முகப்பு
மகளிர்மணி

அரசியலுக்கு அப்பால்... பொதுநலன் கருதி!

மனிதனை மனிதனே கண்டு அஞ்சும்  கரோனாவின் கோரப் பிடியில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள மக்களும்,  மக்களைப் பாதுகாக்க அரசும் போராடி வருகின்றன.

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:27 PM
பகிர்:

மனிதனை மனிதனே கண்டு அஞ்சும் கரோனாவின் கோரப் பிடியில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள மக்களும், மக்களைப் பாதுகாக்க அரசும் போராடி வருகின்றன. கரோனாவிலிருந்து மக்களைக் காக்க அரசு பிறப்பித்திருக்கும் இந்த ஊரடங்குச் சூழலால் ஒருவேளை உணவுகூடக் கிடைக்காமல் தவித்து வருபவர்களுக்கு "மோடி கிச்சன்',

"மோடி கிட்' என்று பல்வேறு உதவிகளைச் செய்து வருகிறார் தமிழக அரசியலில் தனக்கென்று ஓர் இடத்தை தக்க வைத்துக்கொண்டிருக்கும் தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தற்போதைய மாநிலத் துணைத் தலைவர் வானதி சீனிவாசன். அவர் நம்முடன் பகிர்ந்து கொண்டவை:

ஊரடங்கு உத்தரவு பிறப்பித்ததை நீங்கள் எதிர்பார்த்தீர்களா?

கரோனாவுக்காக மக்கள் யாரும் வீட்டைவிட்டு வெளியே வரக்கூடாது என "லாக்டௌன்' அறிவித்தவுடன் எல்லோரும் ஒரு நிமிடம் திகைத்துப் போனது உண்மைதான். எங்களுக்கும் இரண்டுநாள் குழப்பமாகத்தான் இருந்தது. அரசியல் வாதியாக நாங்கள் வெளியே சென்று மக்களுக்கு உதவி செய்துதான் பழக்கம். வெளியே வராமல் வீட்டுக்குள் இருந்து கொண்டு மக்களின் தேவைகளை எப்படி அறிவது, எப்படி பூர்த்தி செய்வது என்று புரியாமல் இருந்தோம்.

கட்சி ரீதியாக இது குறித்து நடவடிக்கை எடுக்க உங்களுக்கு ஏதாவது கூறப்பட்டதா?

அப்படி எதுவும் கூறவில்லை. தினக்கூலி பெறும் தொழிலாளர்களும், சிறு வியாபாரிகளும் ஒருநாள் இரண்டு நாள்களுக்கு மேல் வெளியே வராமல் இருக்க முடியாது அப்படி என்றால் அவர்களின் வாழ்வாதாரம் என்னாவது, இதை எப்படி சமாளிப்பது என்று எல்லோரையும்போல நாங்களும் யோசித்தோம். பின்னர், ஆடியோ கான்பிரன்ஸ் மூலம் கட்சி உயர்மட்ட குழுவுடன் கலந்தாலோசித்தோம். அதில் பிரதானமாகப் பேசப்பட்டது ஏழை மக்களுக்கு உணவளித்தல்தான்.

கட்சி மேலிடத்திலிருந்து எதுவும் அறிவுறுத்தப்படவில்லை, அப்படித்தானே?

தலைவர் சொன்னார், "முதலில் உங்கள் வீட்டுக்கு அருகில் இருக்கும் ஏழைகளுக்கு உணவு சமைத்து கொடுங்கள். குறைந்தபட்சம் ஒவ்வொருவரும் 5 பேருக்காவது தினமும் உணவு கொடுக்க ஏற்பாடு செய்யுங்கள்' என்றார். அவரே ஒரு உதாரணமாகவும், செய்தும் கொடுத்தார். அதை நாங்களும் பின்பற்றத் தீர்மானித்தோம்.

"மோடிகிச்சன்' என்று ஏன் தொடங்கினீர்கள்? அம்மா உணவகத்தின் தாக்கமா?
அப்படியெல்லாம் இல்லை. "அம்மா உணவகம்' என்பது ஒரு முன்னுதாரணம் என்பதை மறுப்பதற்கில்லை. "மோடி உணவகம்' என்று பெயர் வைத்தால் அது ஏதோ போட்டிக்கு நடத்துவது போன்ற தவறான கருத்தை ஏற்படுத்திவிடும். அதனால்தான் "மோடி கிச்சன்' என்று பெயர் வைத்தோம்.''

சென்னையில் தொடங்காமல் கோவையில் தொடங்குவதற்கு என்ன காரணம்?
கோயம்புத்தூர் பகுதிகளில்தான் எனது பொதுவாழ்க்கை தொடங்கியது. மையம் கொண்டிருக்கிறது. அது எனது சொந்த ஊர். அதனால், அங்கே "மோடி கிச்ச'னைத் தொடங்கினேன். மேலும், ஏற்கெனவே கோயம்புத்தூரில் "கோவை மக்கள் சேவை மையம்' என்ற அமைப்பை தொடங்கி அதன்மூலம் பல நலதிட்டங்களைச் செயல்படுத்தி வருகிறோம். அதுவும் ஒரு காரணம்.

அரசும், பல தன்னார்வலர்களும் ஏழைகளுக்கு உணவு வழங்கி வரும்போது, மோடி கிச்சனின் அவசியம்தான் என்ன?

எத்தனை பேர் களத்தில் இறங்கிப் பணியாற்றினாலும்கூட அதைவிட அதிகமான தேவை இருக்கத்தானே செய்கிறது? சிறு துளிகள்தானே பெரு வெள்ளமாக முடியும். நம்மால் முடிந்த அளவு கரோனாவினால் உணவு கிடைக்காமல் தவிக்கும் ஏழை எளிய மக்களின் பசியைப் போக்க வேண்டும் என்பதுதான் மோடி கிச்சனின் நோக்கம். தினசரி 500 பேருக்காவது உணவு கிடைக்க வேண்டும் என்று நினைத்தோம். ஓரிடத்தில் சமையல் செய்து, எங்கள் கட்சி நிர்வாகிகளின் மூலம் எங்கெல்லாம் உணவு தேவைப்படுகிறதோ, அந்தப் பகுதிகளுக்கு உணவைக் கொண்டு சென்று கொடுத்து வருகிறோம். இதன்மூலம் தற்போது தினசரி 700 பேருக்கும் மேல் பயன் பெறுகிறார்கள்.

"மோடி கிச்சன்' மட்டுமல்லாமல் "மோடி கிட்' என்று ஏதோ விநியோகிக்கிறீர்களாமே? அது என்ன?

"மோடி கிட்' திட்டத்தின் மூலம் அரிசி, பருப்பு, எண்ணெய், மளிகைப் பொருட்கள் என ஒரு வீட்டுக்கு 10 நாட்களுக்குத் தேவையான உணவு பொருளை ஒரு பையில் போட்டுக் கொடுத்து வருகிறோம். வெளிமாநிலத் தொழிலாளர்களுக்கு முதல் ஒரு வாரம் உணவுகளை வழங்கி வந்தோம். சப்பாத்தி சாப்பிட்டுப் பழகிய அவர்களால் நமது தமிழர்களின் உணவான சம்பார் சாதம், தயிர்சாதம் போன்றவற்றை தினமும் சாப்பிட முடியாமல் சிரமப்படுவதைப் பார்த்தோம். யாருக்கெல்லாம் அவர்கள் தங்கியிருக்கும் இடங்களில் உணவு சமைக்க வசதியிருக்கிறதோ அங்கெல்லாம் "மோடி கிட்' மூலம் உணவு பொருட்கள், காய்கறி, சப்பாத்தி மாவு உள்ளிட்டவற்றை வழங்கி வருகிறோம். கோவையில் உள்ள மாற்றுத்திறனாளிகள், பெண் ஆட்டோ ஓட்டுநர் அமைப்பை சார்ந்தவர்களுக்கும் "மோடி கிட்' வழங்கி வருகிறோம்.

எல்லாம் கோவையிலேயே நலத்திட்டங்களைச் செய்து கொண்டிருக்கிறீர்களே, நீங்கள் வசிக்கும் சென்னைக்கும் ஏதாவது செய்ய வேண்டாமா?

இங்கேயும் நான் செய்து கொண்டிருக்கிறேன். சும்மா இருக்க முடியுமா? சென்னையில் நான் வசித்து வரும் ராஜா அண்ணாமலைபுரம் பகுதியில் என் வீட்டுக்கு அருகில் கூலித் தொழிலாளிகள் பலர் வசித்து வருகிறார்கள். அவர்களுக்கு தினமும் உணவு வழங்கி வருகிறோம். இவர்களில் சிலருக்கும் "மோடி கிட்' வழங்கி வருகிறோம். எனது கணவர் சீனிவாசன், விஸ்வஹிந்து பரிஷத்தின் மாநிலத் தலைவராக இருக்கிறார். அவர்கள் சார்பில் ஏழெட்டு இடங்களில் சமையல் கூடங்கள் அமைத்து தினமும் 8 ஆயிரம் பேர் வரை உணவருந்தும் வகையில் உணவு சமைத்து வழங்கி வருகின்றனர்.

ஊரடங்கால் ஒட்டுமொத்த இந்தியாவே முடங்கிப்போய்க் கிடக்கிறது. இந்த நேரத்தில் நீங்கள் மட்டும் சுறுசுறுப்பாக இயங்குகிறீர்களே, அது எப்படி?

நான் மட்டுமல்ல, பொது வாழ்க்கையில் ஈடுபட்டிருக்கும் எல்லோரும்தான் கட்சிப் பாகுபாடு இல்லாமல் அவரவர் அளவில் இயங்கிக் கொண்டிருக்கிறோம். மத்திய, மாநில அரசுகளால் மட்டுமே இந்தச் சூழலை எதிர்கொண்டு மக்களின் எல்லா பிரச்னைகளையும் தீர்த்துவிட முடியாது.

மோடி கிச்சன், மோடி கிட் அல்லாமல், வேறு என்னவெல்லாம் செய்கிறீர்கள்?

கை கழுவும் பழக்கம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துகிறோம். அதற்கான சோப்பு திரவம் வழங்குகிறோம். சானிடைசர் கிருமிநாசினி வழங்குகிறோம். 2,000-க்கும் அதிகமான முகக் கவசங்கள் வழங்கி இருக்கிறோம். அதிக அளவில் முகக் கவசங்கள் தயாரித்து இலவசமாக வழங்குவதற்கான ஏற்பாடுகளைச் செய்து கொண்டிருக்கிறோம்.

உங்கள் கட்சியைச் சேர்ந்த மற்ற தலைவர்கள் உங்களைப்போலக் களப் பணியில் ஈடுபடவில்லையே?

அப்படியெல்லாம் இல்லை. இது தவறான கருத்து. நான் முன்பே கூறியதுபோல, எல்லோரும் அவரவர் அளவில் செயல்படுகிறார்கள். எல்லா கட்சியினரும் செய்கிறார்கள் என்று முதலிலேயே குறிப்பிட்டேன். அரசியலுக்கு அப்பால் பொது நலன் கருதி எல்லோருமே செயல்படுகிறோம்.

உங்களது ஆக்கபூர்வப் பார்வை வித்தியாசமாக இருக்கிறது. நம்பிக்கையை ஏற்படுத்துகிறது. தமிழகம் முழுவதும் இதுபோல உதவிகள் செய்யப்படுகின்றனவா?

தமிழகத்தில் மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்தியாவிலும் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கின்றன. இப்படி ஒரு இக்கட்டான சூழலிலும் நாங்கள் பார்க்கும் நல்ல விஷயம் என்னவென்றால், சென்னையில் வெள்ளம் வந்தபோது மக்கள் எப்படி சின்ன சின்னக் குழுவாக சேர்ந்து உதவினார்களோ, அவ்வாறு இப்போதும் உதவுவதைப் பார்க்க முடிகிறது. உதாரணமாக, திருப்பூரில் வெளிமாநிலத்தவர்கள் சுமார் ஒன்றேகால் லட்சம் பேர் தங்கியுள்ளனர். அவர்களுக்கு என்.ஜி.ஓ. அமைப்புகள் உணவு வழங்கிப் பெரிதும் உதவி வருகிறார்கள். இதுபோன்று எல்லாருமே, தங்களைச் சுற்றியுள்ள ஏழை எளியோருக்குத் தங்களால் முடிந்த உதவிகளைச் செய்கிறார்கள். ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு என்பார்கள். இப்போது விலகி நின்றால்தான் உண்டு வாழ்வு என்கிற நிலைமை. ஆனால், கரோனா நோய்த்தொற்றை எதிர்கொள்வதில் ஒன்று பட்டாக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது.

மோடி கிச்சன், மோடி கிட் இவையெல்லாம் அரசியல் ரீதியாக உங்களுக்குக் கை கொடுக்கும் என்று நினைக்கிறீர்களா?

அரசியல் பேச வேண்டிய, அரசியல் ரீதியாக சிந்திக்க வேண்டிய நேரமா இது? அப்படியெல்லாம் நினைத்தால் நான் பொது வாழ்க்கைக்கு வந்ததற்கே அர்த்தமில்லாமல் போய்விடும்.

உலகமே ஒரு இக்கட்டான சூழலை எதிர்கொள்கிறது. இந்தச் சூழலில் பலருக்கும் உதவுவதற்கு ஒரு வாய்ப்புக் கிடைத்தது என்று நினைக்கிறேன். பெருமைப்படுகிறேன். இதற்கு அரசியல் முலாம் பூசிக் கொச்சைப்படுத்தி விடாதீர்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.