கரோனா வைரஸ் பரவுதலை ஒட்டி அறிவிக்கப்பட்ட முதல் ஊரடங்கு ஆணை பிறப்பிக்கப்பட்டதும் ஆந்திர மாநிலம் நெல்லூரில் சிக்கிக் கொண்ட மகனை சொந்த ஊருக்கு கொண்டுவர முயற்சி செய்து ஒன்றும் பலனளிக்காமல் போனதால் கடைசியில் தெலங்கானா மாநிலத்தின் "போதான்' என்கிற ஊரிலிருந்து ஸ்கூட்டியில் தனியே கிளம்பி சுமார் 700 கி.மீ பயணித்து ஆந்திர மாநிலத்தின் நெல்லூர் சென்று மகனை அழைத்துக் கொண்டு மீண்டும் 700 கி.மீ பயணித்து சொந்த ஊர் சென்று சேர்ந்திருக்கிறார், ரஸியா சுல்தானா பேகம். 1400 கி.மீ ஸ்கூட்டியில் பயணித்த ரஸியா மன தைரியத்திற்காகவும் தாய்ப்பாசத்திற்காகவும் அகில இந்திய அளவில் பேசப்பட்டார்.
ரஸியா தனது பயண அனுபவங்களைப் பகிர்ந்து கொள்கிறார்:
""எனக்கு 48 வயதாகிறது. தெலங்கானா மாநிலத்தின் நிஜாமாபாத் மாவட்டத்தின் போதான் ஊரிலுள்ள பள்ளியின் தலைமை ஆசிரியையாகப் பணியாற்றி வருகிறேன். கணவர் இறந்து 14 ஆண்டுகள் ஆகின்றன. எனக்கு ஒரு மகன் ஒரு மகள். மகன் முகமது நிஜாமுதீன் நீட் தேர்வுக்காக ஹைதராபாத்தில் தங்கி பயிற்சி பெற்று வருகிறான்.
அவனது நண்பனின் தந்தைக்கு உடல் நலம் சரியில்லாத காரணத்தால் நண்பன் நெல்லூருக்குப் புறப்பட... நிஜாமுதீனும் நண்பனுடன் நெல்லூருக்கு மார்ச் 12 அன்று ரயில் மூலமாகச் சென்றான். மார்ச் 23-இல் ஹைதராபாத் திரும்ப ரிட்டர்ன் டிக்கெட்டும் எடுத்திருந்தார்கள். சில தினங்களில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் போக்குவரத்துகள் ஸ்தம்பித்துப் போயின. பஸ், ரயில், லாரி எதுவும் ஓடவில்லை. நிஜாமுதீன் நண்பனின் வீட்டில் தங்கியிருந்தான்.
இருபது நாட்களுக்கு நீட்டப்பட்டதால் எத்தனை நாள் நண்பனின் வீட்டில் தங்க முடியும். அவர்களுக்கும் சிரமம். அசெளகரியம். மாவட்டத்தை விட்டு வேறு மாவட்டம் போகக் கூடாது. மாநிலம் விட்டு மாநிலம் போகக் கூடாது என்று கட்டுப்பாடுகள் அதிகரித்தன. லாரி.. டெம்போ கூட ஓடாததால் மகன் பலமுறை முயற்சித்தும் நெல்லூரை விட்டு கிளம்ப முடியவில்லை. நானும் உள்ளூர் போலீசில் கலந்து ஆலோசித்தேன். அவர்கள் சில நாட்கள் காத்திருக்கச் சொன்னார்கள். நிலைமையும் மாறவில்லை. இறுதியில் நானே சென்று மகனை அழைத்து வர முடிவு செய்தேன்.
டாக்சியில் போகலாம் என்று நினைத்தேன். ஆனால் பலரும் ஊரடங்கு நடைமுறையில் இருக்கும்போது வரத் தயங்கினார்கள். ஒரு சிலர் அதிகக் கட்டணம் கேட்டார்கள்.
அவ்வளவு பணமும் தர என்னிடம் வசதியில்லை. அதனால் ஸ்கூட்டியில் பயணிக்க முடிவு செய்தேன். "போதான்' காவல்துறை உதவி கமிஷனர் ஜெயபால் ரெட்டியைச் சந்தித்து பேசினேன். "டாக்சி என்றால் பரவாயில்லை. எப்படி தனியாக ஸ்கூட்டியில் 700 கி.மீ பயணிப்பீர்கள். நடுவில் வாகனத்திற்கு ஏதாவது நேர்ந்தால் உங்க நிலைமை என்ன ஆகும். உங்களுக்கும் சிரமம்.. காவல்துறைக்கும் சிரமம்' என்றார்.
மகனைக் கொண்டு வந்தே ஆக வேண்டும்... வேறு உதவி கிடைக்கும் சூழ்நிலையும் இல்லை. தயவு செய்து போக அனுமதியை எழுத்து வடிவில் கொடுங்கள்'' என்று வேண்டிக் கேட்டுக் கொண்டேன். அவரும் அரைமனதுடன் அனுமதி வழங்கினார்.
யாரிடமும் எனது பயணம் குறித்து சொல்லவில்லை. மகனிடமும் தெரிவிக்கவில்லை. மகளுக்கு மட்டும் தெரியும். அவளைத் தனியாக வீட்டில் விட்டுவிட்டு, ஏப்ரல் 6-ஆம் தேதி அதிகாலையில் போதானை வீட்டுக் கிளம்பினேன். கையில் சப்பாத்தி... தண்ணீரை எடுத்துக் கொண்டேன். பெட்ரோலை டாங்க் முழுவதும் நிரப்பிக் கொண்டேன். கூகுள் மேப் உதவியுடன் சரியான பாதையில் பயணித்தேன். நடுவில், பெட்ரோல் பங்குகளில் அவ்வப்போது பெட்ரோலை நிரப்பிக் கொள்வேன். ஹைதராபாத்தை நெருங்கியதும் மகனை அலைபேசியில் அழைத்து நான் வருகிற விவரத்தைக் கூறினேன்.
பெட்ரோல் பங்குகள் காவல்துறையின் செக் போஸ்ட்களில் கொஞ்ச நேரம் இளைப்பாறினேன். எல்லா செக் போஸ்ட்களிலும் காவல்துறையின் அனுமதி கடிதத்தைப் பார்த்ததும் என்னைப் பயணிக்க அனுமதித்தார்கள்.
"பார்த்துப் போங்க..' என்று சொன்னார்கள். தெலங்கானா ஆந்திர பிரதேச எல்லையை அடைந்தபோது பொழுது அடைந்துவிட்டது. ஆந்திர போலீஸ் மேலே பயணிக்க அனுமதிக்கவில்லை. எனது இக்கட்டான நிலைமையை எடுத்துச் சொன்னதால் பயணிக்க அனுமதித்தார்கள்.
நீண்ட நெடுஞ்சாலைகள்... "கும்' இருட்டு... இடையிடையே காடுகள் இருந்தாலும் இருட்டில் ஒன்றும் தெரியாததால் பயம் தோன்றவில்லை. யார் செய்த புண்ணியமோ விலங்குகள் எதுவும் சாலையில் வரவில்லை. வேறு எந்த வாகனமும் ஓடவில்லை.
மகனை கொண்டுவர வேண்டும் என்ற உந்துதலில் தொடர்ந்து பயணித்தேன். அதனால் மனதில் பயத்தையோ ... உடலில் சோர்வையோ உணரவில்லை. ஸ்கூட்டியும் எந்தத் தொந்தரவும் தராமல் ஓடியது. நள்ளிரவு இரண்டு மணிக்கு (அதாவது ஏப்ரல் 7 ) நெல்லூருக்கு முன்புள்ள செக் போஸ்ட்டை அடைந்தேன்.
அங்கிருந்த காவலர்கள் "ரோடு சரியில்லை... அபாயமான பாதை...பாதுகாப்பு இல்லை. சில மணி நேரம் ஓய்வு எடுத்துக் கொண்டு கிளம்புங்கள்' என்றார்கள். பிறகு விடியுமுன் மீண்டும் கிளம்பி காலை ஏழரை மணிக்கு நெல்லூரை அடைந்து மகனைச் சந்தித்தேன்.
"மதியம் சாப்பாட்டிற்குப் பிறகு மகனின் நண்பரது பெற்றோருக்கு நன்றி தெரிவித்துவிட்டு, மார்ச் 7 பிற்பகல் நெல்லூரை விட்டு மகனுடன் கிளம்பினேன்.
மீண்டும் நீண்ட பயணம். ஸ்கூட்டி ஒட்டி எனக்கு 25 ஆண்டுகள் அனுபவம் இருந்தாலும் இதுதான் எனது முதல் நீண்ட பயணம். திரும்பும் போதுகூட மகனை ஸ்கூட்டியை ஓட்ட அனுமதிக்கவில்லை.
ஆங்காங்கே ஓய்வு எடுத்துக் கொண்டு வீட்டிற்கு ஏப்ரல் 8 மாலை வந்து சேர்ந்தோம். அடுத்த நாள் ஊடகங்கள் அகில இந்திய அளவில் செய்திகளை வெளியிட்டன. உற்றார் உறவினர்கள் அக்கம்பக்கத்தவர்கள் எனது தைரியத்தைப் பாராட்டினார்கள்'' என்கிறார் ரஸியா சுல்தானா பேகம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.