முகப்பு
மகளிர்மணி

மைதானத்தைக் கட்டுக்குள் வைத்திருக்கும் மங்கைகள்

இன்று பெண்கள் செய்யாத வேலையே இல்லை என்று சொல்லும் அளவுக்கு எல்லா வேலையிலும் பெண்கள் முன்னிலை வகித்து வருகின்றனர்.

Updated On : 29 ஜனவரி, 2024 at 6:04 PM
பகிர்:

இன்று பெண்கள் செய்யாத வேலையே இல்லை என்று சொல்லும் அளவுக்கு எல்லா வேலையிலும் பெண்கள் முன்னிலை வகித்து வருகின்றனர். விளையாட்டிலும் அதே நிலைதான். ஆனால் உலகம் முழுவதும் பார்த்து ரசிக்கும் கிரிக்கெட்டில் பெண்கள் அணி, ஆண்கள் அணி என்று இருந்தாலும், போட்டியில் நடுவர்களாக ஆண்கள் தான் பெரும்பாலும் பணியாற்றுகின்றனர். அதில் ஏன் பெண்கள் வரவில்லை? என்று யாரும் கேள்வி கேட்டால், " இதோ நாங்கள் இருக்கிறோம்" என்று குரல் கொடுக்கின்றனர் இந்தியாவின் முதல் இருபக்க பெண் நடுவர்களான சென்னையைச் சேர்ந்த என்.ஜனனி மற்றும் டாக்டர் ஆர்த்தி. 
முதலில் என்.ஜனனி: எனக்கு மிகவும் பிடித்த விளையாட்டுக்கள் இரண்டு. அவை டென்னிஸ் மற்றும் கிரிக்கெட். நான் இந்த இரண்டு விளையாட்டுக்களையும் ரசித்தாலும் கிரிக்கெட்டில் 
ஏதாவது ஒரு வழியில் பங்கு கொள்ள வேண்டும் என்று ஆசைப்பட்டேன். அப்பொழுதுதான் என் நண்பர்கள் சிலர் கிரிக்கெட்டில் நடுவர்களாக ஏன் பணியாற்றக் கூடாது என்று கேட்டனர். எனக்கும் ஆர்வமும் ஆசையும் ஏற்பட்டது.
ஆனால் நடுவராகப் பணியாற்ற முதலில் தேர்வு எழுத வேண்டும் என்று தெரிந்தது. எப்படியாவது இந்தத் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்று ஆசைப்பட்டு படிக்க ஆரம்பித்தேன். தேர்வு எழுதியது 2015-ஆம் ஆண்டு. எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்ற பின்பு வாய்மொழித் தேர்வில் (வைவா) தேறியவுடன் நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. 
தற்போது சாஃப்ட்வேர் நிறுவனத்தில் வேலை பார்க்கிறேன். வீட்டுக்கு வந்தவுடன் எனது கணினியில் பல்வேறு கிரிக்கெட் போட்டிகளைப் பார்த்து ரசிப்பேன். எனக்கு பிடித்த நடுவர்கள் மூன்று பேர். அவர்கள் வெங்கட்ராகவன், டேவிட் ஷெப்பர்ட் மற்றும் சைமன் டயூஃபில். இதில் நான் சிறுமியாக இருந்தபோது நமது கிரிக்கெட் வீரர் வெங்கட்ராகவனிடம் ஆட்டோகிராப் வாங்கியுள்ளேன். நான் தேர்வை எழுதும் போதுதான் என்னுடன் டாக்டர் ஆர்த்தியும் தேர்வை எழுதினார். இன்று இருவரும் கிரிக்கெட் போட்டிகளில் ஒன்றாக, நடுவர்களாகப் பணியாற்றுகிறோம். எங்களுக்கு முன்பு சுமதி ஐயர் என்பவர் பெண் நடுவராகப் பணியாற்றியிருக்கிறார். இருப்பினும் இருபக்கமும் பெண்களே நடுவர்களாக இருப்பது முதலில் எங்கள் ஜோடிதான் என்று பலரும் கூறும்போது பெருமையாக இருக்கிறது. 
கடந்த மாதம்தான் முதல் போட்டி. நான்காம் டிவிஷன் கிரிக்கெட் போட்டியில் முதன்முறையாக இருவரும் நடுவர்களாக இருந்தோம். இதற்கு முன்பு வரை நான் ஒரு சில போட்டிகளில் நடுவராகப் பணியாற்றியிருந்தாலும் எனக்கு இதுவரை எந்தப் பிரச்னையும் ஏற்பட்டதில்லை. அதேபோல் ஆண்கள் பங்கேற்கும் போட்டியிலும் எங்களை மரியாதையோடு நடத்துகின்றனர்.
டாக்டர் ஆர்த்தி: எனக்கு கிரிக்கெட் போட்டிகள் மிகவும் பிடிக்கும். பெரிய போட்டி, சிறிய போட்டி என்று இல்லாமல் தொலைக்காட்சியில் கிரிக்கெட் எப்பொழுது ஒளிபரப்பினாலும் பார்க்க உட்கார்ந்து விடுவேன். கிரிக்கெட் மீதான எனது ஆர்வத்தைப் பார்த்த சுகுமார் மற்றும் ரோஷன் ஆகிய இருவரும் கிரிக்கெட் விளையாட்டுடன் எதாவது ஒரு வகையில் தொடர்பு வைத்துக் கொள்ளுங்கள் என்று ஆலோசனைக் கூறினர். ரோஷன் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவுடன் விளையாடியவர். அவர்தான் "அம்பயரிங் செய்யலாமே' என்று கூற, நான் அதற்கான தேர்வு எழுத முடிவு செய்தேன். கிரிக்கெட்டின் சட்ட திட்டங்களை நுணுக்கமாகப் படித்தேன். தேர்வில் வெற்றியும் பெற்றேன். ஆனால் உடல்நிலை குறைவு ஏற்பட்டதால் வைவாவில் தேர்ச்சி பெற இயவில்லை. மீண்டும் இரண்டையும் எழுதி தேர்ச்சி பெற்றவுடன், என்னுடன் முதலில் வெற்றி பெற்ற ஜனனியுடன் ஒன்றாக அம்பயரிங் செய்ய சொன்னார்கள். அப்போது நான் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தேன். காரணம் அவர் டென்னிஸ், கிரிக்கெட் ஆகிய இரண்டு போட்டிகளின் சட்டதிட்டங்களையும் தனது உள்ளங்கையில் வைத்துள்ள திறமைசாலி. 
நாங்கள் இருவரும் ஒன்றாக முதல் போட்டியில் அம்பயரிங் செய்தது எனக்கு மிகுந்த சந்தோசத்தைத் தந்தது. இந்த இடத்தை நான் பிடித்ததற்கு எனது குடும்பமும் குறிப்பாக எனது தந்தையும், கணவரும் தான் காரணம். அவர்கள் இருவரும் கொடுத்த ஊக்கம் தான் என்னை இந்த நிலைக்கு வர செய்துள்ளது. இப்போது நடுவராக மேலும் சிறப்புப் பெற அதிகம் உழைக்க வேண்டி உள்ளது. தேடித் தேடி பிற புகழ்பெற்ற நடுவர்களின் தீர்ப்புகளைப் பார்த்து கற்று வருகிறேன் ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம். நாங்கள் இருவரும் மேலும் பல போட்டிகளில் அம்பெயரிங் செய்து புகழ் பெற்ற அம்பெயர்களாக மாற, குறிப்பாக டெஸ்ட் போட்டிகளில் வேலை செய்ய வேண்டும் என்று விரும்புகிறோம். 
எல்லோருடைய கவனமும் நம் மீது திரும்ப வேண்டும் என்றால் டெஸ்ட் போட்டிகளில் நடுவர்களாக பணியாற்ற வேண்டும். அதுதான் இந்த கிரிக்கெட் விளையாட்டின் உயர்ந்த இடம். அதை அடைவதுதான் எங்கள் இருவரின் இலக்கும் கூட. 

முழு கட்டுரையைப் படிக்க →