முந்தி இருப்பச் செயல் - 51: உன்னை அறியும் திறன்
உன்னை அறிந்தால்... நீ உன்னை அறிந்தால் உலகத்தில் போராடலாம்.உயர்ந்தாலும் தாழ்ந்தாலும் தலைவணங்காமல் நீ வாழலாம்.
உன்னை அறிந்தால்... நீ உன்னை அறிந்தால் உலகத்தில் போராடலாம்.
உயர்ந்தாலும் தாழ்ந்தாலும் தலைவணங்காமல் நீ வாழலாம்.
என்று கவிஞர் கண்ணதாசன் சொல்வதிலுள்ள மையக் கருத்து வாழ்வில் உயர்வதும், தாழ்வதும் குறித்ததல்ல; மாறாக, உலகத்தில் போராடுவதற்கும், தலை வணங்காமல் வாழ்வதற்குமான அடிப்படை பற்றியது.
நீங்கள் யார்? உங்களுக்கு என்ன வேண்டும்? வாழ்வில் எந்த நோக்கம் நிறைவேறுவதற்காக நீங்கள் எதைச் செய்யவும், எதை வேண்டுமானாலும் எதிர்கொள்ளவும் அணியமாக இருக்கிறீர்கள்?
இன்னோரன்ன கேள்விகளுக்குசரியான, தவறான பதில்கள் என்றெல்லாம் எவையும் கிடையாது. ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமாக இந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்வோம். அதுவும் தவறல்ல.
தன்னைத் தானும் அறிந்து கொண்டு
ஊருக்கும் சொல்பவர்கள்
தலைவர்கள் ஆவதில்லையா?
என்று கேட்கிறார் கவிஞர்.
மகாத்மா காந்தி, விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன், மாபாதகன் ஹிட்லர் எனும் மூவரை மட்டும் எடுத்துக் கொள்வோம். மேற்குறிப்பிட்ட கேள்விகளுக்கு இவர்களிடம் தெளிவான, விரிவான, உறுதியான பதில்கள் இருந்தனவா, இல்லையா?
ஒரு சிறு பயிற்சியை மேற்கொள்வோம்.கண்களை மூடிக்கொண்டு உங்களிலிருந்து தொடங்கி, ஒரு பறவைபோல மேல்நோக்கிச் சென்றவாறே அடுத்தடுத்த நிலைகளைக் கண்ணுறுங்கள்; நீங்கள், உங்கள் வீடு, தெரு, ஊர், வட்டம், மாவட்டம், மாநிலம், நாடு, கண்டம், பூமி, பிற கோள்கள், சூரிய மண்டலம், பிற மண்டலங்கள், அளவிட முடியாத அண்டசராசரம் என்று விரிந்து பரந்து பார்த்தவாறே செல்லுங்கள்.
சற்றே நில்லுங்கள். சுற்றிலும் பாருங்கள்.
இனி, மேலே பறந்துபோனதைப் போலவே, மெதுவாகத் திரும்பி கீழே வாருங்கள். அண்டசராசரம், பிற மண்டலங்கள், சூரிய மண்டலம், பல்வேறு கோள்கள், பூமி, ஆசியக் கண்டம், நாடு, மாநிலம், மாவட்டம், வட்டம், ஊர், தெரு, உங்கள் வீடு, நீங்கள்.
இப்போது என்ன உணர்கிறீர்கள்? இந்தப் பேரண்டம் எவ்வளவு அளப்பரியதொரு பிரம்மாண்டம்; அதன் மிகச் சிறியதொரு துகளான நான் எம்மாத்திரம் என்று சிலர் உணரலாம். வேறு சிலரோ, இந்த அற்புதமான அண்டசராசரத்தையே அளக்கும், அவதானிக்கும் "நான்' எவ்வளவு பெரியவன் என்று நினைக்கலாம்.
கடவுள்- மனிதன் எனும் ஒப்பீட்டிற்காக சுவாமி விவேகானந்தர் சொன்ன ஓர் அழகான உவமையின் உதவியோடு சிந்திப்போம். இந்த அண்டசராசரம் என்பது எல்லாப் புள்ளிகளிலும் தன் மையப்புள்ளியை அமைத்துக் கொண்ட, சுற்றளவே இல்லாத ஒரு பிரமாண்டமான வட்டம். அதே போல, தனிமனிதனாகிய நான், என்னை மட்டுமே மையப் புள்ளியாகக் கொண்ட, சுற்றளவே இல்லாத இன்னொரு பிரமாண்டமான வட்டம்.
என்னுடைய வட்டம், உங்களுடைய வட்டம், அவர்களுடைய வட்டங்கள் எல்லாமே ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்துதான் கிடக்கின்றன. நம்மில் ஒருவர் உயர்ந்தால், இந்த அண்டமே அதே அளவு உயர்கிறது. நம்மில் ஒருவர் தாழ்ந்தால், இந்த அண்டமே அதே அளவு தாழ்கிறது.
இந்த உயர்ச்சியும், தாழ்ச்சியும் உங்களின் சொத்து, பணம், பட்டம், பதவி, புகழ், அதிகாரம் குறித்ததல்ல. மாறாக, உங்களின் ஆற்றல் குறித்தது. ஏராளமான பணத்தை ஈட்டினால், பெரும் பதவிகளை அடைந்தால், இந்த ஆற்றலைப் பெற்றுவிடலாம் என்று பலரும் தப்புக் கணக்குப் போடுகிறோம்.
உங்களின் தனிப்பட்ட ஆற்றல் (பெர்சனல் பவர்)
அகன்று விரிந்தது; அளவிடப்பட முடியாதது; அபாரமானது. மகாத்மா காந்தி, விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன், மாபாதகன் ஹிட்லர் போன்றோர் மென்முறை, நெகிழ்முறை, வன்முறை எனும் வழிமுறைகளின் அடையாளங்களான ஆற்றல்கள். காந்தியிடம் எவ்வளவு பணம் இருந்தது? பிரபாகரன் எந்தப் பதவியில் கோலோச்சினார்? ஆனால் ஹிட்லரிடம் எல்லாமும் ஏராளமாக இருந்தனவே?
முதலிருவர் தனிப்பட்ட ஆற்றலின் நேர்மறை எடுத்துக்காட்டுகள் என்றால், ஹிட்லர் ஓர் எதிர்மறை எடுத்துக்காட்டு. இம்மாதிரியான தனிப்பட்ட ஆற்றல் சும்மா கிடந்து பெறுவதல்ல. மாறாக, பெரும் சிரத்தையெடுத்துத் தேடிக் கொள்வது. எப்படி புடம்போடப்படாத தங்கமும், சுடப்படாத சுண்ணாம்பும், வேகவைக்கப்படாத செங்கல்லும் ஒரு பொருட்டாவதில்லையோ, அதே போலவே துன்பங்களும், துயரங்களும், வலிகளும், வேதனைகளும் அனுபவிக்காத மனித மனமும் ஒரு பொருட்டாவதில்லை.
ஹென்றி வேர்ட்ஸ்வொர்த் லாங்ஃபெல்லோ (1807 - 1882) எனும் அமெரிக்கக் கவிஞர் சுருக்கமாக, நறுக்கென்று சொல்கிறார்:
சிறந்தோர் எட்டிப்பிடித்த சிகரங்கள் எல்லாம்
திடீரென உயர்ந்து பற்றிக் கொண்டவை அல்ல,
அவர்தம் தோழரெலாம் கண்ணுறங்கிய நேரம்
இரவெல்லாம் முக்கிமுனகி ஏறிப் பிடித்தவை!
இதைத்தான் இன்னும் குறுக்கி,
முயற்சி திருவினை ஆக்கும் முயற்றின்மை
இன்மை புகுத்தி விடும்
என்றியம்புகிறது வள்ளுவம்.
நான் அமெரிக்காவுக்குப் படிக்கச் சென்றபோது, என்னுடைய பல்கலைக்கழகம், வெளிநாட்டு மாணவர்கள் தங்களின் நல்லவை அல்லவைகளைப் பகிர்ந்து கொள்ளவும், குடும்ப அன்பையும், ஆதரவையும் பெற்று மகிழவுமாக, ஓர் உள்ளூர் குடும்பத்தோடு இணைத்து விட்டது. என்னுடையப் பெரும் பாக்கியமாக டொனால்ட் கிரேமர், ஜீன் கிரேமர் எனும் அற்புதமான அமெரிக்கப் பெற்றோர் எனக்கு வாய்த்தார்கள்.
அவர்களின் வீட்டுக்கு நான் செல்லும் போதெல்லாம், அப்பா டொனால்ட் கிரேமரும் நானும் அமெரிக்க கால்பந்துப் போட்டிகளைத் தொலைக்காட்சியில் கண்டு களிப்போம். குறிப்பிட்ட சில அணிகளை மட்டுமே தொடர்ந்து ஆதரிக்காமல், ஒவ்வொரு போட்டியிலும் வெவ்வேறு அணிகளை அவர் ஆதரிப்பதைக் கவனித்தேன்.
என்னுடைய கல்வி, எழுத்து, செயல்பாடுகள் எல்லாவற்றிலும் என்னை வெகுவாக ஊக்குவித்த அவர், கால்பந்து ரசனையில் மட்டும் அப்படிச் செய்யவில்லையே என்கிற ஆதங்கத்தோடு, அவரிடம் விளக்கம் கேட்டேன். அவர் சொன்னார்: ""நான் எப்போதும் பின்தங்கியிருப்பவர்களையே பெரிதும் ஆதரிக்கிறேன் (ஐ ஆல்வேஸ் சப்போர்ட் தி அண்டர்டாக்ஸ்). இந்த வாழ்வில் எனக்கு என்ன வேண்டும் என்பதை நான் ஆழமாக உணர்ந்த தருணங்களுள் ஒன்றாக அந்த உரையாடல் அமைந்தது.
கவிஞர் புலமைப்பித்தன் கேட்கும் சில கேள்வி
களைப் பரிசீலியுங்கள்:
நான் யார்? நான் யார்? நீ யார்?
உறவார் பகையார் உண்மையை உணரார் உனக்கே நீ யாரோ ?
வருவார் இருப்பார் போவார் நிலையாய் வாழ்வார் யார் யாரோ ?
அடிப்பார் வலியார் துடிப்பார் மெலியார் தடுப்பார் யார் யாரோ ?
எடுப்பார் சிரிப்பார் இழப்பார் அழுவார் எதிர்ப்பார் யார் யாரோ ?
பிணியார் வருவார் மருந்தார் தருவார் பிழைப்பார் யார் யாரோ?
உயிரார் பறப்பார் உடலார் கிடப்பார் துணை யார் வருவாரோ?
நிரந்தரமற்ற இவ்வுலக வாழ்வில் உறவையும், பகையையும் உணர்ந்து, அடிப்பாரைத் தடுப்பதற்கும், எடுப்பாரைஎதிர்ப்பதற்கும், பிழைப்பாருக்கு மருந்து தருவதற்கும் அணியமாக இருக்கிறீர்களா?
நீங்கள் யார், உங்களுக்கு என்ன வேண்டும் எனும் இரண்டு மிக முக்கியமான கேள்விகளுக்கு விடை தேடிவிட்டீர்கள் என்றால், அடுத்து வரும் கேள்விகள் ஒப்பீட்டளவில் எளிதானவை.
இனி உங்களுக்கு வேண்டியது முற்றும் துறந்தார் என்போர் போற்றி நின்ற முறைகளையே புதைத்தழித்த புரட்சிக்காரன் விவேகானந்தன் அருளிய 4-பி ஃபார்முலாதான்: தூய்மை (பியூரிட்டி), பொறுமை (பேஷன்ஸ்), விடாமுயற்சி (பெர்செவரென்ஸ்), அன்பு (ப்ரேம).
உங்கள் நோக்கங்கள், எண்ணங்கள், உணர்வுகள், வார்த்தைகள், செயல்பாடுகள் அனைத்தும் தூய்மையானவையாக இருக்கட்டும்.
ரோம் மாநகரம் ஒரு நாளில் கட்டப்பட்டதல்ல என்பதறிந்து பொறுமையாகச் செயல்படுங்கள். உங்களின் கனவுகளை, ஆசைகளை, நோக்கங்களை ஒருக்காலும் விட்டுவிடாதீர்கள், உடும்புப்பிடி போல உறுதியாகப் பற்றிக்கொள்ளுங்கள்.
எல்லாவற்றுக்கும் மேலாக,
படிச்சவன் சூதும் பாவமும் பண்ணினால்,
போவான், போவான், ஐயோவென்று போவான்!
(பாரதியார்) எனும் ஆபத்து எப்போதும் தொக்கி நிற்பதால், அன்பையே அடிப்படையாகக் கொண்டியங்குங்கள். இனி, நினைத்ததை முடிப்பேன் எனும் தன்னம்பிக்கை உங்களுக்கு தாராளமாய் வேண்டும். வால்டர் டி. விண்டில் எனும் பத்தொன்பதாம் நூற்றாண்டின் மர்மமாகவே இருக்கும் கவிஞர் சொல்வதே உங்கள் மந்திரமாகட்டும்:
பெரிதாய் சிந்தியுங்கள்,
உங்கள் செயல்களெலாம் வளரும்;
சிறிதாய் சிந்தித்தால்,
நீங்கள் பின்னால் வீழ்ந்துவிடுவீர்கள்.
உங்களால் முடியும் என்று உறுதியாய் நினையுங்கள்,
முடிப்பீர்கள்;
எல்லாமே உங்கள் மனநிலையில்தான் இருக்கிறது.
(தொடரும்)
கட்டுரையாளர்: சுற்றுச்சூழல் ஆர்வலர். தொடர்புக்கு: spuk2020@hotmail.com