மகளிர்மணி

ஆரோக்கிய சமையல்

தினமணி வாசகர்களுக்காகவே சிறப்பு சமையல் குறிப்புகள்...

தவநிதி

தினமணி வாசகர்களுக்காகவே சிறப்பு சமையல் குறிப்புகள்...

பச்சைபட்டாணி புலாவ்               

தேவையான பொருட்கள்:

அரிசி -  2 கிண்ணம்

பட்டாணி - 1 கிண்ணம்

சின்ன வெங்காயம்  - 100 கிராம் 

பெரிய வெங்காயம் - 2

தக்காளி - 2

பச்சை மிளகாய் - 4

நெய் - 100 கிராம்

பட்டை - 2

கிராம்பு - 4

சோம்பு - 1/2 தேக்கரண்டி  

பிரிஞ்சி இலை - 1

ஏலக்காய் - 3

இஞ்சி - சிறிய நெல்லிக்காய் அளவு

பூண்டு  - 100 கிராம்

உப்பு - தேவையான அளவு

எண்ணெய் - தேவையான அளவு

மல்லி தழை, கறிவேப்பிலை - சிறிது

செய்முறை:

இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், பட்டை, கிராம்பு, சோம்பு ஆகியவற்றை சிறிது தண்ணீர் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும். அடுப்பில் குக்கரை வைத்து நெய்யையும், எண்ணெய்யும் ஊற்றி காய்ந்ததும்  பிரியாணி இலை, ஏலக்காய், கறிவேப்பிலை போட்டு  தாளித்து அதனுடன் வெங்காயத்தை சேர்த்து வதக்கவும். பிறகு தக்காளி சேர்த்து நன்கு வதக்கிய பின் பட்டாணி, சேர்த்து நன்கு வதக்கி, அதனுடன் அரைத்த மசாலா, உப்பு சேர்த்து நன்கு வதக்கிய பின்பு அரிசியை சேர்க்க வேண்டும். பிறகு இரண்டு கிண்ணம் அரிசிக்கு 4 கிண்ணம்  வீதம் தண்ணீர் சேர்த்து ஒரு கொதி வந்ததும் மேலாக சிறிது நெய் விட்டு குக்கரை மூடி 4 விசில் வந்ததும் அடுப்பை அணைத்து விடவும். சிறிது நேரம் கழித்து இறக்கி அரிசி உடையாமல் நன்கு கிளறி மல்லி தழைத் தூவி சூடாக பறிமாறவும்.

••••

கறிவேப்பிலைப் பொடி சாதம்

தேவையான பொருட்கள்:

அரிசி - 1/2 கிலோ

கறிவேப்பிலை - ஒரு கிண்ணம்

கடலைப்பருப்பு - 2 தேக்கரண்டி

மிளகுத்தூள் - ஒரு தேக்கரண்டி

கடுகு - தாளிக்க

உளுத்தம்பருப்பு - தாளிக்க

முந்திரிப்பருப்பு - 10.

நெய் - தேவைக்கேற்ப

உப்பு - தேவைக்கேற்ப

செய்முறை: 

சிறிதளவு நெய்யில் கறிவேப்பிலையை வறுத்து பொடி செய்து கொள்ளவும். அரிசியை சாதமாக வடித்து ஒரு பாத்திரத்தில் வைக்கவும். அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து நெய் ஊற்றி கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து. அதனுடன் முந்திரிப் பருப்பு, கடலைப்பருப்பு ஆகியவற்றைச் சேர்த்து பொன்னிறமாக வறுத்து எடுக்கவும்.

பாத்திரத்தில் உள்ள சாதத்தில் கறிவேப்பிலைத்தூள், வறுத்த முந்திரி மற்றும் கடலைப்பருப்பு, மிளகுத்தூள், உப்பு ஆகியவற்றைச் சேர்த்து நன்றாகக் கிளறினால் சுவையான சத்தான கறிவேப்பிலைப் பொடி சாதம் ரெடி.

••••

பாலக் ஃப்ரைட் ரைஸ்

தேவையான பொருட்கள்:

பாலக் கீரை - 2 கட்டு பொடியாக நறுக்கியது

பாசுமதி அரிசி - 3 கிண்ணம்

மிளகாய்த் தூள் - 1 தேக்கரண்டி

மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி

தனியாத் தூள் - 1 தேக்கரண்டி

கிராம்பு, ஏலக்காய், பட்டை - 3

சின்ன வெங்காயம் - 1 கிண்ணம் பொடியாக நறுக்கியது

தக்காளி  - 1 பொடியாக நறுக்கியது

இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி

பச்சை மிளகாய் - 4

நெய் - தேவைக்கேற்ப

முந்திரி - 3

உப்பு - தேவைக்கேற்ப

வெந்தயம் - 1 தேக்கரண்டி

செய்முறை: முதலில் பாசுமதி அரிசியை குக்கரில் 2 விசில் வரும் வரை வேகவிடவும். பிறகு வெந்தயத்தை வாணலியில் சிவக்க வறுத்தெடுத்து கரகரப்பாக  அரைத்துக் கொள்ளவும்.

வாணலியில் நெய் ஊற்றி காய்ந்ததும் கிராம்பு, பட்டை, ஏலக்காய் சேர்த்து வதக்கவும். அதனுடன் வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் இஞ்சி பூண்டு விழுது, தக்காளி ஆகியவற்றைச் சேர்த்து பொன்நிறமாக மாறும் வரை வதக்கிக் கொள்ளவும். நன்கு வதக்கிய பின்பு அதனுடன் பொடியாக நறுக்கிய பாலக் கீரையைச் சேர்த்து பச்சை வாசனைப் போகும்  வரை வதக்கவும். அதனுடன் மஞ்சள் தூள், மிளகாய்த் தூள், தனியாத் தூள் சிறிது உப்பு ஆகியவற்றைச் சேர்த்து நன்கு வதக்கி கொள்ளவும்.

வதக்கிய பின்பு வேகவைத்த சாதத்தை அதில் சேர்த்து நன்கு கிளறி அதனுடன் அரைத்த வெந்தயத்தையும் சேர்த்து 5நிமிடம் குறைந்த தணலில் வேக விடவும்.

சுவையான பாலக் ஃப்ரைட் ரைஸ் தயார். இதனுடன் காரட், வெள்ளரிக்காய், வெங்காய தயிர் பச்சடி செய்து சாப்பிட சுவையாக இருக்கும்.

 குறிப்பு:-  பாலக் கீரை உடலுக்கு வலுவூட்டும், மலச்சிக்கலைப் போக்கும். குளிர்ச்சியைத் தரும். குடல் நோய்களுக்கு நல்லது.

•••

கொண்டைக்கடலை குழம்பு

தேவையான பொருட்கள்:

கொண்டைக்கடலை -  250

வெங்காயம் - 100

தக்காளி - 2

பூண்டு - 10 பல்

பச்சை மிளகாய் - 5

தேங்காய் - அரை மூடி

புளி - நெல்லிக்காய் அளவு

மிளகாய்த் தூள் - 1 தேக்கரண்டி

மல்லித் தூள் - 2 தேக்கரண்டி

மஞ்சள் தூள்   -1/2 தேக்கரண்டி

எண்ணெய் - தேவையான அளவு

கடுகு, உளுந்து, சீரகம், மிளகு, சோம்பு - தாளிக்க

உப்பு - தேவைக்கேற்ப

கறிவேப்பிலை, மல்லி தழை - சிறிது

செய்முறை: கொண்டைக்கடலையை இரவே ஊற வைத்து விடவும். குக்கரை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் கடுகு, உளுந்து, சீரகம், மிளகு, சோம்பு, கறிவேப்பிலை போட்டுத் தாளிக்கவும்.

அத்துடன் வெங்காயம், பூண்டு, பச்சை மிளகாய் போட்டு நன்கு வதக்கவும். பிறகு தக்காளியைப் சேர்த்து வதக்கி அத்துடன் மஞ்சள் தூள், மிளகாய்த் தூள், மல்லித் தூள் ஆகியவற்றைச் சேர்த்து வதக்கவும். அத்துடன் ஊறிய கடலையைப் போட்டு நன்கு கிளறிய பின்பு தண்ணீரில் புளியைக் கரைத்து அதில் ஊற்றவும். ஒரு கொதி வந்ததும் அரைத்தத் தேங்காயை அதில் ஊற்றி தேவையான அளவு உப்பு சேர்த்து குக்கரை மூடி 5 விசில் வந்ததும் மல்லி தழைத் தூவி இறக்கி விடவும். சுவையான கொண்டைக் கடலைக் குழம்பு தயார். இதில் உருளைக்கிழங்கு சேர்த்தால் சுவை இன்னும் அதிகரிக்கும்.

••••

கத்தரிக்காய் ஸ்டஃப் மசாலா

தேவையான பொருட்கள்:

கத்தரிக்காய் - 1/2 கிலோ

தேங்காய் - அரை மூடி

வேர்க்கடலை - ஒரு கைப்பிடி

மல்லித்தூள் - 1 தேக்கரண்டி

மிளகாய்த் தூள் - 1 தேக்கரண்டி

மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி

வெங்காயம் - 3

தக்காளி - 3

பட்டை, லவங்கம் - சிறிது

எண்ணெய்  - தேவைகேற்ப

கடுகு - சிறிது

பச்சை மிளகாய் - 2

இஞ்சி - ஒரு துண்டு

பூண்டு  - 5

உப்பு- தேவைக்கேற்ப

கொத்துமல்லி, கறிவேப்பிலை - சிறிது

செய் முறை : தேங்காய் துருவல், இஞ்சி,  பூண்டு, பட்டை, லவங்கம், வேர்க்கடலை ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து அரைத்துக் கொள்ளவும். அரைத்த கலவையுடன், தேவையான அளவு உப்பு, தனியாத் தூள், மிளகாய்த் தூள், மஞ்சள் தூள் சேர்த்து சிறிது எண்ணெய் விட்டு கிளறிக் கொள்ளவும்.

கத்தரிக்காயின் காம்புகளைக் கொஞ்சம் விட்டு நறுக்கிக் கொள்ள வேண்டும். பின்புறமாக நான்கு கீறல்கள் போட்டு எண்ணெய் கத்தரிக்காய்க்கு நறுக்குவது போல் நறுக்கிக் கொள்ளுங்கள். பின்னர் அரைத்து வைத்திருக்கும் விழுதினை கத்தரிக்காய்க்குள் வைத்து நிரப்பி 15 நிமிடம் ஊற விடுங்கள்.

பின்னர்  வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு தாளித்து. கொத்துமல்லி, கறிவேப்பிலையைப் போடவும். நறுக்கி வைத்திருக்கும் வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாயைப் பொன்னிறமாக வதக்கவும். நன்கு வதங்கியதும் ஊற வைத்திருக்கும் கத்தரிக்காய்களை உடையாமல் போடவும். மீதமிருக்கும் மசாலாவையும் கத்தரிக்காய் மீது பரப்பி விடவும். அப்படியே மூடி போட்டு மூடிவிடுங்கள். 5 நிமிடம் கழித்து கத்தரிக்காய்களை திருப்பி விடுங்கள். மசாலாவும் கத்தரிக்காயும் நன்கு சிவந்து வந்ததும் இறக்கி சூடாக பரிமாறவும். நெய் சாதம், காய்கறி சாதம் போன்றவற்றிற்கு இது சரியான இணை உணவாக இருக்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இரு சம்பவங்களில் பெண்களிடம் நகை பறிப்பு

சமூகத்தின் உடனடி தேவை உணவு விழிப்புணா்வு! - மருத்துவா் கு. சிவராமன்

தவெகவில் இணைந்த அதிமுக எம்எல்ஏ மகன்

கொடைக்கானலில் கபடிப் போட்டி

பெங்களூரு - நாா்த் ஈஸ்ட் யுனைடெட் ஆட்டம் டிரா!

SCROLL FOR NEXT