கொஞ்சம் விறுவிறுப்பு... கொஞ்சம் சுறுசுறுப்பு!
"உங்களது காயங்களை ஞானமாக மாற்றுங்கள். இந்தக் கணத்தில் சிறந்ததைச்செய்வது, அடுத்த கணத்திற்கான சிறந்த இடத்தில் உங்களை வைக்கின்றது.
"உங்களது காயங்களை ஞானமாக மாற்றுங்கள். இந்தக் கணத்தில் சிறந்ததைச் செய்வது, அடுத்த கணத்திற்கான சிறந்த இடத்தில் உங்களை வைக்கின்றது.
- ஒப்ரா வின்ஃப்ரே
பிரபல பொதுத்துறை நிறுவனத்தில் உயர் அலுவலராகப் பணிபுரியும் நண்பரை சமீபத்தில் அவரது இல்லத்தில் சந்திக்க நேர்ந்தது. சென்ற வேலையை முடித்துவிட்டு, அவரிடமிருந்து விடைபெற்று வெளியேறியபோது வீட்டின் ஒரு மூலையில் பல வண்ணங்களில் விலையுர்ந்த காலணி வகைகள் பயன்பாடின்றி கிடப்பதை கண்டு, ""என்ன நண்பரே இப்படி இவ்வளவு பணத்தை காலணிகளாக மாற்றி பயன்படுத்தாமல் வீணடிக்கிறீங்களே?'' என்று நான் கேட்டேன்.
""என்னங்க... இயற்கை நமக்கு கொடுத்த கம்பீரமான மூளையையே நம்ம சரியாகப் பயன்படுத்தாம துருப்பிடிக்க விட்டுடுறோம். படிக்கணும்னு வாங்கிட்டு... இன்னும் படிக்காத விலையுர்ந்த புத்தகங்கள் அதோ... அந்த அறை முழுவதும் நிறைய கிடக்கு. நம் மூளை முழுசா செயல்படாம துருப்பிடிக்கிறதுக்கு முன்னால... தினந்தோறும்கொஞ்சமாவது வாசிக்கணும்'' என்றார்.
துருப்பிடித்து போகாத அளவிற்கு... நம் மூளையை தொடர்ந்து கொஞ்சமாவது பயன்படுத்துகிறவர்கள் நம்மில் எத்தனை பேர் இருக்கின்றோம்?
மொரீஷியஸ் தீவின் காடுகளில் ஒரு வகை மரத்தை தாவரவியல் நிபுணர்கள் ஆராய்ந்து வருகின்றனர். காரணம் உலகிலேயே இவ்வின மரங்கள் 13 மட்டுமே இருக்கின்றனவாம். அவற்றின் வயது 300 ஆண்டுகளைத் தாண்டிவிட்டது. இந்த மரங்கள் பூத்து குலுங்கியும், காய்கனிகளைத் தந்தும் அவை இனவிருத்தி அடையவில்லை. இதன் விதையை முளைக்க வைத்தும் அவை முளைக்கவில்லை. இது அறிவியல் மேதைகளுக்குப் புரியாத புதிராகவே இருந்து வந்தது. ஆகவேதான் இந்த ஆராய்ச்சி.
ஆராய்ச்சியின் முடிவில் அவர்கள் கண்டுபிடித்த உண்மை இதுதான்: 300ஆண்டுகளுக்கு முன் இந்த மொரீஷியஸ் தீவில் "டோடு' என்ற பறவையினங்கள் வாழ்ந்து வந்துள்ளன. சாம்பல் நிறம் கலந்த வெண்மை நிறத்தில் கொழு கொழுவென்று அவை காணப்பட்டன. அப்பறவைகள் இந்த மரத்தின் பழங்களை வயிறு நிறைய சாப்பிட்டு அந்த மரத்தின் அடியிலேயே படுத்து உறங்கும்.
ஆள் நடமாட்டமில்லாத அக்காடுகளில் அவை நிம்மதியாக வாழ்ந்தன. எந்த தொந்தரவுமின்றி வயிறு நிறைய உணவும் கிடைப்பதால், அவை பறக்க முயற்சித்ததேயில்லை. உணவிற்காக வேறு இடங்களுக்குப் பறந்து செல்ல வேண்டிய அவசியமும் இருந்ததுமில்லை.
ஒரு நாள் போர்ச்சுகீசிய கப்பல் ஒன்று அத்தீவிற்குள் நுழைந்தது. அதைத் தொடர்ந்து படிப்படியாக பல கப்பல்கள் வரத்தொடங்கின. அவற்றிலிருந்தோர், பறக்கவும் தெரியாத, ஓடவும் தெரியாத கொழு கொழு "டோடு'க்களை எளிதாக வேட்டையாடினர். வெகு சீக்கிரத்தில் அந்தப் பறவை இனம் அழிந்து போனது. சரி... இப்பறவைக்கும் அம்மரத்தின் இனவிருத்திக்கும் என்ன சம்பந்தம் என்று கேட்கிறீர்களா? ஆம், உண்டு! இம்மரத்தின் பழங்களை உண்ணும் "டோடு' பறவைகளின் உணவுப் பாதையைக் கடந்து சென்ற விதை மட்டுமே மண்ணில் விழுந்து முளைக்கும். அதன் உணவுப் பாதையின் ஊக்கிகள் அவ்விதை மீது செயல்படாவிட்டால் புதிய செடிகளை உருவாக்க முடியாது என்பதைக் கண்டறிந்தனர். சிறகுகளிருந்தும், பறக்க தெரியாத பறவைகள் தன் இனத்தை இழந்ததோடு, பிறருக்கும் நன்மை பயக்க முடியாமல் போய் விட்டது. இதற்கு காரணம், இந்த "டோடு' பறவைகள் தங்களது தேவைகளுக்காக எந்தவித முயற்சியும், மெனக்கெடலும் இல்லாமலும், அந்நியர்கள் வரும்வரை ஆபத்து என்றால் என்னவென்றே தெரியாமலேயே வாழ்ந்துவிட்டன. அதனாலேயே தங்களது வாழ்வையும், வம்சத்தையும் இழந்துவிட்டன.
கோழிகள் எப்போதும் குனிந்தபடியே தனது உணவாகிய புழுக்களையும் விதைகளையும் பொறுக்கி தின்று கொண்டிருக்கும். எதிரிகள் யாராவது வந்தால் அதன் இறக்கைகளை அடித்துக் கொண்டு, "கெக்கெக்கெ' என்று கத்துமே ஒழிய, பறக்கவே பறக்காது. எதிராளி எளிதாக அவற்றைப் பிடித்து கொள்ள முடியும். ஆனால் கழுகோ, பாய்ந்து வந்து, தன்னுடைய இரையை கால்களில் கெட்டியாகப் பிடித்து கொண்டு, உயரே பறந்து சென்று ஓர் இடத்தில் அமர்ந்து உண்ணும். அதை அவ்வளவு எளிதாக யாரும் பிடித்து விட முடியாது. அதற்குக் காரணம் கழுகிற்கு தேவையும், நம்பிக்கையும், பயிற்சியும் அதிகமாக இருப்பதுதான்.
கரோனா பெருந்தொற்றின் கொடூரமுகம் நம் நாடு முழுவதும் மக்களை அச்சுறுத்தி உறைய வைத்துக் கொண்டிருக்கின்ற இந்த வேளையில், அத்தியாவசிய பணிகளுக்கான ஊழியர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், காவல்துறையினர், பத்திரிகையாளர்கள், தன்னார்வலர்கள் என்று பலரும் தங்களது உடல்நலத்திற்கும் கேடு வந்துவிடுமோ என்கிற எந்தவித அச்சமும் இல்லாமல், ஓயாது மக்கள் பணியாற்றிக் கொண்டிருக்கின்றனர். அதிலும் குறிப்பாக தன்னார்வலர்களாக தன்னலமற்று களமாடுபவர்களில் பலர் இளைஞர்கள்.
மதுரை திருநகரைச் சேர்ந்த முப்பத்தைந்து வயது இளைஞர் பி. ஆர்.விஸ்வநாத், பிழைப்புக்கான தனது பிரதான தொழிலாக சுபநிகழ்வு காணொளி ஒளிப்பதிவாளராகப் பணியாற்றினாலும், மாந்தநேயராக, பல்லுயிர் காப்பாளராக "ஊர்வனம்', "நகர்வனம்' அமைப்புகளின் பணிகளால் தன்னர்வலராகவே அறியப்படுகிறார். இதோடு மட்டுமில்லாமல் முதியோர் இல்லம் மற்றும் விபத்துக்குள்ளான கால்நடைகளுக்கான காப்பகம் ஒன்றையும் நடத்தும் இவர், இந்த கரோனா காலகட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட ஆதரவற்றவர்களுக்கு தினந்தோறும் உணவளித்துக் கொண்டிருக்கிறார். இலக்கு ஒன்றை நிர்ணயித்து அதை நோக்கி பயணிக்கும் ஒவ்வோர் இளைஞரும், மாணவரும் அவர்தம் மூளையைத் துருப்பிடிக்காமல் இயங்கச் செய்ய இந்த தன்னார்வலரின் சமூக ஈடுபாட்டு மந்திரத்தைப் பின்பற்றலாம்.
நம் வாழ்வும், வளமும் துருப்பிடிக்காதிருக்க அவசியமானது துறுதுறுப்பும், சுறுசுறுப்பும்தான்; பரபரப்பல்ல என்பதை புரிந்து பயணிப்போம்.