நகராட்சி மேயர் ஒருவர் அதிகாலையில் மூன்று கி.மீ பயணித்து சுமார் இருநூறு வீடுகளுக்கு பால் விநியோக வேலை செய்கிறார் என்றால் நம்ப முடிகிறதா? ஆனால் அது உண்மை. கேரளத்தின் திருச்சூர் நகரத்திற்கு வந்தால் இந்த அரசியல் அதிசயத்தைக் காணலாம்.
அஜிதா. சென்ற வாரம்தான் (டிசம்பர் 12 புதன்) திருச்சூர் மேயராக பதவிப் பிரமாணம் செய்து வைக்கப்பட்டார். "அஜிதா மேயராகிவிட்டார்.. இனி பால் பாக்கெட் விநியோகம் செய்ய அவர் எப்படி வருவார்... யாரிடமாவது பால் விநியோகப் பொறுப்பை ஒப்படைத்திருப்பார்.. புதிய ஆளுக்கு வாடிக்கையாளர்கள் யார் என்று தெரிய வாய்ப்பில்லை.. பால் இன்று கிடைக்குமா.. இல்லை பால் வாங்க ஸ்டாலுக்கு நடக்க வேண்டி வருமா' என்று வாடிக்கையாளர்கள் குழம்பி நிற்க...
அதிகாலையில் "மேயர்' அஜிதா பால் விநியோக வேலையை எப்போதும் போல கச்சிதமாகச் செய்தார்.
பதவி பிரமாணம் முடிந்த அடுத்த நாள் மாநகராட்சி அலுவலகத்திற்கு காரில் வந்து இறங்குவார் என்று காத்திருந்த மாநகராட்சி அலுவலர்களுக்கு இன்னொரு ஆச்சரியம் காத்திருந்தது. அஜிதா தனது ஸ்கூட்டியில் எந்த பந்தாவும் இன்றி வந்து இறங்கினார். அதிகாலையில் தான் வசிக்கும் கனிமங்கலம் பகுதியில் பதினெட்டு ஆண்டுகளாக வாடிக்கையாளர்களாக இருக்கும் இரு நூறு வீட்டினருக்கு பால் விநியோகித்துவிட்டுதான் மேயராக அலுவலகம் வருகிறார் அஜிதா. அங்கன்வாடி ஆசிரியையாகவும் பணி புரிந்த அஜிதா, கேரளத்தின் பாரம்பரிய நடனமான "திருவாதிரைக் களி' ஆடும் குழு ஒன்றினை நிர்வகிக்கிறார். எப்படி இத்தனை பொறுப்புகளை சரிவரச் செய்கிறார்? அஜிதாவே விளக்குகிறார்:
""பால் விநியோகம் இன்று நேற்று தொடங்கியதில்லை. பதினெட்டு ஆண்டுகளாகச் செய்து வருகிறேன். கணவர் கேரள அரசின் பால் நிறுவனத்தின் ஸ்டால் ஒன்றினை நடத்தி வருகிறார். ஒரு ஆள் சம்பாத்தியத்தில் வாழ்க்கை நடத்த முடியாது என்று, ஸ்டாலுக்கு வரும் பால் பாக்கெட்டுகளை வீடுகளுக்கு விநியோகிக்கும் வேலையை என்னுடையதாக்கிக் கொண்டேன்.
எனக்கு இப்போது நாற்பத்தெட்டு வயதாகிறது. 2010 - லிருந்து கவுன்சிலராக இருந்து வருகிறேன். மாநகராட்சியில் அமைக்கப்படும் குழுவுக்குத் தலைவராக இருந்திருக்கிறேன். மேயராவதற்கு முன்பிலிருந்தே பால் விநியோக வேலையைச் செய்து வருவதால், மேயரானதும் பால் விநியோகத்தை விட்டுவிட எண்ணமில்லை. மேயர் பொறுப்பு தற்காலிக பொறுப்பு. பால் விநியோகம் நிரந்தர பொறுப்பு. எனது வார்டு மக்களை தினமும் சந்திக்க பால் விநியோகம் உதவுகிறது. ஒவ்வொரு வேலைக்கும் ஒரு முக்கியத்துவம், கெüரவம் இருக்கிறது. வேலையில் "அது உயர்ந்தது .. இது தாழ்ந்தது' என்றில்லை.
அதிகாலை ஐந்து மணிக்கு கணவரின் ஸ்டாலிலிருந்து பால் பாக்கெட்களை ஸ்கூட்டியில் எடுத்துக் கொண்டு, பால் விநியோகத்திற்கு கிளம்பி விடுவேன். ஏழு மணி வரை இந்த வேலை தொடரும். பால் பாக்கெட் போட வார்டைச் சுற்றி வரும் போது வார்டில் எந்த தெரு விளக்கு எரியவில்லை.. எங்கே குடி தண்ணீர், குப்பை கூளம், கழிவு நீர் பிரச்னை இருக்கிறது என்பது நேரடியாகத் தெரிய வரும். எனது கவனத்திற்கு தெரியாத பிரச்னைகளை என்னிடம் பால் வாங்கும் வீட்டுக்காரர்கள் நேரடியாகச் சொல்லிவிடுவார்கள். என்ன... என்னிடம் குறைகளை சொல்ல சிலர் விடியற்காலை ஐந்து மணிக்கு எழுந்திருக்க வேண்டும். இந்த நேரடி சந்திப்பால் வார்டு மக்களின் நம்பிக்கையைப் பெற முடிகிறது. மக்கள் கொடுக்கும் மனு எனக்கு வந்து சேர பல நாட்கள் ஆகிவிடும். நேரடியாக புகார்களை தெரிந்து கொள்ள முடிவதால், தாமதம் இன்றி நடவடிக்கைகளை உடனுக்குடன் எடுக்க முடிகிறது. வார்டு மக்கள், மனு எழுத பேனா காகிதம் தேடி அலையும் வேலையும் மிச்சமாகிறது.. அவர்கள் மனு கொடுக்க மாநகராட்சி அலுவலகமும் ஏறி இறங்க வேண்டிய அவசியமும் இல்லை .
நானும் கணவர் விஜயனும் இந்திய வலது கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர்கள். அங்கன்வாடி ஆசிரியை ஆன பிறகுதான் பொது மக்களிடம் பழகும் வாய்ப்பு கிடைத்தது. வார்டின் பொதுப் பிரச்னைகள் குறித்து அறிந்து கொள்ளும் வாய்ப்பும் கிடைத்தது. அரசியலில் நுழைவேன் என்று கற்பனை கூட நான் செய்யவில்லை. பொது மக்களின் பிரச்னைகளை தெரிந்து கொண்டபோதுதான் நாமே ஏன் பிரச்னைகளைத் தீர்க்க வார்டு கவுன்சிலர் ஆகக் கூடாது என்று தோன்றியது. மக்களின் ஆதரவுடன் கவுன்சிலர் ஆனேன்.
"மேயராக அலுவலகத்திற்கு வர மாநகராட்சி தந்திருக்கும் காரைப் பயன்படுத்துவதில்லை என்று முடிவு செய்திருக்கிறேன். இரண்டு பேர் சம்பாதித்ததால் ஒரே மகளை ஃபார்மசியில் முதுகலை படிக்க வைத்தோம். சென்ற மாதம்தான் திருமணம் செய்து கொடுத்தோம். பால் விநியோகத்தில் மாதம் பத்தாயிரம் சம்பாதிக்கிறேன். மேயராக பொறுப்பேற்றிருப்பதால் மாதம் பதினெட்டாயிரம் கிடைக்கும். பல அலுவல்களில் நாள் முழுக்க மூழ்கிக் கிடப்பதால் 24 மணி நேரம் போதவில்லை'' என்கிறார் மேயர் அஜிதா.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.