறகு எதிர்கொள்ளும் குடும்பப் பிரச்னைகளை சமாளிப்பதற்காக 45 சதவீதம் பெண்கள் வேலையை விடுகிறார்கள். வீட்டில் இருக்கும் முதியவர்களை கவனிப்பதற்காக 16 சதவீதம் பெண்கள் வேலையில் இருந்து விலகுகிறார்கள் என்று அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.

குடும்பத் தேவைகளைக் காட்டிலும் வேலைக்கு முன்னுரிமை அளிக்கும் பெண்களில் பலரும் குற்ற உணர்வில் தவிப்பதாக ஆய்வு தெரிவிக்கிறது. வேலையை விடுவதற்கு முன்பாக பலமுறை யோசிக்க வேண்டும்.

அப்படியே வேலையை விடுவதாக முடிவெடுத்தால், விடுப்பு எடுத்துக் கொள்ள வேண்டும். அதாவது வேலையில் இருந்துகொண்டே நீண்டவிடுப்பை எடுத்துக்கொள்ள வேண்டும் என்று வேலை ஆலோசனைக் குழுக்கள் தெரிவிக்கின்றன.

லிங்க்டுஇன் சமூகவலைதளம் எடுத்த வாய்ப்பு தரவரிசை-2021 அறிக்கையின்படி, வேலையில் முன்னேற்றத்தை நோக்கி பெண்கள் நகர்ந்து கொண்டிருக்கும்போது குடும்பத் தேவைகள் இடையில் வந்து குறுக்கிடுவதாக 71 சதவீத பெண்கள் தெரிவித்துள்ளனர்.

வேலையை விட்ட பிறகு மீண்டும் வேலைக்குத் திரும்பும் பெண்கள் பல்வேறு சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. 23 சதவீத பெண்களுக்கு குடும்ப ஆதரவு கிடைப்பதில்லை. 36 சதவீத பெண்கள் திறன்குறைபாட்டால் தவிக்கிறார்கள். மறுபடியும் வேலைக்கு வரும்போது ஊதியம் குறைவாக இருக்குமே என்று 69 சதவீத பெண்கள் பயப்படுகிறார்கள் என்று ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

வேலை குறித்த சந்தேகங்கள் அல்லது மன அழுத்தங்கள் பெண்களை வெகுவாகப் பாதிக்கின்றன. குடும்பத்தில் அல்லது வேலையில் பெண்களுக்கு ஏற்படும் அழுத்தங்கள், வேலைத்திறனை குறைத்துவிடுகின்றன. ஒரு சில பெண்கள், வேலையில் இருந்து விலகுவதற்கு நிறுவனமே காரணமாகிவிடுகிறது.

வேலைச்சந்தை நிலவரம்:

வேலையை விட்டுவிட்டு சிறிது காலம் கழித்து வேலைக்குத் திரும்பும் பெண்களின் வேலைச்சூழலை கரோனா தொற்றும் ஒருவிதத்தில் கெடுத்துவைத்துள்ளது. வேலைவாய்ப்பைப் பெற்ற பெண்கள், கரோனா தொற்றின் காரணமாக வீட்டில் இருந்தே வேலை செய்ய வேண்டிய நிலை ஏற்படுகிறது. வீட்டிலிருந்து வேலை பார்க்கும்போது, குழந்தைகள் பராமரிப்பு, முதியோர்களைக் கவனித்தல், குழந்தைகளுக்கு கற்றுத் தருதல் கூடவே வீட்டு வேலைகளையும் செய்யக் கூடிய நிலை ஏற்பட்டுவிடுகிறது. வேலையில் முழுகவனத்துடன் ஈடுபட முடிவதில்லை.

2020-ஆம் ஆண்டு மே முதல் 2021-ஆம் ஆண்டு மே மாதம் வரையில் எடுக்கப்பட்ட ஆய்வில், திரும்பவும் வேலைக்கு வந்த பெண்களின் எண்ணிக்கை 25 சதம் அளவுக்கு குறைந்துள்ளது. தற்போதைய சூழலில், கடந்த காலத்தைப் போல அல்லாமல், உயர்பதவிகளில் பெண்களுக்கான வேலைவாய்ப்புகள் குறைவாகவே உள்ளன. இடைநிலை மற்றும் முதுநிலை வேலைவாய்ப்புகள் 25 சதம் அளவுக்கு உயர்ந்துள்ளன. வேலையை விட்டு விட்டு சிறிது காலம் கழித்து வேலைதேடும் பெண்களுக்கு பகுதி நேர வேலைகளே கிடைக்கின்றன. சம்பாதிக்கும் தேவை இருக்கும் பெண்கள், வீட்டு வேலைகளையும் கவனித்துக் கொண்டு பகுதி நேர வேலை, தொலைதூரவேலை, மறைநிலைவேலை, நேரடி-உறைவிடவேலை, குறுவேலைகள் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றில் சேர வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள்.

பகுதி நேர வேலை என்பது நெகிழ்வான வேலை நேரம் கொண்டது. இதற்கு 56 சத நிறுவனங்கள் ஆதரவு அளித்துள்ளன.

உலக அளவில் செயல்பட்டுவரும் பன்னாட்டு நிறுவனங்கள் அனுபவம் வாய்ந்த, திறன்மிகுந்த, துறைசார் திறனுள்ள பணியாளர்களை விரும்புவதால், அதேபோன்ற திறமைகள் தமக்கும் இருக்கிறதென நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் மீண்டும் வேலை தேடும் பெண்கள் இருக்கிறார்கள்.

கரோனா பெருந்தொற்றால் வருவாய் பெரும் சரிவை சந்தித்திருக்கும் குடும்பங்களில் பெண்களை வேலைக்குச் செல்லும்படி தூண்டும் நிகழ்வுகளும் நடக்கின்றன. மறுபடியும் வேலைக்குச் சேர்வதால் உருவாகும் சவால்களை எதிர்கொள்ள கூடுதலாக பணியாற்ற பெண்களும் தயாராகி வருவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதனால் திறன்மேம்பாட்டில் பெண்கள் கவனம் செலுத்துகிறார்கள். புதிய திறன்களை கற்றுக் கொள்ளவும் பெண்கள் தயாராக உள்ளனர். திறன்மேம்பாட்டில் ஈடுபடும் பெண்களின் எண்ணிக்கை 60 சதமாகவும், புதிய திறன்களை கற்கும் பெண்களின் எண்ணிக்கை 56 சதமாகவும் உயர்ந்துள்ளதாக லிங்க்டுஇன் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

பெங்களூரு, தில்லி, ஹைதராபாத், மும்பை போன்ற பெருநகரங்களில் 10 ஆண்டு கால இடை ஓய்வுக்கு பிறகு வேலைக்குத் திரும்பும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கோயம்புத்தூர், சண்டிகர், லக்னெள போன்ற நகரங்களில் வீட்டில் இருந்து வேலை செய்யும் வாய்ப்புள்ள நிறுவனங்களில் பெண்கள் வேலைக்குச் சேரும் போக்கு அதிகரித்து வருகிறது. விற்பனை, டிஜிட்டல் மார்க்கெட்டிங், வடிவமைப்பாளர், மனிதவளம், முதலீட்டு வங்கியியல் உள்ளிட்டபல்வேறு துறைகளில் மீண்டும் வேலைதேடும் பெண்களுக்கான வாய்ப்புகள் பெருகி வருகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரஞ்சி கோப்பை இறுதிப் போட்டியில் வெடித்த மோதல்: ஜம்மு காஷ்மீர் கேப்டனுக்கு 50% அபராதம்?

தேவா குரலில் வெளியான ஜெய்யின் புதிய படத்தின் பாடல்! இனையத்தில் வைரல்!

காலையில் எழுந்தவுடன் இந்த 5 விஷயங்களைச் செய்யுங்கள்!

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 1 காசு குறைந்து ரூ. 90.96 ஆக நிறைவு!

இது தெரியுமா? பூமி சுற்றுவதை நம்மால் உணர முடிவதில்லையே, ஏன்?

SCROLL FOR NEXT