மகளிர்மணி

கலைநயம் மிக்க படைப்பில் இருக்க வேண்டும்!

தினமணி

இயக்குநர் கே. பாலசந்தரால் சின்னத்திரையில் அறிமுகமான ஸ்ரீரஞ்சனியை பெரிய திரைக்கு "அலைபாயுதே' மூலம் கொண்டு வந்தவர் இயக்குநர் மணிரத்னம். தமிழ் திரைப்படங்களில் அம்மா, அக்கா, அண்ணி, அத்தை, சித்தி கதாபாத்திரங்களில் நடிப்பவர்கள் கூட அழகாகத்தான் இருக்க வேண்டும். அது எழுதப்பட்ட விதி. ஸ்ரீரஞ்சனி அனைத்து வேடங்களில் வலம் வந்ததிற்கு அவர் அழகும் முக்கிய காரணம். ஸ்ரீரஞ்சனி, விவாதத்திற்கு உள்ளாகியிருக்கும் "ஆடை' படத்தில் அமலாபாலிற்கு அம்மாவாக நடித்திருக்கிறார். "ஹவுஸ் ஓனர் ‘ படத்தில் "ராதா'வாக வாழ்ந்திருக்கிறார். ஸ்ரீரஞ்சனி நம்முடன் பகிர்ந்து கொண்டவை:
 "தொடக்கத்தில் நடிப்பில் எனக்கு நாட்டம் இல்லை. பள்ளியில் 100 மீ தூர ஓட்டப் பந்தயத்தில் ஜூனியர் பிரிவில் தேசிய சாம்பியனாக இருந்திருக்கிறேன். ஹாக்கியும் விளையாடி வந்தேன். திருமணம் ஆனதும் விளையாட்டில் இருந்து ஒதுங்கி குடும்பத்தில் கவனம் செலுத்த ஆரம்பித்துவிட்டேன். விளையாட்டில் என்னுடன் தோழிகளாக இருந்தவர்களை சந்திக்கும் போது "ஸ்போர்ட்ஸில் தீவிரமாக இருந்த நீ அப்படியே மாறிட்டியே..' என்பார்கள்.
 அது ஒரு காலம். குடும்பம் என்று ஆன பிறகு சிலதை விட்டுக் கொடுக்க வேண்டும். எல்லாவற்றையும் வாழ்க்கையில் அப்படியே முழுமையாகப் பெற முடியாது.
 அப்போது நாங்கள் சென்னை சைதாப்பேட்டையில் குடியிருந்தோம். அந்தப் பகுதியில் அநேக படப்பிடிப்புகள் நடக்கும். அக்கம் பக்கத்தவர்கள் "ரஞ்சனி நடிக்கலாமே' என்பார்கள். அம்மாவும் உற்சாகப்படுத்தினார். அதற்கு காரணம் இருந்தது. பள்ளியில் நான் நாடகங்களில் நடித்து பரிசுகள் வாங்கியிருந்தேன். இருந்தாலும் சினிமாவில் நடிக்க நான் மனதளவில் தயாராகவில்லை. பின்னர், குடும்பத்தினர் அனுமதியுடன் இருபது வயதில் டிவி விளம்பரங்களில் நடிக்கத் தொடங்கினேன்.
 அதைப்பார்த்த பாலசந்தர் சார் "காசளவு நேசம்' டிவி தொடரில் நடிக்க வாய்ப்பு வழங்கினார். அதில் கஜல் பாடகியாக நடித்தேன். திரைப்படங்களில் ஒரு எல்லைக்குள் நடிக்க மட்டுமே வேடங்கள் அனுமதித்தன.
 "ஆடை' படத்தில் மகளை அவ்வப்போது " அப்படி செய்... இப்படி உடை அணிந்து கொள்' என்று அறிவுறுத்தும் தாயாக நடித்திருக்கிறேன்.
 "ஹவுஸ் ஓனர்' படத்தில் அல்சைமர் என்னும் ஞாபக மறதி நோயால் பாதிக்கப்பட்ட கணவருக்கு மனைவியாக நடித்திருக்கிறேன்.
 அடுத்து விஜய் சேதுபதி நடிக்கும் "சங்கத் தமிழன்' படத்தில் நாசரின் தங்கையாக நடிக்கிறேன்.
 அம்மா வேடத்தில் நடிப்பது மனதுக்கு இதமாக இருக்கிறது. தென்னிந்தியர்கள் உணர்ச்சி வசப்படுகிறவர்கள். எல்லா திரைப்படங்களிலும் வீடு, அம்மா, அப்பா, சகோதரர்கள் சகோதரிகள் என்று பாசப் பின்னல்கள் இருக்கும். அப்படியான குடும்ப உறவுகளின் முக்கிய குணசித்திர வேடத்தில் நடிக்க வாய்ப்பு கிடைக்க நான் கொடுத்து வைத்தவள். எனக்குப் பக்க பலமாக எனது குடும்பம் இருக்கிறது. அதுவும் எனக்கு அதிர்ஷ்டம்தான்.
 தலை நிறைய பூ, நெற்றியில் பொட்டு, பட்டுப் புடவை அணிந்து பாரம்பரிய அம்மா வேடத்தில் நடிக்க விருப்பம் என்றாலும், மாடர்ன் அம்மாவாகவும் நடிக்க வேண்டும் என்ற ஆர்வம் என்னை இப்போது தொத்திக் கொண்டுள்ளது.
 அதுபோன்று, கலை நயமிக்க படம் ஒன்றில் நடிக்க வேண்டும், "சல்சா' நடனம் கற்றுக் கொள்ள வேண்டும்... எனது அனுபவங்களை பதிவு செய்ய புத்தகம் எழுத வேண்டும். "அம்மன்' வேடத்தில் நடிக்க வேண்டும்..என்றும் ஆசையிருக்கிறது..'' என்கிறார் ஸ்ரீரஞ்சனி.
 - அங்கவை
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேற்கு வங்கத்தில் காங்கிரஸுடன் ஏன் கூட்டணி வைக்கவில்லை: மம்தா விளக்கம்

2 கட்டத் தேர்தலில் சதமடித்த பாஜக: அமித் ஷா

இந்த வாரம் கலாரசிகன் - 28-04-2024

அளியரோ அளியர் அளி இழந்தோரே!

யாரோ பிரிகிற்பவரே?

SCROLL FOR NEXT