கன நேரத்தில் உயிர் பிழைத்தேன்!
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் "சரவணன் மீனாட்சி' தொடரில் மீனாட்சியாக நடித்து வருகிறார் ரக்ஷிதா. அவரை தொடர்பு கொண்டோம்:
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் "சரவணன் மீனாட்சி' தொடரில் மீனாட்சியாக நடித்து வருகிறார் ரக்ஷிதா. அவரை தொடர்பு கொண்டோம்:
""2005 - இல் கர்நாடகாவில் உள்ள சுவர்ணா டி.வி. சேனலில் நிகழ்ச்சித் தொகுப்பாளராக சேர்ந்தேன். அதன்பிறகு அதே டிவியில் தொடர்களில் நடிக்க வாய்ப்புகள் கிடைத்து நடிக்க ஆரம்பித்தேன். இதுவரை பத்துக்கும் மேற்பட்ட கன்னட சீரியல்களில் நடித்திருக்கிறேன். 2010 -இல் "பாரீஜாதா' என்ற கன்னட திரைப்படத்திலும் நடிக்க வாய்ப்பு கிடைத்து நடித்தேன். அதன் பிறகு திரையில் நல்ல வாய்ப்புகள் வரும்போது மட்டும் நடிக்கலாம் என்று மீண்டும் சீரியலுக்கே வந்துவிட்டேன். இந்நிலையில் கன்னடத்தில் என்னை பார்த்துவிட்டுதான் தமிழில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
தமிழில் முதலில் "பிரிவோம் சந்திப்போம்' என்ற தொடரில் நடித்தேன். இதில் நடிக்கும்போதே என்னுடன் சேர்ந்து நடித்த தினேஷுக்கும் எனக்கும் லவ் ஆகி இருவரும் பெற்றோர் சம்மதத்துடன் தினேஷின் சொந்த ஊரான ஸ்ரீவில்லிப்புத்தூரில் திருமணம் செய்து கொண்டோம்.
தற்போது சரவணன் மீனாட்சி தொடரில் நடித்து வருகிறேன். அது எனக்கு கிடைத்த மிகப் பெரிய வாய்ப்பாக நினைக்கிறேன். படப்பிடிப்புக்காக வெளி ஊர்களுக்குச் சென்றாலும் சரி அல்லது வெளியே எங்கே சென்றாலும் சரி என்னை மீனாட்சி என்றே அழைக்கிறார்கள். அந்தளவிற்கு மீனாட்சி கேரக்டர் பேசப்படுவது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. இதில் என்னுடன் மைனாவாக நடிக்கும் நந்தினி என்னுடைய அன்பு தோழியாகவே மாறிவிட்டாள். நல்லது கெட்டது அனைத்திலும் கலந்து கொள்ளும் அளவு மாறிவிட்டாள்.
தொடரில் நடித்துக் கொண்டிருக்கும் பொழுது ஒருமுறை லாரி என் மீது மோத வருவது போன்ற காட்சி. அப்போது நான் லாரியின் அடியில் படுத்து தப்பிக்க வேண்டும். கேமரா ஓடத்தொடங்கி விட்டது. பத்து கி.மீ. வேகத்தில் வர வேண்டிய லாரியில் திடீரென கோளாறு ஏற்பட்டதால் வேகம் அதிகம் ஆகிவிட்டது. அதை நான் எதிர்பார்க்கவில்லை. என்ன செய்வது என்று யோசிப்பதற்கு எல்லாம் நேரமும் இல்லை. இதனால் உடனடியாக லாரியின் அடியில் படுத்துக் கொண்டு என் உடம்பை அதிமாக சுருக்கிக் கொண்டேன். இதனால் உயிர் பிழைத்து தப்பித்தேன். கன நேரம் தாமதித்திருந்தாலும், இந்த நேரம் உங்களோடு பேசிக் கொண்டு இருக்க மாட்டேன். இது வாழ்நாள் முழுக்க மறக்க முடியாதது.
இதைத் தவிர சமீபத்தில் வெளியான இயக்குனர் ராதா மோகனின் "உப்புகருவாடு' படத்தில் நடித்திருக்கிறேன். அதில் என் கேரக்டர் மிகவும் நன்றாக வந்திருக்கிறது'' என்றார்.