மகளிர்மணி

நெற்றிக்கண்! 9 - ஜோதிர்லதா கிரிஜா

DIN

மறு நாளே சதாசிவம் தமது அலுவலகத்துக்குக் கிளம்பிப் போன பின், அவள் தன் தோழி அநுசூயாவைப் பார்த்து வரும் சாக்கில் வெளியே சென்று துரைக்கு ஒரு கைப்பேசியை வாங்கினாள். அதே போது, சதாசிவம் அவள் அநுசூயாவின் வீட்டுக்குத்தான் போனாளா? என்பதைத் துப்பறிவாரோ என்கிற எண்ணத்தால் அநுசூயாவின் வீட்டுக்கும் போனாள். ஆனால், அநுசூயா மதுரைக்குப் போய் ஒரு வாரத்துக்கு மேல் ஆகிறது என்று பக்கத்து வீட்டார் சொல்ல, அவளுக்குத் திக்கென்று ஆயிற்று. எனினும், அப்பா சோதித்துக் கண்டுபிடித்துக் கேட்டால், தான் போன நேரத்தில் அந்தத் தகவல் கிடைக்கவே, வீடு திரும்பிவிட்டதாய்ச் சொல்லிவிட வேண்டியதுதான் என்று நினைத்துக்கொண்டாள். எனினும் முந்தின நாள் அவளோடு தான் தொலைபேசியதாய்ச் சொன்னது பொய் என்பது வெளிப்பட்டு விடுமே என்று நினைத்த போதோ அவளுக்குத் திகில் ஏற்பட்டது. அப்படிக் கண்டு
பிடித்து விட்டால், துரை மீதான தனது ஈர்ப்பைப் பற்றி அவருக்குச் சொல்லிவிடலாம்தான் என்றாலும், இன்னும் சிறிது காலம் அவனுடன் தனிமையில் பேசிப் பழகும் வாய்ப்பு அதன் விளைவாகப் பறிக்கப்பட்டு விடுமே என்றுதான் அவளுக்குக் கவலையாக இருந்தது. அம்மாவிடமும் சேதியைச் சொல்லி வீட்டுக்குள்ளேயே தான் அடைந்து கிடக்கும்படி அவர் செய்துவிடுவாரே என்கிற அச்சமே அதற்கு அடிப்படை. தான் வாங்கிய கைப்பேசியில் தனது உருவத்தைப் பதித்துக்கொண்டாள். துரையின் பிறந்த நாளுக்கு முன்னதாகவே அவன் தங்கை கெüசல்யாவின் திருமணம் நடந்து முடிந்து விடும். அதற்குப் பிறகு அந்த நாளில் எப்படியாவது அவனைச் சந்தித்துத் தனது பரிசை அவனுக்குக் கொடுக்கவே அவள் விரும்பினாள். அதற்கு முன்னால் அப்பா தன்னைப் புரிந்துகொள்ளாதவாறு எச்சரிக்கையுடன் இருக்கத் தீர்மானித்தாள். 
அவள் அஞ்சியபடி சதாசிவம் அவளைத் துப்பறிந்ததாய்த் தெரியவில்லை என்றே நினைத்தாள். அப்படியே அவர் அது பற்றி விசாரித்தாலும், அவளோடு மதுரைக்கு அலைபேசியில் பேசியதாய் அளக்க வேண்டியதுதான் என்றும் அவள் தீர்மானித்தாள்.
அவளோடு பேசிச் சிரித்த மறு நாளிலிருந்தே துரை விடுப்பில் போகவிருந்தான். பரபரப்பான மனநிலையில் அதை அவளுக்குச் சொல்ல மறந்தான். 
எனினும் அவன் அன்று மாலையே சதாசிவத்தின் அனுமதியுடன் ஒரு மணி நேரம் முன்னதாய்க் கிளம்பிப்போய், ஒரு பொதுத் தொலைபேசியிலிருந்து அவளுடன் தொலை பேசினான்.
தாமரையே ஒலிவாங்கியை எடுத்துப் பேசினாள். "தாமரை! நாந்தான். பக்கத்துல யாரும் இல்லியே?'' என்றான். "சொல்லுங்க. ஆனா சீக்கிரம் பேசி முடிச்சுடுங்க. அப்பா கூப்பிட்டாருன்னா கஷ்டம். ஏதாச்சும் பொய் சொல்லிக்கிட்டு இருக்கணும். 
சொல்லுங்க.''
"நாளையிலேர்ந்து நான் பத்து நாள் லீவ். அதனால நீங்க சொல்ற நேரத்துல இனி நான் பேசறேன்... பேசாமயே இருந்துட்டா உங்கப்பாகிட்டேர்ந்து என் தங்கச்சி கல்யாணம் வரைக்கும் நம்ம விஷயத்தை மறைச்சு வைக்கலாம்தான். ஆனா பேசாம இருக்க முடியாது போல இருக்கு.''
"அப்ப ஒண்ணு செய்யறேன். உங்களுக்குன்னு நான் வாங்கிட்ட செல்ஃபோனை உடனே எப்படியாச்சும் உங்ககிட்ட சேத்துடறேன். அதுக்கு ஒரு வழி சொல்லுங்க.''
"உங்கப்பாவுக்குத் தெரியாம அதை எப்படிச் செய்யறது, தாமரை? நீங்கதான் அதுக்கு ஒரு வழி சொல்லணும்....''
"ஸ்பீட் போஸ்ட் பார்சலா நாளைக்கே உங்க வீட்டு அட்ரஸýக்கு அனுப்பறேன். நீங்க வீட்டில இல்லாத நேரத்துல போஸ்ட்மேன் வந்தா உங்கம்மா அதை வாங்குறதுக்கு ஆதரைஸ் பண்ணி ஒரு லெட்டர் அவங்ககிட்ட குடுத்து வையுங்க. உங்க பர்த்டே அன்னைக்குக் குடுக்க முடியாது. பரவால்லே. நாம பேசிக்கிறது அதை விட முக்கியமாச்சே.''
"சரி. தாமரை. வெச்சுடறேன். உங்கப்பா உன்னை ஃபோன்ல் கூப்பிட்டா வம்பு.''
சொன்னபடி மறுநாளே அவள் அதை விரைவு அஞ்சலில் "காதல் பரிசு' எனும் நாவலுக்கு இடையே வைத்து, நாற்புறங்களிலும் நிறையப் பஞ்சு, கந்தல்துணி ஆகியவற்றை அது ஆடாதிருக்கும் பொருட்டு அடைத்து அவனுக்கு அனுப்பி வைக்கத் திட்டமிட்டாள்.
அதைப் பொட்டலம் கட்டிக்கொண்டிருக்கும் போது கழுகுக்கு மூக்கில் வியர்த்தது போல் அவள் அம்மா அவளது அறைக்கு வந்துவிட்டாளே! கதவைச் சாத்திக்கொண்டு அதை அவள் செய்ய விரும்பவில்லை. அம்மாவிடம் அப்பா ஏதேனும் சொல்லிவைத்
திருந்திருப்பாரோ என்று அவளுக்குச் சற்று அச்சமாக இருந்தது.
"யாருக்குடி பார்சல் பண்ணிக்கிட்டு இருக்கே?'' - "காதல் பரிசு' எனும் புத்தகத் தலைப்பையும் பார்த்தாள். சுற்றிலும் பஞ்சு, கந்தல்கள் ஆகியவற்றையும் அவள் திணித்து நாற்புறங்களிலும் கோந்துப்பட்டியால் ஒட்டியதைப் பார்த்துவிட்டு, "எதுக்குடி நாலு பக்கமும் பஞ்சையெல்லாம் புத்தகத்துக்குள்ள வெச்சு அடைச்சு கம் டேப் போட்டு ஒட்டிக்கிட்டு இருக்கே?'' என்றும் விசாலாட்சி வியப்புடன் கேட்டாள்.
"புத்தகத்துக்குள்ள ஒரு ரிஸ்ட் வாட்ச் இருக்கும்மா. அதான்.''
"எங்கே, காமி, நானும் பாக்குறேன். ப்ரெசென்டேஷன் எது வாங்கினாலும் எங்கிட்ட காட்டுவியேடி? ஏன் காட்டல்லே?''
"அய்யோ. மறந்துட்டேன்மா. கம்டேப் போட்டு பார்சலை ஒட்டியிருக்கேன். இப்ப உங்ககிட்ட காட்டுறதுக்காகப் பிரிச்சா மறுபடியும் எனக்கு வீண் வேலை''
"யாருக்குடி கல்யாணம்?''
"உங்களுக்கு அவளைத் தெரியாதும்மா. என்னோட காலேஜ்மேட். சுகந்தின்னு பேரு.''
"எங்கேடி கல்யாணம்? அசலூர்லயா?''
"இல்லேம்மா. உள்ளூர்லதான். ஆனா அன்னைக்கு துரை தங்கச்சிக்குக் கல்யாணம். அதனால இவ கல்யாணத்துக்குப் போக 
முடியாது.''
"துரை வீட்டுக் கலயாணத்துக்குத்தான் உங்கப்பா போறதாயிருக்காரே. நீ உன் சிநேகிதி கல்யாணத்துக்குப் போக வேண்டியதுதானே?''
"அதெப்படிம்மா? அவளை அப்பால நான் நேர்ல பாத்துப்பேன். ஆனா, துரை விஷயம் அப்படி இல்லையே? அவரோட தங்கச்சியை எனக்குப் பழக்கமே இல்லையே. அப்பால நேர்ல போய்ப் பாக்கிற அளவுக்கு? ஒரு வருஷத்துக்கும் மேல எங்களுக்காக ஆட்டோ ஓட்டியிருக்காரு. தவிர, ராணி, மஞ்சுளா ரெண்டு பேரும் போறாங்க. நான் மட்டும் எப்படிம்மா போகாம இருக்கிறது? அதான்!''
விசாலாட்சியின் கண்கள் அந்தப் பார்சலின் மீதே பதிந்திருந்தன. அவளுக்கு ஆங்கிலம் தெரியாது. எனவே, துணிச்சலோடு அதன் வெளிப்புறத்தில் அவள் துரையின் பெயரை எழுதலானாள். 
பிறகு அதைத் தன் அலமாரியில் வைத்துவிட்டு அவள் குளிக்கப் போனாள். சாப்பிட்டுவிட்டுத்தான் அவள் கிளம்ப முடியும். வெறும் வயிற்றோடு அவள் வெயிலில் வெளியே போக அவளை விசாலாட்சி விடமாட்டாள். ஆனால் அவள் குளித்துவிட்டு வருவதற்குள் அவள் சற்றும் எதிர்பாராதது நடந்துவிட்டது...
"என்ன, தாமரை? இன்னைக்கு சாயங்காலம் நீங்க ரெண்டு பேரும் உங்கம்மா வீட்டுக்குப் போறீங்களாமே?'' என்ற மாமியார் சொர்ணத்தின் குரல் தாமரையின் சிந்தனைக்கு அப்போதைக்குப் புள்ளி வைத்தது.
"ஆமா, அத்தே. ஒரு வாரம் இருந்துட்டு வான்னு அவரும் சொன்னாரு. அதான்''
"அவனாச் சொன்னானா? நீ கேட்டியா?''
சற்றே திகைத்துவிட்டு, "உங்க கிட்டதான் முதல்ல சொல்லணும்னு. ஆனா, "ஏன் ஒரு மாதிரி இருக்கே? அம்மா ஞாபகமா'ன்னு கேட்டுட்டு, நான் பதில் சொல்றதுக்குள்ளேயே, அவரே அது மாதிரி சொல்லிட்டாரு, அத்தே! தப்பா எடுத்துக்காதீங்க.''
"சரி, சரி. வா. ரெண்டு பேரும் உக்காந்து சாப்பிடுவோம்.'' 
தாமரை எழுந்தாள்.
போக்குவரத்துக் காவலர் தங்கள் பக்கம் திரும்பிப் பார்த்ததைத் துரை கவனித்துவிட்டான்.
"ட்ராஃபிக் கான்ஸ்டபிள் அதோ நம்மளை என்ன ஏதுன்னு விசாரிக்க வேகமா வர்றாரு. அதனால இது நண்பர்கள் போட்டுக்குற விளையாட்டுச் சண்டைன்னு சொல்லிடணும். உக்காரு. முகத்தை உம்னு வச்சுக்காதே... நான் கராத்தே தெரிஞ்சவன்கிறது உனக்குத் தெரியுமில்ல?''
ராமநாதன் முக இறுக்கத்தைத் தளர்த்திக் கொண்டு உட்கார்ந்தான். அவனருகே மிக நெருக்கமாய் உட்கார்ந்த துரை அவன் தோள் மீது தன் கையைப் போட்டுக் கொண்டான். அதற்குள் அருகே வந்து நின்றுவிட்ட காவல்துறையாளரைக் கவனிக்காதவன் போல், "இப்பவாச்சும் நம்புறியாடா நான் கராத்தே கத்துக்கிட்டு இருக்கேன்கிறதை?'' என்று சிரித்தான். ராமநாதனும் புன்னகை புரிய வேண்டியதாயிற்று.
"நம்பறேண்டா!'' என்று அவன் அசட்டுச் சிரிப்பும் சிரிக்க வேண்டியதாயிற்று.
"என்னப்பா! விளையாட்டுச் சண்டையா! நான் என்னமோ ஏதோன்னு ஓடி வந்தேன்''
இருவரும் எழுந்து நின்றார்கள்.
"சாரிங்க...''
"சரி, சரி. இனிமேப்பட்டு இது மாதிரி வெளையாட்டுச் சண்டையையெல்லாம் வீட்டுக்குள்ளாற வச்சுக்கிடுங்க. என்ன?''
"சரிங்க''
அவர் நகர்ந்ததும் இருவரும் உட்கார்ந்தார்கள். 
"உன்னை ஒற்றனா என்னோட பழைய பாஸ் நியமிச்சிருக்கிற விஷயம் எனக்கு எப்படித் தெரிஞ்சிச்சுன்னு பாக்கறியா? சதா
சிவம் என்னைத் தன்னோட உதவியாளனா நியமிச்ச அன்னைக்கு அதே ஆஃபீஸ்ல வேறொரு செக்ஷன்ல உன்னைப் பார்த்ததும், என்னோட படிச்ச பழைய க்ளாஸ்மேட் என்னோட சக பணியாளனாயிருக்கிறதைப் பத்தி சந்தோஷப்பட்டேன். நாம லஞ்ச் டயத்ல சேந்து உக்காந்து சாப்பிடுறதையும் நெருங்கிப் பழகுறதையும் பாத்துட்டு, சதாசிவமே அது பத்தி விசாரிச்சப்ப, ஏற்கெனவே உன்னைத் தெரியும்னு சொன்னேன். உன் வீட்டு விஷயங்களை யெல்லாம் என்கிட்ட நீ வெகுளியாச் சொல்லவே, நானும் நம்பிக்கை வெச்சு என்னோட லவ் மேட்டரை உன்கிட்ட சொன்னேன். நீயும் நானும் நெருக்கமாப் பழகுறதை சதாசிவம் தனக்கு ஆதாயப்படுத்திக்கிட்டாரு. உண்டா, இல்லியா?''
ராமநாதன் தலையைக் கவிழ்ந்துக்கொண்டான்.
"நீ எனக்குத் துரோகம் பண்ணிக்கிட்டிருக்கியோன்னு ஏற்கெனவே லேசா எனக்கு ஏற்பட்டிருந்த சந்தேகத்தை எனக்கு வேண்டிய ஒருத்தன் ஊர்சிதப்படுத்தினான். என்னை வேலையிலேர்ந்து நிப்பாட்டினதுக்குப் பெறகு ஒருநாள் உன்னைத் தன்னோட கார்ல ஏத்திக்கிட்டு சதாசிவம் போனதைப் பாத்ததா நான் கேள்விப்பட்டதும், தாமரையோட லெட்டர்ûஸ யெல்லாம் உங்கிட்ட குடுத்து வைக்கச் சொன்னியே, அது ஒரு சதித்தனமான யோசனைன்றதை நான் இன்னும் அதிக நிச்சயமாப் புரிஞ்சுக்கிட்டேன். சொல்லுடா. எம்புட்டுப் பணம் குடுத்தாரு உனக்கு?''
"பணம் எதுவும் குடுக்கல்லே. ஆனா, அந்த லெட்டர்ஸை நான் கொண்டுவந்து குடுத்துட்டா, எனக்கு ஆஃபீஸ்ல பதவி உயர்வுக்கு ஏற்பாடு பண்றதாச் சொன்னாரு''
"நீயும் துரோகம் பண்ண ஒத்துக்கிட்டே''
ராமநாதன் குனிந்த தலையை நிமிர்த்தவே யில்லை. 
- தொடரும்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஏற்காட்டில் பேருந்து விபத்து : 4 பேர் பலி

கண்ணெதிரே 3 ஐசிசி கோப்பைகள்; பாகிஸ்தான் பயிற்சியாளர் கேரி கிறிஸ்டனின் இலக்கு என்ன?

சின்ன சின்ன பார்வை..!

போஜ்புரி போகன்வில்லா..!

லக்னௌ பந்துவீச்சு; அணியில் டி காக் இல்லை!

SCROLL FOR NEXT