கொச்சி நகரத்தில் முன்பின் தெரியாத பெண் கரோனா நோயாளியின் ஆறுமாதக் குழந்தைக்குத் தனது அலுவல், குடும்பப் பொறுப்புகளைத் தள்ளி வைத்துவிட்டு, கரோனா வைரஸ் தன்னையும் பாதிக்கலாம்என்ற எச்சரிக்கையும் உதறிவிட்டு, தாயாக ஒரு மாதம் தனி அறையில் வாழ்ந்த ஒரு பெண்ணின் தியாகத்தை உணர்த்திய நெகிழ்ச்சியான சம்பவம் நடந்துள்ளது. டாக்டர் மேரி அனிதா. 48 வயதான அனிதா மனோதத்துவத்தில் ஆராய்ச்சி பட்டம் எடுத்தவர். இதழியலில், வர்த்தக நிர்வாகத்திலும் முதுநிலைப் பட்டம் பெற்றவர். மாற்றுத்திறனாளிகளுக்கு கொச்சி, திருவனந்தபுரம், மலப்புரம் நகரங்களில் சிறப்புப் பள்ளிகள் நடத்தி வருகிறார். 18 , 12 வயதுகளில் இரண்டு மகன்கள். 10 வயதில் கடைக்குட்டி மகள். கணவர் வழக்கறிஞர். டாக்டர் அனிதாவிடம்உரையாடினோம்:
""எனக்கு ஜுன் 14-ஆம் தேதி அலைபேசியில் கொச்சி கரோனா மருத்துவக் கல்லூரியிலிருந்து தொடர்பு கொண்டார்கள். கரோனா பாதிக்கப்பட்ட பெற்றோரின் ஆறு மாத ஆண் குழந்தையை இங்கிருக்கும் தனிமை வார்டில் வைத்து 14 நாட்கள் பார்த்துக் கொள்ள உதவியாளர் தேவை... உங்களிடம் யாராவது இருக்கிறார்களா.... உற்றார் உறவினர்கள் யாரும் முன்வரவில்லை. பலரையும், பல சமூக நல அமைப்புகளையும் விசாரித்தோம். யாரும் முன்வரவில்லை. உங்களிடமும் விசாரிக்கலாம் என்று அழைத்தோம்' என்றார்கள். எனக்குத் தூக்கி வாரிப் போட்டது. தாய்ப்பால் குடிக்கும் அந்த ஆறுமாதக் குழந்தையைத் தாயிடமிருந்து பிரித்தால் அந்தக் குழந்தையின் கதி என்ன ஆவது என்று சங்கடமாக இருந்தது. நானும் எனக்குத் தெரிந்த அமைப்புகளில் விசாரித்தேன். கணவர் பிள்ளைகளிடம் விஷயத்தைக் கூறி, "நான் அந்தக் குழந்தையைக் கவனித்துக் கொள்ளலாம் என்று முடிவு செய்திருக்கிறேன். நீங்கள் பதினான்கு நாட்கள் சமாளித்துக் கொள்ள முடியுமா என்றேன்?'
"பச்சிளம் குழந்தையை கவனித்துக் கொள்ள போய் வாருங்கள்.. எங்களைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம்' என்று தைரியம் சொல்லி அனுப்பி வைத்தார்கள். கொஞ்சம் உடைகளை எடுத்துக் கொண்டு கொச்சி மருத்துவக் கல்லூரிக்கு கிளம்பினேன்.
தலைமை மருத்துவரை சந்தித்து நான் அந்தக் குழந்தையைக் கவனித்துக் கொள்கிறேன். என்றேன். "குழந்தையை நாங்க கரோனா டெஸ்ட் எடுத்ததில் "நெகட்டிவ்' என்று தான் வந்தது. ஆனால், குழந்தையைக் கவனித்துக் கொள்ள யாரும் கிடைக்காததால் குழந்தையை கரோனா வார்டில் சிகிச்சையில் இருக்கும் தாயிடம் திரும்பக் கொடுத்துவிட்டோம். குழந்தைக்கும் கரோனா தாக்கம் ஏற்பட வாய்ப்புகள் அதிகம் உள்ளது. உங்களுக்கும் குடும்பம், பிள்ளைகள் உண்டு.. யோசித்து முடிவெடுங்கள்' என்றார்கள்.
"நாம நல்லதையே நினைப்போம். அந்தப் பையனை என்னிடம் கொடுங்கள்' என்று கேட்டேன். நான் எடுத்த முடிவிற்கு நானே முழு பொறுப்பு.. என்ன பாதிப்பு வந்தாலும் மனதார ஏற்றுக் கொள்கிறேன் என்று எழுதி வாங்கிக்கொண்டு ஆறு மாதக் குழந்தையை என்னிடம் ஒப்படைத்து தனிமை அறையில் அடைத்தார்கள். அறையில் நானும் அந்தக் குழந்தையும் மட்டும்தான்.
அறைக்குள் வந்து படுக்கையில் குழந்தையைக் கிடத்தியதும் அம்மாவைத் தேடி அழ ஆரம்பித்தான். "உன்னீ..' என்று நீட்டி அழைத்தேன். மடியில் வைத்து ஆட்டிக் கொடுத்தேன். பவுடர் பாலை கலக்கி ஸ்பூன் மூலம் கொஞ்சம் கொஞ்சமாக ஊட்டினேன். முதலில் துப்பிய உன்னீ .. பசியின் காரணமாக கொஞ்சம் குடித்தான். முதல் இரண்டு நாட்கள் அம்மாவின் நினைவால் ஒரே அழுகை. மூன்றாம் நாள் முதல் என்னுடன் ஒட்டிக் கொண்டான். நான் பெறாத பிள்ளையானான். மருத்துவமனையில் எனக்கும், உன்னீக்கும் கரோனா சோதனை நடத்தியதில் தொற்று இல்லை என்று வந்ததால் என் மனம் நிம்மதியானது.
14 நாட்கள் மருத்துவமனையில் தனிமையில் இருந்து கரோனா பாதிப்பு இல்லை என்று சொன்னாலும் மேலும் 14 நாட்கள் வீட்டில் தனிமையில் நீங்க வசிக்கணும். ஆனால் குழந்தையை யாரிடம் ஒப்படைப்பது என்று தெரியவில்லை என்று டாக்டர்கள் குழம்பினார்கள். "குழந்தையை நானே கொண்டு போய் வீட்டில் தனிமையில் இருக்கிறேன் .. அதுதான் குழந்தைக்குப் பாதுகாப்பு..' என்றேன்.
"வேறு ஒருவர் குழந்தையை நீங்கள் மருத்துவமனையிலிருந்து வீட்டிற்கு கொண்டு போக முடியாது.. சட்ட ரீதியாக வழிமுறைகள் உண்டு. அந்த உறுதி மொழியில் கையொப்பம் இட்டுவிட்டு குழந்தையைக் கொண்டு போகலாம்' என்றார்கள். நானும் அப்படியே செய்தேன். உடனே கணவரைத் தொடர்பு கொண்டேன். அந்த ஃ பிளாட்டின் எதிர் ஃபிளாட் காலியாக இருந்தது. உரிமையாளரிடம் அனுமதி வாங்கி நானும் உன்னீயும் மீண்டும் 14 நாட்கள் வசிக்க ஆரம்பித்தோம்.
இரண்டாவது தனிமைப்படுத்தல் ஜுலை 15-இல் நிறைவாக மீண்டும் எனக்கும் உன்னீக்கும் கரோனா சோதனை நடந்தது. இறைவன் அருளால் இரண்டு பேருக்கும் கரோனா தொற்று இல்லை என்று மீண்டும் உறுதியானது. அதைவிட மகிழ்ச்சியான செய்தி, உன்னீயின் (எல்வின்) தாய் கரோனா பிடியிலிருந்து விடுதலை பெற்று பூரண நலம் அடைந்தார். அதை உறுதிப்படுத்தியதும் உன்னீயை தாயிடம் ஒப்படைக்க ஆயத்தமானேன்.
ஆனால் உன்னீயை.. நான் பெற்றெடுக்காத மகனைப் பிரிய வேண்டுமே என்று மனம் பதைபதைத்தது. கண்கள் ஈரமாகின... ஒரு மாதமாக அவனைத் தாலாட்டி சீராட்டி வளர்த்ததில் அவன் என்னிடம் ஒட்டிக் கொண்டதைவிட நான் உன்னீயிடம் பொறுத்தப்பட்டுப் போனேன். இந்த வாய்ப்பு தெய்வம் எனக்குத் தந்த வரம். பிரிந்ததுதான் ஆக வேண்டும் என்ற கட்டாயத்தைத் தவிர்க்க முடியாதே. கண்ணீர் மல்க உன்னீயை தாயிடம் நான் ஒப்படைத்தேன். அவனோ திரு திரு என்று முழித்து அழ ஆரம்பித்துவிட்டன. இப்போது உன்னீ எல்வினாக மாறிவிட்டாலும், தாயை அடையாளம் புரியவில்லை.. உன்னீக்கு பிரியா விடை கொடுத்தேன்.
தாய்ப்பாலை ஏற்கவில்லையாம். பவுடர் பால் கொடுத்திருக்கிறார். இப்போது நடு நடுவே தாய்ப்பாலும் குடிக்கிறானாம். பத்துமாதம் சுமந்து உன்னீ (எல்வின்) பெறவில்லை என்றாலும் உன்னீ எனக்கு நாலாவது பிள்ளைதான்'' என்கிறார் மேரி அனிதா. தெய்வம் சில சமயங்களில் தேவதையாகவும் உருவெடுப்பார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.