நடிப்புத்துறை புதிது இல்லை!
ராஜ் டிவியில் "என் தங்கை' தொடரில் நடிகர் பாண்டியராஜனுக்கு ஜோடியாகவும், சன் டிவியில் "மரகதவீணை' தொடரில் ரேகாவாகவும் நடித்து வரும் கங்காவை சந்தித்தோம்:
ராஜ் டிவியில் "என் தங்கை' தொடரில் நடிகர் பாண்டியராஜனுக்கு ஜோடியாகவும், சன் டிவியில் "மரகதவீணை' தொடரில் ரேகாவாகவும் நடித்து வரும் கங்காவை சந்தித்தோம்:
நடிப்புத் துறையை தேர்ந்தெடுத்தது எப்படி?
நடிப்புத்துறை எங்கள் குடும்பத்திற்கு புதிதில்லை. என் அண்ணன் சுபாஷ் ஒரு நடிகர் "ரேக்ளாரேஸ்' போன்ற ஒரு சில படங்களில் நடித்திருக்கிறார். தயாரிப்பு நிறுவனமும் வைத்திருந்தார். தற்போது அவர் அமெரிக்காவில் இருக்கிறார். மேலும் நடிகர் பரத் என் உறவினர். அதுபோன்று திரை சார்ந்த சில பிரபலங்களும் எங்கள் குடும்ப நண்பர்கள். இதனால் நான் கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும்போதே ராஜ் டிவியில் வி.ஜேவாக வாய்ப்பு கிடைத்தது. அதனால் காலை கல்லூரிக்குச் செல்வேன். கல்லூரி முடிந்ததும் சூட்டிங்கிற்கு வந்துவிடுவேன். ராஜ் டிவியில் "சினிமா ரீல்', ஜீ தமிழ் சேனலில் "அஞ்சறைப் பெட்டி' போன்ற நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிவந்தேன். கல்லூரி முடித்தபிறகு கலைஞர் டிவியில் முழு நேர நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்தேன். அதன்பிறகு தந்தி டிவியில் ஓராண்டு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிவந்தேன். இதற்கிடையில் சீரியலில் நடிப்பதற்கும் சரி, பெரியதிரையில் நடிக்கவும் நிறைய வாய்ப்புகள் வந்து கொண்டிருந்தது. நிகழ்ச்சி தொகுத்து வழங்குவதற்கும், நடிப்பிற்கும் நிறைய வேறுபாடு இருந்ததால் நடிக்க வேண்டாம் என்றிருந்தேன். இந்நிலையில் "பாசமலர்' தொடரின் இயக்குநர் அழகர்சாமி எங்கள் குடும்ப நண்பர் என்பதால் என் தந்தையிடம் பேசி அனுமதி வாங்கினார். அதிலிருந்து தொடர்களில் நடித்து வருகிறேன். இதுவரை 6 தொடர்களில் நடித்திருக்கிறேன்.
மரகதவீணை தொடர் பற்றி?
மரகத வீணை தொடரில் 2 ஆண்டுகளாக ரேகா கேரக்டரில் நடித்து வருகிறேன். நல்ல பாஸிட்டிவான ரோல். ஆரம்பத்தில் திருமணத்திற்கு முன்பு துறுதுறுவென்று ஜாலியாக இருக்கும் பெண் திருமணத்திற்கு பிறகு எப்படி அடக்கஒடுக்கமாக மாறிவிடுகிறாள் என்பது மாதிரியான ரோல். எனக்கு ரொம்ப பிடித்த கேரக்டர் இது. அதுபோன்று அந்த யூனிட்டில் இருப்பவர்களும் சரி அனைவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் போல் பழகுவது ரொம்ப பிடித்திருக்கிறது.
என் தங்கை?
என் தங்கை தொடரில் எனக்கு முற்றிலும் வித்தியாசமான கிராமத்து கேரக்டர். நான் சிட்டியிலேயே பிறந்து வளர்ந்தவள். அதனால் கிராமத்து கேரக்டர் எனக்கு ஆரம்பத்தில் ரொம்பவும் வித்தியாசமாக இருந்தது. நடிகர் பாண்டியராஜன் சார் நடிக்கும் முதல் தொடர் இது. அவருக்கு ஜோடியாக நான் நடிக்கிறேன். நான் 5 1/2 அடி உயரம் உள்ள பொண்ணு, அவர் குள்ளம். ஆனால் அவர் என் மீது ஆசைப்பட்டு திருமணம் செய்து கொள்வது போன்ற கேரக்டர். இந்தத் தொடருக்கான படப்பிடிப்பு முழுக்க முழுக்க ஒகேனக்கல்லை சுற்றியுள்ள கிராமங்களில்தான் நடைப்பெறுகிறது. ஆரம்பத்தில் அவுட்டோர் சூட்டிங் என்ற போது பிடிக்காமலே நடித்து வந்தேன். ஆனால் அந்த ஊர் மக்களின் பாசத்தைப் பார்த்தப் பிறகு எப்போது ஒகேனேக்கல் சூட்டிங் வரும் என்று காத்திருக்கிறேன். காலை டிபன் முதல் மதிய சாப்பாடு, இரவு சாப்பாடு என்று அந்த ஊர் மக்கள் போட்டிப்போட்டுக் கொண்டு பாசத்தைக் காண்பிப்பது அதிசயமாகவும், சந்தோஷமாகவும் இருக்கிறது.
நெகட்டிவ் கேரக்டரில் நடித்திருக்கிறீர்களா?
ஒருமுறை நடித்திருக்கிறேன். "வாணிராணி' தொடரில் சின்ன நெகட்டிவ் கேரக்டர்தான் அது. ஆனால் அந்த தொடரில் நடிக்கும் போது வெளியில் எங்குமே செல்ல முடியவில்லை. பார்ப்பவர்கள் எல்லாம் அது வெறும் நடிப்பு என்பதையும் மறந்து திட்ட ஆரம்பித்துவிட்டார்கள். நீங்க ஏன் இப்படி நடிக்கிறீங்க என்று பார்ப்பவர் எல்லாம் கேட்டனர். அதில் இருந்து நெகட்டிவ் கேரக்டர் எனக்கு அவ்வளவாக பிடிக்கவில்லை.
மறக்கமுடியாத அனுபவம்?
தந்தி டிவியில் ஓராண்டு "ரர்ம்ங்ய் ரண்ற்ட் ஜ்ண்ப்க்' என்று ஒரு நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினேன். அடர்ந்த காட்டுக்குள் நான் தனியாக நடந்து கொண்டே பேசுவது போன்ற நிகழ்ச்சி அது. அதாவது டிஸ்கவரி சேனல்களில் காட்டுக்குள் பயணம் செய்வது போன்று வரும் அல்லவா அது போன்ற நிகழ்ச்சி அது. ஒரு முறை படகில் பயணம் செய்யும்போது படகு கவிழ்ந்துவிட்டது. எனக்கு நீச்சல் கூட தெரியாது. அதிலிருந்து எப்படியோ தப்பி வந்தேன். இப்படி அதில் மறக்கமுடியாத அனுபவம் ஏராளமாக இருந்தது. இந்த நிகழ்ச்சிக்கு பிறகு எனக்கிருந்த சின்னச் சின்ன பயம் எல்லாம் மறைந்து ரொம்ப தைரியசாலியாகிவிட்டேன் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.
உங்களுடைய பொழுதுபோக்கு?
பேஷன் டிசைனிங் படித்திருக்கிறேன். அதனால் காஸ்ட்டியூம் டிசைனில் அதிக ஆர்வம் உண்டு. நடித்து கொண்டிருந்தாலும் நேரம் கிடைக்கும்போதெல்லாம் காஸ்ட்டியூம் டிசைனும் செய்து வருகிறேன். நடிகர் பரத்தின் பெரும்பாலான காஸ்ட்டியூம்களை டிசைன் செய்து கொடுத்திருக்கிறேன். இது தவிர்த்து இயக்குநர் விஷ்ணுவர்தன் அவர்களின் மனைவி அனுவர்தன் ஒரு காஸ்ட்டியூம் டிசைனர். அவருக்கு உதவியாக ஆர்யா நடித்த அவர்களது "சர்வம்' படத்தில் வேலை செய்திருக்கிறேன். அதுபோன்று நெருங்கிய நட்பு வட்டங்களில் வரும் இல்ல நிகழ்ச்சிகள், திருமண நிகழ்ச்சி போன்றவற்றிற்கும் காஸ்ட்டியூம் டிசைன் செய்து தருகிறேன். தற்போது கூட என் பஞ்சாபி தோழி ஒருத்தியின் திருமணத்திற்காக பிரைடல் டிசைன் வடிவமைத்து வருகிறேன்.