கராத்தே குழந்தைகளுக்கு கருப்பு பெல்ட் !
சிறிய வயதில் கராத்தே கற்றுக் கொள்ள முடியுமா, அப்படியே முடிந்தாலும் அதில் கறுப்பு பெல்ட் வாங்க முடியுமா? கண்டிப்பாக வாங்க முடியும் என்று நிரூபித்துள்ளனர்
சிறிய வயதில் கராத்தே கற்றுக் கொள்ள முடியுமா, அப்படியே முடிந்தாலும் அதில் கறுப்பு பெல்ட் வாங்க முடியுமா? கண்டிப்பாக வாங்க முடியும் என்று நிரூபித்துள்ளனர் காரைக்காலைச் சேர்ந்த ஸ்ரீவிசாகன் மற்றும் ஸ்ரீஹரிணி. இந்தியாவில் முதன்முறையாக 7 வயதில் கராத்தேவில் கறுப்பு பெல்ட் பெற்ற இரட்டையர்கள் என்ற சாதனையைச் செய்துள்ளனர்.
இது குறித்து அவரது தாயார் ப்ரியா கூறியதாவது, "என்னோட கணவருக்கு விளையாட்டு என்றால் பிடிக்கும். அதனால், எங்கள் குழந்தைகளுக்கும் ஏதாவது ஒரு விளையாட்டைக் கற்றுக் கொடுக்க நினைத்தோம். எங்கள் குழந்தைகளில் ஒன்று ஆண், இன்னொன்று பெண்.
3 வயதிலிருந்தே கராத்தே கிளாஸ் போகிறார்கள். தற்போது கராத்தேவில் இந்தியாவிலேயே குறைந்த வயதில் பிளாக் பெல்ட் வாங்கிப் பெருமை சேர்த்திருக்கிறார்கள். அது ரொம்ப சந்தோஷமா இருக்கிறது. கராத்தேவுடன் ஸ்ரீஹரிணி நல்லா ஓவியம் வரைவாள். அத்துடன் கட்டுரை எழுதுவதிலும் அவளுக்கு ஆர்வம் உண்டு'' என்கிறார்.
அப்பா முருகானந்தம் தொடர்கிறார்: ""குழந்தைகளின் கராத்தே பயிற்சிக்கான பொறுப்பு என்னுடையது. அவர்களின் பள்ளிப் படிப்பிற்கான பொறுப்பு என் மனைவியுடையது என்று எங்களுக்குள் பிரிந்துக் கொண்டோம். ரெண்டு பேருமே படிப்பிலும் சரி, பள்ளியில் நடத்தும் போட்டிகளிலும் சரி கெட்டி.
கராத்தே போட்டிக்கு வெளியூருக்குப் போகிற போது, வயசு மற்றும் எடைக்கு ஏற்ற மாதிரிதான் போட்டியாளர்களும் இருப்பாங்க. சில நேரத்துல இவர்களைவிட வயசுல பெரியவங்க போட்டியாளராக கலந்துக் கிட்டாலும் அசராமப் போட்டியிட்டு ஜெயிப்பார்கள்.
புதுச்சேரி மாநிலத்தை சேர்ந்த, காரைக்காலில் உள்ள இன்டர்நேஷனல் வி.ஆர்.எஸ் மார்ஷியல் ஆர்ட்ஸ் அகாதமி இயக்குநர் வி.ஆர்.எஸ் குமாரிடம் மூன்று வயது முதல் கராத்தே, சிலம்பம், யோகா, கிக் பாக்ஸிங், குபுடோ, தேக்வாண்டோ போன்ற எண்னற்ற தற்காப்பு கலைகளை கற்று இந்தியா மற்றும் சர்வதேச அளவில் 200-க்கும் மேற்பட்ட பதக்கங்களை வாங்கியுள்ளார்கள். காரைக்கால் குட்ஷெப்பர்ட் மேல்நிலை பள்ளியில் 5-ஆம் வகுப்பில் படிக்கிறார்கள்.
6 வயது முதல் 9 வயது வரை கராத்தேவில் இரண்டு பிளாக் பெல்ட் மற்றும் இந்தியா மற்றும் சர்வதேச அளவில் அதிக பதக்கங்களை வாங்கி உலக சாதனை படைத்ததால் இவர்களுக்கு சமீபத்தில் "வில் மெடல் ஆப் வேர்ல்டு ரெக்கார்டர்ஸ்' (WILL MEDAL OF WORLD RECORDS) மற்றும் வில் மெடல் கிட்ஸ் ரெக்கார்டர்ஸ் (WILL MEDAL KIDS RECORDS) ஆகியவற்றில் உலக சாதனையை பதிவு செய்து சான்றுகள் பெற்றுள்ளனர். மேலும், "யுனிவர்சல் அச்சிவர்ஸ் புக் ஆப் ரிக்கார்ட்ஸ்' (UNIVERSAL ACHIEVERS BOOK OF RECORDS.) மற்றும் "பியூச்சர் கலாம் புக் ஆப் ரிக்கார்ட்ஸ்' (Future Kalam book of records) ஆகியவற்றிலும் சாதனையாளர்களாக பதியப்பட்டுள்ளனர். மேலும், ஸ்ரீ விசாகன் கண்களை கட்டிக் கொண்டு குறுகிய நேரத்தில் பல்வேறு தற்காப்பு கலைகளை செய்து காண்பித்தல், கே ஸ்ரீஹரிணி குறுகிய நேரத்தில் பல்வேறு தற்காப்பு கலைகளின் ஆயுதத்தை பயன்படுத்தி தற்காப்பு கலைகளை செய்து காண்பித்ததும் பலரையும் வியப்பில் ஆழ்த்தியது. இருவரும் புதிய உலக சாதனை செய்ததால் இவர்களுக்கு சர்வதேச தமிழ் பல்கலைக்கழகம் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கியது எங்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது'' என்றார் முருகானந்தம்.
கராத்தே மாஸ்டர் குமாரிடம் பேசியபோது, ""ஸ்ரீவிசாகன், ஸ்ரீஹரிணி இருவரும் நான்கு வருடங்களாக என்னிடம் கராத்தே பயின்று வருகிறார்கள். இந்த வயதில் பிளாக் பெல்ட் வாங்குவது உண்மையிலேயே பெரிய விஷயம். மலேசியாவில் நடந்த போட்டியில் இருவரும் ஜெயித்திருப்பது எனக்கு பெருமையாக உள்ளது'' என்றார்.
"ஒலிம்பிக்ஸில் கோல்டு மெடல் வாங்கணும். ஐ.ஏ.எஸ் படிச்சி கலெக்டராகணும்.''என்றான் ஸ்ரீவிசாகன். "என் அசையும் அதுதான். ஒலிம்பிக்ஸில் கோல்டு மெடல் வாங்கியதோட, எங்கள் தாத்தா இதய நோயால திடீர்ன்னு இறந்துட்டாங்க. அதனால டாக்டருக்குப் படிச்சி, இதயநோய் நிபுணர் ஆகி எல்லோரையும் காப்பாத்தணும்'' என்றார் ஸ்ரீஹரிணி.
- சலன்