ஐ.ஏ.எஸ் தேர்வுக்கு பெண்கள் அதிக அளவில் தயாராக வேண்டும்
""யு.பி.எஸ்.சி. என்னும் மத்திய குடிமைப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்பெறும் குடிமைப் பணித் தேர்வுகளானது, இந்தியாவில் நடைபெறும் தேர்வுகளிலேயே மிகவும் சிறப்பும் முக்கியத்துவமும் வாய்ந்தது ஆகும்.
""யு.பி.எஸ்.சி. என்னும் மத்திய குடிமைப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்பெறும் குடிமைப் பணித் தேர்வுகளானது, இந்தியாவில் நடைபெறும் தேர்வுகளிலேயே மிகவும் சிறப்பும் முக்கியத்துவமும் வாய்ந்தது ஆகும். இத்தேர்வின்மூலமாகவே, நாட்டின் நிர்வாகக் கட்டமைப்பை வழி நடத்துவதற்கானவர்களை இனங்கண்டு தேர்வு செய்யப்படுகின்றனர்.
ஆனால் யு.பி.எஸ்.சி தேர்வுகளில் பெண்களின் பங்கு என்னவென்பது கேள்விக்குறியாகவே இருக்கிறது'' என்கிறார் சென்னை அண்ணாநகரில் இயங்கிவரும் சங்கர் ஐ.ஏ.எஸ் அகாதெமியின் தலைவர் வைஷ்ணவி. யுபிஎஸ்சி தேர்வுகளில் பெண்கள் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து அவர் நம்முடன் பகிர்ந்து கொண்டவை:
ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ், ஐ.எஃப்.எஸ் மற்றும் ஏனைய குரூப் ஏ மற்றும் பி பணிகளில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதே இந்தக் குடிமைப் பணித் தேர்வுகள். இதில் முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு மற்றும் நேர்காணல் என்று மூன்று நிலைகளைக் கொண்டுள்ளது. ஒவ்வொரு நிலையும் வெற்றி தோல்வியின் அடிப்படையிலேயே அமைந்துள்ளது. அதுபோன்று தேர்வின் ஒரு நிலையில் ஒருவர் தோல்வியடைந்தால் அவர் அடுத்த ஆண்டு மீண்டும் முதலில் இருந்தே தேர்வினை எழுத இயலும். இதுவே இந்த தேர்வுகளில் உள்ள பெரும் சவால். இருந்தாலும் இத்தேர்வின் மதிப்பினை உணர்ந்து இதற்கு ஒவ்வொரு ஆண்டும் விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து தற்போது 9 லட்சத்தை தாண்டிவிட்டது.
ஆனால் விண்ணப்பிப்பவர்களில் பெண்களின் எண்ணிக்கை என்று பார்த்தால் 30 சதவிகிதத்தைக் கூட தாண்டவில்லை என்பதே நிதர்சனம். இந்த 30 சதவிகிதத்திலும், 40 சதவிகிதப் பெண்களே முதல்நிலைத் தேர்வினை எழுதுகின்றனர். இவர்களில் 2-3 சதவிகிதம் பெண்களே முதன்மைத் தேர்வில் தேர்வாகின்றனர். அடுத்தடுத்துள்ள நிலைகளைத் தாண்டி நேர்முகத் தேர்வினை வென்று இறுதிப் பட்டியலில் இடம் பெறும் பெண்களின் எண்ணிக்கையோ 25 சதவிகிதத்தினைக் கூட தாண்டவில்லை என்பதே யுபிஎஸ்சி தேர்வுகளில் பெண்களின் நிலை. அதாவது ஒவ்வொரு ஆண்டும் ஏற்படும் காலிப் பணியிடங்களில் நான்கில் ஒரு பங்கே பெண் தேர்வாளர்களால் நிரப்பப்படுகிறது.
இந்த நிலை மாறவேண்டும் என்றால் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்தால் மட்டுமே, தேர்வின் அடுத்தடுத்த நிலைகளில் வெற்றிபெறும் பெண்களின் பங்கெடுப்பும் இறுதி பட்டியலில் இடம் பெறக்கூடிய சாதனைப் பெண்களின் எண்ணிக்கையும் உயரும்.
பொதுவாக தேர்வு எழுதக் கூடிய அனைவரும் எதிர்கொள்ளும் சவால்கள் என்று எடுத்துக் கொண்டால் தேர்வுமுறை பற்றிய சரியான விழிப்புணர்வு இல்லாதது, தோற்றுவிடுவோம் என்ற பயம், போதிய குடும்ப ஆதரவு இல்லாதது, தாய்மொழி வழிக்கல்வி பயின்றதால் ஆங்கிலத்தை சரிவரக் கையாள முடியாதது, சரியான வழிகாட்டுதல் இல்லாததுதான்.
ஆனால், பெண்கள்மட்டுமே எதிர்கொள்ளும் சவால்கள் என்று பார்த்தால், சொந்த மாநிலத்தை விடுத்து அயல் மாநிலங்களில் பணியாற்றுவதில், பெண்களுக்கு இருக்கக்கூடிய பாதுகாப்பு குறித்த தயக்கம், தேர்வுக்கு தயாராவதற்கு போதிய நிதி ஆதாரம் இல்லாதது, திருமண வயதினைக் குறிப்பிட்டு குடும்பத்தினரால் மேற்கொள்ளப்படும் அழுத்தங்கள், உயர் பணியில் உள்ள பெண்களின் பணித் தகுதிக்கு ஏற்ற மணமகனைத் தேடுவதில் பெற்றோருக்கு நிலவும் சிரமங்கள் போன்றவை காரணமாகிறது.
மேலும் தேர்வுக்கு தயாராகும் காலத்தில் அத்தேர்வினைப் பற்றி புரிந்து கொள்ளவும் அவற்றுக்கு தயாராகவும் ஏறக்குறைய ஓராண்டு காலம் முதலீடாக்கப்படுகின்றது.
ஆகவே, இதுபோன்ற நீண்டதொரு தேர்வுக் காலத்தைக் கருத்தில் கொள்ளும்போது, ஒரு பெண் இந்தத் தேர்விற்கு விண்ணப்பித்து, தன்னை தயார்படுத்திக் கொண்டு தேர்வெழுதுவதற்கு, அவரது குடும்பத்தின் ஆதரவு என்பது மிகமிக முக்கியம். இரண்டு, மூன்று முறை தேர்வு எழுதி வெற்றிகிட்டவில்லை என்றால் குறைந்தபட்ச ஆதரவும் கிடைப்பதில்லை.
இந்த தேர்வுகளைப் பொருத்தவரை பெண்களின் பங்கெடுப்பை உயர்த்த
மாநில அரசும், மத்தியக் குடிமைப் பணியாளர் தேர்வாணையமும் (யுபிஎஸ்சி) எடுத்துள்ள முயற்சி என்னவென்றால், கடந்த 2013-ஆம் ஆண்டிலிருந்து தேர்வாணையம் பெண்கள் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கு தேர்வுக் கட்டணத்தை கட்டத் தேவையில்லை என்று அறிவித்துள்ளது. அதன்பிறகு, பெண்களின் எண்ணிக்கை சற்றே அதிகரித்துள்ளது.
அதுபோன்று, ஒவ்வொரு ஆண்டும், தேர்வுகளை எழுதுவதற்கான இலவசப் பயிற்சியினை இந்திய அரசின் மத்திய அரசின் சமூக நலத்துறை அமைச்சகமும் சில மாநிலங்களும் வழங்கி வருகின்றன. ஆனால், அதிலும் இதுபோன்ற பயிற்சிகளும் உதவித் தொகையும் தனியாக பெண்களுக்கென்று வழங்கப்படுவதில்லை.
இதுவரை தமிழகம் உட்பட நான்கு இந்திய மாநிலங்களே, மாநில குடிமைப்பணித் தேர்வுகளில் பெண்களுக்கென்று இட ஒதுக்கீடு வழங்கியுள்ளன.
கடந்த 2017 -ஆம் ஆண்டின் குடிமைப்பணித் தேர்வில் அகில இந்திய அளவில் இரண்டாம் இடம் பிடித்த ஹரியானாவைச் சேர்ந்த அனுகுமாரி 30 வயதைத் தாண்டியவர், நான்கு வயது மகனிற்கு தாயாவார். இவரைப்போன்று அதிக வயதினை உடைய பெண்களின்எண்ணிக்கை என்பது மிகச் சொற்பமே. ஏனெனில் பெண்களுக்கென்று வயது வரம்பில் தளர்வு கிடையாது.
மேலும் இந்த தேர்வுகளைப் பொருத்தவரை ஒருமுறை எழுதினாலே பாஸாகிவிடுவோம் என்பது முதலில் நிச்சயம் கிடையாது. ஒரு முறை எழுதின அனுபவம்தான் அடுத்தமுறை தேர்வுக்குத் தயார் செய்ய உதவும். முன்பெல்லாம் நேர்காணல் நிலைக்கு போகும்போதுதான் மாணவ, மாணவிகள் தோற்றுப்போவார்கள். காரணம், இங்கே உள்ள மாணவ, மாணவிகளுக்கு உள்ள கம்யூனிகேஷன் ஸ்கில் மிகவும் குறைவு. ஆனால், தற்போது அந்தநிலை 4-5 ஆண்டுகளில் முன்னேற்றம் கண்டுள்ளது. இரண்டாம் நிலை தாண்டுவதற்குத்தான் அதிகம் சிரமப்படுகிறார்கள்.
எனவே, சிலர் 7-8 முறை பரீட்சை எழுதி அதன்பின் வெற்றி பெறுகிறார்கள். இதில் பெண்களை பொருத்தவரை குறைந்தபட்சம் 24 வயதுவரைதான் வீட்டில் அனுமதிக்கின்றனர். அதன்பிறகு அவர் திருமணம் முடித்து, குடும்பம், குழந்தைகள் எனசெட்டில் ஆக வேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள். இதனால் சிலருக்கு இனிமேல் படித்து என்ன செய்யபோகிறோம் என்ற எண்ணம் ஏற்பட்டுவிடுகிறது. சிலர் 30 வயதிற்கு மேல் என்னால் சாதிக்க முடியும். என்னால் தேர்வு எழுத முடியும் என்று நினைக்கும்போது வயது வரம்பு கடந்து விடுகிறது.
இந்தியா சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகளை கடந்த பின்னரும், இன்றும் நாட்டின் உயர் நிர்வாகத்தில் பெண்களின் பங்கெடுப்பு என்பது ஆணுக்கு சரிசமமாக இல்லாதற்கு இதுவே காரணம்.
எனவே, கல்லூரியில் படிக்கும்போதே பெண்களுக்கு இந்த தேர்வுகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். ஏனென்றால் வீட்டு நிர்வாகத்தை திறம்பட கையாளும் பெண்கள், நாட்டின் நிர்வாகத்தையும் திறம்பட மேற்கொள்ள முடியும்.ஆகவே, குடிமைப்பணித்தேர்வுகளில் பெண்களின் பங்கெடுப்பும் சாதனையும் அதிகரிக்க வேண்டுமெனில், அவர்கள் எதிர்கொள்ளும் சவால்களை மத்திய அரசு முற்றிலுமாக அழித்தொழிக்க வேண்டியது அவசியமாகும் என்கிறார் வைஷ்ணவி.