வெற்றி என்ற ஒற்றைக் குறிக்கோளை நோக்கியே நம் அனைவருடைய வாழ்வும் சென்று கொண்டிருக்கிறது. ஆனால், இந்த வெற்றியின் அளவு அவரவர் முயற்சி, உழைப்பு, வசதி, சூழ்நிலை ஆகியவற்றைப் பொருத்து மாறுபடுகிறது.
வாழ்க்கையின் அனைத்து செயல்களிலும் வெற்றி பெற வேண்டும் என்று எல்லாரும் நினைப்பது சரிதான்.
ஒருவர் அவருடைய தகுதிக்கு மீறிய ஆசையைக் கொண்டு இருந்தாலும் முழு நம்பிக்கையுடன் விடாமுயற்சி செய்தால் முடியாததையும் செய்து முடிக்கலாம்.
இவ்வுலகின் பிரபல வெற்றியாளர்கள், வெற்றி பெறப் போகும் எதிர்கால வெற்றியாளர்களுக்கு கூறும் சில அனுபவங்கள்:
நம்பிக்கை:
வெற்றிக்குத் தடையாக இருக்கும் இரண்டு முக்கிய காரணிகள், நம்பிக்கையின்மை மற்றும் தாழ்வு மனப்பான்மை ஆகியவையாகும்.
உங்களுக்கான இலக்கை நிர்ணயித்த பிறகு, ஒரு விஷயத்தின் மீது ஆசைப்பட்ட பிறகு, இது நம்மால் அடைய முடியுமா? என்ற கேள்வி மனதில் தோன்றிவிடுமானால் அதில் வெற்றி பெறுவது அசாத்தியமானது. அதனால் நீங்கள் எதிர்கொள்ளும் இலக்கு எத்தகைய கடினமானதாக இருந்தாலும் நம்மால் முடியவில்லை எனில் யாராலும் முடியாது என்ற தன்னம்பிக்கை உங்களுக்குள் விதைக்கப்பட வேண்டும். நம்பிக்கை எனும் அந்த விதையை விதைப்பவர் நீங்களாக மட்டுமே இருக்க முடியும்.
தாழ்வு மனப்பான்மை:
நம்பிக்கையின்மையை மற்றொரு வகையான தாழ்வு மனப்பான்மை என்று கூட கூறலாம் அதாவது, தாழ்வு மனப்பான்மை இருப்பதால்தான் நம்பிக்கையின்மை ஏற்படுகிறது.
இதெல்லாம் நம்மால் முடியுமா என்று நினைக்கும் அந்த தாழ்வு மனப்பான்மையை எப்போது விட்டொழிக்கிறீர்களோ அப்போது நம்பிக்கை தானே வந்துவிடும்.
பயம்:
வெற்றியை சாத்தியமாகும் கடினமான செயல்களில் கால்பதிக்கும் போது பயம் ஏற்படுவது இயல்பு. அது புதிய சிக்கல்களையும் மன அழுத்தத்தையும் ஏற்படுத்தலாம். ஆனால், கடினமான அந்த செயலில் வெற்றி பெற்றுவிட்டால் என்ன நடக்கும் என்று நினைத்துப் பாருங்கள். அந்த சாதனை இதுவரை இல்லாத மகிழ்ச்சியை - சமூகத்தில் உங்களுக்கான ஓர் அடையாளத்தைக் கொடுக்கும். எனவே, பயத்தை உடைத்தெறிந்து உங்கள் இலக்கினை நோக்கி அடி எடுத்து வையுங்கள்.
தோல்வியில் திருப்தி:
முழு நம்பிக்கை, விடாமுயற்சியுடன் செய்த ஒரு செயல் தோல்வி காணும் பட்சத்தில் அதனை ஏற்றுக் கொள்ளும் ஒரு பக்குவம் வெற்றியாளனுக்கு அவசியம் தேவை. முயற்சி செய்து தோல்வியுற்றாலும் அதில் ஒரு திருப்தி கிடைப்பதை நீங்கள் உணர முடியும். இந்த தோல்வி உங்களுடைய அடுத்த பயணத்திற்கான ஓர் அடித்தளத்தை ஏற்படுத்திக் கொடுக்கும்.
மேலும், எடுத்த முதல் முயற்சியில் வெற்றி பெறவில்லை என்றால் வாழ்வில் வெற்றியே இல்லை என்று அர்த்தமில்லை. அடுத்தடுத்த வாய்ப்புகளை நோக்கிப் பயணப்படும்போது உங்களுக்கான இலக்கை கண்டிப்பாக ஒருநாள் அடைவீர்கள்.
அதுபோல உங்கள் செயலில் தோல்வி ஏற்பட்டது எதனால் என்று சிந்தித்து தவறைத் திருத்திக் கொண்டு அடுத்த முயற்சியை நோக்கி பயணிக்க வேண்டும்.
படிப்படியான முன்னேற்றம்:
ஒரு செயலில் இறங்கிவிட்டால் அதில் படிப்படியாக முன்னேற்றம் காண்பது சிறப்பு. ஒரு ஏணியின் உச்சியை அடைய ஒவ்வொரு படியாக சென்றால்தான் உச்சியை அடைய முடியும். அதுபோலதான் வாழ்க்கையும் வெற்றியும். இதில் ஒருபடி சறுக்கினாலும் தொடர்ந்து முன்னேறுபவனே வெற்றியாளன் ஆகிறான்.
திட்டமிடுதல்:
முறையான திட்டமிடுதல் இன்றி எந்தவொரு செயலும் வெற்றி பெறாது. உங்களுடைய இலக்கை அடைய என்னென்ன தேவை, எப்போது அதனைச் செயல்படுத்த வேண்டும், தோல்வியுற்றால் அதை சமாளிப்பது எப்படி என அனைத்து கோணங்களிலும் அலசி திட்டமிட்டு பின்னர் செயல்படுத்துங்கள்.
இலக்கு:
மிகப்பெரிய சாதனைகள் ஆபத்தையும், சவால்களையும் உள்ளடக்கியவை. இலக்கினை அடைவதற்கு பல்வேறு தடைகளை எதிர்கொள்ள வேண்டி வரலாம். பல விமர்சனங்கள் வரலாம். ஆனால், இலக்கு என்ற ஒற்றைக் குறியை நோக்கி
உங்கள் மனம் எனும் அம்பு இருக்க வேண்டும். குறியில் இருந்து தவறிவிட்டால் அம்பு வேறு திசைக்குச் செல்வதுபோல உங்கள் மனமும் வேறு பாதையில் முடிந்துவிடும்.
விடாமுயற்சி:
எந்த ஒரு செயலிலும் விடாமுயற்சி அவசியமானது. சில சூழ்நிலைகள் உங்களது முயற்சியை கைவிட நிர்ப்பந்தித்தால் பிடிவாதத்தை விட்டுவிடாதீர்கள். வெற்றியாளர்கள் யாரும் சாதாரணமாக அதனை அடையவில்லை. உங்களை விட பன்மடங்கு சூழ்நிலைகளை அவர்கள் எதிர்கொண்டிருக்கலாம். எனவே, இலக்கில் பிடிவதாக இருந்தால் எதிர்மறை விஷயங்கள் பறந்து ஓடிவிடும்.
நேர்மறை மனப்பான்மை:
நீங்கள் எதிர்கொள்ளும் முயற்சியில் சில தடைகள் ஏற்பட்டாலும் அதனை நேர்மறையாக எடுத்துக் கொள்ளும் மனப்பக்குவம் வேண்டும். நேர்மறையான சிந்தனை உங்களுடைய வாழ்க்கையை மாற்றும் தன்மை கொண்டுள்ளது.
நீங்கள் ஒரு விஷயத்தை எப்படி அணுகுகிறீர்கள் என்பதன் தாக்கம் உங்களிடம் மட்டுமின்றி உங்களைச் சுற்றியுள்ள மற்றவர்களிடமும் நேர்மறைத் தாக்கத்தை ஏற்படுத்தும். மாறாக எதிர்மறையான அணுகுமுறை உங்களுடைய உடலையும் மனதையும் பாதிக்கும்.
வெற்றி நிச்சயம்:
சிலரது வெற்றி தள்ளிப் போவதற்கு சூழ்நிலைகள் காரணமாக இருக்கலாம். உங்களுக்கான தகுதிகளும் வாய்ப்புகளும் வசதிகளும் குறைவாக இருக்கலாம். ஆனால் தொடர்ந்து முயற்சித்தால் வெற்றி நிச்சயம். எவ்வளவு தோல்விகள் வந்தாலும் வெற்றியை நோக்கி பயணப்பட்டுக் கொண்டே இருங்கள். ஒருநாள் நீங்கள் அடைய வேண்டிய இலக்கை அடைவீர்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.