மாதவிடாயும் சமூகமும்
"மாதவிடாய் என்கிற விஷயத்தைப் பற்றி பேசவே நாம் ரொம்பவும் கூச்சப்படுகிறோம். இயற்கையான இந்த நிகழ்வில்
ஆவணப்படத்தில் ஒரு புரட்சி
"மாதவிடாய் என்கிற விஷயத்தைப் பற்றி பேசவே நாம் ரொம்பவும் கூச்சப்படுகிறோம். இயற்கையான இந்த நிகழ்வில் சமூகத்தால் பெண்கள் எப்படி பார்க்கப்படுகிறார்கள், பாதிக்கப்படுகிறார்கள் என்பதை "மாதவிடாயும் சமூகமும்' என்ற ஆவணப்படத்தின் மூலம் உரக்கச் சொல்கிறார் கீதா இளங்கோவன். இந்திய தகவல் ஒளிபரப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கி வரும் மத்திய அரசின் பத்திரிகை தகவல் அலுவலகத்தில் ஊடக அலுவலராக இருக்கிறார் இவர். ஆவணப்படம் குறித்து அவர் நம்முடன் பகிர்ந்து கொண்டவை:
'மாதவிடாயும் சமூகமும்' உருவாகக் காரணம்?
பெரும்பாலும் பெண்களே மாதவிடாய் நிகழ்வை மாதவிலக்கு என்றே கூறுவார்கள். ஏனென்றால் அந்த மூன்று நாள்கள் வீட்டில் இருந்து விலக்கி வைக்கப்படுவதால். இயற்கையான ஒரு நிகழ்விற்காக பெண்கள் ஏன் விலக்கப்பட வேண்டும் என்று சிறு வயதில் எனக்குள் எழுந்த தாக்கமே இந்த ஆவணப்படம் உருவாகக் காரணம்.
இதுபோன்ற உடல் ரீதியான வலி எதுவும் இல்லாததால் அந்த நேரங்களில் பெண்களைப் புரிந்துகொள்ளாமல் காயப்படுத்தும் ஆண்களுக்கு இதைப் பற்றி புரிய வைக்க வேண்டும் என்று நினைத்தேன். மேலும் ஆண்கள் இதை ஏதோ கிலுகிலுப்பான விஷயமாக நினைக்கிறார்கள். அது தவறு என்பதைப் புரிய வைக்கவும், சமூகத்தால் பெண்கள் எவ்வளவு சிரமத்திற்கு உள்ளாகிறார்கள் என்பதை உணர வைக்கவும்தான்.
முன்பெல்லாம் ஓர் இதழாளராக நிறையப் பயணங்கள் செய்ய வேண்டியிருந்தது. அதில் 20 ஆண்கள் இருந்தால் 2 பெண்கள்தான் இருப்பார்கள். ஒருநாள் முழுவதும் பயணம் செய்ய வேண்டியிருக்கும். அப்போது கழிவறைக்காக எங்காவது ஒதுக்குவார்கள். அங்கே பெண்களுக்கான எந்த வசதியும் இருக்காது. அதுவும் மாதவிடாய் நேரத்தில் இருக்கும் பெண்கள் தங்களுக்கான நாப்கினை டிஸ்போஸ் செய்ய முடியாமல் தவிப்பார்கள். உடல் ரீதியான அசௌரியம் ஒருபுறம் என்றால், இது ஒருபுறம் ரொம்பவே தொந்தரவாக இருக்கும். கலெக்டராக இருந்தாலும் சரி, கடைத்தெருவில் வியாபாரம் செய்யும் பெண்ணாக இருந்தாலும் சரி, ஒரே மாதிரியான பிரச்னையைத்தான் சந்திக்கிறோம். இதற்கு ஒரு தீர்வு வரவேண்டும் என்பதற்காகத்தான் இந்த ஆவணப்படம்.
மத்திய அரசு பணியாளரான உங்களை ஆவணப்படம் கவனம் ஈர்த்தது எப்படி?
நானும், என் கணவரும் அடிப்படையில் இதழியல் படித்தவர்கள். எழுத்தின் மீது ஆர்வம் உள்ளவர்கள். அரசுப் பணியில் இருந்ததால் சனி, ஞாயிறு விடுமுறை கிடைத்தது. இதைப் பயனுள்ளதாக ஆக்க வேண்டும் என்று நினைத்தோம். ஏற்கெனவே 2006-இல் உருவாக்கிய "கண்ற்ற்ப்ங் ள்ல்ஹஸ்ரீங்' என்ற தலைப்பில் மனவளர்ச்சி குன்றிய ஒரு சிறுவன் ரயிலில் பயணம் செய்யும்போது அவனைச் சமூகம் எப்படி பார்க்கிறது; அதில் அவனுக்குக் கிடைக்கும் அனுபவங்களை குறும்படமாக இயக்கிய அனுபவம் இருந்தது. இதனை ஹைதராபாத்தில் நடந்த "இண்டர்நேஷனல் சில்ரன்ஸ் பிலிம் பெஸ்ட்டிவல்' விழாவில் திரையிட்டேன். நல்ல வரவேற்பும், நிறைய விருதுகளும் கிடைத்தன. என் கணவர் சில ஆவணப்படங்களை இயக்கினார். அதற்கும் நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்த அனுபவம் மாதவிடாய் குறித்த படத்தை எடுக்க ஓர் உந்துதலாக இருந்தது.
மாதவிடாய் என்பது பெண்களே பேசத் தயங்கும் விஷயம்தான். அதைத்தான் முதலில் உடைக்க வேண்டும் என்று நினைத்தேன். பல பெண் பிரபலங்களை அணுகியபோது. அவர்களிடமே தயக்கம் இருந்தது. சிலர், ""இதெல்லாம் எதற்கு தேவையில்லாமல்?'' என்றார்கள்.
அவர்களிடம் அடுத்த தலைமுறையினர் நாம் பட்ட சிரமங்களை அனுபவிக்கக் கூடாது. அதற்கான தீர்வு சொல்ல வேண்டும் என்றேன். உடனே ஒத்துழைப்பு கொடுத்தார்கள். அதேபோன்று படம் முடிந்து ஒவ்வோர் இடத்தில் காட்சிக்குத் திரையிடும்போதும் பார்ப்பவர்களுக்கு நிறைய கூச்சம் இருந்தது. ஆனால் படக்காட்சி முடிந்ததும் அனைவரும் பாராட்ட ஆரம்பித்துவிடுவார்கள். இதுவரை பள்ளி, கல்லூரிகள், கிராமப்புறங்கள் சமூக விழிப்புணர்வு மையங்கள் என கிட்டதட்ட 100 இடங்களில் திரையிட்டிருக்கிறோம்.
ஆண்கள் இதை எப்படிப் புரிந்து கொண்டார்கள்?
ஆண்கள் படம் பார்க்க உட்கார்ந்ததும் 10 நிமிடம் ரொம்பவே நெளிந்தார்கள். ஒரு பள்ளி மாணவன் சொன்னான் ""இது பெண்களுக்கான படம். இதை ஏன் எங்களுக்குப் போடுகிறார்கள் என்று கோபம் வந்தது. எழுந்து போனால் டீச்சர் திட்டுவார்களே என்ற பயத்தில் உட்கார்ந்திருந்தேன். இதில் இவ்வளவு பிரச்னை இருக்கிறது என்று புரிந்தபோது என் அம்மாவும், தங்கையும்கூட இந்தப் பிரச்னைகளைச் சந்தித்துக் கொண்டுதானே இருக்கிறார்கள் என்று நினைத்தேன். வருந்தினேன். வருங்காலத்தில் அவர்களுக்கு இதுபோன்ற நேரங்களில் என்னால் முடிந்த உதவியை நிச்சயம் செய்வேன்'' என்றான்.
படப்பிடிப்பின்போது சந்தித்த சவால்கள்?
10 நாள் படம் பிடித்தோம். கிட்டத்தட்ட பத்தரை மணி நேர காட்சி பதிவாகி இருந்தது. ஆனால், அதை அரைமணி நேரக் கதையாகச் சுருக்க வேண்டும். இதற்கு என் கணவர் எடிட்டிங்கில் உதவி செய்தார்.
உங்கள் அம்மா என்ன சொன்னார்கள்?
படம் முடிந்து தயார் நிலையில் இருந்தபோது எங்களது உறவினர் வீட்டு விசேஷம் வந்தது. திடீரென்று என் தந்தை கூப்பிட்டு இந்தப் படத்தைத் திரையிடச் சொன்னார். எனக்கோ இதை எப்படி அவர்கள் ஏற்றுக் கொள்வார்கள் என்று தயக்கம் இருந்தது. இருந்தாலும் திரையிட்டேன். அங்கே நான் எதிர்பாராத அளவு வரவேற்பு கிடைத்தது. அம்மா என்னைக் கட்டி அணைத்து வாழ்த்துச் சொன்னார்கள். இதுவே எனக்குக் கிடைத்த முதல் வெற்றியாக நினைத்தேன். இப்போது எல்லாரும் பாராட்டுகிறார்கள்.
அடுத்த முயற்சி 'நம்பிக்கை மனிதர்கள்'. இதற்கான தூண்டுதல் வானவன் மாதேவி, இயலிசை வளவி என்ற இருவரும். இவர்கள் தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள். இவர்கள் வீல்சேரின் உதவியில்லாமல் தண்ணீர்கூட எடுத்துக் குடிக்க முடியாது. அந்த நிலையிலும் தங்களைப் போன்று இருக்கும் ஏழை நோயாளிகளுக்கு மருத்துவமனை கட்டி வருகிறார்கள்.