மகளிர்மணி

சுலபமான குழம்பு வகைகள்

எளிதாகச் செய்து சுவைக்க சுலமான குழம்பு வகைகள்

தவநிதி

காளான் குழம்பு

தேவையானவை:

நறுக்கிய காளான் - ஒரு கிண்ணம்

சின்ன வெங்காயம் - 10

தேங்காய் துண்டுகள் - 2

சீரகம் - ஒரு தேக்கரண்டி

மிளகு - 3 தேக்கரண்டி

தனியாத்தூள் - 2 தேக்கரண்டி

மஞ்சள்தூள், மிளகாய்த்தூள் தலா - அரை தேக்கரண்டி

கறிவேப்பிலை - சிறிதளவு

எண்ணெய் - ஒரு மேசைக்கரண்டி,

உப்பு } தேவையான அளவு.

செய்முறை: தேங்காய், மிளகு, சீரகத்தை சேர்த்து அரைத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் சிறிது எண்ணெய் விட்டு நறுக்கிய காளான், சின்ன வெங்காயம், அரைத்த மசாலா, உப்பு, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், தனியாத்தூள், கறிவேப்பிலை சேர்த்து தண்ணீர் தெளித்து, மூடி விடவும். லேசாக வெந்ததும் மூடியைத் திறந்து, தேவையான அளவு தண்ணீர் விட்டு, காளான் வேகும்வரை கொதிக்க வைத்து இறக்கவும்

•••

மீல் மேக்கர் குழம்பு

தேவையானவை:

சோயா உருண்டைகள் - முக்கால் கிண்ணம்

(மீல் மேக்கர்)

வெங்காயம் - 1

தக்காளி -  3

இஞ்சி-பூண்டு விழுது - 2 தேக்கரண்டி

வறுத்துப் பொடித்த சீரகம் - 2 தேக்கரண்டி

கொத்துமல்லி, கறிவேப்பிலை - சிறிதளவு

மஞ்சள்தூள் - அரை தேக்கரண்டி

கடுகு, உளுத்தம் பருப்பு தலா - அரை தேக்கரண்டி

சோம்பு - ஒரு தேக்கரண்டி

எண்ணெய் - 2 மேசைக்கரண்டி

மிளகாய்த்தூள், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: வெங்காயத்தைப் பொடியாக நறுக்கவும். சோயாவைக் கொதிக்கும் தண்ணீரில் போட்டு 10 நிமிடம் வைத்திருந்து, நன்றாகப் பிழிந்து எடுத்துக் கொள்ளவும். கொதிக்கும் நீரில் தக்காளியைப் போட்டு 2 நிமிடம் வைத்திருந்து எடுத்து, தோலுரித்து ஒன்றிரண்டாக மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, சோம்பு தாளித்து, வெங்காயத்தைப் போட்டு நன்றாக வதக்கவும். இஞ்சி-பூண்டு விழுதை சேர்த்து வதக்கி மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், கறிவேப்பிலை, கொத்துமல்லி, உப்பு, அரைத்த தக்காளி விழுது சேர்த்து வதக்கவும். நன்கு வதங்கியதும் சோயா உருண்டைகளைச் சேர்த்து வதக்கவும். தேவையான அளவு தண்ணீர் (தேங்காய்ப்பாலும் சேர்க்கலாம்) விட்டு, வறுத்துப் பொடித்த சீரகத்தைப் போட்டு, ஒரு கொதி வந்ததும் இறக்கவும்.

•••

மோர்க் குழம்பு

தேவையானவை:

மோர் - ஒரு கிண்ணம்

தேங்காய் துண்டுகள் - 2

பொட்டுக்கடலை -1 தேக்கரண்டி

பச்சை மிளகாய் - 3

பூண்டு - 1 பல்

இஞ்சி - சிறிய துண்டு

சீரகம் - 2 தேக்கரண்டி (இவற்றை ஒன்றாகச் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்)

மஞ்சள்தூள், வெந்தயம் - தலா அரை தேக்கரண்டி

கறிவேப்பிலை, பெருங்காயம்

வெண்டைக்காய் (அ) கத்திரிக்காய் வத்தல் (எண்ணெய்யில் வறுத்துக் கொள்ளவும்)

வெள்ளரிக்காய், கொத்துமல்லி - சிறிதளவு

கடுகு, உளுத்தம்பருப்பு  தலா - 1 தேக்கரண்டி

எண்ணெய் - 1 குழிக்கரண்டி

உப்பு - தேவையான அளவு.

செய்முறை: அடி கனமான பாத்திரத்தில் மோரை விட்டு, அரைத்த தேங்காய் கலவை, மஞ்சள்தூள், உப்பு போட்டு அடுப்பில் வைத்து மிதமான தீயில் கிளறவும். கலர் மாறியதும், சிறிது தண்ணீர் விட்டு கொதிக்க வைத்து, வறுத்த வத்தல், வெள்ளரிக்காயைச் சேர்த்து கொதிக்க வைத்து இறக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, வெந்தயம், பெருங்காயம், கறிவேப்பிலை சேர்த்து நன்றாக வறுத்து குழம்பில் கொட்டி, கொத்துமல்லி தூவி பரிமாறவும்.

••

வெந்தயக்கீரை குழம்பு

தேவையானவை:

சின்ன வெங்காயம் - கால் கிண்ணம்

வெந்தயக்கீரை - ஒரு கட்டு (சுத்தம் செய்து,பொடியாக நறுக்கவும்)

பூண்டு - 4 பல்

தக்காளி - 2

புளி - நெல்லிக்காய் அளவு

மஞ்சள்தூள் - கால் தேக்கரண்டி

கடுகு, உளுத்தம்பருப்பு - 1 தேக்கரண்டி

மிளகாய்த்தூள், தனியாத்தூள் - 1தேக்கரண்டி

சீரகம் - ஒரு தேக்கரண்டி

குழம்பு பொடி - ஒன்றரை தேக்கரண்டி

கறிவேப்பிலை - சிறிதளவு

எண்ணெய் - ஒன்றரை மேசைக்கரண்டி

உப்பு -  தேவையான அளவு.

செய்முறை: வெங்காயம், பூண்டு, தக்காளியைப் பொடியாக நறுக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு, சீரகம் தாளித்து வெங்காயம், பூண்டு, தக்காளி சேர்த்து வதக்கவும். இதில், மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், தனியாத்தூள், குழம்பு பொடி, உப்பு, கீரை சேர்த்து வதக்கி, புளியைக் கரைத்து ஊற்றி, மூடி போட்டு சிறிது நேரம் வைத்திருந்து, பிறகு மூடியைத் திறந்து, மிதமான தீயில் 5 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கவும்.

•••

சுரைக்காய் குழம்பு

தேவையானவை:

சிறிய சுரைக்காய் - 1

பச்சை மிளகாய் -2

வெங்காயம் - 1

இஞ்சி-பூண்டு விழுது - 1 தேக்கரண்டி

மிளகாய்த்தூள் - 2 தேக்கரண்டி

புளி - நெல்லிக்காய் அளவு

தேங்காய் துண்டுகள் - 2

சீரகம் -  1 தேக்கரண்டி

மஞ்சள்தூள் - கால் தேக்கரண்டி

தனியாத்தூள் - ஒன்றரை தேக்கரண்டி

எண்ணெய் - 2 குழிக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

செய்முறை: தேங்காய், சீரகத்தை அரைத்துக் கொள்ளவும். காய்களைப் பொடியாக நறுக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்கவும். இதில், கீறிய பச்சை மிளகாய், இஞ்சி-பூண்டு விழுதை சேர்த்து, பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். புளியைக் கரைத்து ஊற்றி மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், தனியாத்தூள், அரைத்த தேங்காய்-சீரக விழுதைச் சேர்த்து வதக்கி சுரைக்காய், உப்பு, தேவையான தண்ணீர் விட்டு, கொதிக்கவிடவும். நன்றாக வெந்ததும் இறக்கி விடவும்.

•••

பருப்புக்கீரை குழம்பு

தேவையானவை:

பருப்புக்கீரை - ஒரு கட்டு (கழுவி, பொடியாக நறுக்கவும்)

துவரம்பருப்பு - முக்கால் கிண்ணம்

பூண்டு - 2 பல்

வெங்காயம், தக்காளி - 1

மஞ்சள்தூள் - அரை தேக்கரண்டி

கடுகு, சீரகம், உளுத்தம்பருப்பு - தலா 1 தேக்கரண்டி

தனியாத்தூள் - ஒரு தேக்கரண்டி,

மிளகாய் வற்றல் - 3

பச்சை மிளகாய் - 2

சின்ன வெங்காயம் - 5

புளி - நெல்லிக்காய் அளவு

குழம்பு பொடி - 2 தேக்கரண்டி

கறிவேப்பிலை, கொத்துமல்லி - சிறிதளவு

எண்ணெய் - ஒரு மேசைக்கரண்டி

உப்பு - தேவையான அளவு.

செய்முறை: தக்காளி, வெங்காயத்தைப் பொடியாக நறுக்கவும். குக்கரில் எண்ணெய் விட்டு, துவரம்பருப்பு, கீரை, தக்காளி, உரித்த பூண்டு பல், கீறிய பச்சை மிளகாய், பாதி அளவு சின்ன வெங்காயம், மஞ்சள்தூள் போட்டு, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, வேக வைத்து எடுக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து மீதமுள்ள வெங்காயம், மிளகாய் வற்றல், சீரகம், தனியாத்தூள், கறிவேப்பிலை, குழம்பு பொடி, உப்பு போட்டு வதக்கி, புளியைக் கரைத்து விடவும். கடைசியில் நறுக்கிய கொத்துமல்லி சேர்த்து வதக்கி, வேக வைத்த பருப்புக் கலவையில் கொட்டிக் கடைந்து, சிறிது நேரம் கொதிக்க வைத்து இறக்கவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

4 சுங்கச் சாவடிகள்: 50% கட்டணத்தை செலுத்த தமிழ்நாடு அரசு முடிவு! - நீதிமன்றத்தில் தகவல்

ஐஐடி மும்பையில் விடுதியின் கட்டடத்தில் இருந்து குதித்து மாணவர் தற்கொலை

நான் துரோகம் செய்யவில்லை, தற்கொலைக்கு முயன்றேன்..! விவாகரத்து பற்றி சஹால்!

மாலை மலர்ந்த ஊதா... அம்ரிதா ஐயர்!

மோடியின் கைப்பாவையாக மாறிய தேர்தல் ஆணையம்: கார்கே குற்றச்சாட்டு!

SCROLL FOR NEXT