'சின்னக்குயில்' சித்ரா
1979-ஆம் ஆண்டு கர்நாடக இசைப் பாடகரும், இசையமைப்பாளருமான எம்.ஜி.ராதாகிருஷ்ணன் மூலமாக மலையாளத் திரையுலகில் பின்னணிப் பாடகியாக அறிமுகமான கே.எஸ்.சித்ரா, கடந்த 37 ஆண்டுகளாக மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம் என நான்கு மொழிகளிலும் தொடர்ந்து பாடி வருகிறார்.
1979-ஆம் ஆண்டு கர்நாடக இசைப் பாடகரும், இசையமைப்பாளருமான எம்.ஜி.ராதாகிருஷ்ணன் மூலமாக மலையாளத் திரையுலகில் பின்னணிப் பாடகியாக அறிமுகமான கே.எஸ்.சித்ரா, கடந்த 37 ஆண்டுகளாக மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம் என நான்கு மொழிகளிலும் தொடர்ந்து பாடி வருகிறார்.
பின்னணிப் பாடகியாகத் தன்னை உருவாக்கியதற்கு மலையாள இசையமைப்பாளர்கள் ரவீந்திரன், ஷ்யாம், ஜெர்ரி அமல்தேவ், சுன்னூர் ராமன், ஜான்சன் ஆகியோர் முக்கியமானவர்கள். அதேபோன்று தமிழில் ""நீ தானா அந்தக் குயில்'' பாடலின் மூலம் இசைஞானி இளையராஜா அறிமுகப்படுத்திய பின்னர் இதுவரை 15 ஆயிரம் திரைப்பாடல்கள் மற்றும் 4 ஆயிரம் தனிப்பாடல்கள் பாடியுள்ளதாக கூறும் சித்ரா, தென்னிந்தியாவில் 4 மாநில அரசிடமிருந்தும் விருது பெற்ற ஒரே பின்னணிப் பாடகி என்ற சிறப்பையும் பெற்றுள்ளார். கேரள மாநில அரசிடமிருந்து மட்டுமே 16 முறை சிறந்த பாடகிக்கான விருதைப் பெற்றுள்ளார். ஏ.ஆர்.ரகுமான், அனுமாலிக், சந்தீப் சவுடா, ராஜேஷ் ரோஷன் ஆகியோர் இசையமைப்பில் இந்தியிலும் பாடியுள்ளார்.
திருவனந்தபுரத்தைச் சேர்ந்த இசைக் குடும்பமொன்றில் பிறந்த இவர், முதலில் அவரது தந்தை கிருஷ்ணன் நாயரிடம்தான் சங்கீதம் கற்கத் தொடங்கினார். சங்கீதத்தில் முதல் வகுப்பில் பிஏ பட்டம் பெற்ற இவர், பின்னர் சங்கீதத்தில் எம்.ஏ பட்டம் பெற்றவுடன், தேசியத் திறமை தேர்வு உதவித் தொகை பெற்று கேரள பல்கலைக் கழகத்தில் ஓய்வுபெற்ற பேராசிரியர் ஓமன குட்டியிடம் கர்நாடக சங்கீதம் கற்கத் தொடங்கினார்.
தன் 37 ஆண்டுகால இசைப்பயணத்தில் இந்தியாவில் மட்டுமன்றி வெளிநாடுகளிலும் நடந்த இசை நிகழ்ச்சிகளில் கே.ஜே.யேசுதாஸýடன் இணைந்து பாடியதும், அவரது தரங்கிணி ஆடியோ கேசட்களும் தன்னுடைய வாழ்க்கையில் முக்கிய திருப்பங்கள் என்று கூறுகிறார்.
மலையாள இசையமைப்பாளரும் பாடகருமான பிஜிபால் மணியில் இவரைப் பற்றி கூறுகையில், ""சித்ரா பாடுவதற்கு முன் பாடலைப் புரிந்துகொள்ள 5 முதல் 10 நிமிடங்கள் போதும். பாடலின் காட்சியை விளக்குவதுதான் இசையமைப்பாளரின் வேலை. அதை உள்வாங்கிப் பாடக்கூடிய திறமை இவரிடம் உள்ளது. தற்போது தனி ஆல்பங்களுக்காக அஷ்டபதி மற்றும் பக்திப் பாடல்களைப் பாடி வருகிறாராம்.
சித்ரா கூறுகிறார்:
""ஒருநாள்கூட என்னால் பாடாமல் இருக்க முடிவதில்லை. நான் திரையுலகில் பின்னணி பாட வந்தபோது இருந்த சூழ்நிலை இப்போது இல்லை. ரிகார்டிங் செய்வதற்கு முன் இசைக் குழுவினருடன் சேர்ந்து பல முறை ரிகர்சல் செய்வோம். இசைக் கலைஞர்கள் ஒரு பகுதியிலும் பாடுபவர் வேறொரு பகுதியிலும் இருப்பார்கள். இப்போது திரையுலகம் பல்வேறு நவீன தொழில்நுட்பங்களுடன் வளர்ந்துவிட்டது. மேலும் மேலும் வளர்ந்து வருகிறது. உடன் பாடும் ஆண் பாடகர் யார் என்பதுகூடத் தெரிவதில்லை.
உடன் பாடுபவர் மற்றும் இசைக் கலைஞர்களுடன் சேர்ந்து ரிகர்சல் எடுத்த காலமெல்லாம் மாறிவிட்டது. முந்தைய தலைமுறையினர் போலின்றி தற்போது நல்ல திறமையான பாடகர்கள் உருவாகி வருகின்றனர். இதற்கு டிவி ரியாலிட்டி ஷோக்கள் தான் காரணம், இவை பெருமளவில் உதவுகின்றன. ஆனால், அனைவருக்குமே இத்துறையில் வாய்ப்பு கிடைப்பதில்லை. தற்போதைய பாடகர்களின் பாடல்கள் மிகவும் அருமையாக இருக்கிறது. நல்ல திறமை இருக்கிறது. என்னுடைய திரையுலக இசை அனுபவங்களை இன்றைய இளைஞர்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். அதற்காகவே என்னுடைய நிகழ்ச்சிகள் நடக்கும்போது கூடவே கருத்தரங்கம் ஒன்றையும் ஏற்பாடு செய்யக் கூறுகிறேன்'' என்கிறார் சித்ரா.