கேட்கிறதுக்கு மட்டும் பதில் சொல்லணும்!
நண்பர் ஒருவர் அன்பளிப்பாக கொடுத்த புத்தகம் அது. வெ.இறையன்பு எழுதியதில் மிக முக்கியமான புத்தகம். அவரே கேள்வியை உருவாக்கி அவரே பதில் எழுதிய "கேள்வியும் நானே பதிலும் நானே!'.
வலுவிழந்த மனிதர்களை சரி செய்வதை விட, வலுவான குழந்தைகளை உருவாக்குவது எளிதானது.
- ஃபிரடெரிக் டக்ளஸ்
நண்பர் ஒருவர் அன்பளிப்பாக கொடுத்த புத்தகம் அது. வெ.இறையன்பு எழுதியதில் மிக முக்கியமான புத்தகம். அவரே கேள்வியை உருவாக்கி அவரே பதில் எழுதிய "கேள்வியும் நானே பதிலும் நானே!'. இந்தப் புத்தகத்தில் அப்படி என்ன இருக்கிறது? கேட்கப்படும் கேள்விகளுக்கு சுற்றி வளைத்து, நீட்டி முழக்கி, காதை சுற்றி மூக்கை தொடுகிறமாதிரியான பதில் சொல்லாமல்,எப்படி நறுக்கு தெறித்தாற்போல பதில் சொல்வது என்பதற்கு இப்புத்தகம் ஒரு சான்று.
போட்டித்தேர்வுகளில் வெற்றி பெற்று, நேர்முகத்தேர்வில் கேட்கப்படும் கேள்விகளுக்கு நேரடியாகப் பதில் சொல்லத் தவறியதாலேயே இறுதி வெற்றி வாய்ப்பையும், பணி நியமனத்தையும் இழந்த மாணவர்கள் ஏராளம். அப்படி நாமும் தடுமாறி விடுவோமோ என்று தயக்கம் இருக்கின்ற மாணவர்கள் யாவரும்அவசியம் ஒரு முறையேனும் படிக்க வேண்டிய புத்தகம் இது.
அப்புத்தகத்தில் வந்திருக்கும் கேள்விகளும், அதற்கான முத்தான பதில்களும், ஒரு சில மட்டும் மாதிரிக்காக, இதோ:
எத்தனை முறை கேட்டாலும் திகட்டாத பாடல் எது?
நாட்டுப்பண்ணும்! தமிழ்த்தாய் வாழ்த்தும் !
எது சிறந்த உதவி?
செய்த உதவியை மற்றவர்களுக்குச் சொல்லாமல் இருப்பது!
நமக்கு நாமே எதிரியாவதுஎப்போது?
உணர்ச்சிவசப்பட்டு வார்த்தைகளைக் கொட்டிவிடும் போது, நாம் செய்த நல்ல செயல்கள் எல்லாம்காற்றில் பறந்து போய்விடுகின்றன. அப்போது நமக்கு நாமே எதிரியாகிவிடுவோம்.
மனிதன் எப்போது ஞானம் அடைகிறான்?
தான் ஒன்றுமில்லை என்று உணர்கிற போது!
நன்றாகப் பேச எதைக் கற்றுக்கொள்ள வேண்டும்?
மெளனத்தை
அன்பு முக்கியமா... அறம்முக்கியமா?
அறத்துக்கும் அன்பே ஆதாரம்!
நண்பர்களுக்கும், சந்தர்ப்பவாதிகளுக்கும் என்ன வேறுபாடு?
நெருக்கடி வந்தால் அதை உதவி செய்யும் சந்தர்ப்பமாகக் கருதுபவர்கள் நண்பர்கள். விட்டுவிட்டு ஓடுபவர்கள் சந்தர்ப்பவாதிகள்.
சோம்பலின் உச்சம் எது?
கையில் இருக்கும் மிட்டாயை வாயில் போட கொட்டாவி வருவதற்காகக் காத்திருப்பது.
ஒருவரை புண்படுத்தாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?
சில உண்மைகளைப் பேசாமல் இருந்தால் போதும்!
எந்தப் பஞ்சம் கொடியது?
இயற்கை தவறுவதால் ஏற்படும் பஞ்சத்தை விட... இருப்பவர்கள் பதுக்குவதால் உண்டாகும் பஞ்சம்கொடியது.
யாருடைய மரணம் அழகு?
இறந்த பிறகும் வாழ்பவர்களின்மரணம்!
கோபத்திலும் யார் அழகாக இருப்பார்கள்?
கோபம் வருகிற போது உலக அழகிகள் கூட பொலிவை இழந்துவிடுவார்கள். ஆனால், கோபத்திலும் அழகாக இருப்பவர்கள் குழந்தைகள்.
இவை எல்லாம் சரியான பதில்தான் என்று நாம் ஏற்றுக்கொள்கிறோமா, இல்லையா என்பது இங்கு முக்கியமல்ல. ஆனால், எல்லாமே எவ்வளவு தெளிவான, நேரடியான, சுருக்கமான பதில்கள் பாருங்கள்.
மத்திய குடிமைப்பணி தேர்வுகளில் முதல்நிலை மற்றும் முதன்மை தேர்வுகளில் தேர்ச்சி பெற்று நேர்முகத் தேர்விற்கு சென்ற ஒருவரிடம் கேட்கப்பட்ட கேள்வி: ""உங்களது கல்வித்தகுதி என்ன?''
""அனைத்து விவரங்களும் நான் கொடுத்த சான்றிதழ்களில் இருக்கிறதே!'' என்று தான் ஏற்கனவே ஐ.ஏ.எஸ்., அதிகாரியாகிவிட்டது போல பதில் சொன்னார் போட்டியாளர்.
பதவியில், அதிகாரத்தில் இருப்பவராக இருந்தாலும் கூட, இப்படி ஒரு பதிலைச் சொல்லலாமா?
மற்றொரு மாணவரிடம், ""உங்களது குடும்ப பின்னணியைப் பற்றி கூறுங்கள்?'' என்று கேட்கப்பட்டதற்கு, அவர் தனது தாத்தன், முப்பாட்டன் காலத்திலிருந்து ஆரம்பித்து, இல்லாத சாதி பெருமைகளை யெல்லாம் பேசி, அவர்கள் ஊரில் எப்படி அனைத்து மக்களும் அவர்களது குடும்பத்தைப் பார்த்து பயப்படுவார்கள் என்று சொல்லி முடித்திருக்கிறார். தன் குடும்பத்தை ஊரார் மதிப்பது ஒருவருக்கு பெருமை; பயப்படுவது எப்படி பெருமையாகும்? பிரபலம் என்பது வேறு; புகழ் என்பது வேறு என்பது நமது சிவில் சர்வீஸ் தம்பிக்கு தெரியவில்லை.
மத்திய குடிமைப்பணி மற்றும் ஏனைய உயர் பதவிகளுக்கான நேர்காணலின் போது, பெரும்பாலும் ஒரு போட்டியாளர் அல்லது மாணவருக்கான நேர்காணல் நேரம் நீடித்துக் கொண்டே போகிறது என்றால், அம்மாணவர் சரியான பதில்களை அறிவுச்செறிவோடு தெளிவாக சொல்லிக்கொண்டிருக்கிறார் என்று புரிந்து கொள்ள வேண்டும். அதே நேரம், உள்ளே சென்ற சிறிது நேரத்திலோ, சென்ற வேகத்தில் உடனடியாகவோ ஒரு போட்டியாளர் நேர்காணல் அறையைவிட்டு வெளியே வருகிறார் என்றால், அவர் உளறுவதை, பிதற்றுவதை, தெளிவில்லாமல் பேசுவதை தேர்வர்கள் கண்டுபிடித்துவிட்டார்கள்; அப்படி கண்டுபிடித்ததை வெளிப்படுத்திக்கொள்ளாமல் மாணவரின் மனம் கோணாதவாறு அன்பாக கதவினை காட்டி போய்வரச் சொல்லிவிடுகிறார்கள்.
மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆர். நடித்த "சக்கரவர்த்தி திருமகள்' என்கிற படத்தில் பாடலாகவும், சிவாஜி அவர்கள் நடித்த "திருவிளையாடல்' என்கிற படத்தில் வசனமாகவும் "கேள்வி - பதில்' படலம் ஒன்று அரங்கேறும். இன்றைய இளைஞர்கள் அனைவரும், தங்களுடைய நேரத்தை ஒதுக்கி அவற்றைப் பார்ப்பது எந்தவிதத்திலும் வெட்டி வேலையாக அமைந்துவிடாது.
நேர்காணல்களில் நம்மிடம் கேட்கப்படும் கேள்விகளுக்கு நமக்கு தெரிந்ததையெல்லாம் பேசுவதை விட, தேவையானதை தெளிவாகப் பேசுவதே நமக்கு வெற்றியைத் தேடித் தரும்.
என்ன... நமது பதில், எப்போதுமே தெரிந்ததா... தேவையானதா என்பதை தெளிவாக முடிவு செய்துவீட்டீர்களா?