மேரிகோம் மீது எனக்கு எவ்வித துவேஷமும் இல்லை!
""பிங்கியிடம் நான் தோற்றதால், நான் மூர்க்கதனமாக தாக்குவதாக ஒவ்வொருவரும் நினைக்கலாம்.
""பிங்கியிடம் நான் தோற்றதால், நான் மூர்க்கதனமாக தாக்குவதாக ஒவ்வொருவரும் நினைக்கலாம். என்னுடைய நுட்பத்தை வலுவாக பயன்படுத்துவதென முடிவு செய்தேன். இதன்மூலம் பிங்கியை வீழ்த்த சிறந்த குத்துச்சண்டை வீராங்கனையாக மாற்றிக் கொண்டேன். ஒவ்வொரு போட்டியிலும் என் திறமையை நிரூபிக்க கடுமையாக போராட வேண்டியிருக்கிறது'' என்று கூறும் நிக்கத், இருமுறை உலக சாம்பியன் விருது பெற்ற கஜகஸ்தானை சேர்ந்த நசீம் கெய்சய்போவை ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் வீழ்த்தி வெண்கல பதக்கத்தைப் பெற்றுள்ளார்.
இந்தியாவை பொருத்தவரை மகளிருக்கான 51கிலோ பிரிவு போட்டியில் பங்கேற்பது மிகவும் கடினமாக கருதப்பட்டாலும், ஆறுமுறை உலக சாம்பியன் விருது பெற்ற மேரிகோம், அடுத்து மீண்டும் ஒலிம்பிக்ஸில் போட்டியிடப் போவதாக கூறியிருப்பது எனக்குள் புதிய வேகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேரிகோம், பிங்கியைப்போன்று என்னாலும் மகளிர் 51கிலோ பிரிவில் போட்டியிட முடியும் என்ற நம்பிக்கை உள்ளது.
2016-ஆம் ஆண்டு ரியோ போட்டிகளின்போது 51 கிலோ பிரிவில் பயிற்சி பெற்ற மேரிகோமுடன் 54 கிலோ பிரிவில் என்னைப் போட்டியிடும்படி என்னுடைய பயிற்சியாளர்கள் கூறினர். ஆனால், ரியோ போட்டியில் மேரிகோம் பங்கேற்கவில்லை. உலக சாம்பியன்ஷிப் ஆயத்தங்களின் போதே பிரச்னைகளும், கருத்து வேற்றுமைகளும் எழுந்தன.
மேலும் 48 கிலோ பிரிவிலிருந்து முன்னேறிச் சென்ற மேரியுடன் போட்டியிடுவது சுலபமான விஷயமல்ல, அதிக எடை பிரிவுகளில் போட்டியிட வேண்டுமென்பது மேரிக்கு பிடித்திருந்தது. 2012-ஆம் ஆண்டு லண்டன் போட்டியில் வெண்கல பதக்கம் பெற்றவர். அக்டோபரில் நடக்கவுள்ள உலக சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்க வேண்டு மென்பதற்காக ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியை மேரி தவிர்த்தார்.
""எனக்கும் இந்த போட்டியில் பங்கேற்க வேண்டுமென்ற ஆர்வம் உள்ளது. இந்தப் போட்டியில் பங்கேற்க ஒவ்வொருவரும் ஆயத்தமாகி வருகின்றனர். எனக்கு தேவை ஆதரவு. ஏனெனில் மிகவும் கடினமான இந்தப் போட்டியில் மேரிகோம் உள்ளார். அவருக்கு தேவையான ஆதரவு உள்ளது. எனக்கு இந்தப் போட்டியில் கலந்து கொள்ள தேவையான திறமையும், நம்பிக்கையும் இருக்கிறது. இதில் வெற்றிப் பெற்றால் நிச்சயம் டோக்கியோவில் நடக்கும் ஒலிம்பிக்ஸில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைக்கும்.
குத்துச் சண்டை போட்டிகளில் பங்கேற்பவர்களுக்கு உயரம் தேவையில்லை என்று சிலர் கருதுகிறார்கள். ஆனால், அனைத்து சர்வதேச 51 கிலோ போட்டிகளிலும் பங்கேற்பவர்கள் உயரமாக இருப்பது, அவர்களுக்கு உதவியாக இருப்பதாக நான் கருகிறேன். இந்தியாவில் உள்ள குத்துச்சண்டை வீராங்கனைகளில் நான் மிகவும் உயரமானவள்.
மேரிகோம் மீது எனக்கு எவ்வித துவேஷமும் இல்லை. முகாமில் அவரை சந்திக்கும் போதெல்லாம் என்னிடம் அவர் அன்பாகவே பேசுவார், பழகுவார், தவறுகளை சுட்டிக்காட்டுவார்.
எனக்கு 51கிலோ பிரிவில் போட்டியிடுவது பிடித்தமானது. இந்தியாவில் இந்தப் பிரிவில் என்னையும் ஒரு திறமைசாலியாக கருதுகிறேன்'' என்கிறார் நிக்கத் ஜரீன்.
நிக்கத், உலக ஜூனியர் சாம்பியன்ஷிப் போட்டியில் விருது பெற்றவுடன் எதிர்காலத்தில் இவரும் மேரிகோம் போன்று பிரபலமாவார் என விளையாட்டு விமர்சகர்கள் கூறினர். அதே போன்று இந்திய குத்துச்சண்டை வீராங்கனைகளில் இவர் முதலிடம் பெற வாய்ப்புள்ளதாகவும் எதிர்ப்பார்க்கின்றனர்.