முகப்பு
மகளிர்மணி

நடனமும் தெரியும் நடிப்பும் தெரியும்

பரதநாட்டியத்தைப்  பரப்புவதில் இன்றைக்கு நிறையப் பேர் ஈடுபட்டிருக்கிறார்கள்.

Updated On : 9 ஜனவரி, 2024 at 7:04 AM
பகிர்:

பரதநாட்டியத்தைப்  பரப்புவதில் இன்றைக்கு நிறையப் பேர் ஈடுபட்டிருக்கிறார்கள்.  ஆனால் ஆராய்ச்சி, சொற்பொழிவு, செயல்விளக்க உரைகள் என்று தீவிரமாகச் சுழன்று வருபவர்களில் உடனே நினைவுக்கு வருபவர் சொர்ணமால்யா கணேஷ்.  நாட்டியத்தின் அழகுணர்வுடன், அதன் தூய்மை, பாரம்பரியம், சரித்திரகாலப் பின்னணி, மறுமலர்ச்சி இத்தோடு சமூக அக்கறை குறித்த விஷயங்களை பரதநாட்டிய நடனம் தொடர்பாக வழங்குவதும், பல்வேறு கலாசாரங்களை உள்ளடக்கிய நடன வடிவங்களை அதற்கான மேடைகளில் தருவதும் சொர்ணமால்யா கணேஷின் சிறப்பு. 

நாயக்கர் காலத்து நடனக் கூறுகளில் ஆய்வு செய்து டாக்டரேட் பட்டம் பெற்றவர் சொர்ணமால்யா, ஏற்கெனவே சென்னைப் பல்கலைக்கழகத்தில் பரதநாட்டியத்தில் எம்.ஏ. பட்டம் பெற்றவர்.  நடன வரலாற்றில் காலம் சென்ற டி.எஸ். பார்த்தசாரதி அவர்களிடம் படித்திருக்கிறார். டாக்டர் பத்மா சுப்பிரமணியத்திடம் கரணங்கள் பற்றிப் படித்தறிந்திருக்கிறார்.

தன்னுடைய சொந்த ரங்கமந்திரா நடனப் பள்ளியில் நடனம், இசை, நடன வரலாறு, நாட்டுப்புறக் கலையியல் கற்றுத்தரும் சொர்ணமால்யா, அமெரிக்க லாஸ் ஏஞ்சல்ஸ் பல்கலைக்கழகத்தில் வருகைப் பேராசிரியரும் கூட.  அமெரிக்க ஃபுல்பிரைட் ஸ்காலர்ஷிப் மற்றும் நேரு அகடமிக் அன்ட் எக்ùஸலன்ஸ் அவார்ட் இவருக்கு 2014-15 ஆம் ஆண்டுக்குக் கிடைத்தது.  படிப்பதில் மட்டும்தான் ஆர்வம் என்று நின்றுவிடாமல், நடிப்பிலும் ஈடுபாடு காண்பித்தவர்.  கலிபோர்னியாவின் úஸன் ஓஸ் ஸ்டேட் யூனிவர்சிடியில் ஆக்டிங் ஃபார் காமிரா பட்டப் படிப்புப் படித்தவர்.  நடனத்தோடு நின்றுவிடாமல், பாகவதலு சீதாராம சர்மாவிடம் பாட்டும் நட்டுவாங்கமும் பயின்றவர்.

பரத நாட்டியத்தில் குரு கே.ஜே. சரசா என்றாலும், சதிர் நடனமுறை பற்றி, திருவாளப்புத்தூர் பரம்பரை நாட்டியக் கலைஞர்களிடம் கற்றுக்கொண்டவர். குரு எல்லப்பா பிள்ளை விருது, கோவை அப்யாஸ நிருத்யவாதினி விருது, யுவகலா பாரதி விருது, சிறந்த வர்ணத்துக்காக லக்ஷ்மி விசுவநாதன் விருது ஏராளமான விருதுகள் இவருக்குக் கிடைத்திருக்கின்றன என்பது வியப்பைத் தரவில்லை.   இன்னும் முக்கியமான இரண்டு விஷயங்களைச் சொன்னால்தான் சொர்ணமால்யா கணேஷின் முழுத் திறமையையும் நீங்கள் அறிய முடியும்.

தமிழகக் கோயில்களில் பிராமி எழுத்து, சோழ-கிரந்த கல்வெட்டுகளில் உள்ள எழுத்துக்களைப் படிப்பதில் மத்திய கலாசார உதவித் தொகை பெற்று, அவற்றில் தேர்ச்சி பெற்றவர் என்பதோடு, எமோஷனல் இன்டெலிஜென்ஸ் என்ற பாடத்திட்டத்தை தயாரித்துக் கொடுத்திருக்கிறார். கிரேட் லேக்ஸ் இன்ஸ்டிட்யூட் ஆஃப் மேனேஜ்மென்ட் வகுப்புக்காக.

"நீங்கள் புனேயில் நடத்திய சதிர் வகுப்புகள்

 எல்லாருக்கும் சுவாரசியமாக இருந்ததாகக் கேள்விப்பட்டோம்.  அங்கே மட்டும்தான் நடத்தினீர்களா? என்றதற்கு,  "சதிர் பற்றிய பட்டறை வகுப்புகள் புனேயிலும், குஜராத் சங்கீத நாடக அகடமியிலும், பரோடா எம்.எஸ். யூனிவர்சிடியிலும் நடத்தினேன்.  அவர்கள் அங்கே ஆர்வத்துடன் அதை ரசித்தார்கள்' என்கிறார்.

இசையிலும், நடனத்திலும் அன்றைக்கு மிகச் சிறந்து விளங்கிய தேவதாசி குலத்தைச் சேர்ந்தவர்களிடம் அவர்களின் அசலான நடன பாணியை ஆவணமாகப் பதிவு செய்து வருகிறார் சொர்ணமால்யா.  நடன வரலாற்றைப் பதிவு செய்வதில் இதுவும் ஒரு பகுதி.  16 - 18 ஆம் நூற்றாண்டுகளில் பரத நாட்டிய நிலை பற்றி ஆய்வுக் கட்டுரை எழுதியிருக்கிறார். சங்க கால மகளிர் பற்றிய ஆய்வுக் கட்டுரையும் இவர் ஆராய்ச்சியில் வெளிப்பட்ட  கட்டுரை.  ஆக, நடனத்தோடு நின்றுவிடாமல், அதன் வரலாற்றையும் அறிந்து எடுத்துச் சொல்வதில் இவருக்குத் தேர்ச்சியும் விருப்பமும் இருக்கின்றன.  மியூசிக் அகடமி ஜர்னல், சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தின்  ஓரியண்டல் ஜர்னல் ஆப் ஏஷியன் ஸ்டடீஸ் இதழிலும் இவர் ஆய்வுக் கட்டுரைகள் வெளியாகியிருக்கின்றன. சி.பி.ஆர்ட் மையத்தின் ஆதரவில் நாயக்கர் காலத்து நடன பாணி பற்றிய சொற்பொழிவு, தமிழ் ஹெரிடேஜ் அமைப்பின் கீழ் இவர் நிகழ்த்திய தொடர் சொற்பொழிவுகள் இவருடைய நடனக் கலைத் திறனையும் ஆய்வு மனப்பான்மையையும் வெளிப்படுத்தியிருக்கின்றன. இந்திய இதிகாசங்கள் பற்றிய நாட்டிய நாடகங்களை, அயல் நாட்டு மேடைகள் உட்பட, பல்வேறு மேடைகளில் வழங்கிய பெருமை சொர்ணமால்யாவுக்கு உண்டு.   

இந்திய நகரங்கள் தவிர, அமெரிக்கா, ஐரோப்பா, மத்திய கிழக்கு நாடுகள், ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், மலேசியா, ஸ்ரீலங்கா, மொரிஷியஸ் ஆகிய பல நாட்டு மேடைகளில் நடனம் வழங்கியிருக்கிறார். பாரம்பரிய நடனத்தோடு நின்றுவிடாமல், கிராமப்புறத்தினருக்கான கலை விழாவை வடிவமைத்து நடத்தி வருகிறார் சொர்ணமால்யா.  "நம்மை மறந்தாரை நாம் மறக்கமாட்டோம்' குறுந்தகடு, தென் இந்திய சமூக வரலாற்று ஆராய்ச்சி அமைப்பின் வெளியீடாக வந்திருக்கிறது.

தொல்பொருள் துறையில் நாட்டம் உள்ளதால், அதில் பயிற்சியும் பெற்றிருக்கிறார்.  யோகா, களரிப்பயத்து இரண்டும் கற்றவர்.  இவர் எல்லா டிவி சானல்களிலும் தோன்றியிருக்கிறார்.  திரைப்படத் துறையிலும் சொர்ணமால்யா இடம் பிடித்திருக்கிறார்.

நாரத கான சபாவின் நாட்டியரங்கத்தில் சொர்ணமால்யா கணேஷ், நவம்பரில் சதிர் பற்றிய செயல் விளக்கச் சொற்பொழிவு ஆற்றவிருக்கிறார். தலைப்பு:  கோயில், கொட்டகை சதிர் பாரம்பரியம்.

முழு கட்டுரையைப் படிக்க →