ஒவ்வொரு பெண்ணுக்கும் தங்களது வாழ்வில் பெரிதாக சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது. ஆனால் அளவுக்கு மீறி ஆசைப்பட்டுவிட்டால் இப்போது இருக்கக்கூடியதும் போய்விடுமே என்ற பயமும் கூடவே இருக்கிறது. தப்பித்தவறிகூடத் தவறு நிகழ்ந்துவிடக் கூடாது என தனக்குத்தானே தடைகளை ஏற்படுத்திக் கொள்வதும் உண்டு. நல்ல திறமை, கடின உழைப்பு என உச்சத்தை அடைய முழுத்தகுதி உடையோரும் இதனால் ஒரு கட்டத்திற்குள் அடைந்து கிடக்கிறார்கள்.
சூழ்நிலையும் நம்மைச் சார்ந்தோரும் வளர்ச்சிக்கான உந்துசக்தியாக விளங்கினாலும் நம்முடைய மனோ நிலைக்கும் அணுகுமுறைக்கும் முக்கிய இடம் உண்டு. ஒவ்வொரு பெண்ணும் தொழில், சொந்த வாழ்க்கை இவற்றில் வெற்றி பெற சில அடிப்படை காரணிகளை உளவியல் நிபுணர்கள் முன்வைக்கிறார்கள். முன்னேற்றத்திற்கான ஊக்கம் அவசியம் என்ற போதும் வேறு சில தகுதி களையும் மனப்பான்மைகளையும் வளர்த்துக் கொள்ள வேண்டியது அத்தியாவசியம். அவற்றை சரியாக புரிந்து கொண்டு செயலில் ஈடுபடும் பொழுது பெண்கள், பணியிடம் உறவுகள் குடும்பம் என அனைத்து நிலைகளிலும் உச்சம் தொடுவது நிச்சயம்.
தெளிவான திட்டமிடல்
ஓய்வே இல்லாமல் உழைப்பது தான் வெற்றிக்கான அடிப்படை என்று பல பெண்கள் நினைத்துக் கொள்கிறார்கள். இதனால் தொடர்ந்து பணியாற்றிக் கொண்டே இருக்கவேண்டும் என்ற தவறான சிந்தனை அவர்களுக்கு ஏற்பட்டுவிடுகிறது. உழைப்பது உயர்வுக்கு அவசியம் என்றாலும் அதனைத் தெளிவான திட்டமிடலுடன் செய்தால் மட்டுமே நம்மால் வெற்றி இலக்கை அடைய முடியும். ஆக, வெற்றிக்கு முதல்படி தெளிவான திட்டமிடல். எந்த வேலையை எப்போது எப்படி செய்து முடிக்க வேண்டும் என்பதில் தெளிவாக இருந்து விட்டால் வேலைகளை மிகச் சரியாகவும் துல்லியமாகவும் முடித்துவிட இயலும்.
வேலையில் தெளிவு
எந்த ஒரு விஷயத்திலும் எதிர்பார்ப்புகளை ஊகத்தின் அடிப்படையில் அமைத்துக் கொள்ளாமல் யதார்த்தத்தின் படி ஏற்படுத்திக் கொள்வது, ஒரே கோணத்தில் அணுகாமல் பல கோணங்களிலும் ஒரு தகவலை, வேலையை, உடன் பணியாற்றுபவரை அணுகுவது தெளிவான பார்வையைத் தரும். நாம் செய்ய வேண்டிய வேலையில் தெளிவு இருக்கும் பொழுது குறைபாடுகளும் குழப்பங்களும் இல்லாமல் நேர்த்தியாக அதனை செய்து முடித்துவிட முடியும். பெரும்பாலும் இந்திய இல்லங்களில் பெண்கள் இதில் நிபுணத்துவம் வாய்ந்தவர்களாக இருப்பார்கள். எந்தத் தொழில் செய்தாலும் அதில் தெளிவான புரிதலும் பார்வையும் இருக்கும் பொழுதுதான் வெற்றியும் கைவசமாகும். நினைத்ததெல்லாம் நடந்துவிட வேண்டும் என்று மாயக் கற்பனையில் இருப்பது, உடன் இருப்போரிடம் அதிகமான எதிர்பார்ப்பை வளர்த்துக்கொள்வது இவற்றையெல்லாம் தவிர்த்து விட்டாலே தெளிவான பார்வை சாத்தியமாகி விடும்.
அச்சம் தவிர்
என்னதான் பெண்கள் தங்களை தைரியமானவர்களாக காட்டிக்கொண்டாலும் அவர்களுக்குள் பயம் இருக்கவே செய்யும். பெண் குழந்தைகள் பெற்றோரின் அரவணைப்பில் பாதுகாப்பான சூழலில் வளர்க்கப்படுவது இதற்கு முக்கிய காரணம். பயத்தோடு அணுகும் பெண்களை ஆதிக்கம் செலுத்துவதும் அச்சமின்றி தன் கருத்துகளை வெளிப்படையாகவும் நேரடியாகவும் முன்வைக்கும் பெண்களிடம் சற்று மென்மையாகவும் நடந்துகொள்வது பணியிடத்தில் மிகச் சாதாரணமாக உள்ள நடைமுறை. இதனால் பெண்கள் தங்களை அச்சமற்றவர்கள் போல காட்டிக் கொள்வதும் உண்டு. பெண்கள் தங்களின் அச்சத்தை மறைத்துக் கொள்ளவும் போக்கிக் கொள்ளவும் ஆற்றலை வீணடிக்கிறார்கள். உண்மையில் ஆண்கள் பெண்கள் என்ற பேதமற்று அனைவருக்குமே அச்ச உணர்வு உண்டு. நாம் அவற்றைக் கடந்து எப்படி நம் பணியினை செய்து முடிக்க வேண்டும் என்பதில் கவனம் செலுத்துவதில் தான் அதனை வெற்றி கொள்வதற்கான சூத்திரமும் அடங்கியிருக்கிறது.
நேர்மறை சிந்தனை
எந்த ஒரு மனிதரும் முழுமையானவர்கள் இல்லை. நிறைகளும் குறைகளும் கலந்தவரே மனிதர். பெண்களும் இதற்கு விதிவிலக்கல்ல. வெற்றி இலக்கை எட்டிப் பிடிக்க நினைக்கும் பெண் முதலில் தன்னுடைய பலம் என்ன பலவீனம் என்ன என்பதை தெளிவாக அறிந்து கொள்ள வேண்டும். நம் பலவீனங்களைப் பெரிதாக நினைக்கும் பொழுது தாழ்வு மனப்பான்மை ஏற்பட்டு விடும். நம்மைப் பலசாலி என்று நம்பும் பொழுது தேவையற்ற அதீத நம்பிக்கை ஏற்பட்டு காரியம் கெட்டுப் போகலாம். அதனால் பலவீனங்கள் நம் பணியில் குறுக்கிட்டு விடாமல் பார்த்துக்கொண்டும் நம் பலத்தை முழுமையாகப் பிரயோகிப்பது குறித்த புரிதலுடனும் செயல்பட்டால் வெற்றி நிச்சயம். அதோடு எந்த ஒரு செயலையும் அணுகும் பொழுது நேர்மறையான எண்ணங்களை ஏற்படுத்திக்கொண்டு நம்பிக்கையோடு அணுகுவது அவசியம். எதிர்மறை சிந்தனை கொண்டவர்களை விட நேர்மறை சிந்தனையாளர்களின் உற்பத்தித்திறன் 90 சதம் அதிகம் என்று ஆய்வுகள் கூறுகின்றன. அதனால் எந்நிலையிலும் சங்கடங்களை சந்தித்தாலும் நேர்மறை சிந்தனையை மட்டும் கைவிட்டு விடக்கூடாது.
நிபுணத்துவம் வளர்த்தல்
படிக்கும்போது முழுத்திறனையும் கொடுத்து படிக்கின்ற பெண்கள் வேலையில் சேர்ந்துவிட்டபிறகு பல காரணங்களால் முழுத்திறனையும் வெளிப்படுத்துவது இல்லை.பெண்களும் துறைசார்ந்த அறிவினை மேம்படுத்திக்கொள்ள முயலுவது அவசியம். வேலை பார்க்கும் இடங்களில் ஆண்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதை போன்று பெண்களுக்கு கொடுக்கப்படுவதில்லை. அதற்கான காரணம் பெண்களால் இரவுப்பணி போன்றவற்றையும் கடினமான வேலைகளையும் செய்ய முடியாது அல்லது கடினம் என நம்புவதால் தான்.இந்த எண்ணங்களை உடைத்தெறிய தங்களுக்கு ஒரு வாய்ப்பு கொடுக்கப்படும்போது அதனை முடியாதென சொல்வதை விட்டுவிடுங்கள். அவ்வாறு சொல்லிடும்போது பெண்களின் திறமையையும் ஆர்வத்தையும் நிறுவனத்தார் உணர்ந்து அங்கீகரிப்பார்கள். கிடைக்கும் சந்தர்ப்பங்களிலெல்லாம் துறை சார்ந்த நிபுணத்துவத்தை வளர்த்துக் கொள்வதும், கிடைக்கும் வாய்ப்புகளையெல்லாம் பயன்படுத்தி அடுத்த கட்டத்திற்குத் தன்னை நகர்த்திக் கொள்வதும் வெற்றியின் மிக அவசியத் தேவை என்பதை பெண்கள் உணர வேண்டும்.
பகிர்ந்து கொள்ளல்
எவரையும் நம்பி பொறுப்புகளை ஒப்படைக்க மாட்டேன் நானே முழுமையாக ஒரு வேலையை செய்து முடித்தால்தான் எனக்கு மனநிறைவு என்று பல நேரங்களில் பெண்கள் நினைப்பது உண்டு. ஆனால் இது வெற்றிக்கான சூத்திரம் அல்ல. தகுதியானவர்களிடம் பொறுப்புகளை ஒப்படைத்து மேலாண்மை செய்து அந்தப் பணி சிறப்பாக முடிவதை உறுதி செய்வதும் மேல்நிலை அடைவதற்கான வழி. தொழில் வளர்ச்சி அடைய இது அத்தியாவசியமானது. ஒற்றை ஆள் செய்யும் வியாபாரம் தொழில் இவற்றில் தானே அனைத்தையும் செய்து விடுவது சாத்தியம். ஆனால் பெரு நிறுவனமாக வளர வேண்டும் என்றாலோ பெரு நிறுவனத்தின் உயர்ந்த பதவிகளை அடைய வேண்டும் என்றாலோ எந்தப் பணியை எவருக்குத் தந்து எவரை கொண்டு திறம்பட செய்து முடிக்கலாம் என்னும் சிந்தனையும் அதற்கான செயல்பாடும் தேவை.
உற்சாகம்
பெண்களிடம் பொதுவாக பணியிடத்தில் ஒரு நிலைப்பாடு இருக்கிறது. அதாவது வேலை கிடைக்கும் வரை இந்த வேலையை அடையவேண்டும் என்னும் உத்வேகத்தோடு வருவார்கள். அந்த வேலை கிடைத்த பின் அதனை உற்சாகத்தோடு அணுகாமல் அன்றாடம் சலிப்போடும் கட்டாயத்திற்காக இயந்திரத்தனமாக செயல்படத் தொடங்கிவிடுவார்கள். செய்யும் வேலையில் எப்போதும் உற்சாகமும், தோல்விகள் ஏற்படும் பொழுது அதனால் சோர்வடைந்து விடாமல் மீண்டும் முயல்வதற்கான உறுதியும் வெற்றிக்கான படிக்கட்டு. ஒரு விளையாட்டு வீரரின் மனநிலையோடு களத்தில் இறங்க வேண்டும். தொடர்ந்து அந்த உற்சாக மனநிலையைப் பேண வேண்டும்.
பொறுப்பேற்றல்
கொடுத்த வேலையை மட்டும் செய்துவிட்டு போகலாம் என்ற மனநிலையை தவிர்த்து முக்கியத் தீர்மானங்களை எடுப்பதில் முன்வந்து பொறுப்பை ஏற்றுக் கொள்வதும் நம் உத்வேகம் அதிகரிப்பதற்கான வழி. நம்பிக்கையோடும் ஈடுபாட்டோடும் தீர்மானங்களை மேற்கொள்ள பொறுப்பேற்கும் பொழுது தலைமைப்பண்பு தானே வந்து சேரும். பெண்கள் வளர்த்துக் கொள்ளும் தலைமைப்பண்பு தான் அவர்களை ஒரு நிறுவனத்தில் மேலும் மேலும் உயர்த்தும்.
பெண்கள் தங்கள் ஆற்றலை முழுமையாக உணர்ந்து அதனை வெளிப்படுத்துவதற்கான வழிகளை கண்டறிந்து குறுகிய எண்ணங்களை விட்டு மன வலிமையுடனும் துணிவுடனும் முன்னேற வேண்டும். விவேகத்துடனும், துடிப்புடனும் செயலாற்றும் பொழுது வாய்ப்புகளும் உயர்வும் தானே தேடி வரும். அறிவும் ஆற்றலும் நிரம்பிய பெண்ணின் செயல்பாடு வெளிப்பட்டே தீரும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.