இளைஞர்மணி

புதிய அலை... கற்கும் முறையில்!

கரோனா பெருந்தொற்றின் விளைவாக, உலக அளவில் கற்றல் மற்றும் கற்பித்தல் முறையில் தலைகீழ் மாற்றம் நிகழ்ந்துள்ளது.

ந.முத்துமணி

கரோனா பெருந்தொற்றின் விளைவாக, உலக அளவில் கற்றல் மற்றும் கற்பித்தல் முறையில் தலைகீழ் மாற்றம் நிகழ்ந்துள்ளது. தனிமனித இடைவெளி போன்ற காரணங்களால் தொலைநிலைக்கல்வி மட்டுமல்லாது எண்ம கல்விக்கும் உலக அளவில் புதிய மவுசு கூடியுள்ளது. பள்ளிகள், கல்லூரிகள் அடைக்கப்பட்டிருந்ததால் கடந்த 10 மாதங்களாக இணையவழி வகுப்பறை (ஆன்லைன் கிளாஸ்ரூம்) பிரபலமாகியுள்ளது. கரோனா பெருந்தொற்றின் தாக்கம் படிப்படியாக குறைந்துவருவதால், பள்ளிகள், கல்லூரிகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. அதனால் எண்ம கற்றல் மற்றும் கற்பித்தலுக்கானமுக்கியத்துவம் குறைந்துவிடாது. இணையவழி வகுப்பறைகள் கல்விமுறையின் போக்கை புரட்டிப்போட்டுள்ளது. அடுத்தடுத்த ஆண்டுகளில் எண்ம அல்லது இணையவழி கற்றல் பெருகுமே தவிர குறையாது என்பதைக் கண்கூடாக காணமுடிகிறது. அதன்விளைவாக, இணையவழி இணைப்பு, பல்திறன், மாணவர்களை மையப்படுத்திய கற்றல் முறைகளில் நாம் கவனம் செலுத்த நேரிட்டுள்ளது.

இந்தியாவிலும் இணையவழி கல்வியின் போக்கும் பரப்பும் விரிவடையும் சூழல் உருவாகியுள்ளது. இணையவழி கல்வியின் போக்கை மாற்றும் வழிமுறைகள் பிரபலமடைந்துவருகின்றன. அவற்றைக் காண்போம்:

சிறு சிறு பகுதிகளாகக் கற்றல்:

கணினி தொழில்நுட்பம் கற்றலை வெகுவாக எளிமைப்படுத்தி இருந்தாலும், அது மாணவர்களின் கவனத்தை குவிக்கத் தவறிவிட்டது. மெய்ந்நிகர் கற்றல் அல்லது இணையவழி கற்றலின்போது அதிக நேரத்தை மாணவர்கள் திரையில் செலவிடுவதால், இயல்பாகவே கண் அழற்சி, மனச்சோர்வு ஆகியவை  ஏற்பட்டுவிடுகின்றன.  காலை முதல் மாலை வரை திரை முன்னால் உட்கார்ந்து மாணவர்களால் கவனத்தைக் குவிக்க முடியாமல் போய்விடுகிறது. இணையவழி வகுப்புகளில் ஏராளமான தகவல்கள் குவிக்கப்படுவதால், அவற்றை தொகுப்பாக புரிந்துகொள்வதில் மாணவர்கள் தடுமாறுகிறார்கள். இங்குதான் சிறு சிறு பகுதிகளாகக் கற்றல்முறை  முக்கியத்துவம் பெறுகிறது. இந்தமுறையில் தகவல்களை ஒரேநேரத்தில் குவிக்காமல், அவற்றை சிறுசிறு தகவல்களாகப் பகுத்து வழங்கப்படுகிறது. குறைந்த நேரத்தில் சிறிய சிறியதகவல்களை வழங்குவதால் மாணவர்களுக்கு அது  சுமையாக இருப்பதில்லை. மாணவர்கள் எளிதில் கற்றுக் கொள்ள இயலும். இது கற்றல் திறனை மேம்படுத்துகிறது.  

கற்றல் தரத்தையும் உயர்த்துகிறது.

காணொலிவழி கற்றல்:

உலகம் முழுவதும் யூடியூப்-ஐ பயன்படுத்துவோரின் எண்ணிக்கை 230 கோடியாக உள்ளது. கேளிக்கை மற்றும் கல்வி காணொலிகள் தாம் அதிகமாகப் பார்க்கப்படுகின்றன. பத்தி பத்தியாக காணப்பட்ட பாடநூல்கள், சிறுசிறுகாணொலிகளாக புதிய வடிவம் பெற்றுள்ளன. இது மாணவர்களின் புரிதலையும், நினைவில் வைத்துக்கொள்ளும் திறனையும் மேம்படுத்தியுள்ளது. 

காணொலிகளில்  படங்கள், காட்சிகள் வாயிலாகப் பாடங்கள் விளக்கப்படுவதால்,   மாணவர்களால் எளிதில் புரிந்துகொள்ள முடிகிறது. ஒருவேளை சரியாகப் புரியாவிட்டால், காணொலிகளை அடிக்கடி இயக்கி சரியான புரிதலுக்கு வரலாம். திறனறி தொலைக்காட்சி பெட்டிகள், ஆன்டிராய்டு அடிப்படையிலானதொலைக்காட்சிகள் காணொலிகளின் பயன்பாட்டு பரப்பை விரிவாக்கியுள்ளன. இதன் அடுத்தகட்டமாக, கணினியால் உருவாக்கப்பட்ட தோற்றங்களை மெய்யுருவம் போல காட்டும் தோற்ற மெய்ம்மை அல்லது உருவகப்படுத்துதல் (வர்ச்சுவல் ரியாலிட்டி) மற்றும் உண்மையில் காண்பவற்றுடன் மேலதிக வரைபட, ஒலி, உணர்வு தகவல்களை முப்பரிணாமத்தில் மெய்ந்நிகர் நேரத்தில் இணைக்கும் இணைப்பு மெய்ம்மை (ஆக்மென்ட்டட் ரியாலிட்டி) போன்ற தொழில்நுட்பங்கள் கல்வியை வேறொரு தளத்திற்கு கொண்டு சேர்ப்பவையாக உள்ளன.

செய்முறை கற்றல்:

பாடங்களை மனப்பாடம் செய்து படித்த காலம் மலையேறிவிட்டது.  வாய்மொழியாகக் கேட்பதைக் காட்டிலும் செய்முறைவழியாக எளிதில் கற்க முடியும். மாணவர்களிடம் ஒரு விதையை கொடுத்து அதை மண்ணில் ஊன்றவைத்து, செடி வளர்வதை கண்கூடாக பார்க்க மாணவர்களுக்கு வாய்ப்பு ஏற்படுத்தித் தருவது, அதில் காணப்படும் அறிவியலைப் புரிந்துகொள்ள முடியும். இப்படி எல்லா பாடங்களையும் செய்முறையில் கற்பதே செய்முறை கற்றலாகும். இந்தவகை கற்றலின் விளைவாக, மாணவர்களின் விமர்சன சிந்தனை, புத்தாக்கத்திறன், அணியாக செயல்படு திறன், தகவல்தொடர்புதிறன்கள் மேம்படும். பிற்காலத்தில் பணிகளில் சேரும்போது மாணவர்களின் இத்திறன்களுக்கு கூடுதல் மதிப்பு கிடைக்கும்.

செயற்கை நுண்ணறிவுவழி கற்றல்:

மனிதர்களை போலவே இயந்திரங்களும் செயலாற்றும் திறனை தான் செயற்கை நுண்ணறிவு அல்லது செயற்கை மனித அறிவு என்றழைக்கிறார்கள். மாணவர்களின் கற்றல் திறனறிந்து, அதற்கு தகுந்தவாறு ஆசிரியர்களைப் போல இயந்திரக்கருவிகளே பாடங்களைப் போதிப்பதே கல்வி சார் செயற்கை நுண்ணறிவின் அடிப்படையாகும். 2024-ஆம் ஆண்டுக்குள் செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான கல்வியின் வர்த்தகம் 45 சதமாக உயரும் என்று கூறப்படுகிறது. வினாக்களைத் தயாரிப்பது, அவை சரியாக இருக்கிறதா? என்று மதிப்பிடுவது, மாணவர்களின் கற்றல் திறன்களை மதிப்பிடுவது, அதன் அடிப்படையில் பாடங்களைச் சொல்லி தருவது என்று மாணவர்களை மையப்படுத்தி கற்றலில் ஏராளமான மாற்றங்களைச் செய்யவிருக்கிறது செயற்கை நுண்ணறிவு. செயற்கை நுண்ணறிவு சார்ந்த நிரல்கள் மாணவர்களின் சுய கற்றலை ஊக்குவிக்கும்.

விளையாட்டியல் கற்றல்:

கணினி அல்லது இணையவழியான விளையாட்டுக்கு மாணவர்களிடையே நல்ல வரவேற்பு காணப்படுகிறது.   பாடங்களை விளையாட்டாக மாற்றி, அதில் மாணவர்களை ஈடுபடுத்துவது கற்றலை எளிமைப்படுத்தும். அறிவியல், வரலாறு, மொழிப்பாடங்கள் உள்ளிட்ட அனைத்தையும் விளையாட்டாக மாற்றி, அதன் வழி கற்றுக் கொடுக்கும் போக்கு பரவலாகும். வேடிக்கையாக கற்றலை ஊக்குவிப்பதே விளையாட்டியல் கற்றலின் அடிப்படையாகும். மாணவர்கள் ஆக்கப்பூர்வமாககற்றுக்கொள்ள உதவியாக இருக்கும்.

இணையவழி கற்றல் பள்ளிகள், கல்லூரிகளின் ஒரு பகுதியாக மாறவிருக்கிறது. பாடத்திட்டத்தை வகுக்கும்போதே இணையவழி கற்றல் அதன் அடிப்படையாக மாறும் காலம் வெகுதொலைவில் இல்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இருதரப்பு உறவை வலுப்படுத்துவது குறித்து பேச்சு : மோடி

எய்ம்ஸ் பணிகளை முடக்கும் திமுக: அண்ணாமலை! | செய்திகள்: சில வரிகளில் | 25.02.26

”அரசியல்வாதிகளுக்கு பாடமாக விளங்கியவர்!” நல்லகண்ணு குறித்து முதல்வர் முக ஸ்டாலின்!

காதல் ரீசெட் ரிபீட் டிரைலர்!

பிரதமர் மோடியை கைகூப்பி வரவேற்ற இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு!

SCROLL FOR NEXT