முகப்பு
இளைஞர்மணி

இராணுவ வீரர்களைப் பாதுகாக்கும் ரோபோ!

கல்லூரியில் படிக்கும்போது வளாக நேர்காணலில் வேலை கிடைத்துவிட்டால், படிக்கும் மாணவர்களும், அவர்களுடைய பெற்றோர்களும், நண்பர்களும் எவ்வளவு மகிழ்ச்சி அடைவார்கள்?

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:45 PM
பகிர்:

கல்லூரியில் படிக்கும்போது வளாக நேர்காணலில் வேலை கிடைத்துவிட்டால், படிக்கும் மாணவர்களும், அவர்களுடைய பெற்றோர்களும், நண்பர்களும் எவ்வளவு மகிழ்ச்சி அடைவார்கள்? ஆனால் அப்படிக் கிடைத்த வேலையை வேண்டாம் என்று ஒதுக்கியிருக்கிறார்கள், சென்னை காட்டாங்கொளத்தூர் எஸ்ஆர்எம் பல்கலைக்கழகத்தில் பயின்ற மூன்று மாணவர்கள். எம்.விக்னேஷ், விபாகர் செந்தில்குமார், கே.அபி விக்னேஷ் ஆகிய மூன்று மாணவர்கள்தாம் அவர்கள்.

கிடைத்த வேலைக்குச் செல்லாததால் ஏற்பட்ட பாதிப்புகளை அவர்கள் அனுபவித்துக் கொண்டிருந்தபோதிலும், அதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் உற்சாகமாக தங்கள் பணியில் மூழ்கியிருக்கிறார்கள்.

வேலைக்கே போகவில்லை; அப்படியென்ன பணி என்று கேட்கிறீர்களா?

எம்.விக்னேஷின் தலைமையிலான இந்த மாணவர்கள் குழு, "டாரஸ் ரோபோட்டிக்ஸ் பிரைவேட் லிமிடெட்' என்ற நிறுவனத்தை 2019 - இல் தொடங்கி நடத்தி வருகின்றனர். இவர்கள் எல்லை பாதுகாப்புப் படையினரின் பாதுகாப்புக்காக ஒரு ரோபோவை உருவாக்கி இருக்கின்றனர்.

இன்னும் சொல்லப் போனால், இத்தகைய ரோபோவை உருவாக்க வேண்டும் என்பதற்காகவே கிடைத்த வேலைக்குப் போகாமல் இருந்திருக்கின்றனர். இந்த வித்தியாசமான இளைஞர்களில் ஒருவரான எம்.விக்னேஷிடம் அவர்களுடைய கண்டுபிடிப்பைப் பற்றி பேசினோம்:

""நாங்கள் மூவரும் எஸ்ஆர்எம் பல்கலைக்கழகத்தில் பி.டெக் மெக்கட்ரானிக்ஸ் படிப்பில் 2012 -இல் சேர்ந்தோம். மெக்கானிகல், எலக்ட்ரானிக்ஸ் ஆகிய இருதுறைகளின் இணைப்பான இந்தப் படிப்பு, எங்களுக்கு வெறும் படிப்பாக மட்டும் இல்லை. நாங்கள் கற்றவற்றை செயல்முறையில் செய்து பார்க்கும் ஆர்வமுள்ளவர்களாக எப்போதும் இருந்தோம். நாங்களே சொந்தமாக ரோபோக்களைச் செய்து பார்க்கும் முயற்சிகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தோம். எங்கள் பி.டெக் படிப்பு முடியும் தறுவாயில் 2016 - ஆம் ஆண்டு செப்டம்பர் 18 -ஆம் தேதி ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள உரி ராணுவ முகாம் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். அதில் 2 வீரர்கள் கொல்லப்பட்டனர். பத்துக்கும் அதிகமானோர் படுகாயமடைந்தனர். இது எங்களை உலுக்கியது. உயிரைப் பணயம் வைத்து எல்லைப் பகுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடும் வீரர்களுக்கு உதவும் வகையில் ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணம் பிறந்தது.

இந்த எண்ணத்துடன் நாங்கள் தீவிரமாக ஆலோசித்துக் கொண்டிருந்தோம். அப்போதுதான் கேம்பஸ் இண்டர்வியூவில் எங்களுக்கு வேலை கிடைத்தது. கிடைத்த வேலைக்குப் போனால், நாங்கள் நினைத்ததைச் செய்ய முடியாது என்பதால் வேலைக்குப் போகவில்லை. இதனால் வீட்டில் கடும் எதிர்ப்பு. அன்றாட திட்டு வாங்குதல்களுக்கு நடுவே, எங்களுடைய லட்சியத்தைப் பற்றி நினைத்துக் கொண்டிருந்தோம். பல்கலைக்கழகத்தின் இயக்குநர் டி.முத்தமிழ்ச்செல்வனிடம் எங்கள் நிலையைத் தெரிவித்தோம். அவர் ஒரு மாற்று யோசனை சொன்னார்.

பல்கலைக்கழகத்தில் எம்பிஏ படிப்பில் சேர்ந்து பயிலச் சொன்னார். அதற்கு கல்வி உதவித் தொகை கிடைக்கும் என்பதால், வீட்டிலும் அதற்குத் தடையிருக்காது என்று சொன்னார். இந்த நேரத்தில்தான் எங்களுக்கு ஆவடி டேங்க் பேக்டரியின் தொடர்பு கிடைத்து.

பல்கலைக்கழகத்தின் மூலமாக பல ராணுவ அதிகாரிகளின் தொடர்புகள் கிடைத்தன. ராணுவ வீரர்களைப் பாதுகாக்க என்ன தேவை என்கிற விவரங்கள் கிடைத்தன. அவற்றை அடிப்படையாகக் கொண்டு எங்களுடைய ரோபோவை உருவாக்கத் தொடங்கினோம்.

கடந்த 2019 - இல் எங்களுடைய நிறுவனத்தைத் தொடங்கினோம். நாங்கள் உருவாக்கியுள்ள ரோபோ, ஓர் அன்மேன்டு கிரவுண்ட் வெஹிக்கிள் (யூஜிவி) ஆகும். அது இரண்டுவிதமான செயல்களைச் செய்கிறது. எல்லைப்புறப் பகுதிகளில் புதைத்து வைக்கப்பட்டிருக்கும் கண்ணி வெடிகள், மறைத்து வைக்கப்பட்டுள்ள வெடிகுண்டுகள், ஆபத்தான பொருள்களைக் கண்டுபிடிப்பது, அவற்றை வெளியே எடுத்து அந்த இடத்திலிருந்து அவற்றை நீக்குவது ஆகியவற்றை இந்த ரோபோ செய்யும். இதன் மூலம் எல்லைப் பாதுகாப்புப் பகுதியில் பணியாற்றும் வீரர்களைத் தாக்குதலில் இருந்து காப்பாற்ற முடியும்.

இரண்டாவதாக, எல்லைப்புறத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருப்பவர்கள் ஓரிடத்திலிருந்து இன்னோர் இடத்துக்குச் செல்லும்போது, சுமார் 60 கிலோ எடை முதல் 100 கிலோ எடை வரை உள்ள பொருள்களைத் தோளில் சுமந்து செல்ல வேண்டியிருக்கும். அதில் அவர்களுடைய உணவு, உடை, ஆயுதங்கள் இருக்கும். மலைப்பிரதேசமாக எல்லைப்புறம் இருந்தால், அவ்வளவு எடையைத் தூக்கிக் கொண்டு அவர்கள் நடப்பது சிரமம். நாங்கள் உருவாக்கியுள்ள இந்த ரோபோவில் வீரர்கள் சுமந்து செல்லும் பொருள்களை வைத்துவிட்டு அவர்கள் முன்னால் நடந்து சென்றால் போதும், ரோபோ அவர்களைப் பின்தொடரும். பத்து வீரர்களின் பொருள்களை இதில் வைக்கலாம்.

ராணுவ தளவாடங்களை இறக்குமதி செய்வதைக் குறைக்க வேண்டும் என்பது அரசின் நோக்கமாக உள்ளது. அதற்கு எங்களுடைய இந்த கண்டுபிடிப்பு உதவும்.

இந்த ரோபோவைத் தவிர, நாங்கள் ஓர் எலக்ட்ரிக் மோட்டாரை நாங்கள் உருவாக்கியிருக்கிறோம். தற்போது இந்த மோட்டார்கள் பிற நாடுகளில் இருந்து 95 சதவீதம் அளவுக்கு இறக்குமதி செய்யப்படுகின்றன. நாங்கள் தயாரித்துள்ள இந்த எலக்ட்ரிக் மோட்டார் சந்தையில் கிடைக்கும் பிற எலக்ட்ரிக் மோட்டார்களை விட 15 சதவீதம் அதிகச் செயல்திறன் உள்ளது. 10 சதவீதம் விலை மலிவானது. பிற எலக்ட்ரிக் மோட்டார்களின் விலையை விட 50 சதவீதம் குறைவானது.

நாங்கள் தயாரித்துள்ள அன்மேன்டு கிரவுண்ட் வெஹிக்கிள் இப்போது பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளது. எங்களுடைய முயற்சிக்குக் கிடைத்துள்ள இந்த அங்கீகாரம் எங்களை மகிழ்ச்சியடைய வைத்திருக்கிறது.
எங்களைப் போன்று, ஸ்டார்ட் அப் நிறுவனத்தைத் தொடங்க விரும்பும் இளைஞர்கள் எவ்வளவு நெருக்கடிகள் வந்தாலும் கலங்கிவிடாமல், தொடர்ந்து தங்களுடைய லட்சியத்தை அடைவதில் முனைப்பாக இருக்க வேண்டும். ஐந்து அல்லது ஆறு ஆண்டுகளுக்குப் பிறகுதான் எங்களுக்கு இந்த வெற்றி கிடைத்திருக்கிறது. நம்மைச் சுற்றியுள்ளவர்களின் ஏளனப் பேச்சு, பார்வையை எல்லாம் பொருட்படுத்தினால் இந்த வெற்றி சாத்தியமில்லை'' என்றார்.
 

முழு கட்டுரையைப் படிக்க →