டி. கே. ராதாமணிக்கு வயது 69 ஆனாலும் எல்லா கனரக வாகனங்களை அநாயாசமாக ஓட்டும் திறமை பெற்றவர். கண்டைனர் லாரி, ரோடு ரோலர், டிராக்டர், ஜேசிபி போன்ற கனரக வாகனங்களை ஓட்டுவதற்கான உரிமங்களை ராதாமணி பெற்றுள்ளார். இந்தியாவிலும் சரி.. கேரளத்திலும் சரி இப்படி எல்லா கனரக வாகனங்களை இயக்கும் லைசென்ஸ் பெற்றிருப்பவர் ராதாமணி மட்டுமே. அவர் நம்முடன் பகிர்ந்து கொண்டவை இதோ:
"" 1981 - இல் கார் ஓட்டும் லைசென்ஸ்தான் நான் முதன் முதலாகப் பெற்றது. 1988- இல் பஸ், லாரி கனரக வாகன லைசென்ஸ் பெற்றேன். பல தரப்பட்ட வாகனங்களை எப்படி ஓட்ட வேண்டும் என்பதை பழக்குவதுதான் என் கணவருக்குத் தொழிலாக இருந்தது. வாகனம் ஓட்டும் பயிற்சி நிலையத்தை அவர் நடத்தி வந்தார். கணவருக்கு உதவலாம் என்று போனபோது வாகனங்களை ஓட்ட சொல்லித்தரும் பயிற்சியாளரும் அந்தந்த வாகனங்களை ஓட்டும் லைசென்ஸ் பெற்றிருக்க வேண்டும் என்பது அரசாங்க விதிமுறை. பிறருக்கு பல தரப்பட்ட வாகனங்களை ஓட்டப் படிப்பிக்க நான் கணவரிடம் பலதார வாகனங்களை ஓட்டப் பழகி கேரள அரசின் லைசென்ஸ்களையும் ஒன்றுக்குப் பிறகு ஒன்றாகப் பெற்றேன். அதனால் சுமார் 20 கனரக வாகனங்களை ஓட்டும் திறமைகளைக் கை வரப்பெற்றேன்.
கொச்சி நகரின் தோப்பும்படி பகுதியில் எங்களுக்கு சொந்தமாக வாகனங்களை ஓட்ட பயிற்சி தரும் கூடம் உள்ளது.1978 - இல் எனது கணவரால் தொடங்கப்பட்டு இன்றைக்கும் செயல்பட்டு வருகிறது. கணவர் 2004- இல் இறந்துவிட்டதால் பயிற்சிக் கூடத்தை நானும், இரண்டு மகன்களும் சேர்ந்து நிர்வகித்து வருகிறோம். பேரன் அரவிந்தும் ஒரு பயிற்சியாளன். வயது காரணமாக உயரம் அதிகமாக இருக்கும் கனரக வாகனங்களில் சேலையுடன் ஏற இறங்கச் சிரமமாக இருக்கிறது. ஏறி நடத்துநர் இருக்கையில் அமர்ந்துவிட்டால் வாகனத்தை லாகவமாக இன்றைக்கும் ஒட்டுவேன்.
கனரக வாகனங்களை ஆண்களால் தான் நன்றாக ஓட்ட முடியும் என்று சொல்வதை ஏற்றுக் கொள்ளமாட்டேன். பெண்களாலும் திறமையாக ஓட்ட முடியும். அதற்கு நான்தான் எடுத்துக் காட்டு. பெரும்பாலான பெண்கள் கார் ஓட்ட மட்டுமே கற்றுக் கொள்கிறார்கள். விரல்விட்டு எண்ணக் கூடிய பெண்கள் மட்டுமே லாரி ஓட்டக் கற்கிறார்கள். அவர்களும் லாரியை விட பெரிய வாகனங்களை ஓட்டக் கற்றுக் கொள்வதில்லை. அதன் காரணமாகத்தான் கனரக வாகனங்களை ஓட்ட ஆண்களால்தான் முடியும் என்ற
எண்ணம் உருவாகியுள்ளது.
எனது 32 ஆண்டு அனுபவத்தில் நான் வாகனம் ஓட்டி ஒரு விபத்து கூட நிகழ்ந்ததில்லை. தொடக்கத்தில் ஆட்டோ பஸ் ஓட்டுநர்கள். "இது தேவையா...வீட்டில் இருக்க வேண்டியதுதானே' என்று என்னைக் கேலி செய்வார்கள். அப்படி கேலி செய்தது என்னால் இருபது கனரக வாகனங்களை இயக்குவதை கற்றுக் கொள்ளச் செய்தது.
ஸ்கூட்டர், கார், பஸ், மற்றும் பலவகை கனரக வாகனங்களை எனக்கு ஓட்டவும் , எப்படி வாகனங்களை ஓட்ட வேண்டும் என்று பயிற்றுவிக்கத் தெரிந்தாலும், எனக்கு சைக்கிள் ஓட்டத் தெரியாது. தொடக்கக்காலத்தில் விரும்பி சைக்கிள் ஓட்ட முயற்சித்தேன். அப்போது பயிற்சிக்கு பெண்கள் சைக்கிள் எனக்கு கிடைக்கவில்லை. ஆண்கள் ஓட்டும் சைக்கிளில் நடுவில் பார் இருப்பதால் சேலை அணிந்து கொண்டு காலைத் தூக்கிப் போடுவது சிரமமாக இருந்தது. அதனால் எனக்கென்னமோசேலை அணிந்து கொண்டு சைக்கிள் ஓட்ட வரவில்லை. அதனால் மேலும் முயற்சி செய்யாமல், "இந்தப் பழம் புளிக்கும்' என்று விட்டுவிட்டேன். சின்னச் சின்ன வேலைகளுக்காக ஸ்கூட்டரில் இன்றைக்கும் சென்று வருகிறேன்'' என்கிறார் ராதாமணி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.