மாற்றுங்கள்... சாப்பிடும் முறையை!
ஆரோக்கியம் மற்றும் கட்டுடல் (ஃபிட்னஸ்) பயிற்சியாளராக இருப்பவர் நமீதா ஜெயின். மும்பையின் பிரபலங்கள்
ஆரோக்கியம் மற்றும் கட்டுடல் (ஃபிட்னஸ்) பயிற்சியாளராக இருப்பவர் நமீதா ஜெயின். மும்பையின் பிரபலங்கள் தீபிகா படுகோன், ஹேம மாலினி, சுனில் ஷெட்டி மற்றும் விளையாட்டு வீராங்கனை சாய்னா நெவால் போன்றோருக்கு ஃபிட்னஸ் பயிற்சியாளராக இருந்து வருகிறார். அது தவிர, எழுத்தாளர் என்கிற இன்னொரு முகமும் இவருக்கு உண்டு. ஆரோக்கியம் மற்றும் கட்டுடல் குறித்து பத்துக்கும் மேற்பட்ட நூல்களையும் எழுதியுள்ளார். தற்போது இவர், சிறுவர் - சிறுமியர் மற்றும் இளைஞர்கள் உணவு மேஜையின் அடிப்படை நாகரிகத்தை தெரிந்துகொள்வதற்காக "அனிமேட்டட் குறும்படம்' ஒன்றை திரைக்கதை எழுதி தயாரித்து வெளியிட்டிருக்கிறார். குறும்படம் குறித்து அவர் நம்முடன் பகிர்ந்து கொண்டவை:
""பொதுவாக இந்தியர்கள் கையால் உணவு உண்ணும் கலாசாரத்தைக் கொண்டவர்கள். ஆனால் தற்போது பெரும்பாலான இளைஞர்கள் படிப்பதற்காகவும், படிப்பு முடித்ததும் வேலைக்காகவும் வெளிநாடுகளுக்குச் செல்கிறார்கள். இதனால் இந்திய உணவுகளை தவிர்த்து வெஸ்டர்ன் உணவுகளைச் சாப்பிடுகின்றனர். அப்படி உணவகங்களுக்குச் செல்லும்போது அங்குள்ள உணவு மேஜையின் மீது இருக்கும் ஸ்பூன், கத்தி, ஃபோர்க் போன்றவற்றை எப்படி கையாளுவது என்று தெரியாமல் திணறுகிறார்கள். நாம் என்ன சாப்பிடுகிறோம் என்பதைவிட, சாப்பிடும் முறையால்தான் நாம் அடையாளம் காணப்படுகிறோம்.
எனவே, இந்தியாவின் ஒவ்வோர் இளைஞரும் ஒழுங்கான முறையில் சாப்பிட வேண்டும் என்பதன் முக்கியத்துவத்தைப் புரிந்துகொள்ள "டைனிங் எடிக்யூட்'டைத் தயாரித்துள்ளேன். இதன் மூலம் உணவு மேஜையின் அடிப்படை நாகரிகத்தை நிச்சயம் எல்லாராலும் புரிந்து கொள்ள முடியும். மேலும் பள்ளி பருவத்திலேயே குழந்தைகள் "டைனிங் எடிக்யூட்'டைத் தெரிந்து கொண்டால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பதால் பள்ளி குழந்தைகளைக் கவரும் விதத்தில் அனிமேடட் வடிவத்தில் இதைத் தயாரித்துள்ளேன். இந்தியாவில் உள்ள 100 பள்ளிகளுக்கு இந்த டிவிடியை இலவசமாக தரவிருக்கிறோம்.
உணவு மேஜையின் முன் கடைப்பிடிக்க வேண்டியவை:
* முதலில் இருக்கையில் நிமிர்ந்து நேராக அமர வேண்டும்.
* மேஜையின் மீது ஒட்டி அமரக் கூடாது.
* உணவு மேஜையில் ஒவ்வொரு பொருளையும் சரியான இடத்தில் வைக்க வேண்டும். அதாவது, சாப்பிடும் பிளேட் நமக்கு நேரே இருக்க வேண்டும். பிரெட் பிளேட் இடது புறத்தில் சற்று மேலே இருக்க வேண்டும்.
* தண்ணீர் டம்ளர் இடது பக்கத்திற்கு சற்று மேலே இருக்க வேண்டும். பிரெட், மீல், வாட்டர். இதை சுருக்கி (BMW) என்று நினைவில் கொள்ள வேண்டும்.
* ஃபோர்க் இடது புறத்தில் பிரட் பிளேட்டுக்கு சற்று கீழே இருக்க வேண்டும்.
* கத்தி, ஸ்பூன் போன்றவை வலது புறத்தில் தண்ணீர் டம்ளருக்கு சற்று கீழே இருக்க வேண்டும்.
* பட்டர் கத்தி பிரெட் பிளேட்டின் மேல் இருக்க வேண்டும்.
* பிரெட் பிளேட் அருகே சால்ட் அண்ட் பெப்பர் இருக்க வேண்டும்.
* நாப்கின் பிளேட் தண்ணீர் டம்ளருக்கு கீழே இருக்க வேண்டும்.
அடுத்து முக்கியமானது டேபிள் மேனர்:
* சாப்பிடத் தொடங்கும் முன் நாப்கினை மடியில் விரித்து போட்டுக் கொள்ள வேண்டும். கழுத்தில் கட்டக் கூடாது. அல்லது பக்கத்து இருக்கை காலியாக இருந்தால் அதில் வைக்கலாம்.
* நமது டேபிளில் நம்மோடு அமர்ந்திருப்பவர்கள் எல்லாருக்கும் பரிமாறும் முன் நாம் உண்ணக் கூடாது. மற்றவர்களுக்கு பரிமாறும் வரை காத்திருக்க வேண்டும்.
* மெதுவாக வாயை மூடினாற் போன்று மென்று சாப்பிட வேண்டும். சாப்பிடும் போது சத்தம் வரக் கூடாது.
* தேவையான பொருளை கேட்கும்போது "ப்ளீஸ்' என்று கேட்டு வாங்க வேண்டும். பரிமாறியதும் "Thanks' என்று சொல்ல வேண்டும்.
* உங்களுக்கு பிடிக்காத பொருளை பரிமாற வந்தால் "No Thank You' என்று சொல்ல வேண்டும்.
* சாப்பிட்டு முடித்ததும் நாப்கினை எடுத்து இடது புறத்தில் வைக்க வேண்டும்.
* சாப்பிடும்போது மூக்கடைப்பு மற்றும் ஒழுகும் பிரச்னை ஏற்பட்டால் நாப்கினால் மூக்கைத் துடைக்கக் கூடாது. இருமல், தும்மல் ஏற்பட்டால் கர்ச்சீப்பால் மூடிக் கொள்ள வேண்டும்.
* இருக்கையைவிட்டு எழுந்திருக்கும் முன் "May I Please be Excused' என்று சொல்ல வேண்டும்.
* பயன்படுத்தி முடித்ததும் ஃபோர்க், கத்தியின் முனை பிளேட்டின் நடுவில் சற்று சாய்த்து பதினோரு மணியை குறிக்கும் வடிவில் வைக்க வேண்டும்.
* நமது கைப்பையை உணவு மேஜையின் மீது வைக்கக் கூடாது. இருக்கையின் அடியில் வைக்க வேண்டும். அல்லது பக்கத்து இருக்கை காலியாக இருந்தால் வைக்கலாம். அல்லது பர்ஸôக இருந்தால் மடியில் வைத்துக் கொள்ளலாம். அல்லது பர்ஸ் வைக்கும் ஹூக் இருந்தால் அதில் மாட்டி வைக்கலாம்.
* உணவு உண்ணும் வரை செல்போனை சைலன்ட்டில் வைக்க வேண்டும்.
* உணவை எடுத்து மற்றவருக்கு கொடுக்கும்போது வலது கையில் கொடுக்க வேண்டும். இடது கையில் பெற வேண்டும்.
* வெய்ட்டரை அழைக்கும் போது பெரும்பாலும் கண்களாலேயே கூப்பிட வேண்டும். அவர் பார்க்கவில்லை என்றால் ஆள்காட்டி
விரலை மட்டும் உயர்த்தி பிடித்தால் அவர் அருகே வருவார். சத்தம்போட்டு அழைக்கக் கூடாது.
* உணவு மேஜையின் முன் அமர்ந்து தலை சொரிவது, தலை வாருவது செய்யக் கூடாது.
* பஃபே உணவுகளில் கலந்து கொள்ளும் போது உங்கள் முறை வரும் வரை வரிசையில் சென்று உணவைப் பெற்றுக் கொள்ள வேண்டும்.
* உணவு வரிசையில் நின்று கொண்டு சாப்பிடுவது கூடாது.
* உணவைக் கொஞ்சம் கொஞ்சமாகப் பிளேட்டில் எடுத்து வைத்து உண்ண வேண்டும்.
* கை குலுக்கும்போது அடுத்தவருக்கு வலிக்கும் அளவிற்கு மிக அழுத்தம் கொடுத்து கை குலுக்கக் கூடாது.
* சிறிது சிறிதாக எடுத்து உண்ண வேண்டும். வாயில் திணிக்கக் கூடாது. மற்றவர் மீது தெறிக்கும் படி செய்யக் கூடாது.
* சூப்பை அருந்தும்போது கொஞ்சம் கொஞ்சமாக ஸ்பூனில் எடுத்து அருந்த வேண்டும். அப்படியே பவுலோடு எடுத்து அருந்தக் கூடாது.
* விருந்தாளிகள் முன்பு பல் குச்சியால் குத்துவது கூடாது. தேவைப்பட்டால் அல்லது ஒரு கையால் வாயை மூடிக் கொண்டு பல் குச்சி வெளியே தெரியாதவாறு குத்த வேண்டும்''
போன்றவையே உணவு மேஜையின் நாகரிகமாக கடைப்பிடிக்கப் படுவதாக நமிதா கூறுகிறார்.