முகப்பு
இளைஞர்மணி

மாணவர்களின் செயற்கைக்கோள்!

கடந்த  பிப்ரவரி  28-ஆம் தேதி ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி  சி - 51 ராக்கெட்டை இஸ்ரோ  விண்ணில்  ஏவியது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:41 PM
பகிர்:


கடந்த பிப்ரவரி 28-ஆம் தேதி ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி சி - 51 ராக்கெட்டை இஸ்ரோ விண்ணில் ஏவியது. அந்த ராக்கெட் பல்வேறு வகையான 19 செயற்கைக்கோள்களை சுமந்து சென்றது. அந்த 19 செயற்கைக்கோளில் ஒன்று, கோலை சின்னியம் பாளையத்தைச் சேர்ந்த ஸ்ரீ சக்தி இன்ஸ்டிடியூட் ஆஃப் இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜிஸ் -இல் பயிலும் மாணவர்கள் உருவாக்கியதாகும்.

இந்த செயற்கைக்கோளை உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் எப்படி ஏற்பட்டது? இதனால் என்ன பயன்? மாணவர்களை செயற்கைக்கோள் செய்யும்
அளவுக்கு எப்படி உருவாக்கினீர்கள்? என்ற கேள்விகளுடன் அக்கல்லூரியின் தலைவர் எஸ்.தங்கவேலுவை அணுகினோம். அவர் கூறியதிலிருந்து...

""1000 ஆண்டுகளுக்கு முன்பு நம்நாடு, குறிப்பாக தமிழகம் எல்லாவித தொழில்நுட்பங்களிலும் முதன்மையானதாக இருந்திருக்கிறது. இரும்பு, விவசாயம், நெசவு என எல்லா தொழில் நுட்பங்களிலும் உலகிலேயே முதன்மையானதாக நம்நாடு இருந்திருக்கிறது. உலக உற்பத்தியில் மூன்றில் ஒரு பங்கு இந்தியாவுடையதாக இருந்தது. அதில் தமிழகத்தின், கேரளாவின் பங்கு 75 சதவீதமாக இருந்தது. கிரீஸ், ரோம் ஆகிய நாடுகளில் இருந்து வந்து நம்நாட்டில் உற்பத்தியான மிளகு, ஏலக்காய் போன்றவற்றை வாங்கிச் சென்று இருக்கிறார்கள்.

அந்நியப் படையெடுப்புகள், ஆக்கிரமிப்புகள் உள்பட பல்வேறு காரணங்களினால் நாம் கீழே போய்விட்டோம். இப்போதும் கூட உலக அளவில் நம் இளைஞர்கள் பெரிய பெரிய நிறுவனங்களில் பெரிய பதவிகளில் இருக்கிறார்கள். இந்தியர்கள் அறிவாளிகள் என்ற எண்ணம் உலக அளவில் ஏற்பட்டுள்ளது. எனினும் மென்பொருள் துறையில் குறிப்பிடத்தக்க எதையும் நாம் புதிதாக உருவாக்கவில்லை. சேவைத்துறையில் நமது இளைஞர்கள் சிறப்பாகப் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள். நாம் இழந்துவிட்ட பெருமைகளை மீட்க வேண்டும்; உலக அளவில் நாம் கண்டுபிடிப்புகளில் முதலிடத்தில் இருக்க வேண்டும் என்ற அடிப்படையில் உருவானதுதான் செயற்கைக்கோள் தயாரிக்கும் திட்டம்.

2010 - காலகட்டத்தில் நமது இளைஞர்களுக்கு விண்வெளி ஆராய்ச்சியில் பெரிய ஆர்வம் ஏற்பட்டது. விண் வெளி ஆராய்ச்சி, விண்கோள் ஏவுதல் ஆகியவற்றில் பெரிய நாடுகளுக்குப் போட்டியாக நாம் வளர்ந்திருக்கிறோம். விண்வெளியில் செயற்கைக்கோள்களை, ஏவுகணைகளை நாம்தான் அதிகமாக அனுப்பியிருக்கிறோம். பிறநாடுகளின் செயற்கைக்கோள்களை இஸ்ரோவின் மூலமாக அனுப்பி உதவுகிறோம்.

சமீபத்தில் இஸ்ரேலின் செயற்கைக் கோளை- பிரேசிலின் செயற்கைக் கோளை- இஸ்ரோவிலிருந்து நாம்தான் ஏவியிருக்கிறோம். இத்துறையில் முதலிடத்தில் இருப்பதை நாம் தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்ற அடிப்படையில் எங்கள் கல்லூரியில் பொறியியல் பயிலும் மாணவர்களை ஊக்குவிக்கும் முயற்சி 2010- இலேயே தொடங்கிவிட்டது.

2010-இல் அண்ணா பல்கலைக்கழகம் ஒரு செயற்கைக்கோளை அனுப்பியது. அதற்கு இஸ்ரோ நிதி உதவி அளித்தது உள்பட பலவிதங்களில் உதவியது. அண்ணா பல்கலைக்கழகம் போன்ற பெரிய பல்கலைக்கழகங்கள் செய்யும்போது நம்மைப் போன்ற தனியார் பொறியியல் கல்லூரியால் ஏன் முடியாது என்ற எண்ணம் எங்களுக்குத் தோன்றியது. செயற்கைக்கோள் உருவாக்குவதில் மாணவர்களை இறக்கிவிட்டதற்கு இது இன்னொரு காரணம்.

பொறியியல் பிரிவுகளில் இரண்டாவது, மூன்றாவது ஆண்டு படிக்கும் மாணவர்கள் சிலரைத் தேர்ந்தெடுத்து முயற்சியில் இறங்கினோம். 2015 வாக்கில் ஒரு செயற்கைக் கோளை உருவாக்கினோம். அது 42 கிலோ எடை உள்ளதாக பெரிய அளவில் இருந்தது.

அந்தச் செயற்கைக்கோள் இயங்கத் தேவையான சூரிய ஒளித் தகடுகள், செயற்கைக்கோளிலேயே பொருத்தப்பட்டிருக்கும். அதன் எடை 12 கிலோ இருந்தது. அப்படியிருந்தும் செயற்கைக் கோளை சுற்ற வைக்கக் கூடிய போதுமான ஆற்றல் அந்த சூரிய ஒளித் தகடுகளுக்கு இல்லை. அன்றைக்கு வளர்ந்திருந்த தொழில்நுட்பம் அவ்வளவுதான். போதுமான மின்னாற்றல் செயற்கைக் கோளுக்குத் தருவதற்கு செயற்கைக்கோளின் எடை அளவுக்கு சூரிய ஒளித் தகடுகளின் எடையும் இருக்க வேண்டிய தேவை இருந்தது.

மேலும் தனியார் கல்லூரிகளோ, நிறுவனங்களோ செயற்கைக்கோளை அனுப்பவேண்டும் என்றால் அதற்கு அப்போது இஸ்ரோ கட்டணம் வசூலித்தது. அதுஅதிகமாக இருந்தது. அதனால் எங்களுடைய முயற்சிகளைத் தொடர முடியவில்லை.

2015-16 இல் மயில்சாமி அண்ணாதுரை திட்ட இயக்குநராக இருந்தார். ""சிறிய அளவில் செயற்கைக் கோள் செய்யுங்கள். நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துங்கள். சிறிய அளவில் சோலார் பேனல்கள் வந்துவிட்டன. தேவைப்பட்டால் அதை இறக்குமதி செய்து பயன்படுத்துங்கள்'' என்று ஆலோசனை சொன்னார்.

அவருடைய ஆலோசனையின்படி, 2019 இல் 1.5 கிலோ எடையுள்ள சிறிய செயற்கைக் கோளை எங்களுடைய மாணவர்கள் குழு தயாரித்துவிட்டது.

அதை விண்ணில் ஏவ இஸ்ரோவை அணுகினோம். காத்திருக்கச் சொன்னார்கள்.

"தி இந்தியன் நேஷனல் ஸ்பேஸ் புரமோஷன் அண்ட் ஆதரைசேஷன் சென்டர் (இன்- ஸ்பேஸ்)' என்ற அமைப்பு 2020 ஆம் ஆண்டு ஜூன் மாதம் உருவாக்கப்பட்டது. அதற்குப் பிறகு பள்ளிகள், கல்லூரிகள் அனுப்பும் செயற்கைக்கோளை இஸ்ரோ மூலமாக இலவசமாக அனுப்பலாம் என்றார்கள்.
நாங்கள் தயாரித்து வைத்திருந்த 1.5 கிலோ எடை உள்ள செயற்கைக்கோளை அரை கிலோவாக குறைக்க நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தும்படி சொன்னார்கள். அதற்குப் பின்பு 9 மாத காலத்தில் வெற்றிகரமாக செயற்கைக் கோளை உருவாக்கியிருக்கிறோம். இந்த செயற்கைக்கோளில் உள்ள சோலார் செல் மட்டும் ஜெர்மனியிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டது.

நாங்கள் உருவாக்கியுள்ள இந்த செயற்கைக் கோள் 460 கிராம் எடை உள்ளது.

பிப்ரவரி 28 ஆம் தேதி இஸ்ரோ மூலம் அனுப்பப்பட்ட எங்களுடைய செயற்கைக் கோள் பூமியிலிருந்து 510 கி.மீ. தொலைவில் பூமியை நன்கு வலம் வந்து கொண்டிருக்கிறது. எங்கள் கல்லூரி வளாகத்தில் ஜனவரி 28 - இல் தொடங்கப்பட்ட கிரவுண்ட் கண்ட்ரோல் ஸ்டேஷனுக்கு நாங்கள் அனுப்பிய செயற்கைக்கோளிலிருந்து சிக்னல்கள் வந்து கொண்டிருக்கின்றன.

நாங்கள் அனுப்பியுள்ள செயற்கைக்கோள், இதுபோன்று ஏற்கெனவே பல நாடுகளில் இருந்து அனுப்பப்பட்டுள்ள 300 செயற்கைக் கோள்களுடன் தகவல்களைப் பரிமாறிக் கொள்ளும்.

இன்டர்நெட் ஆஃப் திங்ஸ் என்று சொல்லக் கூடிய ஐஓடி செயல்பாடுகளை எங்கள் செயற்கைகோள் மூலம் இயக்க முடியும். கிணற்றில் மோட்டார் போடுவதை செல்போன் மூலம் தற்போது ஆன், ஆஃப் செய்யும் வசதி உள்ளது. இதே பணியை செயற்கைக்கோள் மூலமும் செய்ய முடியும். இணையத்தின் வழியாகச் செய்யக் கூடிய எல்லாச் செயல்களையும் இனிமேல் செயற்கைக் கோள்களால் செய்ய முடியும். இணைய இணைப்பைப் பெறுவதற்கு கேபிள் போட வேண்டும். வயர்லெஸ் இணைப்புத் தர வேண்டும். ஒரு நாட்டுக்கும் இன்னொரு நாட்டுக்கும் இடையே கடல் வழியாக கேபிள் கொண்டு வருவது அதிக செலவாகும். செல்போன் டவர் இல்லாமல், கேபிள் இல்லாமல் வருங்காலத்தில் செயற்கைக்கோள் மூலமாக பல கருவிகளை இயக்க முடியும்.

ஓட்டுநர் இல்லாத காரில் செயற்கைக்கோளிலிருந்து வருகின்ற சிக்னலை ரிசீவ் பண்ணுவதற்கான கருவியைப் பொருத்திவிடுவார்கள். அந்த சிக்னலைப் பெற்றுக் கொண்டு கார் இயங்கும். டிரைவர் இல்லாமல் டிராக்டர் ஓட்டலாம். இம்மாதிரியான செயல்களை எல்லாம் எங்கள் செயற்கைக்கோள் செய்கிறதா என்ற செயல்விளக்கம் பெறுவதற்காகத்தான் இந்த செயற்கைக்கோளை நாங்கள் அனுப்பி இருக்கிறோம். அதன் பிறகு இதுபோன்ற பல குறிப்பிட்ட வேலைகளைச் செய்வதற்கு உதவும்விதமாக இந்த செயற்கைக்கோளைப் பயன்படுத்த முடியும்'' என்றார்.

முழு கட்டுரையைப் படிக்க →