வளர் இளம் பெண்களுக்கு ஒரு விழிப்புணர்வு முகாம்!
கடந்த மூன்றாண்டுகளாக 7-8 ஆம் வகுப்புகளில் படிக்கும் வளர் இளம் பெண்குழந்தைகளுக்காக பூப்படைதல் குறித்து ஒரு விழிப்புணர்வு முகாம் நடத்தி வருகிறது தேவகோட்டையில் இருக்கும் சேர்மன் மானிக்க வாசகம்
கடந்த மூன்றாண்டுகளாக 7-8 ஆம் வகுப்புகளில் படிக்கும் வளர் இளம் பெண்குழந்தைகளுக்காக பூப்படைதல் குறித்து ஒரு விழிப்புணர்வு முகாம் நடத்தி வருகிறது தேவகோட்டையில் இருக்கும் சேர்மன் மானிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி. இதற்கு காரணம், மாதத்தில் குறைந்தபட்சம் 10 குழந்தைகளுக்கு மேல் பள்ளியிலேயே பூப்படைந்துவிடுவதுதான். பள்ளியிலேயே அந்த குழந்தைகள் பூப்படைந்துவிடுவதால் தங்களுக்கு ஏதோ ஆகிட்டதாக கருதி மற்ற குழந்தைகள் முன் வெட்கப்பட்டு கூனிக் குறுகி நிற்கிறார்கள். சில குழந்தைகள் டீச்சரிடமோ, மற்ற தோழியிடமோ கூட பகிர்ந்துக் கொள்ள பயந்து கொண்டு அழ ஆரம்பித்து விடுகிறார்கள். இதைவிட கொடுமை கல்வியறிவு குறைவாக இருக்கும் அவர்களது பெற்றோர்தான். தங்களது குழந்தைப் பள்ளியிலேயே பூப்படைந்துவிட்டால் அங்கிருந்து வீட்டிற்கு அழைத்துச் செல்லும்போது பேய் பிடித்துக் கொள்ளும், பிசாசு பிடித்துக் கொள்ளும் எனவும், ஆண்கள் பார்த்துவிட்டால் தெய்வ குத்தம் ஆகிவிடும் எனவும் நினைக்கிறார்கள். இதனால் அந்த குழந்தைகளின் மனநிலை பாதிக்கப்படுகிறது. இதைத் தடுக்கவே இந்த முகாம் நடத்தப்படுகிறதாம். இது குறித்து குழந்தைகளுக்கு விழிப்புணர்வு கலந்தாய்வு மேற்கொள்ளும் மருத்துவர் பார்கவி மணிவண்ணனிடம் பேசினோம்:
""வளர் இளம் பருவத்தில் இருக்கும் பெண் குழந்தைகளுக்கும், அவர்களது அம்மாக்களுக்கும் நடத்தப்படும் "அந்த மூன்று நாட்கள்' என்ற விழிப்புணர்வு முகாமில் கலந்தாய்வு செய்வதற்காக இந்த ஆண்டு என்னை அழைத்திருந்தது பள்ளி நிர்வாகம். உடனே ஒத்துக்கொண்டேன்.
வெறுமனே பேசி கலந்தாய்வு செய்வதைவிட இது குறித்த படங்களைக் காட்டி பேசினால் அது அவர்கள் புரிந்து கொள்வதற்கு இன்னும் உதவியாக இருக்கும் என்று நினைத்தேன். இதற்காக பெண்ணின் உடலின் அமைப்பு, உடலில் ஏற்படும் பருவ மாற்றங்கள், கருப்பை, கருமுட்டை உருவாகுதல், மாதவிலக்கு போன்றவற்றை குறித்து சில வரைப்படங்களை எல்லாம் தயார் செய்து கொண்டு சென்றேன்.
முதலில் மாணவிகள் மற்றும் அவர்களுடைய அம்மாக்களுடன் பேச்சு கொடுத்து அவர்களின் மனநிலையை அறிந்து கொண்டு பிறகு அவர்களுக்கு என்ன தேவை என்பதைப் புரிந்து கொண்டு பேசலானேன்.
மாதவிலக்கின் போது பெண்கள் தங்களைப் எப்படி சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்றும், ஏன் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்றும் புரியவைத்தேன். மேலும் அந்த நேரங்களில் முகப்பரு தோன்றுதல், இடுப்பு வலி, வயிறுவலி ஏற்படுவதின் காரணங்களும், அவற்றிற்கான மருத்துவ குறிப்புகளையும் கூறினேன்.
மேலும் ஏற்கெனவே பூப்படைந்தப் பெண் குழந்தைகளுடன் உரையாடியதில் இருந்து ஓர் அதிர்ச்சியான தகவல் கிடைத்தது. அது என்னவென்றால் தற்போது எவ்வளவுவோ விலை மலிவான நாப்கின்கள் வந்துவிட்ட போதிலும், சாப்பாட்டுக்கே வறுமை நிலையில் இருக்கும் இந்தக் குழந்தைகள் மாதந்தோறும் நாப்கின்கள் வாங்கி பயன்படுத்த முடியாமல் இன்னமும் மாதவிலக்கின்போது பழைய துணிகளைப் பயன்படுத்துகிறார்கள் என்பது தெரிய வந்தது. இதனால் ஏற்படும் நோய் தோற்று குறித்தும், அதன்மூலம் கருப்பை கேன்சர் கூட வரும் அபாயம் உள்ளது என்றும் விளக்கினேன்.
தற்போது அந்தக் குழந்தைகளிடமும், அவர்களின் பெற்றோர்களிடமும் நல்ல விழிப்புணர்வு ஏற்பட்டிருக்கிறது என்றும், கவுன்சிலிங்கிற்கு பிறகு நிறைய குழந்தைகள் நாப்கின்கள் உபயோகப்படுத்த ஆரம்பித்துவிட்டதாக என்னிடம் கூறினார்கள். மிகவும் சந்தோஷமாக இருந்தது'' என்றார்.