முகப்பு
மகளிர்மணி

எனது உடல் அனுமதிக்கும் வரை குத்துச் சண்டை!

குத்துச் சண்டை போட்டியில், ஒலிம்பிக்ஸில் வெண்கலப் பதக்கம் பெற்று ஐந்து முறை உலக சாம்பியனாக இருக்கும் மேரிகோம், நடந்து முடிந்த காமன்வெல்த் போட்டியிலும் குத்துச் சண்டை போட்டியில் தங்கம் வென்றுள்ளார்.

Updated On : 30 ஜனவரி, 2024 at 12:51 PM
பகிர்:

குத்துச் சண்டை போட்டியில், ஒலிம்பிக்ஸில் வெண்கலப் பதக்கம் பெற்று ஐந்து முறை உலக சாம்பியனாக இருக்கும் மேரிகோம், நடந்து முடிந்த காமன்வெல்த் போட்டியிலும் குத்துச் சண்டை போட்டியில் தங்கம் வென்றுள்ளார். ராஜ்ய சபை உறுப்பினராக இருக்கும் ஒருவர், நாடாளுமன்றத்திற்கு வெளியே குத்துச் சண்டை போட்டிகளில் போட்டியிட்டு தங்கப் பதக்கத்துடன் அடுத்தடுத்து வென்றிருப்பது மேரிகோம் மட்டுமே..! மூன்று ஆண் குழந்தைகளுக்குத் தாயாக இருக்கும் மேரிகோமிற்கு முப்பத்தைந்து வயதாகிறது. அவரைப் பற்றி இதோ:
""எனது வெற்றியின் ரகசியம், விடாது நான் செய்யும் பயிற்சிகள், மனதிடம், போட்டி தொடங்கும் முன் ஒரு திட்டத்தை வகுத்துக் கொள்கிறேன். எதிராளி எப்படிச் செயல்படப் போகிறார் என்று என்னால் சட்டென்று கணித்துக் கொள்ள முடியும். அந்தத் திறமை அனுபவம் தந்த பரிசு. அதனால் எதிராளியை சரிவர கையாள முடிகிறது. களத்தில் எனக்கு பெரிய விபத்தோ காயங்களோ எலும்பு முறிவோ ஏற்பட்டதில்லை என்பதும் எனக்கு சாதகமான விஷயம்'' என்கிறார்.
மேரிகோம் காமன்வெல்த் போட்டியில் தங்கப்பதக்கம் வென்றதும்... "மேரி குத்துச்சண்டை போட்டியிலிருந்து விலகப் போகிறார்' என்ற வதந்தி பெருமளவில் பரவியது. அதற்கு, ""யார் சொன்னாங்க.. நான் விலகப் போகிறேன் என்று...'' என்று ஆரம்பித்த மேரிகோம் ஒரு பிடி பிடித்தார். ""எனக்கு வயதாகிவிட்டது என்று சொன்னவர் என் முன்னால் வரட்டும்... நான் எப்படி திடகாத்திரமாக இருக்கிறேன் என்று அவருக்கு காட்டுகிறேன்.... எனது உடல் என்னை அனுமதிக்கும் வரை குத்துச் சண்டை கை 
உறைகளைக் கழட்ட மாட்டேன். 
""எதிராளி அந்த நாட்டுக்காரி.. சரியான பயிற்சியைப் பெற்றிருப்பார்... அவரை வெல்வது கடினம்..' என்ற எண்ணம் உதித்தாலே போச்சு. தோல்வி உறுதியாகிவிடும். நான் இந்த மாதிரியான அழுத்தங்களை ஊதித் தள்ளிவிடுவேன். எனக்கு தரப்படும் பயிற்சிகள், அனுபவம் எனக்கு அந்தப் பக்குவத்தைத் தந்திருக்கிறது. 
அடுத்து ஆசிய விளையாட்டுப் போட்டிகள். அதன் பிறகு உலக சாம்பியன் போட்டிகள். இந்தப் போட்டிகளில் நான் அதிக கவனம் செலுத்துவேன்'' என்கிறார் மேரிகோம் .

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.