முகப்பு
மகளிர்மணி

நடிப்பு பயம் போய்விட்டது! - அர்ச்சனா

பத்து ஆண்டுகளுக்கு முன்பு இரவு பத்து மணி என்றால் அது சிரிப்பழகி அர்ச்சனாவின் காமெடி டைம் நேரம் தான்.  "வணக்கம், வணக்கம், வணக்கம்' என்று அவர் வரவேற்கும் விதம் அனைவரின் உள்ளத்தையும்  கவரும் அன்று மக்களைக் கலகலப்பூட்டி சிரிக்க வைத்தவர்,

Updated On : 9 ஜனவரி, 2024 at 7:48 AM
பகிர்:

பத்து ஆண்டுகளுக்கு முன்பு இரவு பத்து மணி என்றால் அது சிரிப்பழகி அர்ச்சனாவின் காமெடி டைம் நேரம் தான்.  "வணக்கம், வணக்கம், வணக்கம்' என்று அவர் வரவேற்கும் விதம் அனைவரின் உள்ளத்தையும்  கவரும் அன்று மக்களைக் கலகலப்பூட்டி சிரிக்க வைத்தவர்,

இன்று அதிர்ஷ்டலட்சுமியாக பரிசுகளை அள்ளித் தருகிறார். அவரை ஒரு மாலை மயங்கிய  பொழுதில் சந்தித்தோம்.

கல்யாணத்திற்கு பிறகு அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்டதாக சொன்னாங்க அமெரிக்கா வாழ்க்கை எப்படி இருக்கிறது?

நான் சென்னையில்தான் இருக்கிறேன். நான் சென்னையைவிட்டு எங்கும் போகவில்லை. நான் என்ன அமெரிக்கா மாப்பிள்ளையையா கல்யாணம் செய்து கொண்டேன். இந்திய கடற்படை வீரர் வினித் என்பவரைத்தானே கல்யாணம் செய்து கொண்டேன். நான் எதற்கு அமெரிக்காவுக்குப் போக வேண்டும்; அது வதந்தி.

ஆளே மாறிவிட்டீர்கள். அப்போது பார்த்ததுக்கும், இப்போது பார்ப்பதற்கும் நிறைய வித்தியாசம் தெரிகிறதே?

சன் டிவியில் காமெடி டைம் பண்ணும் போது எனக்கு பதினெட்டு வயசு. இப்போது முப்பத்தி மூன்று வயசு ஆகிறது. அதனால், பார்ப்பதற்கு வித்யாசமாகத்தான் தெரிவேன். இந்தப் பதினைந்து ஆண்டு இடைவெளியில்  நானும் கல்யாணம், குழந்தை என்று வளர்ந்திருக்கோம்ல.

சரி, குடும்பம், குழந்தைகள் பற்றிச் சொல்லுங்கள்?

ஒரே பொண்ணு சாரா. பத்மா சேஷாத்ரியில மூன்றாவது  படிக்கிறாள். அவர் கடற்படை வீரர். இப்போது கேரளாவில் இருக்கிறார். இதுக்கு மேல என்ன சொல்வது? அம்மா வங்கி வேலையில் இருந்து ரிட்டையர்டு ஆகி என்னோடு இருக்காங்க.

பிறகு ஏன் நிகழ்ச்சிகளில் அதிகம் பார்க்க முடிவதில்லை?

முதலில் குடும்பம்தான். கணவர், குழந்தை என்று காலம் எடுத்துக் கொண்டது. "உத்சவ்' என்கிற ஈவன்ட் மேனஜ்மெண்ட் நடத்தி வந்தேன். இப்போது "வாவ் சிட்டி' என்று பெயர்.  மதியம் இரண்டு மணி முதல் நான்கு மணி வரை பிக் எப்.ஃஎம்மில் ஹாலிவுட் படங்கள் பற்றி பல டாபிக்ல பேசிக்கிட்டு இருக்கேன். விஜய் டிவியில் நம்ம வீட்டுக் கல்யாணம் பண்ணிய பிறகு, இப்போது, ஜீ தமிழ் டிவியில் அதிர்ஷ்ட லட்சுமியை தொகுத்து வழங்குகிறேன்.

அதிர்ஷ்ட லட்சுமிக்கு வரவேற்பு எப்படி இருக்கிறது?

குழந்தைகளுக்கான கேம்ஷோவில் இல்லத்தரசிகளும், குடும்ப உறுப்பினர்களும் பங்கேற்கின்றார்கள். வீட்டிற்குள்ளேயே அடைந்து கிடக்கும் இல்லத்தரசிகளின் திறமைகளை உலகறியச் செய்யும் நிகழ்ச்சி அதிர்ஷ்ட லட்சுமி. பொது அறிவு கேள்விகளுக்கு பதில் சொல்லி அட்டகாச பரிசுகளை அள்ளிக்கிட்டு போறாங்க. ஜீ தமிழ் தொலைக்காட்சியின் புதிய கேம் ஷோ இது. நவம்பர் மாதத்திலிருந்து புதன் கிழமை முதல் வெள்ளிக் கிழமை வரை தினமும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது. துவங்கிய நாளில் இருந்தே நல்ல வரவேற்பு இருக்கிறது.

சினிமாவில் நடிப்பதாக செய்திகள் வந்ததே?

உண்மையிலேயே எனக்கு நடிக்கத் தெரியாது. நடிக்கிறேன்னு சொல்லி நடித்து சொதப்பக் கூடாதுன்னுதான் இருந்தேன். நிறைய பேர் கேட்டார்கள். மறுத்துவிட்டேன். ஆனால், இயக்குநர் ஷாஜி கைலாஷ் கேட்டதும், என்னால் மறுக்க முடியவில்லை.

"என் வழி தனி வழி' படம் இயக்கிய போது அவரை பேட்டி எடுத்தேன். அப்போது, அடுத்தப் படத்தில் நீங்க நடிக்க வேண்டும் என்று சொன்னார். அவர் ஏதோ காமெடிக்குத்தான் சொல்கிறார் என்று எடுத்துக் கொண்டேன். ஆனால், இப்போது இயக்கி உள்ள "வைகை எக்ஸ்பிரஸ்' படத்தில் நடிக்க அழைத்தார். அய்யோ எனக்கு நடிக்கத் தெரியாது சார் என்று அவரிடம் சொன்னேன். அதெல்லாம் நான் பார்த்துக்கிறேன்  நீங்க வாங்க என்று வற்புறுத்தினார். இப்போது நடிப்பு பயம் போய்விட்டது.

என்ன மாதிரியான வேடத்தில் நடித்திருக்கிறீர்கள்?

நடிகையின் அக்காவாக, ஆம்பூர் அனு என்கிற வித்தியாசமான வேடத்தில் நடித்திருக்கிறேன். இனியாவுக்கு அக்கா வேடம். படத்தைப் பாருங்க. ஆம்பூர் அனுவின் பிரியாணி அப்படிப் பேசப்படும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.