முகப்பு
மகளிர்மணி

கட்டுடல் வேண்டுமா?

'இந்திய இளைய தலைமுறையிடம்  சில   விஷயங்கள்  பிரச்னைகளாக உருவெடுத்திருக்கின்றன. இளைஞர்களின் கட்டு மஸ்தான தசை அமைப்பிற்காக, உணவுக்கு  மாற்றாக

Updated On : 24 ஜனவரி, 2024 at 6:16 PM
பகிர்:

உணவு வேளையில், மேசை நாகரிகம் குறித்து விவாதித்த நமீதா ஜெயின், உடலமைப்பை 'கட்டுடலாக' வைத்திருக்க சில டிப்ஸ் வழங்குகிறார்.

'இந்திய இளைய தலைமுறையிடம் சில விஷயங்கள் பிரச்னைகளாக உருவெடுத்திருக்கின்றன. இளைஞர்களின் கட்டு மஸ்தான தசை அமைப்பிற்காக, உணவுக்கு மாற்றாக சில செயற்கை உணவுகள் பானங்களை சில உடற் பயிற்சி நிலையங்களில் உட்கொள்ளச் சொல்கிறார்கள். டாக்டர்கள் அறிவுரை இல்லாமல் செயற்கை உணவு வகைகளை உட்கொள்ளுவது உடல் ஆரோக்கியத்தைக் கெடுக்கும்.

இளம் பெண்கள் எத்தனை மெலிய முடியுமோ அத்தனை மெலிந்து ஸீரோ சைஸுக்கு உடலைக் கொண்டு வரவேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள். அவர்கள் ஒன்றை மறந்துவிட்டார்கள். ஒவ்வொரு பெண்ணும் பலதரப்பட்ட ஜீன்களைக் கொண்டவர்கள். எல்லா பெண்களுக்கும் உடல்வாகு ஒன்றுபோல 
இருக்காது.

இளைய தலைமுறைக்கு எந்த உணவு வகைகளை எங்கே எந்த அளவுக்குச் சாப்பிட வேண்டும் என்று தெரிவதில்லை. ஹோட்டல்களிலும், "ஃபாஸ்ட் ஃபுட்' கடைகளிலும் சாப்பிட்டு தள்ளுகிறார்கள். சிலர் அதிக உணவை உட்கொண்டு அவதிப்படுகிறார்கள். சிலர், குண்டாகிவிடுவேனோ என்று பயப்பட்டு உணவின் அளவை வேண்டுமென்றே குறைத்துக் கொள்கிறார்கள். உடல் பருமனைக் குறைக்க வேண்டும் என்று அதிகப்படியான உடற் பயிற்சிகளை செய்கிறார்கள். அதிகப்படியான உடற்பயிற்சி பல ஆரோக்கிய பிரச்னைகளை  உண்டாக்கும். உடலுக்கு, உடல் எடைக்கு ஏற்றவாறு உடற் பயிற்சி அமைய வேண்டும். அதேபோன்று எவ்வளவு ஓய்வு வேண்டும் என்பதையும் உடல் எடைக்கு ஏற்றவாறு ஓய்வு நேரத்தையும் கணிக்க வேண்டும். ஓய்வு தசைகளுக்கு அவசியம். சரியான உணவை சரியான நேரத்தில் உண்ண வேண்டும். உடலில் தண்ணீர் குறைவு ஏற்படாமல் பார்த்து தேவையான தண்ணீர் குடிக்க வேண்டும்.

நான் எங்கு சென்றாலும் எப்படி உடஅல் பருமனைக் குறைப்பது என்ற கேள்விதான் அதிகம் கேட்கப்படுகிறது. உடல் எடையைக் குறைக்க உடல் பயிற்சியும், சரியான உணவும்தான் முக்கியம். எல்லாவற்றையும் விட சுறுசுறுப்பாக இருக்க வேண்டும். தினமும் உடற் பயிற்சி செய்கிறோம் என்பதற்காக உணவை அதிகம் சாப்பிடக் கூடாது. 

குறைந்த கலோரி உள்ள உணவுவகைகளை சேர்த்துக்கொள்ள வேண்டும். பசியுடன் இருக்கக் கூடாது. வேளா வேளைக்கு உணவு உண்ண வேண்டும். உணவை ஒதுக்கக் கூடாது. சிலர் டயட்டில் இருப்பதாகச் சொல்லி உணவை வேண்டாம் என்று விலக்கிவிடுவார்கள். அல்லது கொஞ்சமாக சாப்பிடுவார்கள். கடைசியில், பசி கூடி, வாரி வழித்து விழுங்குவார்கள். அது கூடாது.

சரிவிகித உணவு மட்டுமே உடல் எடை குறைவதை உறுதி செய்யும். கலோரிகளைக் குறைக்க ஓட்டம், நீந்துதல், நடனம், சைக்கிள் ஓட்டுதல், இறகுப் பந்தாட்டம், டென்னிஸ் போன்றவற்றில் ஈடுபடலாம். எந்த உடற் பயிற்சியை செய்தாலும் நமது நன்மைக்காகச் செய்கிறோம் என்ற உணர்வுடன் ஈடுபாட்டுடன் செய்ய வேண்டும். தினமும் ஒரு மணி நேரம் என்று வாரத்திற்கு ஆறு நாட்களாவது உடற் பயிற்சி செய்ய வேண்டும்.

ஃபிட்னெஸ் குருவாக இருக்கும் நமிதா முன்பு பருமனாக இருந்தார் என்று சொன்னால் நம்புவது கடினம். ஆனால் உண்மை அதுதான்... 'ஐஸ் கிரீம்' , 'சிப்ஸ்' அதிக உணவு எல்லாம் சேர்ந்து என் உடல் பருமனைக் கூட்டின. உடல் எடை கூடுகிறது என்று தெரிந்தும் சரிவிகித உணவுக்கு மாறினேன். உடற் பயிற்சி செய்தேன். உடல் எடையைக் குறைக்க வேண்டும் என்று பெயரளவில் முடிவெடுத்தால் போதாது. மனதளவில் உறுதியான முடிவு எடுக்க வேண்டும். எல்லாருக்கும் உடல் சீராக இருக்க வேண்டும் என்பதுதான் லட்சியம். ஆனால், உடலை சீராக வைக்க வேண்டும் என்று முனைபவர்கள் எல்லாரும் தங்கள் முயற்சிகளில் வெற்றி பெறுவதில்லை... கோளாறு உடற் பயிற்சியில் இல்லை... உடற்பயிற்சியை முறையாகச் செய்யாமல், உணவைக் கட்டுப்படுத்த முடியாமல் உடல் பருமனைக் குறைக்க முடியாது' என்றார்.


- கண்ணம்மா பாரதி

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.